கவிதைகள்

வேட்டி!…. ( கவிதை ) …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

காவிவேட்டி கட்டினால் கயமைக்குணம் ஓடிடும்
வெள்ளைவேட்டி கட்டினால் நல்லவுள்ளம் வந்திடும்
பட்டுவேட்டி கட்டினால் பகட்டுவந்து ஒட்டிடும்
கிளிசல்வேட்டி கட்டுவார் கிடப்பரென்றும் தரையிலே !
வேட்டிகட்டும் போதிலே விதம்விதமாய் கரையெலாம்
காட்டிநிற்கும் தரத்தினை கண்டபோது தெரிந்திடும்
அரசியலில் உள்ளார்கள் அவர்கள்கட்சி நிறத்தினை
வேட்டிக்கரை ஆக்கியே விரும்பிநின்று காட்டுவார் !வெள்ளைவேட்டி கட்டினால் நல்லவுள்ளம் வரவேணும்
கள்ளஞ்செய்யும் பலருமே வெள்ளைவேட்டி கட்டிறார்
பள்ளிக்கூட ஆசான்கள் பாங்காய்கட்டிய வெள்ளையை
கொள்ளை கொள்ளும்கூட்டமும் கூடவைத்து இருக்குது !துறவுகொண்ட உள்ளத்தார் தூய்மைகாட்டும் காவியை
அறவுணர்வு அழிப்பவர் ஆடையாக்கி நிற்கிறார்
காவிவேட்டி கண்டதும் கதிகலங்கும் நிலையினை
காவிகட்டி கொண்டுளார்  காட்டியிப்போ நிற்கிறார் !
 
     பண்பாடு கலாசாரம் காட்டும் வேட்டி
     பலராலும் தனதுநிலை இழந்தே போச்சு
     வேட்டிகட்டி நிற்கின்றார் நிலையைப் பார்க்க 
     விதம்விதமாய் எண்ணம் இப்போ தோன்றலாச்சு !
 
   படித்தவரும் கட்டினார் பாமரரும் கட்டினார்
   உடுத்திநின்ற வேட்டியினால் உவகையுடன் அவரிருந்தார்
   மடித்தகரை சால்வையினை எடுத்துத்தோழில் போட்டதும்
   துடித்தெழுந்து கம்பீரம் துளிர்த்துவிடும் அங்கேயே !
 
   வேட்டியை மடித்துக்கட்டி சால்வையை தலையில்கட்டி
   காட்டிய வீரமெல்லாம் காற்றிலே பறந்துபோச்சு 
   நாட்டிலே வேட்டிகட்டி சால்வையை இடுப்பில்கட்டி
   காட்டிடும் அசிங்கம்காண கண்களே கூசுதிப்போ ! 
 
   தமிழ்நாட்டார் வேட்டிபார்த்து தந்தைகாந்தி கட்டிக்கொண்டார்
   அவரதையும் சுருக்கிக்கட்டி அனைவராலும் மதிப்புப்பெற்றார் 
   வேட்டியதன் மகத்துவத்தை மேன்மையுறச் செய்வதற்கு
   வேட்டிகட்டும் நாங்களெல்லாம் விருப்பமுடன் செயற்படுவோம் !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *