கச்சி ஏகம்பா! காஞ்சி வரதப்பா!….. ( சிறுகதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

நமக்கு நம் பெற்றோர் எப்படி ஆசையாக பார்த்து பார்த்து பெயர் வைத்திருப்பார்கள். நாம் நம் பிள்ளைகளுக்கு எப்படியெல்லாம் யோசித்து பெயர் வைத்திருப்போம். அப்படியிருக்க நம் பிள்ளைகளுக்கோ அல்லது அவர்களின் பிள்ளைகளுக்கோ
யோசித்து யோசித்து வைத்த பெயரை புதுமையாக வைக்கிறேன் எண் கணிதப்படி வைக்கிறேன் புடலங்காயை கூட்டு ஆக்குறேன் என்று மாற்றினால் எப்படியிருக்கும் என்று அங்கலாய்த்தார்
வள்ளிநயகம் சடகோபனிடம்.
“அதுவும் சரிதான்” என்றான் சடகோபன்.
“தம்பி, ஒம்ம கருத்தத சொல்லுமய்ய. நான் என்ன வில்லுப்பாட்டா பாடறன் பக்க பாட்டு பாடுறீர்”
“அதுக்கில்ல, அண்ணாச்சி இப்ப அதுமாதிரிதான பலதையும்
பண்ணிக்கிட்டு திரியிரானுவ”
“அதென்ன ஓய் பலதையும் பண்ணுறானுவ”
அண்ணாச்சி ஒங்களுக்கு வெசயமே தெரியாதான்னு கேட்டுப்புட்டு அவன் ஒரு கதய சொன்னான். அதாவது முக்கு வீட்டு முனுசாமி அப்பா சங்கிலிக்கருப்பன் பார்த்து பார்த்து கட்டுன வீட்டுக்கு என்ன குறை? போன வருசம்தான் கீழச்சேரி பக்கமா இரண்டு வயல்காட்டை வாங்கிப் போட்டிருக்கான். ஆன இப்ப என்னான்னா கூறகெட்டதனமா வீட்டை கண்ட கண்ட இடங்கள்ளாம் இடிச்சுக்கிட்டு இருக்கான் என்று புலம்பினான்.
“என்ன ஓய் சொல்றீர். ஊருக்குள்ள போற மாரியாத்தா எம்மேலவந்து ஏறாத்தான்னு சொல்றதப்போல”
“ஆமா அண்ணாச்சு அந்தப்பய கூறுகெட்ட தனமாத்தான் அலையுறான்”
“அப்படி என்னதான் அந்தப்பய பண்ணுறான்.
“டவுனுல ஏதோ ஒரு போக்கத்தபய சொன்னாமுன்னு வாசலை இங்க மாத்தனும் ஜன்னலை இங்க வைக்கணும்னு வீட்டையே நாசமாக்கிட்டு இருக்கான்”
“ஓ அதுவா சேதி. வாஸ்து கீஸ்துன்னு ஒரு கூட்டம் உடல் உழைப்பு இல்லாம பணம் பண்ணிகிட்டு திரியுது. அவனுவ பேச்ச கேட்டுப்புட்டுதான் இந்த கோட்டிக்காரப்பய கூறுள்ளாமா பண்றான்”
அப்பாவியான சடகோபன் ஒன்னும் புரியாமல் திருதிருன்னு முழிக்க விளக்கினார் வள்ளிநாயகம். சடகோபா இப்ப வாஸ்து சாஸ்திரம்ன்னு புதுசா மொளச்சிருக்கு. இந்த சீட்டுக்கம்பெனி போலிச்சாமியார் போல இதுவும் ஒரு கூட்டம். அவங்க வேலைதான் இதெல்லாம் அவங்க நோகாம பணம் சம்பாதிக்க நம்மை நோகடிப்பாங்க.
என்னென்னவோ புதுசுபுதுசா சொல்றீங்க அண்ணாச்சி என்றவனிடம் புதுசுதான்
பெரிய நகரங்கள்ளாம் இப்ப வடநாட்டுல இருந்துகோயில்ன்னு புதுசா முளைத்திருக்கே அதுபோலத்தான்
இதுவும். வீட்டு வாசலை இங்க மாத்துனா நல்லது ஜன்னல அங்க வெச்சா செல்வம் கொட்டு கொட்டுன்னு கொட்டும்னு சொல்றத கேட்டுப்புட்டு நல்ல நல்ல வீட்டை எல்லாம் இடிப்பானுங்க அதைத்தான் முனுசாமியும் செயறான் போல கெடக்கு என்றார்.
அதைக்கேட்ட சடகோபன் இது என்ன அண்ணாச்சி கொடுமை. சொல்றவன் சொன்னா கேட்கிறவனுக்கு மதி எங்க போச்சு. குப்புசாமின்னு வெச்ச பேரை குபேரன்னு வெச்சாமட்டும் கோடிக்கணக்கா பணம் சேர்ந்திடுமா? அதுக்கு கொள்ளையடிச்சா மட்டும் முடியும் அண்ணாச்சி என்றான்.
“ஆமாம் ஓய். சரியாத்தான் சொன்னீர்”
“ஒரு சந்தேகம் அண்ணாச்சி. குடியிருக்கும் வீடு கோயில் மாதிரி. இந்த வீட்ட இடிக்க சொல்றவனுவ எத்தனையோ கோயிலு வருமானமில்லாம இருக்கு. அப்படிபட்ட கோயிலுக்கெல்லாம் வாசலை மாற்றனும்
கோபுரத்த இடிக்கணும்னு ஒரு பயலுவலும் நீங்க சொன்னீங்களே வாஸ்தோ கீஸ்தோ அத சொல்லமாட்டாங்களா?”
சடகோபன் கேட்ட கேள்வியால் அதிர்ந்து போனார் வள்ளிநாயகம். என்னடா தமிழனுங்க உலகுக்கே நாகரிகத்தை சொன்னவங்க இப்படி உருப்படாம இருக்காங்களேன்னு உள்ளுக்குள் வருந்தியவருக்கு சடகோபனின் கேள்வி புண்ணுக்கு மருந்து போட்டதுபோல் இருந்தது. அவர் சடகோபனைப் பார்த்து அதுக்குன்னு ஒருகூட்டம் இருக்கு அவங்ககிட்ட போய் வாசலை மாத்தனும்னா அக்கூட்டம் இவங்களயே மாத்திவிடும் என்று சொன்னவர் சடகோபன் கொஞ்சம் ஜோலி இருக்குன்னு சொல்லி கிளம்ம “கச்சி ஏகம்பா காஞ்சி வரதப்பா” என்று சொன்னபடி வீட்டினுள் சென்றார்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()