கதைகள்

“ஈரக் கைகள்”….. ( சிறுகதை ) ….. அண்டனூர் சுரா.

மே மாதம், தீக்கொடி வெயில். குளத்தாங்கரை அரசமரத்தின் கொழுவிய நிழல். அவள், அடிவேரில் தலை வைத்து, கால்நீட்டி, ஒரு பக்கமாக ஒருக்களித்து படுத்திருந்தாள். பெயர் என்னவோ, எந்த ஊரோ? அவள் தலை வைத்திருந்த இடத்தில் பெரியதும், சிறியதுமாக இரண்டு முடிச்சுகள் இருந்தன. ஒன்று, அவள் காணும் கனவு பெரிதிலும், மற்றொன்று அவளது தலை அளவிலும் இருந்தது. அதற்குள் என்ன இருக்கும்? வெங்காயத்திற்குள் பெரிதாக என்ன இருந்துவிடப் போகிறது? வெங்காயம் போலதான் அவளது இரு முடிச்சுகளும் இருந்தன. வாய் இறுகக் கட்டப்பட்டிருந்தது. இரண்டு முடிச்சுகள் இருக்கிற பெருமிதம் அவளுக்கு. அப்பெருமிதத்துடன், நெடுந்தூர பயணத்தின் களைப்பும் சேர்ந்துகொள்ள ஆழ்ந்த தூக்கத்தைக் கொண்டுவந்து சேர்த்திருந்தது. அவளுக்கும் அருகில் அவளது பாலகன் சுருண்டு படுத்திருந்தான். அவன் வயதை ஐந்திலிருந்து ஆறுக்குள்ளாக மதிக்கலாம்.

தாயின் வயிற்றில் உள்ளடங்கி தலை வைத்து படுத்திருந்தவன், மரக்கிளையிலிருந்து எழுந்த அரவத்தைக் கேட்டதும், தாயின் அரவணைப்பிலிருந்து எழுந்து, தாயின் நெஞ்சுக்கூட்டில் சாய்ந்தவாறு மரத்தை ஏறிட்டுப் பார்த்தான்.

மரத்தில் ஒரு தாழ்வான கிளை. அதில் ஒரு மந்தி உட்கார்ந்திருந்தது. மந்தி, என்றால் பெண் குரங்கு. உருண்டையான தலை. சாம்பல் தொய்ந்த சருமம். மந்தி, தன் கூட விளையாட வந்திருப்பதாக நினைத்தான். அவனது பற்கள் பளிச்சிட சிரித்தன. மந்தி தலையை அப்படியும் இப்படியுமாக அசைத்தது. மந்தியின் தலையைப் போல அவனும் அசைத்தான்.

நேற்று வேறொரு இடத்தில், வேப்பமரத்தின் கீழ் ஓய்வெடுக்கையில், அவ்விடத்திற்கு ஒரு நாய் வந்திருந்தது. அந்த நாய்தான் இன்று மந்தியாக உருமாறி வந்திருப்பதாக நினைக்கையில் ஆனந்தக் குளிகைக்கு ஆட்பட்டான். மந்தியை அவன், கைநீட்டி அழைத்தான். அது, அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, கைகளைக் கொட்டிக்கொண்டு மற்றொரு கிளைக்குத் தாவியது. மந்தியின் வால், ஒரு பாம்பு ஊர்வதைப் போலிருந்தது. மந்தி மரத்தின் உச்சத்திற்குச் சென்றுவிடவில்லை. அதே மரத்தில், இரண்டொரு கிளைகள் தாவி, ஒரு கிளையில் அமர்ந்தது. அவன் எழுந்து அக்கிளையை நோக்கி நடந்தான். அக்கிளை குளத்தின் தடாகத்திற்கும் மேலே தாழ்வாரமாக இருந்தது. தண்ணீர் திட்டையைப்போல கிடந்து, காற்றுக்கு அலை வட்டம் அடித்தது. அவன், நீரைப் பார்த்து, மந்தியைப் பார்த்தான். “ உனக்கு தாகமெடுக்குதா?” எனக் கேட்டான். மந்தி, தன் கையால் தலையைச் சொறிந்துகொடுத்தது.

குளக்கரையில், ஊணான்கொடிகள் மண்டிக் கிடந்தன. குளத்திற்குள்ளாக அவன் இறங்கி, தண்ணீரை இரு கைகளாலும் அள்ளி, மேலே வீசினான். நீர்த்துளிகள் அவனது உடலெங்கும் பட்டு, சிலீரிட்டன. துளிகளின் குளிர்ச்சி அவனைப் பரவச மூட்டியது. நிமிர்ந்து பார்த்தான். மந்தி அமர்ந்திருந்த இடமும், அந்த மரமும் வெறுமையாக இருந்தது.

அவனது பார்வை தெருவின் பக்கமாகத் திரும்பியது. ஊரடங்கு. தெருவும் வீதியும், சாலையும் துடைத்துக் கிடந்தன. நாய்களின் கூட்டு நடமாட்டமில்லை. கூட்டமாகப் பறக்கும் காக்கைகள்கூட கூட்டுச் சேராமல் தனித்து பறந்து திரிந்தன. யார்கூடவேணும் அவன் விளையாட வேண்டும் போலிருந்தது. யாருமில்லாததால், எதன் கூடவாவது விளையாடலாமென்று, நாலாபுறமும் பார்வையால் துழாவினான். அவன் நின்றிருந்த மரத்திற்கும் நேர் எதிரே ஒரு வேப்பமரம் கிளைபரப்பி, தளிருடன் நின்றது. அம்மரத்தின் கிளையில் ஒரு பட்டம் தொங்கிக்கிடந்தது. அதன் வால் அவனை கைநீட்டி, வா விளையாடலாம், என அழைப்பதைப் போலிருந்தது. அவன் அணிந்திருந்த சட்டையின் நிறத்தில் அப்பட்டம் இருந்தது. அதன் வால், குளத்தில் பாம்பு நீந்துவதைப் போல, காற்றில் நீந்துவதாக இருந்தது. அதை நோக்கி அவன் நடந்தானில்லை, ஓடினான். கைகளைக் கொட்டிக்கொண்டே ஓடியதில், அம்மரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு காக்கை கரைந்துகொண்டு வேறொரு மரத்தை நோக்கிப் பறந்தது. பட்டத்தை எட்டிப் பார்த்தான். அவனுக்கு எட்டும் உயரத்தில்தான் அப்பட்டம் தொங்கிக்கிடந்தது. அதன் வாலைப் பிடிக்க கையை நீட்டினான். “என்னோட பட்டம் ” சிணுங்கலுடன் கூடிய ஒரு மென்குரல் எங்கேயிருந்தோ வந்தது. அக்குரலைக் கேட்டதும் பட்டத்தின் வால் ஆடுவதும் நின்றுவிட்டிருந்தது.

எங்கேயிருந்து இந்தக் குரல் வருகிறது, தலையை நீட்டித் தேடினான். அம்மரத்தின் பின்னே, அடக்கமாக ஒரு வீடு இருந்தது. துளசி மாடம் போன்ற சின்னவீடு. வீட்டின் முன் பெரிய வாசல். வாசலுக்கும் வெளியே நங்கூரம் போன்ற இரும்புக் கேற்று. வீட்டின் முகப்பிலும், வீட்டைச்சுற்றிலும் பூஞ்செடிகள், செடிகொடிகள். பல செடிகளில் கொத்துக்கொத்தாக பூக்கள் பூத்து சொரிந்திருந்தன. பூங்கொத்துக்குள் ஒரே கொத்தாக ஒரு தலை தெரிந்தது. உச்சி வகிடெடுத்த இரட்டைச்சடையுடன் கூடிய அவன் வயதையொத்த ஒரு சிறுமியின் தலை. பூ, இலைக்குள் மறைந்திருந்த அத்தலையைப் பார்த்ததும், அவனுக்குச் சிரிப்பும் வந்தது. அவளைப் பார்த்து, “ இது உன்னோடதா?” எனக் கேட்டான்.

“ இம், என்னோடது”

“ எடுத்துத் தரட்டா?”

அவளது தலை அசைய, பின்னிய இரட்டைச் சடைகள் கூடவே அசைந்தன. அவன் பட்டத்தின் வாலை மெல்ல இழுத்தான்.

“ கிழிஞ்சிரும்…” குரல் சிணுங்கியது.

அவன் தயங்கினான். கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து, கிளையின் கொம்பில் மாட்டியிருந்த பட்டத்தை, இலாவகமாக எடுத்தான். பட்டம் மெல்ல அவனது கைக்கு வந்தது. கிளையில் சிக்கியிருந்த நூலைப் பல்லால் கடித்து, பட்டத்தை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு அவள் முன் நின்றான்.

இரும்புக் கேற்றைத் திறந்து, அப்பட்டத்தை கைநீட்டி, வாங்கி கொண்ட அச்சிறுமி, “தேங்க்ஸ்“ எனச் சிரித்தாள். பதிலுக்கு என்ன சொல்வதென்று அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. கணநேரம் அவளையே இமையாது பார்த்து நின்றவன், “ எனக்கும் வெளையாட ஆசையா இருக்கு..” என்றான். அவள், உதடுகள் சுழிய சிரித்து, “ ஊம், வா விளையாடுவோம்…” என்றவள் சத்தமில்லாமல் கேற்றைத் திறந்தாள்.

இதற்கு முன்பு, எங்கேயும் அவன் கேற்றைத் தாண்டி உள்நுழைந்தவனில்லை. கேற்றின் கம்பிகளுக்கிடையில், அதிகப்பட்சம் கை நீண்டிருக்கிறது, அவ்வளவேதான்! அன்றைய தினத்தின் உள்நுழைவால், அவனது பாதங்கள் கூசச் செய்தன.

வீட்டில் நாய் எதுவும் கட்டிக்கிடக்கிறதா, எனத் துழாவினான். நாய்க்கான தட்டு, பிணைக்கப்பட்ட சங்கிலி, நாயின் நடை சுவடுகள்,..என ஒன்றும் அவனது கண்களில் தென்படவில்லை. அவனுக்கு இளைப்பாறும் மூச்சு வந்தது. வீட்டைச் சுற்றிலுமிருந்த செடி,கொடிகளைப் பார்த்தான். செடிகளில் அரும்பு, மொக்கு, மொட்டு, மலர், அலரென பல பருவப் பூக்கள் தூய்மையின் அடையாளமாகப் பூத்தும் கொட்டியும் கிடந்தன. வாசலில் திட்டுத்திட்டான கொழுவிய நிழல். வாசலுக்கும் வீட்டின் படிக்கட்டுகளுக்குமிடையில் வழவழப்பான தரையில், மலர்கள் உதிர்ந்துகிடந்தன. பட்டத்தை விடவும், பட்டத்தை நெஞ்சோடு பொத்தி வைத்திருக்கும் அவளை விடவும், பூக்களும், கொழுவிய நிழலுமே அவனை விளையாட வா என அழைப்பதாக இருந்தன.

கொத்துக் கொத்தான சிவப்பு, பச்சை, மஞ்சள், ஊதா, நீல நிறப்பூக்களைச் சுற்றிலும் வண்ணத்துப்பூச்சிகள் ஆலவட்டமடித்தன. அவன் செடியிலுள்ள ஒரு பூவின் இதழைத் தொட்டுப் பார்த்தான். பூவின் இதழ்கள் மென்மையாக இருந்தன. குழந்தைக்கே உரித்தான மென்மையில் அதைக் கொஞ்சினான். பூவின் இதழ்களைப் போலவே அவனது இதழ்களும் சிரித்தன. பால் பற்கள் பளபளத்தன. பூஞ்செடியோடு கன்னத்தை ஒத்திக்கொண்டான். பூவைக் காம்போடு இலாவகமாக வளைத்து, நெற்றியில் உரசிக்கொண்டான். நவநவமான மலர்கள். நறுமண மலர்கள்.

“ உனக்குப் பூ வேணுமா?”

அவன், “ இம், இம் ” என்றவாறு தலையை ஆட்டினான்.

“ எந்தப்பூ வேணும்?”.

“ அதோ, அது” அவன் கையை நீட்டிக் காட்டினான். அவனுக்கு அப்பூவின் பெயர் தெரிந்திருக்கவில்லை.

“ ஓ, அதுவா. அது செம்பருத்தி” அப்பெயரை அத்தனை அழகாக உச்சரிக்கும் அவளது உதடுகளைப் பார்த்தவன், அப்பெயரைச் சொல்லிப் பார்த்தான். செம்பருத்தி, அவனுக்குச் சேம்பருத்தி என்றே சொல்ல வந்தது.

அப்பூவைப் பறித்துக்கொடுப்பதற்காக, ஒரு குச்சியை எடுத்து வந்தவள், பூவை நோக்கிக் குச்சியை நீட்டி, தண்டை வளைத்தாள். பூ, கைக்கு எட்டவில்லை. குச்சியை நீட்டி, எக்கி, எட்டிப் பார்த்தாள். செக்கச் செவேலென்றிருந்த அப்பூ அவனையே பார்ப்பதைப் போலிருந்தது.

“ நா குனிஞ்சிக்கிறே. ஏ மேல ஏறி நின்னு பூவப் பறிச்சிக்கோ, இம்..” அவனது இமைகள் பட்சியின் சிறகுகளாக அடித்துக்கொண்டன. அவன் “ இம்..” எனக் கண்களால் சிரித்தான். அவள் முட்டிக்காலிட்டு குனிந்துகொள்ள, அவள் மீது தாவி ஏறினான். அருகில் நின்ற, தேக்கு மரத்தண்டைப் பிடித்தபடி, கையில் வைத்திருந்த குச்சியால், பூவின் தண்டை வளைத்து, அப்பூவைக் காம்போடு கிள்ளினான். பூவைப் பறித்த மகிழ்ச்சியில் உள்ளங்கால்களின் சிலிர்ப்பு. அவளது முதுகில் தெரிந்தது. அவளது தண்டுவட மேடு குறுகுறுத்தது. “ பறிச்சிட்டீயா?”

“ இம், இம், பறிச்சிட்டேனே…” அவளது முதுகிலிருந்து குதித்தான். இருவரும் அப்பூவைப் பார்த்தார்கள். அவள் உடுத்தியிருந்த சட்டை நிறத்தில் அப்பூ இருந்தது. அப்பூவை அவளது கன்னத்தில் உரசினான். பூவின் தொடுகையால் சிலிர்த்த அவள், “ அய்..” என்றவாறு கைக்கொட்டினாள்.

அந்த உச்சி வெயிலிலும், வெண்சாமரம் வீசுவதைப்போல காற்று இதமாக வீசியது. காற்றில் மரம், செடி,கொடிகள் அசைந்து பூக்கள் உதிர்ந்தன. அவன் மீது விழுந்த பூவை அவளும், அவள் மீது விழுந்த பூவை அவனும் எடுத்துக் கொண்டு ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டார்கள்.

“ வா, விளையாடுவோம் ” என்ற அவள் அவனது கையைப் பிடித்தாள்.

அவள் கையில் பட்டமும், இவன் கையில் செம்பருத்தி பூவும் இருந்தது.

“ பட்டம் விடுவோமா?” என்றான் அவன்.

“ ஆம்..” என்றவாறு கையில் வைத்திருந்த பூவை, அப்பட்டத்தில் சொருகினான். “ அய், நல்லாருக்கே,..” என்றாள். அவனது நாசியை மெல்லக் கிள்ளினாள். அவன், கன்னம் சிவந்தபடி, “ காத்து வீசுது, விடு பட்டம் பறக்கட்டும்” என்றான். அவள் மெல்ல பட்டத்தை விடுத்தாள். அப்பட்டம் அத்தனை உயர்த்திற்குப் பறந்துவிடவில்லை. நடை பழகும் குழந்தையைப் போல, சற்றே எம்பவும், பறக்கவும், தவிழவும், வீழ்வதுமாக இருந்தது.

அவன் நூலைப் பார்த்தான். நூல் முடிச்சு, முடிச்சாக சிக்குக் கொண்டிருந்தது. அவன் தாழப் பறக்கும் பட்டத்தைப் பார்த்தவாறு சிக்குண்ட நூலை எடுத்துவிடுவதாக இருந்தான். “ நூல் எப்படி சிக்கிக்கிச்சாம் “ அவன் கேட்டான். “ பட்டம் விட்டேனா, அப்டியே சிக்கிக்கிச்சு” என்றாள் அவள். அவளது பேச்சை உள்ளூர ரசித்தவன், சிக்குண்ட நூலை இலாவகமாக எடுத்துவிட்டான். சிக்கு எடுப்பது அவனுக்குப் பிடித்த ஒன்றாக இருந்தது. நூலைப் பிரித்து, சிக்கல் எடுக்கையில், அவனது தாய், அவ்வபோது வாங்கித்தரும் வடையும், அதற்குளிருக்கும் ஊசிப் போயிருந்த நூலும் நினைவுக்கு வந்தன.

அவளது வீட்டின் அடுக்களையில் சமைக்கும் அரவமும், பாத்திரங்கள் உருளும் சத்தமும் கேட்டன. சமையலின் வாசனை அவனது நாசியைத் துளைத்தது. அதற்கும் மேல் அவனால் நூலைப் பிரிக்க முடியவில்லை. நூலை கையில் அள்ளிக்கொண்டு, சன்னலின் வழியே எட்டிப் பார்த்தான். அவன் பார்த்ததை, வீட்டுக்குள் சமைத்துக்கொண்டிருந்த துர்காவின் தாய் பார்த்துவிட்டிருந்தாள்.

“ துர்கா…”

அடுத்த வீட்டுக்கும் கேட்கும்படியான அவளது கூப்பாடு அவனுக்குப் பயத்தை மூட்டியது.

“ உன் அம்மாவா…?” பயத்துடன் கேட்டான். அவள் உதடுக்கு ஒரு விரலைக் கொடுத்து, “ உஷ்…!” என்றவள், ஆமாம், என்பதைப் போல தலையை ஆட்டினாள்.

“ துர்கா…”

மறுஅழைப்பு உரக்க வந்தது. அவள் பட்டத்தைக் கீழே போட்டுவிட்டு “ அம்மா “ என்றவாறு வீட்டுக்குள் ஓடினாள். “ யாரது?” அவளை இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள். அவன், சற்றே அதட்டினால் அழுதுவிடுவதைப் போல நின்றுகொண்டிருந்தான்.

“ யாரடி இவன்?”.

துர்கா கைகளைப் பிசைந்தபடி, “தெரியல்லம்மா…” என்றாள்.

“ இவன் எப்படி உள்ளே வந்தான்…?” மகளின் காதைப்பிடித்துக் கிள்ளியபடி, கேட்டாள். அவள் கண் கலங்கியவளாக, “ இவன்தான்ம்மா, பட்டத்த எடுத்துக் கொடுத்தான்…” என்றாள்.

சமையல் கரண்டியுடன் அவள் நின்றிருந்த கோலமும், அவளது முறைத்த பார்வையும் அவனுக்கு கலவரம் மூட்டியது. அவனிடம் அவள் எதையும் கேட்கவில்லை. அவனாகவே சொன்னான், “ நான் பிச்செயெடுக்க வரல. விளையாடத்தான் வந்தே..”

“ துர்கா, என்ன இது?” அதட்டலில், அவள் நடுங்கச் செய்தாள். அவளது நடுக்கத்தைப் பார்த்து இவனுக்கும் நடுக்கம் வந்தது. அவன் மெல்ல காலடி எடுத்துவைத்து வாயிற்கதவைத் திறந்து வெளியேற எத்தனித்தான். “ துர்கா, நான் சொல்லிருக்கேனா இல்லையா, யாரையும் தொடக்கூடாது, யார்கூடவும் விளையாடக் கூடாதுனு”

“நானில்லம்மா. அவன்தாம்மா…” அவனை விரல் நீட்டினாள். அவள் கையிலிருந்த பட்டத்தை ‘வெடுக்’கெனப் பிடுங்கி வெளியே விட்டெறிந்தாள். “அவனைத் தொட்டியா, தொட்டியா?” அவளது சடையைப் பிடித்துத் தலையைக் குலுக்கினாள். அவளது வாய் ஆமாம், எனச் சொல்லவும், அவளது தலை இல்லை, எனவும் ஆடியது.

“என்னாலேதானே இதெல்லாம்” என நினைத்தவனாய், வேலிக்கம்பியைப் பிடித்தவாறு அவன் வெளியே நின்றான். அவள், தன் மகளை வீட்டுக்குள் இழுத்துச் சென்று, கதவு, சன்னல்களை இறுகச் சாத்தினாள். அடுக்களையில், சமையல் பாத்திரங்கள் உருளும் சத்தம் வெளியே கேட்டது.

“ துர்கா “ – திரும்பவும் அதே அழைப்பு.

“ அம்மா “ துர்காவிடமிருந்து பதில்.

“ கைக் கழுவிட்டியா…?”

“ இம், கழுவிட்டேன்ம்மா”

“ சோப்பால கழுவுனீயா?”

“ கழுவிட்டேம்மா…”

“ நல்லாக் கழுவிட்டு வா, சாப்பிடலாம் “

திறந்திருந்த ஒரு சன்னலும் பலமாக வீசிய காற்றில், அதுவாகவே சாத்திக்கொண்டது. அதன்பிறகு வீட்டுக்குளிலிருந்து ஒரு சத்தமும் வரவில்லை. அவன் சற்று நேரம், அதே இடத்தில் நின்று பார்த்தான். வெளியே பட்டம், பறக்க எத்தனித்து, பறக்க முடியாமல் தவளையைப் போல தத்தி ஒரு கொம்பில் மாட்டி வால் மட்டும் நீந்துவதாக இருந்தது.

அவன் பின்பக்கமாகத் திரும்பிப் பார்த்தான். அரசமரம், குளத்தாங்கரை தெரிந்தது, அவனுக்கென்று அம்மா இருப்பதும், இந்நேரத்திற்கு அவள் தன்னைத் தேடிக்கொண்டிருப்பாள், என்பதும் நினைவுக்கு வந்தது. அவன் அரசமரத்தை நோக்கி நடந்தான். அவனது தாய், எதிரே வந்தாள். “எங்கேயடா போனே, எங்கெல்லாம் உன்னத் தேடுறது…”

“ அம்மா…” என்றவாறு அவன் தாயை நோக்கி ஓடினான். அவனை வாரிஅள்ளி, மார்போடு அணைத்து, அவனது தலையைக் கோதிக்கொடுத்தாள் தாய்.

“ அதோ, அந்த வீட்டுல ஒரு பாப்பாம்மா. அதன் கூட விளையாண்டேன்ம்மா….”

அவளது முகம் மாறியது. “ நான் சொல்லிருக்கேனா இல்லையா, யாரையும் தொடக்கூடாது. யார்கூடவும் விளையாடக் கூடாதென…”. அவன், ஆமாம்ம்மா, எனச் சொல்வதைப் போல தாயின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.

“ அவளைத் தொட்டியா..?”

அவனுக்குத் துர்கா நினைவுக்கு வந்தாள். அவளைப் போலவே, ஆமாம், என்றவன், தலையால் இல்லை என ஆட்டினான்.

“ போய் கையைக் கழுவிட்டு வா…”

அவனுக்கு துர்காவின் தாய் நினைவுக்கு வந்தாள். குளத்திற்குள் இறங்கி, பாசியை நீக்கி, கையைக் கழுவினான்.

“ நல்லாத் தேய்ச்சுக் கழுவு “

அவன், தன் தாயின் பக்கமாகக் காதைத் திருப்பினான். வேறு ஏதேனும் சொல்லமாட்டாளா, என்ற ஏக்கத்தோடு பார்த்தான். அதற்கும் மேல் அவள் ஒன்றும் சொல்லவில்லை.

“ இன்னுமா கழுவுறே…?”.

“ இதோ, வந்திட்டேன்ம்மா” என்றவாறு கரையேறி வந்தான்.

“ நல்லாக் கழுவினீயா?”

அவன், ஈரக்கைகளைத் தூக்கி, முன்னும் பின்னும் காட்டினான்.

தாய், தன் முந்தியை எடுத்து விரித்து, உடம்பைச் சாய்த்து படுத்தாள். வேரில் தலை வைத்து மகனை அருகில் அழைத்தாள், “ வா, வந்து படுத்துக்கோ. நல்ல காத்தா வீசுது பாரு “.

அவன் விரித்திருந்த முந்தானையில் அமர்ந்து, தாயின் முகத்தை ஓரெட்டு ஏக்கத்தோடு பார்த்தவன், அவளது மார்புக்குள் முகம் புதைத்து படுத்தான். மரக்கிளையில், சலசலக்கும் சத்தம் கேட்டது. தலையைத் தூக்கிப் பார்த்தான். மந்தி கிளைக்குத் திரும்பியிருந்தது. அதன் கையில் ஒரு பழம் இருந்தது.

 

– அண்டனூர் சுரா

1540 C, மகாத்மா நகர்

கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை

– 613301

அலைபேசி – 9585657108

Loading

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *