கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!… 40 ….. ஏலையா க.முருகதாசன்.

நேரம் ஆறுமணியாகிக் கொண்டிருந்தது.யோகமலரின் கழுத்தில் நான் தாலி கட்டுவதற்கு இன்னும் அரை மணியத்தியாலமே இருந்து.

மனம் குழம்பியது.அந்தக் குழப்பத்தை முகத்தில் காட்டாமலிருந்தன்.யோகமலர் தனது கைப்பைக்குள்ளிருந்த ஒரு சிறிய மாரியம்மன் படத்தை எடுத்து அதற்கு பிளாஸ்க்கை முண்டு கொடுத்து வைச்சவள்,பிளாஸ்க்குகளை வைச்சு ஏந்திக் கொண்டு வந்த தட்டில் சிவப்புத் துணியொன்றினால் சுற்றப்பட்டிருந்த தாலிக்கொடியை யும் குங்குமச் சிமிழ், சிறிய சந்தனக் கிண்ணம், சிறிய விபூதிப் பை ஆகியவற்றை வைச்சவள் வெட்கத்துடன் என்னைக் கனிவோடு பார்த்தாள்.

இராஜகுமாரிதான் மல்லிகை பூச் சரத்தை வாங்கிக் கொண்டு வந்து யோகமலரின் தலையில் வைச்சிருந்தாள் .

அவள் பையொன்றில் வைச்சிருந்த ரோஜாப்பூக்களையும் சொரிமல்லிகைப் பூக்களையும் தாலிக்கொடி வைச்சிருந்த தட்டில் பரவி வைச்சவள் „இருந்து கொண்டுதானே தாலி கட்ட வேணும் இரண்டு பேரும் சப்பாணி கட்டிக் கொண்டு இருங்கள்’ என்றவளிடம் „சப்பாணியா’ என்று வியப்புடன் யோகமலர் கேட்க,’சப்பாணி போட்டு இருக்கிறதென்றால் பத்மாசனம் இருப்பது போல’ என்று விளங்கப்படுத்தினன்.

இராஜகுமாரி யோகமலரின் கழுத்தில் நான் தாலி கட்டிவிட வேண்டுமென்பதில் ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாள் என்பதைப் என்னால் புரிஞ்சு கொள்ள முடியவில்லை.

ஒரு வேளை நானும் அவளும் சிறீலங்காவைச் சேர்ந்தவர்கள் என்பதாலோ இல்லாவிட்டால் சங்கானையைச் சேர்ந்த அவளுக்கு தெல்லிப்பழையைச் சேர்ந்த நான் சொந்தக்காரன் என்று ஊகித்துக் கொண்டாளோ இல்லாவிட்டால் அவளுடைய வீட்டாருடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டு எனது ஊரையும் விபரத்தையும் சொல்லி நான் மலேசியன் பெண்ணைக் கல்யாணம் செய்யப் போவதைச் சொல்லியிருப்பாளோ……

இப்படிக் கண்டபடி கற்பனை செய்து கொண்டிருந்தன்.’நேரம் ஆறரையாச்சு அண்ணியின் கழுத்தில் தாலியைக் கட்டுங்கள்’ என்று சொல்லிக் கொண்டே எனது கையில் தாலிக் கொடியை எடுத்துத் தந்த இராஜகுமாரி எங்களுக்கு பின்பக்கமாக வந்து முழங்காலில் நின்று கொண்டாள்.

தாலிக்கொடியை அவளின் கையிலிருந்து வாங்கிக் கொண்ட போது எனது கை நடுங்கியது.விதியின் விளையாட்டை நினைத்து மனம் பதைபதைத்து.

கைநடுங்குவதைச் சமாளிக்க வேகமாக யோகமலரின் கழுத்தைச் சுற்றி தாலிக் கொடியைக் கொண்டு போக இராஜகுமாரி பின்னாலிருந்து சுரையைப் பூட்டிவிட்டாள்.

தலைகுனிந்திருந்த யோகமலரின் கண்களிலிருந்து பொல பொலவென கண்ணீர் வடிந்து அவள் விம்முவது தெரிந்தது.உணர்ச்சிவசப்படும் போது அவள் சொண்டுகள் நடுங்கத் தொடங்கும். முட்டிவழிந்த கண்ணீரோடு தலையை நிமிர்த்திப் பார்த்தவள் தனது கைகளால் எனதுமுழங்காலை இறுகப் பிடித்து தனது நடுக்கத்தை இல்லாமல் செய்ய முயற்சித்தாள்.

அவளின் நெற்றியில் விபூதியைப் பூசி நெற்றியில் குங்குமப் பொட்டை வைச்சுவிட்டன்.தாலியிலும் குங்குமத்தை வைச்சன்.

இராஜகுமாரி தனது சின்னக் கமராவால் எங்களைப் படமெடுத்தாள்.நாங்கள் இருவரும் எழுந்து நின்ற போதும் படமெடுத்ததாள்.

தாலிகட்டிய பின் என் மனச்சாட்சி என்னைப் படாதுபாடுபடுத்தியது.உடம்பின் தேவையும் மனச்சாட்சியின் நியாயமும் வேறு வேறாக இருந்தன.

எனது முகத்தில் மகிழ்ச்சியும் இல்லை, கவலையும் இல்லை.ஒரு இறுக்கம் இருந்தது.

இரண்டு பேரும் போய் சோபவில் உட்கார்ந்தம்.எமதறையின் ரெலிபோன் அடித்தது, நான் எழுந்து போக எத்தனிக்கையில் „நீங்கள் இருங்கள் நான் எடுக்கிறன் „ என்று தொலைபேசி இருந்த இடத்தை நோக்கிப் போகையில் „இவள் ஏன் இவ்வளவு உரிமை எடுத்துக் கொள்கிறாள், ஏன் இவ்வளவு அக்கறைப் படுகிறாள், அவள் எங்களுக்கு அறிமுகமாகி இன்னும் ஒருநாள்கூட ஆகலை,சில மணித்தியாலங்களே சென்றிருக்கின்றன’ என்று நான் பலவாறு யோசிச்சுக் கொண்டிருக்கையில் „ஏங்க பார்த்தீங்களா அவங்களை, உங்க ஊர்ப் பொண்ணு அதாங்க இவ்வளவு அன்பாக உரிமையுடன் நடக்கிறாள்’என்று யோகமலர் சொல்ல,உள்ளுக்குள் நான் இராஜகுமாரியைப் பற்றி யோசிச்சதை வெளிக்னகாட்டிக் கொள்ளாமல் „ உண்மைதான் அவள் எனக்கு ஒரு தங்கச்சி மாதிரி நடக்கிறாள் மகிழ்ச்சியாக இருக்குது „ என்றன்.

யோகமலர் எனது கைகளை எடுத்து தனது கைகளோடு வைப்பதும் எடுப்பதுமாக இருந்தாள்.

இராஜகுமாரி அங்கில்லாவிட்டால் இந்நேரம் என் தோளில் சாய்ஞ்சிருப்பாள் இல்லாவிட்டால் என் மடியில் படுத்திருப்பாள் அல்லது நாமிருவரும் படுக்கை அறையில் இருந்திருப்போம்.

இன்னொருவர் முன்னிலையில் எப்படி நடக்க வேண்டும் என்பதை அவள் தெரிஞ்சு வைச்சிருந்தாள்.யோகமலரிடமிருந்த இந்தப் பண்பு எனக்கு அவள் மீதான மதிப்பை அதிகரித்தது.

ரெலிபோனை எடுத்த இராஜகுமாரி „யா.. ஐ ஆம் ராஜகுமாரி …என்று சொன்னவளுக்கு மறுமுனையில் உள்ளவர்கள் ஏதோ சொல்ல, அவள் „மொமன்ற் பிளீஸ்’ என்று சொல்லிக் கொண்டே எங்கள் பக்கம் திரும்பி „நைற் டின்னருக்கு பூட்

ஓடர் பண்ணியிருந்தீர்களா’ என்று எங்களைக் கேட்க யோகமலர் „இன்னும் ஓடர் பண்ணலைங்க இனித்தாங்க’ என்று சொல்ல ,மீண்டும் இராஜகுமாரி’ தே செட் ,ரில் நொட் ஒடேர்ட் த டின்னர் ..என்று பதில் சொல்ல மறுமுனையில் சொல்லிக் கொண்டிருந்தவருக்கு யா…யா என்று பதில் „அளித்தவள் „மொமன்ற் பிளீஸ்’ என்றவள் „அண்ணி மலேசியாவில் இருந்து உங்கடை அண்ணாக்கள் குடும்பம் முதலிரவு டின்னரை ஸ்பெசல் பூட்டாக ஓடர் பண்ணிட்டாங்களாம், எப்ப கொண்டு வாறது „ என்று கேட்கிறாங்கள் என்றதும் எங்களால் அதை நம்ப முடியவில்லை.

தங்களுடைய தங்கச்சியாரின் மகிழ்ச்சிக்காக அவளுடைய அண்ணன்மார் எவ்வளவு ஏற்பாடுகளைச் செய்கிறார்கள் என்பது எனக்கு வியப்பாகவே இருந்தது.கல்யாணம் செய்யாத ஒரு ஆணுடன் அவளுக்குக் கல்யாணம் நடந்து இத்தனை ஏற்பாடுகள் நடந்திருந்தால் அதில் பூரணமான மகிழ்ச்சியும் நிம்மதியும் எற்பட்டு மனநிறைவடைவது சரியானதே.

ஆனால் கல்யாணம் செய்து மனைவி பிள்ளைகள் இருக்கும் என்னை விரும்பி கல்யாணம் செய்வதில் யோகமலர் ஏன் விடாப்பிடியாக இருந்தாள் என்பதும் ஏன் இவ்வளவு ஏற்பாடுகள் என்பதும் எனக்கு குழப்பத்தைத் தந்தது. அவள் மறைந்து போய் இத்தனை வருசம் கழிஞ்சும் விடையற்ற வினாவாகவே இருந்து வருகிறது.

இந்தக் கேள்வியை சதா எனது மூளை கேட்டுக் கொண்டிருந்தது.ஒரே வீட்டில் வாழத் தொடங்கிய போது ஒரு நாள் தயங்கித் தயங்கி அவளிடம் „கல்யாணம் செய்த என்னை எதற்காக காதலிச்சீர்கள்,ஏன் கல்யாணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள்’ என்று கேட்ட போது அவள் எந்தத் தயக்கமும் இல்லாமல்’ எனது மனசும் மூளையும் சொல்லிச்சுது எனக்குரியவர் நீங்கதான்னு, நான் கும்பிடுற மாரியம்மன் எனக்காக சிறீலங்காவிலேருந்து உங்களை அனுப்பி வைச்சதாக முழுமையாக நம்பினேங்க, ஏங்க இப்படிக் கேட்கிறீங்க, இன்னொருமுறை இப்படிக் கேட்காதீங்க, உங்க மடியில என்னுயிர் போகுவரையம் கேட்காதீங்க’ என்றவள் என் மடியில் முகம் புதைச்சு விம்மி விம்மி அழுதாள்.அதற்குப் பிறகு அவளிடம் இந்தக் கேள்வியைக் கேட்கவேயில்லை.

இராஜகுமாரியிடம் அரை மணித்தியாலம் பொறுத்து டின்னரைக் கொண்டு வரச்சொல்லுமாறு சொன்னம்.அவளும் மறுமுனையிலுள்ளவர்களுக்குப் பதில் சொல்லிவிட்டு எமக்கெதிரே இருந்த சோபாவில் உட்கார்ந்திருந்தாள்.

இராஜகுமாரி யோகமலரிடம் „ மலேசியாவில உங்களுடைய சிற்றியான ஜோகூர்பாருவில எத்தனையோ பேர் இருக்கத்தக்கதாக சிறீலங்காவிலையிருந்து வேலைக்கு வந்தவரை அதுவும் இரண்டு வருசத்திலோ, மூன்று வருசத்திலோ ஊருக்குப் போகவிருப்பவரை ஏன் விரும்பினீர்கள்’ என்று கேட்க,’தெரியலைங்க முதல்ல அவர் ஒரு சிங்களவர் என்றுதான் நினைச்சேனுங்க, அப்புறம் அவர் தமிழர்னு அறிஞ்சதம் ரொம்பச் சந்தோசப்பட்டேனுங்க என்னுடையவரை மாரியம்மா இங்கை கொண்டு வந்து நிறுத்தியருக்கா என்று முழுமையாக நம்பினேனுங்க.அவரைப் பார்த்ததும் அவரைப் பிடிச்சுப் போச்சுது,பெண்களின் முகத்தை மட்டுமே பார்த்துப் பேசும் அவரின் கண்ணியம் இவர்தான் எனது புருசன்

என்று மனசில் ஆழமாக பதிஞ்சு விட்டுது’ என்றவளின் பதிலைக் கேட்ட இராஜகுமாரி, „ அண்ணை நீங்க ஊருக்குப் போகும் போது இவாவையும் கூட்டிக் கொண்டுதானே போவீங்க,நான் இங்கை தொடர்ந்து வேலைசெய்கிறேனோ தெரியாது, இந்த கொட்டல் அட்மினிஸ்ரேசன் தொடர்ந்து என்னை வேலைக்கு வைச்சிருக்குமோ தெரியாது.எப்படியும் ஊருக்குப் போவேந்தானே, அண்ணியைக் கூட்டிக் கொண்டு சங்கானையிலுள்ள எங்கடை வீட்டுக்கு வருவீர்கள்தானே, அது சரி நீங்கள் இரண்டு பேரும் சிங்கப்பூரிலா இல்லாட்டில் மலேசியாவிலா இல்லாட்டில் சிறீலங்காவிலுள்ள தெல்லிப்பழையிலா இருப்பீங்க’ என்று கேட்க அவளுக்கு எந்தப் பதிலுமே சொல்ல முடியாத நிலையில் நானும் அவளும் திக்குமுக்காடிக் கொண்டிருக்க நல்ல வேளையாக வீட்டு மணி அடிக்கவே அவள் போய் கதவைத் திறந்தாள்.

அங்கை மூன்று பணிப் பெண்கள் மூன்று சாப்பாடு வைக்கும் வண்டில்களில் சாப்பாடுகளை வைச்சு மூடித் தள்ளிக் கொண்டு வந்தார்கள்.

வந்தவர்கள் சீன,இந்திய உணவு, மலே உணவு இந்த மூன்று வண்டில்களிலும் இருக்கின்றன.எல்லாமே வெஜிரேரியன்தான்.இன்றைக்கு உங்களுக்கு வெடிங் நடந்திருக்கு நீங்கள் நொன் வெஜி சாப்பிடமாட்டீர்கள் அது எங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது,மீண்டும் வீட்டு மணியடிக்க நானே எழுந்து போய் திறந்த போது இன்னொரு பணிப் பெண் „கலோ’என்று சொல்லியவாறு ஒரு தள்ளுவண்டிலில் கோப்பி,தேத்தண்ணிப் பிளாஸ்கள், சாப்பாட்டுக் கோப்பைகள்,பழங்கள் வகை வகையான பழச்சாறுகள் நிரம்பிய ஜக்குகள்,புரூட்சலட் நிரம்பிய டிஸ்க்குகள் சின்னச் சின்ன டிஸ்க்குகள், கரண்டிகள் என கொண்டு வந்து வைச்சாள்.

கொண்டுவந்து வைச்சவற்றைப் பார்த்ததும் இது மாயையோ என நினைச்சன்.யோகமலர் „யூ பிறிங் ரூ மச் ஒப் பூட்’ என்று சொல்ல,என்னையும் சேர்த்தால் மூன்று பேர் இது பத்துப் பேருக்குரிய சாப்பாடு ‘ என்று இராஜகுமாரி சொல்ல,’யா, யூ ஆர் கரக்ட் ராஜகுமாரி,த கப்பிள்ஸ் கெஸ்ட்ஸ் ஆர் கம்மிங் ஒன் த வேய் „ என்று அந்த மூவரில் ஒருத்தி சொல்ல ,யோகமலர் வேகமாக வியப்புடன்’கூ ஆர் தே’ என்று கேட்க, அந்தப் பணிப் பெண்ணே சிரித்துக் கொண்டே „ஐ டோண்ட் நோ மடம்,பிளீஸ் வெயிற் அண்ட் சீ „ என்று சொல்ல நானும் யோகமலரும் யாராக இருக்கும் என ஒருவரைப் பார்த்து ஒருவர் கேட்டதுடன், அப்பா அம்மாவும் அண்ணாக்களும் அண்ணிமாரும் இவ்வளவு பணத்தைச் செலவழித்து இப்படி அரேன்ஜ் செய்திருக்காங்க அவங்க வரமாட்டாங்க யாராக இருக்கும் „ என யோகமலர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வீட்டு மணியை யாரொ மூன்றுமுறை விட்டுவிட்டு அடித்தார்கள்…

யாராக இருக்கும் என்ற பதட்டத்தில் இருந்த யோகமலர் ஓடாத குறையாக வேகமாகப் போய் கதவைத் திறந்தாள்…

அங்கே….

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *