கதைகள்

ஆடி அமாவாசை!… ( சிறுகதை ) …. முருகபூபதி.

எங்கள் குடும்பத்தின் வாட்ஸ் அப் குரூப்பிற்கு எனது தங்கை மகள் ஸ்வீட் ஃபெமிலி என்று பெயர் வைத்துவிட்டாள். இதன் ஊடாக இலங்கை, தமிழ்நாடு, இங்கிலாந்து, மத்திய கிழக்கு உட்பட லெபனான் – சிரியா எல்லை வரையில் வாழ்ந்துகொண்டிருக்கும் குடும்பத்தின் இரத்த உறவுகளை பிணைத்துவிட்ட மருமகள் தற்போது கட்டாரில் தனது குடும்பத்துடன் வசிப்பவள்.

கணவனின் தம்பியின் திருமணத்திற்காக இந்த கொரோனோ காலத்திலும் எப்படியோ இலங்கை வந்தவிடத்தில் ஆடி அமாவாசையை நினைவுபடுத்தி வாட்ஸ்அப்பில் மறைந்துவிட்ட எங்கள் அப்பாவினதும் தனது கணவனின் அப்பாவினதும் மற்றும் குடும்ப உறவுகளில் வாழும் ஆண்களின் அப்பாமாரினதும் படங்களை தேடி எடுத்து பதிவேற்றி நினைவுபடுத்திவிட்டாள்.

கொரோனோ தொற்று உலகெங்கும் பரவியதையடுத்து வீட்டில் முடங்கியிருந்த என்னையும் இந்த வாட்ஸ் அப் அலைப்பறைக்கு அவள் இழுத்துவிட்டதால், தினமும் அந்த ஸ்வீட்ஃபெமிலியை சில நிமிடங்கள் பார்த்துவிடுவதும் – பதில் எழுதுவதும் எனது அன்றாடக் கடமைகளில் ஒன்றாகிவிட்டது.

எங்கள் அப்பா, மறைந்த ஆண்டும் கறுப்பு ஜுலை ஆண்டும் ஒன்றுதான். நான் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில் இருந்தேன். அக்கா, தங்கை குடும்பம் வவுனியாவில். இரண்டாவது தம்பி அப்போது மத்தியகிழக்கில். அவனது குடும்பம் குருநாகலில்.

பூர்வீக ஊரில் எங்கள் வீட்டில் எஞ்சியிருந்தது அம்மாவும் அப்பாவும் இளையதம்பியும் மாத்திரம்தான். அந்தக் கலவர காலத்தில் அப்பா மிகவும் பதட்டத்துடன் இருந்தவர்.

அவருக்கு நீண்டகாலமிருந்த நீரிழிவு உபாதையினால், அந்திம காலத்தில் கண்பார்வையும் மங்கிவிட்டது. எனது மூத்த குழந்தைதான் அவருக்கு வீட்டு முற்றத்தில் வழிகாட்டி. இளையவளை தோளில்போட்டு பாட்டுப்பாடி தூங்கவைப்பவரும் அப்பாதான்.

எனது குழந்தைகளையும் நான் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவந்துவிட்ட ஏக்கமும், அவரது வெளியூர் நண்பர்கள் கலவர காலத்தில் கொல்லப்பட்ட செய்திகளும் சேர்ந்து, ஒரு நாள் காலையில் மாரடைப்பு வந்து இளையதம்பியின் மடியிலேயே உயிரை விட்டவர்.

அந்தத்தம்பி இப்போது தமிழ்நாட்டில் வேலூரில் குடும்பத்துடன் வசிக்கிறான்.

ஆடிஅமாவாசைக்கு முதல்நாளே எனது மனைவி ஷொப்பிங் செய்யவேண்டிய மரக்கறிகளின் பெயர்களை எழுதி பெரிய பட்டியல் தயாரித்துவிட்டாள்.

வருடத்தில் ஒருமுறைவரும் ஆடி அமாவாசை.

அன்றுதான் மனைவி பத்துக்கும்மேற்பட்ட கறிவகை – அனைத்தும் மரக்கறிதான். இதர நாட்களில் ஒன்றிரண்டு கறியுடன் ஒப்பேற்றி, மிஞ்சினால் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து மறுநாளும் சூடாக்கித்தந்து இரண்டு நாட்களை சமாளித்துவிடும் இல்லத்தரசி, மீண்டும் ஆடி அமாவாசைக்கு தயாரானால், பத்துக்கறி வகை இருக்கும். கூடவே வடை பாயாசமும் நிச்சயம்.

கொரொனோ கால முடக்கம் வருமா வராதா என்பதை தினமும் அறிந்து சொல்பவளும் இல்லத்தரசிதான்.

ஆடிஅமாவாசை வரும் நாளில் நிச்சயம் விரதம் இருக்கவேண்டும். எனக்கு இதெல்லாம் சரிப்பட்டுவராது. எனக்கும் அப்பாவைப்போன்று நீண்ட நெடுங்காலமாக நீரிழிவு உபாதை. பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் மாரடைப்பும் வந்து பைபாஸும் செய்துவிட்டு இன்சுலினுடனும் பத்துக்கும் மேற்பட்ட மாத்திரைகளுடனும் எஞ்சியிருக்கும் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் நானும் விரதம் இருக்கமுடியுமா.?

அப்பா வாழ்ந்த காலத்தில், அவர் தனது தகப்பனுக்காக ஆடிஅமாவாசை விரதம் இருந்ததாக எனக்கு நினைவில்லை.

அவர் ஒரு வர்த்தக நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக நாடெங்கும் சுற்றிக்கொண்டிருந்தவர். எங்கள் ஊர் கோயில் நவராத்திரி காலத்திலும் ஒன்பதாவது திருவிழா வந்தால் நான்தான் தர்ப்பை போட்டு நடத்தியிருக்கின்றேன். புலம்பெயர்ந்து வரும்வரையில் இது நடந்திருக்கிறது.

அப்பா அபூர்வமாகத்தான் திருவிழாவுக்கு வந்திருப்பார்.

அப்பாவுக்கு இந்த விரதங்களில் நம்பிக்கை இருந்ததில்லை.

வாழ்க்கை வாழ்வதற்குத்தான். அனுபவிக்கத்தான். Life is short make it sweet என்று தாகசாந்தி செய்யும் நாட்களில் அவர் சொல்லக்கேட்டிருக்கின்றேன்.

இந்த ஆண்டு ஆடிஅமாவாசை வந்தன்று அதிகாலையே மனைவி துயில் எழுவதற்கு முன்னர் பூனைபோன்று நகர்ந்து வந்து தேநீரும்

தயாரித்து அருந்திவிட்டு, சிரமபரிகாரம் செய்துவிட்டு இரண்டு பக்கட் நூடில்ஸும் மிக்ஸ் வெஜிடபிளும் அவித்து சாப்பிட்டுவிட்டு அமைதியாக இருந்துவிட்டேன்.

மனைவி எழுந்ததும் நானும் பயபக்தியுடன் சமையலறையில் அவளுக்கு உதவியாக காய், கறி நறுக்கி, வெங்காயம் வெட்டிக்கொடுத்தேன்.

அடிக்கடி எனது முகத்தை பார்த்தாள்.

இவன் உண்மையிலேயே விரதம் இருக்கிறானா..? என்ற பார்வை அவளது கவனத்தில் இழையோடியிருந்தது.

ஊரில் நான் இடதுசாரிகளுடன் அலைந்தவன் என்பது அவளுக்கு முன்பே தெரியும். எங்கள் ஊர் தமிழ்த்தேசியர்களும் பச்சைக்கட்சிக்காரர்களும் தேன்நிலவு கொண்டாடிய காலத்தில், என்னைச் “ செஞ்சட்டை காடையர் கூட்டத்தைச் சேர்ந்தவன் “ என்று முன்னர் சொல்லியிருப்பதும் அவளுக்குத் தெரியும்.

“ ஏழைகளின் சிரிப்பில்தான் இறைவனைக்காண முடியும் “ என்றும் அவளிடம் அடிக்கடி சொல்லி வாங்கியும் கட்டியிருக்கின்றேன்.

வருடத்தில் ஒருநாளாவது பயபக்தியோடு இறந்துவிட்ட அப்பாவை நினைத்து விரதம் இருந்து புண்ணியம் தேடுங்கள் என்று காலையிலேயே சொல்லத் தொடங்கிவிட்டாள்.

மனைவியை சீண்டிப்பார்ப்பதில் எந்தக்கணவன்மாருக்கும் தனிச்சுகம் இருக்கிறது அல்லவா.

கைத்தொலைபேசியில் வாட்ஸ் அலைப்பறை, மின்னஞ்சல் பார்க்கவிடாமல், என்னை சமையலறையில் இழுந்து வைத்து வேலை வாங்குபவளிடம் ஆடி அமாவாசை பற்றியும் அதற்கான தாற்பரியம் பற்றியும் தெரிந்தும் தெரியாதுவன்போன்று கேட்டேன்.

உங்கள் அப்பாவுக்கு பிடித்தமானதெல்லாம் சமைத்து அவரது படத்திற்கு முன்னால் படையல்போட்டு, , அதிலிருந்து சிறிது எடுத்து வீட்டு முற்றத்திற்கு வரும் பறவைகளுக்கு வைத்துவிட்டுத்தான் சாப்பிடவேண்டும் என்று எனக்குத் தெரிந்ததையே சொன்னாள்.

ஊரில் நாங்கள் காகத்திற்குத்தானே வைப்போம். இங்கே காகங்கள் வருமா..? காகங்கள்தானே பிதிர்கள். அம்மா, எங்கள் அப்பாவுக்காக ஆடிஅமாவாசை தினத்தில் செய்த சம்பிரதாயங்களை அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது, வேலூரிலிருந்து தம்பி வாட்ஸ் அப்பில் தொடர்புகொண்டான்.

அப்போது எங்கள் வீட்டில் சமையல் முடியும் தறுவாயிலிருந்தது.

அப்போது அவனுக்கு காலைப்பொழுது.

அவனது மடியில் அப்பா உயிர்விட்டதை நினைவுபடுத்தினான். நான் அப்பாவின் விநோதமான பழக்கங்களை எனது மனைவிக்கும் கேட்கும் விதமாகச்சொன்னேன்.

“ தம்பி… உங்களுக்கு ஞாபகம் இருக்கா..? ஒரு ஆடி அமாவாசையின்போது, அம்மா இப்படித்தான் மரக்கறி சாப்பாடெல்லாம் சமைச்சு படையல் போட்டுவிட்டு, பத்து சோற்றுப்பார்சல் கட்டித்தந்து, சந்தைக்கு அருகிலிருக்கும் ஆலமரத்தடியில் கூடியிருக்கும் பிச்சைக்காரர்களுக்கு கொடுத்துவிட்டு வரச்சொன்னாங்க. நானும் எடுத்துக்கொண்டு போனேன். ஆனால், அங்கே அன்றைக்குப்பார்த்து எவரும் இல்லை. அந்த இடத்தில் நின்ற ஒரு ஆச்சியிடம்கேட்டேன்.

எல்லாப்பிச்சைக்காரர்களும் கிரிக்கட் மெட்ச் பார்க்கப்போய்விட்டதாகச்சொன்னாங்க. உங்களுக்குத் தெரியும்தானே சென்மேரிஸ் தேவாலயத்திற்கு முன்னாளிலிருக்கும் சந்திரவிலாஸ் சைவ ஹோட்டலுக்கு முன்பாக ஒரு பெரிய ரீவியை வைத்து வாரவங்க – போறவங்க பார்க்கத்தக்கதாக கொழும்பில் நடந்த கிரிக்கட் மெட்சை காண்பித்துக்கொண்டிருந்தாங்க. நான் அங்கே போய் அம்மா தந்த சாப்பாட்டுப் பார்சல்களை பகிர்ந்துகொடுத்தேன்.

அதில் ஒரு பிச்சைக்காரன் என்னை அடையாளம் கண்டுகொண்டான். அடிக்கடி எங்கட வீட்டுப்பக்கம் வாரவன். அப்பா நல்ல சுகதேகியாக இருக்கும்போதே வந்து போய்க்கொண்டிருந்த ஆள். ஒருநாள் அப்பா மத்தியானம் வெளியூரிலிருந்து வந்த நண்பர்களுடன் தாகசாந்தி செய்துகொண்டிருந்தபோது வந்து அப்பாவிடம் சாராயம் வாங்கியும் குடித்துவிட்டு, அம்மாவிடம் சாப்பாடும், அப்பாவிடம் ஒரு பிரிஸ்டல் சிகரட்டும் வாங்கிக்கொண்டு போனவன். அதற்குப்பிறகும் அடிக்கடி வந்தான்.

அம்மா அவனைக்கண்டால், கலைத்துவிடுவார்கள். அப்பா இறந்தபோதும் வாசலில் வந்து நின்றான்.

பிறகு கணநாட்களாக வீட்டுப்பக்கம் வரவில்லை. அன்று என்னை எப்படியோ அடையாளம் கண்டுவிட்டான். அவனுக்கு அப்பாவும் அவர் அவனுக்கு அன்று கொடுத்த அரைகிளாஸ் சாராயமும் நினைவில் தங்கியிருந்திருந்திருக்கிறது.

கிரிக்கட் ஆட்டம் பார்ப்பதை விடுத்து, தலையை சொறிந்துகொண்டு அப்பாவை அவன் நினைவுபடுத்தினான்.

அன்று ஆடிஅமாவாசை என்பது அவனுக்குத் தெரியாது.

நாங்கள் வீட்டில் அப்பாவை நினைத்து விரதம் இருந்து, சமைத்து எடுத்துச்சென்று அவனுக்கும் கொடுக்கிறோம். ஆனால், அவன் அப்பா தந்த சாராயத்தையே நினைவுபடுத்தினான்.

வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொன்னேன்.

“ உங்கப்பாவும் குடிச்சே செத்தார். அவனும் அப்படித்தான் சாகப்போகிறான் “ என்று அம்மா அவனைத்திட்டினார்கள்.

“ என்னம்மா… ஆடி அமாவாசை நாளில் இப்படிச்சொல்கிறீங்களே “ என்றேன்.

இவ்வாறு நான் சொல்லிக்கொண்டிருந்தபோது, தம்பி குறுக்கிட்டான்.

“ அண்ணா… நான் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை விரதத்தின்போது அப்பாவின் படத்துக்கு சைவசாப்பாடும் படைத்து, ஒரு கிளாஸ் விஸ்கியும் வைத்துவிட்டுத்தான் வணங்குவேன் அண்ணா. அப்பா என்ர மடியில்தான் உயிரை விட்டார் “ என்று நாத்தழுதழுக்க சொன்னான்.

அதற்கும்மேல் தம்பியுடன் பேசுவதற்கு எனது வாயில் வார்த்தைகள் வரவில்லை.

வாட்ஸ்அப் தொலைபேசி அழைப்பினை அணைத்துவிட்டு, மனைவியை பார்க்கின்றேன்.

அவள் அப்பாவின் படத்துக்கு முன்னால் ஒரு எவர்ஸில்வர் தம்ளரில் தண்ணீரை வைத்துக்கொண்டிருந்தாள்.

—-0—

letchumananm@gmail.com

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *