கதைகள்

நடுகைக்காரி!… 27….. ( நாவல் ) …… ஏலையா க.முருகதாசன்.

„கொப்பா உன்னோடை ஏதோ கதைக்க வேணுமாம் „ என்று தாய் சொன்னதும் பாறு பயப்பட்டவாறே அறைக்குள் போகிறாள்.

எதுவாக இருக்கும், ஞானத்தைக் காதலிப்பதை அப்பா யார் மூலமாகவோ அறிந்துவிட்டாரோ இல்லாட்டில், இன்டைக்கு வழுக்கையாறடியில் ஞானத்துடன் நின்றதை மாமா சாதுவாக கண்டிருப்பாரோ கண்டதை அப்பாவிடம் சொல்லியிருப்பாரோ, ஆனால் மாமா என்னைப் பார்க்க முந்தியே நான் ஞானத்திற்கு பின்னால் மறைஞ்சிருந்தேனே, எதைப் பற்றி அப்பா பேசப் போகிறார் என யோசித்தவாறு, பாறு அறையைவிட்டு வெளியே வந்து முற்றத்தில் இருந்த வாளித்தண்ணீரில் முகத்தையும் கால்களையும் கழுவியவள் முற்றத்தில் உடுப்புக் காயவிடவென கட்டியிருந்த கொடியிலிருந்து துவாயை எடுத்து முகத்தையும் கால்களையும் துடைத்துவிட்டு திரும்பவும் கொடியில் போட்டவள் தகப்பனும் தாயும் படுக்கும் அறைக்குள் சென்று சுவாமிப்படங்களுக்கு முன்னால் நின்று திருநீற்றைப் பூசியபடியே „புளியடி வைரவப் பெருமானே, எனக்கும் அவருக்கும் இடையில் இருக்கும் காதல் விடயம் பிரச்சினையாக வரக்கூடாது,அவரை நான் என் புருசனாக ஏற்றுக் கொண்டு பல நாட்களாகிவிட்டன,அப்பா என்னோடை ஏதோ கதைக்க வேணுமென்று அம்மா சொன்னவா, அப்பா அவரைப் பற்றி எதுவுமே கேட்கமாலிருக்க வேண்டும்.அவர் எனக்கு கிடைக்காமல் போனால் நான் செத்திடுவன்,நீ என்னை அவரோடை சேர்த்து வைக்காவிட்டால் நீ இருக்கிற புளியமரத்துக் கொப்பொன்றில் தூக்குப் போட்டுச் சாவன் அதை நீ பார்ப்பாய் ‘ என்று அவள் மனதுக்குள் வேண்டிக் கொண்டாள்.

பல சுவாமிப்படங்கள் ஆணி அடிச்சுக் கொழுவப்பட்டிருந்தன.அதில் நாய் வாகனத்துடன் இருந்த வைரவர் படமும் ஒன்று.பாறு மற்றைய சுவாமிகளை நினைக்காமல் புளியடி வைரவரை மட்டும் நினைச்சுக் கும்பிட்டாள்.

அவளை அறியாமல் அவள் கண்கள் கலங்கின. கண்களைத் துடைச்சுக் கொண்டு அறையைவிட்டு வெளியே வர பாறுவின் தகப்பன் சாமி கும்பிடுவதற்காக உள்ளே வந்தவர் பாறுவின் கண்கள் சிவந்திருப்பதைக் கண்டவர்’ பாறு ஏன் பிள்ளை கண் சிவந்திருக்கு „ என்று கேட்க, தான் புளியடி வைரவரிடம் வேண்டியதை மறைச்சு „ அதப்பா திருநீறு பூசேக்கிலை கண்ணிலை பட்டிட்டுது, கண்ணை அது உறுத்திச்சுது கண்ணைக் கசக்கினான் அதுதான் சிவந்து போச்சுதாக்கும் „ என்று சொல்லிக் கொண்டே அடுப்படிக்குள் போகிறாள்.

ஞானத்தைக் கல்யாணம் செய்து வாழவேண்டும் என்ற எண்ணத்தில் பாறு திடமாகவே இருந்தாள்.ஞானமும் தனக்கும் பாறுவுக்கும் இடையில் இருக்கும் மிகப்பெரிய வேறுபாடான அவள் வேறு, நான் வேறு என்பதைப் பற்றி எவ்வித

சஞ்சலுமும் இல்லாமல் பாறுதான் எனது எதிர்கால மனைவி என்பதில் அவனும்; திடமாகவே இருந்தான்.

தான் ஞானத்திற்கு மனைவியாக வேண்டும் என்பதை புளியடி வைரவரிடம் வேண்டிக் கொண்டதும்  அதனால் அவள் மனமுருகி ஏக்கத்தடன் அழுததை அவள் மட்டுமே அறிந்திருந்தாலும், தகப்பன் அவளின் கண் சிவந்திருப்பதைக் கண்டு காரணத்தைக் கேட்டதால் அவள் பதட்டப்பட்டு என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறிய போதும், தகப்பனுக்குப் பொய் சொன்ன நினைப்புடன் அடுப்படிக்குள் வந்தவளை ஏற இறங்கப் பார்த்தாள் தாய்.

தோட்டத்தில் வேலை செய்து போட்டு வந்தால் முகத்தில் களைப்பும் உடலில் சோர்வும் தெரியும்.

ஆனால் பாறுவின் தலைமயிர் காற்றில் பறப்பது போல உலர்ந்திருப்பதும் முகம் பூரிப்புடன் இருப்பதைப் பார்த்ததும், தனது மகள் ஏதோ ஒரு மனமாற்றத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்த போதும் ஞானத்திற்கும் தனது மகளுக்கும் நெருக்கம் ஏதாவது ஏற்பட்டிருக்குமோ என்பதை முழுமையாக அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமலும்,அப்படி இருக்குமோ எனத் தடுமாறினாள்.

தாங்கள் யார் என்பதை தகப்பனும் தாயும் பலமுறை பாறுவுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

தெல்லிப்பழை தபால் அலுவலகத்திற்கு கொஞ்சம் வடக்குப்புறமாக காங்கேசன்துறை வீதியின் மேற்குப்புறத்திலிருக்கும் அரச அனுமதி பெற்ற சாராயக் கடையில், கொல்லங்கலட்டியைச் சேர்ந்த செல்லத்துரை ஆச்சிமுத்துவின் இரண்டாவது மகன் புவனேந்திரன் சாராயம் குடிக்க வந்து சாராயக் கடையோடிருந்த ஒரு வீட்டில் இருந்த மாலினி என்ற பெண் பிள்ளையின் மேல் காதல் கொண்டு,புவனேந்திரனின் தாய் தகப்பன் சொந்தக்காரர்கள் எதிர்த்தும் அதையும் மீறி தான் காதலிக்குத் துரோகம் செய்யக்கூடாது என்று கல்யாணம் செய்ததையும், அதனால் புவனேந்திரன் தான் தகப்பனிடம் போய்வந்த போதிலும், தனது மனைவியை உரிமையோடு தாய் தகப்பனிடம் கூட்டிக் கொண்டு போக தாய் தகப்பன் விரும்பவில்லை என்பதை கதையோடு கதையாக தாயும் தகப்பனும் பலமுறை பாறுவுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

தங்களுடைய மகள் மாலினியின் நிலைக்கு வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தார்கள்.ஆனால் மகளிடம் காணப்படும் மாற்றம் தகப்பனைவிட தாய்க்கே பயத்தைக் கொடுத்தது.

முதல் நாள் பாறுவின் சொண்டுகள் சிவந்திருந்ததைக் கண்ட போதே தாயின் மனதில் பல எண்ணங்கள் ஓடின.

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கணவனின் அணைப்பில் சுகம் கண்டு தாய் சுகித்தவளாகையால் இன்றும் அவளின் சொண்டுகள் சிவந்திருப்பதைக் கண்டதும் தாய்க்கு பகீர் என்றது.

இறுகத்தழுவி காதலியின் சொண்டுகளை உரிமையுடன் தனது சொண்டுகளால் இழுத்து அனுபவித்தால், சொண்டுகள் உணர்ச்சிகளினால் சிவப்பதும்,காமத்தின் முதல் படியில் கால் வைப்பதற்கு ஒப்பானது என்பதை தாய் உணர்ந்திருந்தாள்.

அப்படிச் சிவக்கும் சொண்டுகள் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு சிவந்திருக்கும் என்பதை பாறுவின் தாய் மட்டுமல்ல தாம்பத்திய உறவு கொள்ளும் பெண்கள் அனைவருக்குமே அது தெரியும்.

மகளை உற்றுப் பார்த்த தாய், மகளிடம் தான் நினைப்பதை வெளிப்படையாக கேட்கலாமா விடலாமா எனத் தவித்தாள்.அவள் மனம் பதை பதைத்தது.

ஏதாவது கதையைத் தொடங்கி மகளின் மனநிலையை அறியும் நோக்கில் „மெய்யே பாறு இண்டைக்கு கன வேலையோ’ என பாறுவிடம் கேட்க, „ஓமம்மா இரண்டு மாதத்திற்கு முந்தித்தான் ஞானத்தின்ரை வெங்காயத் தோட்டத்திற்குள்ளை புல்லுப் பிடுங்கினனாங்கள்,இப்ப திரும்பவும் அறுகம் புல்லும்,கீரைப்புல்லும், கோரைப்புல்லும் மொய்ச்சுப் போய்க்கிடந்துது.

ஐஞ்சு பேர் செய்ய வேண்டிய வேலையை மூன்று போரைக் கொண்டு செய்வித்தால் நேரஞ் செல்லுந்தானே,பன்னாலை சுப்பையற்றை குடும்பம் சரியான கஞ்சத்தனம் பிடிச்சதுகள்,அதுக்கு சரியான கடடைசிப்பிள்ளையாய் இந்த ஞானம் பிறந்திருக்கு, வெய்யில் ஒரு பக்கம் வெக்கை ஒரு பக்கம்,வெங்காய வெக்கை ஒரு பக்கமுமாய் நாங்கள் மூன்று பேரும் பட்டபாடு இருக்குதே போதும் போதும் என்றாகிப் போச்சுதம்மா.அதுதான் அங்கத்தையாலை வர நேரம் செண்டு போச்சுது’ என்று பாறு பொய் பொய்யாய்ச் சொன்னதை மகள் முழுப் பொய் சொல்கிறாள் என்பதும் இந்தப் பொய்க்குப் பின்னாள் எதையோ மூடி மறைக்கிறாள் என்பதையும் தாய் தெளிவாகவே புரிந்து கொண்டாள்.

காற்றில் பறக்கும் அளவிற்கு அவளின் தலைமயிர் உலர்ந்திருப்பதும் மகளின் சொண்டுகள் சிவந்திருப்பதையும் தாய் கவனித்தும் கவனிக்காதது போல’பிள்ளை இந்தத் தேங்காய்ப் பாதி இரண்டையும் துருவு, இழுத்துத் துருவாதை இடைப்பதத்திலை துருவு குழல் புட்டு அவிப்பம்’என்ற தாய் சொல்லிக் கொண்டே அரிசி மாவிற்குள் சுடுதண்ணியை அளவாக ஊற்றி பிசைந்து கொண்டிருந்தாள்.

திருவளையில் தேங்காயைத் துருவியபடியே கண்ணை உயர்த்தித் தாயைப் பார்த்தவள், தாயின் கண்கள் தன்னையே எடை போடுவது போலப் பார்க்க கை மாவைப் பிசைந்து கொண்டிருப்பதை அவதானித்தாள்.

பாறு குளித்துவிட்டு வந்திருக்கிறாளோ, அப்படிக் குளித்திருந்தாள் எதற்காக குளித்திருப்பாள்,தனமும் பூரணியும் வந்ததற்குப் பிறகும் தோட்டத்திலை ஞானத்தோடை நின்றிருப்பாளோ…..அப்படியென்றால் …என்று தாய் ஏதேதோ கற்பனை செய்தாள்….

ச்சாய் அப்படியொன்றும் நடந்திருக்காது அதுக்கெல்லாம் அவள் இடம் குடுக்க மாட்டாள்….அப்படி நிலைதடுமாறி நடந்திருந்தால் இது எங்கை போய் முடியுமோ

தெரியேலையே….கடவுளே கடைசியிலை வெட்டுக் குத்திலைதான் முடியப் போகுதோ…..புளியடி வைரவா எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்பா……ஒரே ஆட்களென்றால் …அப்படி இப்படி நடந்தாலும் மல்லுக் கட்டியாவது பேசிக் கட்டி வைக்கலாம்….அவை வேறு …நாங்கள் சரியான வேறு …..பாறுவின் தாயின் பயமும்……கற்பனையும் நீண்டு கொண்டே போனது….

தேங்காயைத் துருவி முடிச்ச பாறு அமைதியாக அடுப்படிச் சுவரில் சாய்ந்து தாயைப் பார்ப்பதும் , தாயின் கண்களைச் சந்திக்க முடியாமல் அங்கை இங்கை பார்ப்பதுமாக இருந்தாள்.

பாறுவின் தகப்பன் விறாந்தையில் இருந்த கதிரையில் உட்கார்ந்தபடி வீருகேசரிப் பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்தார்.

பாறுவின் தகப்பனும் தாயும் யூனியன் கல்லூரியில் படித்தவர்கள்.எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள்.பாறுவின் தாயின் கையெழுத்து அழகானதும்கூட.

பாறுவின் தகப்பன் வீரகேசரிப் பத்திரிகையையும் தினபதிப் பத்திரிகையையும் தினசரி எடுப்பவர்.

அவர்களின் அயலில் இருக்கும் வீடுகளில் நாலைந்து வீடுகளில் உள்ளவர்கள் பத்திரிகை வாசிப்பதில் ஆர்வமுள்ளவர்களாகையால் பேப்பர் கடைப் பொன்னையாவின் கடையில் வேலை செய்யும் பொடியன் அந்த ஐந்து வீடுகளுக்கும் பத்திரிகை கொண்டு வந்து போட்டுவிட்டு போவான்.

பாறுவின் வீட்டுக்கு நாலைந்து வீடுகள் தள்ளி பசுபதி என்ற ஒருவர் இருந்தார்.அவர் கொம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிப்பவர்.முற்போக்கானவர்.தெல்லிப்பழைப் பலநோக்கக் கூட்டுறவுச் சங்க நிர்வாகக் குழுவில் அங்கம் வகிப்பவர்.நேர்மையானவர்.சங்கக் கடைகளில் ஊழல் நடக்கக்கூடாதென்பதில் கறாராக இருப்பவர்.

புட்டு அவிச்சு முடிஞ்சதும் „ கொப்பாவையும் தம்பியையும் வரச் சொல்லு „ என்று தாய் சொல்ல, அடுப்படிக்குள் இருந்தே தகப்பனுக்கும் தம்பியாருக்கும் பாறு குரல் குடுத்தாள்.அவர்கள் இருவரும் எழுந்து அடுப்படிகு;கள் வர எல்லாருமாக சாப்பிடத் தொடங்குகிறார்கள்.

குனிந்து தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த பாறு இடைக்கிடை கண்ணை உயர்த்தி தாயாரைப் பார்த்தாள்;.தம்பியார் வேக வேகமாக சாப்பிட்டுவிட்டு எழுந்து போய்விடுகிறான்.

தகப்பன் தன்னிடம் என்ன கேட்கப் போகிறார் என்பதை நினைச்சு பாறு கொஞ்சம் படபடப்பாக இருந்தாள்.

தோட்டத்தில் தானும் ஞானமும் புருசன் பெண்சாதி போல நடந்து கொண்டதும், அவனின் கைலியைக் கட்டிக் குளிச்சதையும் நினைச்சவள்…, எல்லாம் அப்பாவுக்குத் தெரிஞ்சிருக்குமோ….என்ற பயம் இருந்தாலும்,எதுவுமே நடக்காதது போல „அப்பா நாளைக்கு நான் தனமக்காவோடையும் புரணியக்காவோடையும் படம் பார்க்கப் போறனப்பா, அண்டைக்கு உங்களுக்குச் சொன்னனான்தானே……’ என்று இழுக்க’ சரி அவையோடைதானே போறாய், கவனமாக போட்டு வா,பிரைவேற்றா சோதனை எடுக்கப் போறன் என்றனி, அப்பிளிகேசன் போடேலையே’ என்று தகப்பன் தொடர „ திங்கட்கிழமை விதானையிட்டை கையொப்பம் வாங்கி அனுப்பப் போகிறனப்பா’ என்று தகப்பனைப் பார்க்காமலே சொன்னவள், தாய் இதைத்தான் „ கொப்பா உன்னோடை கதைக்க வேணுமாம் „ என்று சொல்லியிருக்கிறார் போல என்று நிசை;சவளுக்கு தகப்பன் கேட்ட அடுத்த கேள்வி தலையில் இடிவிழுந்தது போல இருந்தது.

தகப்பன் „ இண்டைக்கு பின்னேரம் போல அந்த ஞானத்தோடை வழுக்கையாறு வெள்ளவாய்க்காலடிக்கு போனனீயோ „ என்று கேட்க, தகப்பன் கேட்டு முடிச்சவுடனேயே’இல்லையப்பா நான் ஏன் அங்கை போறன்,நான் அவரோடை அங்கை போகேலை தோட்ட வேலை முடிய நேரம் போயிட்டுது,தனமக்காவோடையும் பூரணியக்காவோடையும் வந்திட்டனே, ஆரேன் என்னைக் கண்டவையோ „என்று கேட்க „ உன்ரை மாமா அந்தப் பக்கத்தாலை வரேக்கை உன்னைப் போல சாடையுள்ள பிள்ளையை வழுக்கையாறு வெள்ள வாய்க்காலடியிலை ஒரு பொடியனோடை கண்டவராம்…..அது வேறு யாராயும் இருக்கலாம்…சரி அதை விடு அது வேறை யரோ போல „ எனத் தகப்பன் கதையை வளர்க்காமல் முற்றுப்புள்ளி வைக்கிறார்.

தகப்பனும் சாப்பிட்டு முடிஞ்சதும் அடுப்படிக்குள் கிடந்த வெற்றிலை பாக்குத் தட்டத்தை தூக்கிக் கொண்டு விறாந்தைக்குப் போகிறார்.

அவர் போகும் வரை காத்திருந்த தாய் „நாளைக்கு தனத்தோடையும் பூரணியோடையுந்தானே படத்துக்குப் போறாய், வேறை ஆரும் உன்னோடை வரேலைத்தானே,பாறு நீ போற இடத்துக்கெல்லாம் நானோ கொப்பாவோ நீ ஆரோடை போறாய் வாறாய் என்று பார்க்க வரேலாது…நாங்கள் ஆரெண்டதை கனதரம் சொல்லியிருக்கிறன் அதை நினைச்சு கவனமாய் நடந்து கொள்’ என்று தாய் கணவனுக்கு கேட்காதவாறு மெதுவாக ஆனால் கண்டிப்பாகச் சொல்ல, பாறு எதுவுமே சொல்லாது எழுந்து போகிறாள்.

ஆனால் தாயின் மனதிலோ….

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *