நிலை தடுமாற்றம்!…. ( சிறுகதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

![]()
அறிவுக்கண்களை திறப்பதுதான் கல்வி. அக்கல்வியில் திருக்குறளின் பங்களிப்பு இன்றியமையாதது. அதனால்தான் பள்ளிப் பாடப்புத்தகங்கள் தொடங்கி பேருந்து, அரசு அலுவலகங்கள், நூலகங்கள் என எங்கும் நீக்கமற திருக்குறளின் ஆதிக்கம் ஆட்சிசெய்கிறது.
இது இப்படியிருக்க, மக்கள் அதிலும் கற்றறிந்த மக்கள் திருக்குறள் நெறிதனை எந்த அளவுக்கு உள்வாங்கி பின்பற்றுகிறார்கள் என்பது முடவன் ஆசைப்படும் கொம்புத்தேனாகவே இருக்கிறது. இந்த சமூக சூழலையும் மீறி சேற்றில் மறைந்த செந்தாமரையாக சில சிறார்கள் ஆங்காங்கே தோன்றுகிறார்கள். அவர்களில் சிலர் பரிணமிக்கின்றனர். சிலரோ அவர்களின் சூழலே அவர்களை பட்டுப்போகவும் வைக்கிறது.
அப்படியான இரண்டுங்கலந்த சூழலில்தான் எழிலரசன் என்ற பதின்மூன்று வயது பாலகனும் இருக்கிறான். இவன் அம்பாசமுத்திரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இவன் தந்தை என்னோற்றான் கொல்லொனுஞ்சொல் என்பதற்கேற்ப அறிவுக்கூர்மையான மாணவன்.
அன்று தமிழாசிரியர் தணிகாசலம் எழிலரசன் வகுப்பில் திருக்குறள் நடத்திக் கொண்டுருந்தார். அவர் எடுத்துக் கொண்ட குறள் “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்” என்ற குறள். அவர் சொல்லிக் கொடுக்கும் விதம் வடிகட்டின முட்டாளையும் அறிவுசார்ந்தவனாக மாற்றிவிடும். அன்று அவர் வகுப்பில் மிகவும் மந்தமாக இருக்கும் ஞானப்பிரகாசத்திடம்,
“ஞானம், சொல்லுபார்க்கலாம். இதிலிருந்து நீ என்ன தெரிந்து கொண்டாய்?” என்று கேள்வி கேட்டார்.
“ஐயா, நான் தெரிந்து கொண்டது சொல்பவன் கேழ்வரகில் நெய்வடிகிறதென்றால் கேட்பவன் அப்படியா என்றிராமல் அது எப்படி சாத்தியமாகும் எனக்கேட்க வேண்டும்” என்று பதில் சொன்னான்.
“மிக்க நன்று என்று” சொன்னவரிடம்,
ஐயா நான் ஒரு கேள்வி கேட்கலாமா என்று எழிலரசன் கேட்க தமிழாசிரியரும் கேட்கும்படி தலையசைத்தார்.
“ஐயா, அறுவை சிகிச்சையில்
எல்லோருடைய சிறுநீரகமும் எல்லோருக்கும் பொருந்துமா?”
“பொருந்தாது. பல பரிசோதனைகளின் பின்னரே தெரியவரும்.”
“ஒருவர் தலையை இன்னொருவருக்கு பொருத்த இயலுமா?”
“எழில்! என்ன முட்டாள் மாதிரி கேள்வி கேட்கிறாய்? இயலாது.”
“அப்படியென்றால் ஒரு விலங்கின்
தலையை ஒரு மனிதனுக்கு பொருத்த இயலாதல்லவா?”
எழிலுக்கு என்ன ஆச்சு இன்று. படிப்பில் சுமாரான ஞானப்பிரகாசமே நன்றாக பதில் சொல்லும்போது மிகவும் அறிவாளியான எழில் ஏன் வடிகட்டிய முட்டாள் மாதிரி கேள்வி கேட்கிறான் என்று எண்ணினார்.
அதெப்படி இயலும் மனிதன் தலையையே மனிதனுக்கு பொருத்த இயலாதபோது ஒரு விலங்கின் தலையை எப்படிப் பொருத்த முடியும்?என்று எழிலிடம் சொன்னார். அதற்கு எழில் முடியும் ஐயா ஆனால் சிலவற்றை மட்டும் ஏற்க மனம் மறுக்கிறது என்றான்.
உடனே தமிழாசிரியர் முடியும் என்றும் சொல்கிறாய்? அதை ஏற்கவும் உன்மனம் மறுக்கிறது என்கிறாய் என்று கேட்க எழில் மனித உடலில் யானையின் தலையை பொருத்தி இருப்பதால் முடியும் என்றேன். ஆனால் மனித தலையின் சுற்றளவுக்கும் யானைத் தலையின் சுற்றளவிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளதே என்பதால் அதை ஏற்க மறுக்கிறது என்றேன். அதன்பின் மனித உடலில் யானையின் தலையைப் பொருத்திய பிளாஸ்டிக் சர்ஜன் இருந்திருப்பதை பிரதமர் நரேந்திர மோடியே உறதியாகச் சொல்லியிருப்பதை
அறிந்தேன். ஐயன் வள்ளுவனோ “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்கிறார். அதனால்தான் என் மனம் ஏற்க மறுக்கிறது என்றான்.
எழில் இப்படிச் சொன்னதும் ஒரு நொடி நிலை தடுமாறிப்போனார் தமிழாசிரியர். ஆனால் அந்த ஆண்டவன் நம்பினவரைக் கைவிடமாட்டார் என்பதற்கிணங்க ஒரு அற்புதம் நடந்தது. எப்படி பஞ்சாலிக்கு கடைசி நேரத்தில் பகவான் கிருஷ்ணன் வந்து உதவினாரோ அதுமாதிரி வகுப்பு நேரம் முடிவதை தெரிவிக்கும் வகையில்
மணியடிக்கவும் அடுத்து விஞ்ஞான ஆசிரியர் வகுப்பறைக்கு வெளியே காத்திருக்க தமிழாசிரியர் வகுப்பு நேரம் முடிந்தது அடுத்த வகுப்பில் சந்திப்போம் என்று மாணவர்களிடம் சொல்லிவிட்டு வகுப்பறையிலிருந்து வெளியேறினார்.
அப்போது அம்மாணவனிடம் இருந்து தப்பினாலும் அடுத்தமுறை அவனது நியாயமான கேள்விக்கு என்ன விடைசொல்வது? என்று யோசித்தார்,
வெறுமைதான் தெரிந்தது. இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட வெறுமை. தன்னைக் காக்கவேண்டிய பஞ்ச பாண்டவர்களே கையாளாகாமல் கைகட்டி நின்றதைப்போல் தம்மைக் காப்பாற்ற வேண்டிய பலகோடி
மக்களைக் கொண்ட தமிழினமே கையாளாகமல் கையை பிசைந்து கொண்டு நின்றது போலிருந்தது.
ஓரு பெண்ணின் மானத்தைக் கேட்க உடனே வந்தான் கிருஷ்ணன். ஒன்றரை லட்சம் மக்களின் உயிர்களைக் காக்க ஓடிவரவில்லையே கந்தன். சுட்ட பழம் வேண்டுமா சுடாதபழம் வேண்டுமா என்று கேட்ட சுந்தர வடிவேலன் மக்களைச் சுட்டுக் கொண்டருக்கையில் சட்டென வரவில்லையே? நமக்கு மட்டும் தமிழாசிரியர் என்பதால் தமிழ்க் கடவுளான தண்டபாணி வந்துவிடவா போகிறான்? அவன் மட்டும் ஒரு மாம்பழத்துக்காக கோபித்துக்கொண்டு மலைமேல் ஏறி அமர்ந்து கொண்டாரே நாம் மட்டும் உரிமைக்காக உயிரை விடவேண்டுமா? என்று பலவாறு எண்ணியபடி ஓய்வறை சென்று ஒரு தம்ளர் தண்ணீரைக் குடித்தவர் காக்க காக்க கனகவேல் காக்க என்றவாறு ஓய்ந்து அமர்ந்தார்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()