கதைகள்

முரண்பாடற்ற முரண்பாடு!…. ( சிறுகதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

காந்தத்தில் எதிர் துருவங்கள் ஈர்க்கும் நேர் துருவங்கள் விலகும். இதை வாழ்விலும்
காணலாம். ஒன்றோடொன்று இரவும் பகலும் இணைந்து தானே நாளாகிறது. ஆணும் பெண்ணும் இணைந்துதானே வாழ்க்கையாகிறது. அதேமாதிரிதான் மனித பண்பாடுகளிலும் முரண்பாடுகள் இருப்பினும் இணைந்துதானே வாழ்கிறோம் என்று தன் காதலி மெல்லிழையுடன் பேசிக்கொண்டே வந்தான் அருட்குவை.மயங்குகின்ற மாலைப்பொழுதில் ஆரோக்கியத்திற்கு வேண்டிய நடை பயணத்தில் இப்படி பேசிக்கொண்டே நடப்பது அவர்களது வழக்கம். இன்றும் அதேபோல் பெங்களூர் அலசூரிலிருந்து மகாத்மாகாந்தி வீதியில் நடந்தவாறே கப்பன்பாக்கிலுள்ள காந்தி சிலைவரை சென்றவர்கள் திரும்பிக் கொண்டிருந்தார்கள. அப்போது மெல்லிழை,“அப்படியென்ன முரண்பாட்டை கண்டுவிட்டீர்கள்?” என்றாள்.

“ஏனில்லை? நீ கூட காதலனை எல்லோரும் “டேய்” போட்டு விளிக்கும்போது என்னங்க ணொன்னங்க என்றுதானே அழைக்கிறாய்?

அவன் அப்படிச் சொன்னதும் அவள் கலகல எனச் சிரிக்கவும் அவன் உடனடியாக கீழே வேகமாகத் தேட அவள் அவனிடம் என்ன தேடுகிறீர்கள் என்று கேட்டாள். அதற்கு அவன் ஏதோ சில்லரையை சிதறியமாதிரி சத்தம் கேட்டது அதைத்தான் தேடினேன் என்று சொல்லவும் மேலும் அதிகமாக சில்லரைகளை சிதறிய ஒலிகேட்டு அது அடங்க சற்று நேரமானது.

சரி, சொல்லுங்கள் அப்படி என்ன முரண்பாட்டை கண்டீர்கள் என்று அவள் வினவ,

“நம் தமிழரின் பாரம்பரிய உடை என்றும் அதை விழாக்காலங்களில் அணியவேண்டும் என்கிறார்களே அதைத்தான் சொல்கிறேன்.” என்றான்.

“அது சரிதானே. பாரம்பரிய உடையைத்தானே அணியச் சொல்கிறார்கள்?”

“எது பாரம்பரிய உடை? நமது பாரம்பரிய உடை காலம் காலமாக மாறிவந்துள்ளது.”

“எதைவைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?”

“சொல்கிறேன். தமிழன்தான் உலகின் மூத்தகுடி. ஆடையின்றி அலைந்து திரிந்த அவன்தான் உடலை மறைக்க கற்றுக் கொடுத்தான். முதலில் இலைகளை வைத்து ஆடையாக உடலை மறைத்தான். அதுவே அவன் ஊசி இலைக்காடுகளில் தோன்றி இருந்தால் என்ன செய்திருப்பானோ?”

“அன்ன சொல்ல வர்றீங்க?”

“ஏன் ஆதித்தமிழன் பண்பை மறக்காது விழாக்காலங்களில் இலைகளினால் ஆன உடையணிந்து நம் பாரம்பரியத்தின் ஆரம்பத்தை மறக்காதிருக்கலாமே?”

“உங்களுக்கு ரொம்பவும் குசும்பதான்!”

“குசம்பல்ல, எனது ஆதங்கத்தைத்தான் சொல்கிறேன். பாரம்பரிய உடை என்ற போர்வையில் தமது வசதியையும் வாய்ப்பையும் விளம்பரப்படுத்த ஆடம்பர உடைகளை அணிவதா பாரம்பரிய உடை?
பருத்தி ஆடை கூட வாங்க வக்கின்றி வற்றிய வயிற்றுடன் வாழ்பவர்கள் முன் பட்டுடுத்தி பகட்டுக் காட்டுவதா பாரம்பரிய உடை?”

நீங்கள் சொல்வது சரிதான். பின் எப்போதுதான் அவர்கள் தங்களது செல்வாக்கை காட்ட முடியும் என்று மெல்லிழை கேட்க அருட்குவை அவர்கள் எப்பவுமே அதை உடுத்தட்டும் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் இதுதான் பாரம்பரிய உடை என்று பம்மாத்து காட்டவேண்டாம் என்கிறேன்.

அதவும் சரிதான் என்றவளிடம் என்ன அவ்வளவு விரைவில் ஏற்றுக் கொண்டாய் என்று கேட்க அவள் தொடந்தாள். மனதர்கள் எதையும் மிகைப்படுத்தலின்றி இயல்பாக இருக்க வேண்டும் என்றாள். ஏன் உனக்கும் ஏதாவது சமூகத்தில் ஏதாவது முரண்பாடு தென்படுகிறதா? கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல் என் காதலியான உனக்கும் முற்போக்கு சிந்தனை ஊற்றெடுக்கிறதல்லவா? என்றதும் அவள்,

“ஏன் பன்றியுடன் சேர்ந்த கன்றும் தின்னுமல்லவா என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?”

அதைத்தானே முரண்பாடு என்கிறேன். நீ சொல்ல வந்ததை சொல் என்றான். தொடர்ந்து கதைக்க ஆரம்பித்தாள். இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்பவர் விமானத்தில் பயணிக்கும் போது முற்றிலும் மாறி முரண்பாடாய் தெரிகிறார்கள்.

“புதிர் போடாதே இழை?”

“கோவையில் எனக்குத் தெரிந்தவர் காளியம்மன் கோவிலில் பூஜை செய்கிறார். கோவிலில் இருக்கும் அவர் எப்போதும் மேலாடை இன்றித்தான் இருப்பார். நாம் வணக்கம் என்றால் பதிலுக்கு வணக்கம் சொல்லாமல் காளியாத்தா என்பார்” என்று சொல்லிவிட்டு அமைதியானாள்.

ஐயோ என் ஆர்வத்தை தூண்டி இப்படி நிறுத்தாதே என்று அருள் கெஞ்சவும்
தொடர்ந்தாள். ஒருமுறை அவரை கோவை விமான நிலையத்தில் பயணிகள் விமானத்திற்காக காத்திருக்கும் இடத்தில்
பார்த்தபோது மிரண்டுபோனேன். நெற்றில் அந்த மதச்சாயம் இல்லை. கூந்தல் அவரை பூஜாரி என்ற சிறிதும் ஆடையாளம் காட்டவில்லை.

மேலே ஆடையின்றி இருப்பவர் அங்கு வேட்டி சட்டை என்றிருந்தால்கூட பரவாயில்லை. அங்கு பலர் வேட்டி சட்டையுடன் இருந்தனர். ஆனால் இவரோ கால்சட்டை முழுக்கைசட்டை என்று மட்டுமின்றி சட்டையை கால்சட்டைக்குள் நுழைத்து பெல்ட் போட்டு கட்டி அட்டகாசமாக இருந்தார். அவரிடம் நான்கண்ட முரண்பாடு என்னை ஆச்சரியத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக அப்போது அங்கு வந்த ஒருவர் வணக்கம் என்றதும் வழக்கமாக எப்போதும் சொல்லும் காளியாத்தா என்று சொல்லாமல் பதிலுக்கு வணக்கம் என்றார்.

தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் ஆகாயவிமானத்தில் இல்லாமலா போவார்? மேலும் அது உந்தி நீந்திச் செல்லும் வானில் வாயுபகவான் இருக்கிறாரே? ஆனால் இவர் இப்போது
முற்றிலும் முரண்பட்டிருக்கிறாரே என்று அவளது அனுபவத்தைக்கூறி முடித்தாள்.

இப்படியாக முரண்பாட்டை பற்றிப் பேசிக்கொண்ட ட்ரினிடி சர்ச் சதுக்கத்தை அடைந்ததைக்கூட அறிய முடியாத அளவுக்கு தொடர்ந்த அவர்களின் பேச்சு. பேக்கரிக்கு முன்னாலிருந்த தெரிவில் அவள் நுழையவும் அவளுக்கு விடைகொடுத்து விட்டு பேக்கரியை தாண்டியதும் காளியம்மன் கோவில் தெருவிலுள்ள தன் வீட்டை நோக்கி பாதை தெரிந்த வண்டியில் பூட்டிய காளைகள் போல கால்கள் திரும்பின.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *