சிங்கப்பூரில் சிலகாலம்!….. 39 …. (உண்மைக் கதை) ….. ஏலையா க.முருகதாசன்.

அறைக்குள் போனதும் நானும் யோகமலரும் படுக்கை அறைக்குள் போகாமல் சோபாவிலேயே உட்கார்ந்தம்.
யோகமலர் எனது மடியில் தலைவைத்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தவள்’ நீங்க எதையோ யோசித்துக் கவலைப்படுறீங்க உங்க முகமே சொல்லுதே’என்றாள்.
„அப்படி ஒன்றுமில்லை இன்னும் கொஞ்ச நேரத்திலை உங்கடை கழுத்திலை தாலிகட்டப் போறனல்லோ அதை நினைச்சு சந்தோசத்திலை முகம் இப்படியாகிப் போச்சுது’ என்று ஒப்புக்குப் யோகமலருக்கு பதில் சொன்னாலும் எனது நினைப்பு முழுவதும் மனைவியைப் பற்றியும் இந்தக் கொட்டலில் வேலை இராஜகுமாரியைப் பற்றியுமே சுற்றிச் சுற்றி வந்தது.
நம்பிக்கையுடன் மனைவி என்னைச் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்துவிட்டு திரும்பி வரும் நாளை பிள்ளைகளுடன் எதிர்பார்த்து அங்கு மனைவி காத்திருக்கையில்,வந்த இடத்தில் விதியின் பகடைக் காயாகி இன்னொருத்திக்கு தாலிகட்டி அவளை மனைவியாக்கப் போகிறேனே என அப்பப்ப வந்து போகும் பதட்டமும் மன உளைச்சலும் ஆட்டிப் படைக்க தாலிகட்டுகையில் அதனைப் படம் எடுத்து அவள் சங்கானைக்கு அனுப்ப, தற்செயலாகத்தன்னும் எனது உறவினர்கள் சங்கானைக்குப்; போகையில் அவள் அனுப்பிய படங்களைப் பார்த்தால் …அதற்கு மேல் ….வேண்டாம்…கடவுளே முத்துமாரியம்மா நான் நினைப்பது போல எதுவும் நடக்காமல் இருக்க வேணும் என மனதில் நினைக்கும் போது என்னையறியாமலே வாய்தடுமாறி முத்துமாரியம்மா என்ற சொல்லை அவளுக்கும் கேட்கத்தக்கதாகச் சொல்லவே, முகத்தைச் சரித்து வைச்சுக் கொண்டு எனது மடியில் படுத்தவள் தலையை நிமிர்த்தி „ என்னங்க முத்துமாரியம்மனை மனதில் நினைச்சீங்களா,மாரியம்மாதான் எங்க ரெண்டு பேருக்கும் குலதெய்வம்,அவ குறையொன்றும் செய்யமாட்டா, நீங்க விதியை நம்பிறீங்கதானே’ என்றாள், நான் நம்பிறேன் என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டினேன்’ அப்புறம் என்னங்க இப்பிறவியில உங்களுக்கு ரெண்டு பெண்டாட்டிங்க, ஒண்ணு அக்கா, இன்னொண்ணு இங்க நான்’ என்றாள்.
அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை.யோகமலர் எனது மடியிலிருந்து தலையை எடுக்க விருப்பமில்லாது முகத்தை சரித்து வைச்சுக் கொண்டு படுத்திருந்தாள்.
நேரஞ் சென்று கொண்டிருந்தது.ஆனால் எமக்குள் மெனமும் அமைதியும் நிலவிக் கொண்டிருந்தது.
யோகமலரின் மனதில் என்ன எண்ணம் இருக்கின்றது என்பதை அறிய முடியவில்லையெனினும் அவளின் கழுத்தில் நான் தாலிகட்டப் போவதை நினைச்சு ஏக்கத்துடன்தான் இருப்பாள் என்பதை உணர்ந்து கொண்டேன்.
நான் பலவிதமான மனக்குழப்பத்துடன் இருந்த போதும்,இனிப் புதிதாக தீர்மானிப்பதற்கு எதுவும் இல்லை என்ற நம்பிக்கையும், என்னை நான் திருப்திப்படுத்தித் திடப்படுத்துவதற்காக அடிக்கடி நான் நினைச்சு என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வது போல இப்பவும் எல்லாம் அவரவர் விதி என்பதை என் தவறை தவறல்லாத நிலையாக்கிக் கொள்வதற்காக துணையாக்கிக் கொண்டன்.
யோகமலரின் அண்ணிமார் ஆறரை மணிதான் நல்ல நேரம்,அந்த நேரத்தில் மறக்காமல் அவரின் கையால் தாலியைக் கட்டிக் கொள் என்று யோகமலருக்கு சொன்னது மட்டுமல்ல தயங்கித் தயங்கி எனக்கும் சொல்லியிருந்தார்கள்.
கிட்டத்தட்ட நாலரை மணியாகிக் கொண்டிருந்தது.எனது மடியில் படுத்திருந்த யோகமலரின் தலையை வருடிக் கொடுத்தபடியே,’எழும்புங்கோ நான் போய்க் குளிச்சிட்டு பட்டு வேட்டி கட்டி சட்டை போட்டுக் கொள்ளுறன், நீங்கள் அதற்குப் பிறகு குளிச்சிட்டு பட்டுச் சாறியை உடுக்கலாம்.
இராஜகுமாரி ஐஞ்சரை மணிக்கு வாறன் எண்டவ, அவாவும் உங்களுக்கு கெல்ப் பண்ணுவா என்று நான் சொன்னதும், „ம் சரிங்க’ என்றவள் என் மடியிலிருந்து எழுந்து சோபாவில் சாய்ந்து கொள்ள நான் எழுந்து படுக்கையறைக்குள் போய் துவாயையும் எடுத்துக் கொண்டு குளிப்பதற்காகப் போனன்.
நான் குளித்துவிட்டு வரும் போது துவாயுடன் காத்திருந்த யோகமலர் குளிப்பதற்காக குளியலறையை நோக்கிப் போகும் போது „நாங்க இன்னைக்கு மூனாவது முறை குளிக்குறோமுங்க „ என புன்னகைத்தவாறே சொல்லிக் கொண்டு போனாள்.
படுக்கையறைக்குள் போன நான் வேகம் வேகமாக பட்டு வேட்டியைக் கட்டி அதற்குப் பொருத்தமான பட்டர்கலர் சட்டையையும் போட்டு பேர்பூயுமை அடித்துக் கொண்டு மீண்டும் சோபாவில் வந்து உட்கார்ந்தன்.
வீட்டு மணி அடிக்க கதவைத் திறந்தன், அங்கை இராஜகுமாரி அழகான மஞ்சள்நிறச் சீலையுடுத்தி பூங்கொத்துடன் நின்றிருந்தாள்.பிளாஸ்ரிக் பையிலும் ஏதோ வைச்சிருந்தாள்.
ஐஞ்சரை மணிக்குத்தான் இராஜகுமாரியை வரச் சொல்லியிருந்தம், ஆனால் அவள் ஐஞ்சு மணிக்கே வந்திருந்ததைக் கண்டதும் „இவள் இப்ப என்னத்துக்கு நேரத்தோட வந்திருக்கிறாள்’ என்று மனம் எரிச்சல்பட்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்’ ஆ…வாங்க வாங்க உள்ளை வாங்க என்று பொய்யான சிரிப்புடன் அவளை உள்ளை வரச் சொன்னன்.
பூங்கொத்தையும் பிளாஸ்ரிக் பையையும் சோபவிற்கு முன்னால் இருந்த சிறிய மேசையில் வைச்சவள்,’ என்ன மாப்பிளை பட்டு வேட்டி பட்டுச் சட்டையில் அந்த மாதிரி இருக்கிறியள்,உங்கடை மலேசியன் மனைவி எங்கை „ என்று கேட்க „குளிச்சுக் கொண்டிருக்கிறா’ என்று சொன்ன நான் எனக்கு வலது பக்கத்திலிருந்த செற்றியைக் காட்டி உட்காரச்; சொன்னன்.
எனக்கு ஏதாவது கோப்பி இல்லாட்டில் தேத்தண்ணி குடிக்க வேணும் போல இருக்குது என்று இராஜகுமாரியிடம் சொல்ல, அவள் தாமதிக்காது எமதறையிலிருந்த ரெலிபோனை எடுத்து கோப்பியும் தேநீரும் கொண்டுவரும்படி அதற்குப் பொறுப்பானவளிடம் சொன்னாள்.
அவளே பேச்சைத் தொடர்ந்தாள்.நான் கமரா கொண்டு வந்திருக்கிறன்.நீங்கள் தாலிகட்டிற படங்கள் மற்றது எல்லாப் படங்களையும் எடுத்து கழுவிப் போட்டுத் தாறன் நீங்கள் உங்கடை அண்ணைக்கு அனுப்புங்கோ, நானும் எங்கடை வீட்டுக்கு அனுப்பிறன்,ஒரு சிறீலங்கா ஆள் மலேசியன் கேர்ளைக் கட்டிறது புது விசயந்தானே, முந்தியும் இப்படி நடந்திருக்கு.முந்தி மலேயாவுக்கு வேலைக்குப் போனவர்களில் சிலர் அங்கேயே கல்யாணம் செய்தவையாம், இன்னும் சிலர் ஊரிலை கல்யாணம் செய்து போட்டு அங்கை இன்னொரு கல்யாணம் செய்தவையும் உண்டு, திரும்பி வராமல் மலேயாவில் இருந்தவையும் உண்டு ஆனால் மாதந் தவறாது பெண்சாதி பிள்ளைகளுக்கு காசு அனுப்பிக் கொண்டிருந்ததாக அம்மா சொன்னவா, சங்கானையிலை அப்பிடி இரண்டு பேர் செய்தவையாம் „ என்று அவள் சொல்ல எனக்குத் திக்கென்றது.
கதவை யாரோ தட்ட இராஜகுமாரி எழுந்து போய்க கதவைத் திறந்தாள்.அங்கே ஒரு சீனப் பணிப்பெண் ஒரு தட்டில் இரண்டு பிளாஸ்க்குகளில் கோப்பியும் தேநீரும் கொண்டு வந்தவள் அதைக் கொண்டு போய் மேசையில் வைத்தபடியே இராஜகுமாரியுடன் அந்தப் பணிப் பெண் வேலை செய்வதாள்,’காய் குமாரி…’என்றவள் அவளின் உடுத்தியிருந்த மஞ்சள் சீலையை வைத்த கண் வாங்காமல்; பார்த்து „சோ பிரிட்டி அண்ட் பியூட்டி’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,யோகமலர் குளித்து முடிந்து நீளத்துவாயை பாதம்வரை கட்டியும் இன்னொரு துவாயால் உடம்பை மூடிப் போர்த்தியவாறு படுக்கையை நோக்கி நடந்தவள் திரும்பிப் பார்த்து இராஜகுமாரிக்கு கலோ சொன்னவள் „வாறீங்களா „ என்னோட என்று கூப்பிட „ யா…’ என்று சொன்னவாறு யோகமலரைப் பின் தொடர்ந்தவள், என்னைப் பார்த்து உங்களுக்கு விருப்பமானதைக் குடியுங்கள்’என்று சொல்லிவாறு படுக்கையறைக்குள் போனாள்.
சீனப் பணிப் பெண்ணும் விடைப் பெற்றுச் சென்றுவிட நான் தேநீர் இருந்த பிளாஸ்க்கை எடுத்து தேநீரைக் கப்பில் வாங்க, படுக்கையறைக் கதவைத் திறந்து கொண்டு வந்த இராஜகுமாரி „ உங்கடை மலேசியன் பெண்சாதி குளிச்சிட்டு வந்திருக்கிறா அவாவுக்கு ஏதாவது சூடாகக் கொடுக்க வேணும் என்று நீங்கள் யோசிக்கலையோ „ என்றவள் தனக்கும் யோகமலருக்குமாக இரண்டு கப்புகளில் கோப்பியை வார்த்துக் கொண்டு படுக்கையறையை நோக்கிப் போக, கதவைத் திறக்கவென்று வேகமாக நான் போக,அவள் என்னை ஒரு பார்வை பார்க்க,’ பிழையாக யோசிக்க வேண்டாம், இரண்டு கைகளிலும் கப் வைச்சிருக்கிறியள் அதுதான் கதவை கொஞ்சமாக திறந்துவிடவென வந்தனான் „ என்று சொல்லிக் கொண்டே கதவைத் திறந்து அவள் உள்ளே போனதும் கதவைச் சாத்திவிட்டு தேநீர்க் கப்பை எடுத்துக் கொண்டு சோபாவில் வந்து உட்கார்ந்து யோசித்துக் கொண்டேயிருந்தன்.
அரை மணித்தியாலத்திற்குப் பிறகு கதவு திறக்க திரும்பிப் பார்த்தன், நான் கற்பனை பண்ணாத அழகியாக தாமரைப் பூக் கொண்டு கரைகள் மஞ்சள் நிறத்திலுமாக குங்கும வண்ணச் சீலையில் தலைநிறைய மல்லிகைப் பூவுடன் வந்து கொண்டிருந்தாள் யோகமலர்…
(தொடரும்)
![]()