கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!…. 38 ….. (உண்மைக் கதை) …. ஏலையா க.முருகதாசன்

மிகப்பெரிய சிற்றுண்டிச்சாலை.அங்கே வேறு வேறு நாட்டுக்காரர்கள் இருப்பதை அவர்கள் பேசிய மொழிக் கலவைகளின் தொனியிலிருந்து அறிய முடிந்தது.

நாங்கள் எங்களுக்குத் தேவையான சாப்பாட்டை நிரையில் நின்று எடுப்பதற்காக நானும் யோகமலரும் எழுந்து உணவுகள் பக்குவமாக சுகாதாரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்துக்குப் போய்க் கொண்டிருந்த போது அங்கிருந்தவர்களில் யாரிடமோ இருந்து, தமிழில் அதுவும் யாழ்ப்பாணத்துத் தமிழில் கதைத்துக் கொண்டிருந்தவர்களின்; சத்தம் வரவே நான் சத்தம் வந்த திசையை நோக்கி முகத்தை திருப்ப யோகமலரும் அந்தப் பக்கமாக திசையை திருப்பியவள் „உங்க ஊர்க்காரங்க போல இருக்குங்க,நீங்க பேசுவது போலவே பேசுறாங்க’ என்று அவள் சிரித்துக் கொண்டே சொல்ல,’ஓமோம் அவர்களாகத்தானிருக்க வேண்டும்’ என்று சொன்னது சாபிட்டுக் கொண்டிருந்தவர்களின் காதில் விழவே எங்களைத் திரும்பிப் பார்த்தார்கள். ஓமோம் என்று நான் சொல்லியதுதான் எங்களை நோக்கி அவர்களைக் கவனிக்க வைத்திருக்க வேண்டும்.

அவர்கள் இருவரும் இளம் தம்பதிகளாகத்தான் இருக்க வேண்டும்.அவர்களுக்கு அருகில் நான்கு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியும் உட்கார்ந்திருந்தாள்.தாய் அந்தச் சிறுமிக்கு கரண்டியால் சாப்பாடு தீத்திக் கொண்டிருந்தாள்.

தம்பதியர் இருவரும் எங்களை நோக்கிக் கையைக் காட்டினார்கள்.நாங்களிருவரும் கையைக் காட்டினோம்.யாழ்ப்பாணத்து தமிழ் எங்களுக்குள் ஒரு மகிழ்ச்சியையும் உறவையும் ஏற்படுத்தியிருந்தது.

இப்படியான கொட்டலில் தங்க வேண்டுமென்றால் அதற்கு நிறையப் பணம் தேவை.இலங்கையிலிருந்து வந்து தங்கும் ஒரு குடும்பம் பெரிய வருமானம் உள்ளதாக இருக்க வேணடும்.

வணிக நிறுவனங்களை வைத்திருப்பவர்களால் இப்படியான கொட்டலில் தங்க முடியும்.’ அவர்கள் பிஸினஸ் ஆட்களாக இருக்க வேண்டும்’ என்று யோகமலருக்குச் சொல்ல, ஆமாங்க இருக்கலாம்’ என்று அவள் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சாப்பாடு எடுப்பதற்காக பலர் நிரையில் நின்று கொண்டிருக்க நாங்களும் அவர்கள் பின்னால் போய் நின்று கொண்டிருந்தோம்.

அவர்கள் என்னையும் யோகமலரையும் பெரும் வசதியுள்ளவர்கள் நினைச்சிருக்கலாம்.உண்மையில் என்னைப் பற்றி நான் யோசிக்கையில் இப்படியான கொட்டலில் நானாக காசு செலவழித்துத் தங்குவது என்பது நினைச்சுக்கூட பார்க்க முடியாதது. காலப்புயல் என்னை எங்கை கொண்டு போய் தூக்கிவீசி நிறுத்தியிருக்கிறது என நினைச்சு மனசுக்குள் சிரித்துக் கொண்டன்.

யோகமலருடனான காதலும் மனச்சாட்சியை அலட்சியப்படுத்திவிட்டு விதிவழி என்று விதியின் மேலே பாரத்தைப் போட்டு நான் நடந்து கொள்ளும் விதமுமே இன்று இந்த கொட்டலில் தங்க வைச்சிருக்கின்றது என்று நினைச்சுக் கொண்ட நான் யோகமலரின் அண்ணன்மார் செய்த உதவி என நினைச்சுக் கொண்டன்.

அவர்களுக்கு மனசால் நன்றி சொன்னன்.யோகமலருக்கு முன்னால் நான் நிரையில் நின்ற போதும் சாப்பாடுகள் எதையுமே கோப்பையில் எடுத்து வைக்காமல் இருந்ததைக் கண்ட யோகமலர்’ என்னங்க சிலை மாதிரி நிற்கிறீங்க உங்களுக்கு விருப்பமானதை எடுங்க’ என்றவள், „இருங்க நானே உங்களுக்கும் எடுக்கிறன் „ என்று விதம் விதமான சாப்பாடுகளை எடுத்து சாப்பாட்டுக் கோப்பையில் வைச்சவள் ஒரு சிறு டிஸ்ஸில் சூப்பையும் விட்டு பெரிய தட்டடொன்றில் வைச்சு என்னிடம் தந்துவிட்டு,தனக்கும் தேவையான சாப்பாடு சூப்பையும் எடுத்து தட்டில் வைச்சுவிட்டு,புரூட்சலாட்டை இரண்டு டிஸ்ஸில் எடுத்து வைச்சாள்.

எமக்காக ஒதுக்கப்பட்ட மேசையில் போய் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினம்.’என்ன யோசிச்சுக்கிட்டு இருந்தீங்க,அக்காவை நினைச்சீங்களா „என்றாள்.

நான் எதுவுமே பேசாது இருந்தன்.’அக்காவை நினைச்சுக் கவலைப்படாதீங்க,நமக்கென்னு கடவுள் எழுதின விதிங்க இது’என்று அவள் அமைதிப்படுத்தினாள்.

நாங்களிருவரும் சாப்பிட்டு முடியிற நேரம்,மீண்டும் சிறீலங்காவைச் சேர்ந்த இந்தக் கொட்டலில் பொறுப்பான வேலை செய்யிற பெண் எங்களை நோக்கி வந்தாள்.

அவள் சங்கானையைச் சேர்ந்தவள் என்று சொல்லியிருந்தாள்.எனக்கும் மனைவிக்கும் சங்கானையில் தூரத்துச் சொந்தக்காரர்கள் இருப்பதாக அறிந்திருந்தன்.அதைவிட எனது அம்மாவின் மச்சான் முறையானவர் சங்கானையில்தான் கல்யாணம் செய்திருந்தார்.சில வேளை இந்தப் பெண் சொந்தக்காரியாகவும் கூட இருக்கலாம்.

அவள் வருவதைக் கண்டதும் மனம் பலவாறாக மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல நினைக்கத் தோன்றியது.

எமக்கருகில் வந்தவள், „கலோ’ என்றவள் „உட்காரலாமா’ என்று கேட்டாள்.’என்ன நீங்க இப்படிக் கேட்கிறீங்க, என்னவரோட ஊரக்காரங்க நீங்க உட்காருங்க, சாப்பிட்டீங்களா,உட்காருங்க’ என்று யோகமலர் சொல்ல, நானும் „உட்காருங்க’ என்பதை „பிளீஸ்’ என்று கதிரையக் காட்டினன்.

அந்தப் பெண் அந்தக் கொட்டலுக்குரிய சீருடையில் இல்லாமல்,வெள்ளை நீளக் காற்சட்டையும் மஞ்சள்நிற சட்டையும் போட்டு அழகான மஞ்சள்நிற ஸ்காப் ஒன்றை கழுத்தில் கட்டியிருந்தாள்.

„டியூட்டி முடிஞ்சுதா’ என்று நான் கேட்க,’முடிஞ்சுது…என்ற அந்தப் பெண் „உங்களுடைய பெயர் முருகதாசன் இவாவுடைய பெயர் யோகமலர்தானே „ என்றவள், தன்னுடைய பெயர் இராஜகுமாரி என்றாள்.

„ மேசை உங்களுக்கு மட்டுமே உரியது, உங்களுடைய பெமிர்சன் இல்லாமல் யாருமே உட்காரக்கூடாது’ என்றவள் „நான் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வந்து உங்களோடை உட்கார்ந்து சாப்பிடலாமா „ என்று பணிவோடு கேட்டாள்’ அதுக்கு ஏன் பெமிர்சன் கேட்கிறீங்க தாராளமாக எங்களோடை இருந்து சாப்பிடலாம் „ என்று நான் சொல்ல சாப்பாடு எடுப்பதற்காக இராஜகுமாரி எழுந்து போனாள்.

ஒரு அதிகாரி அளவுக்கு பொறுப்பிலிருந்தும் அனுமதி பெறுதல் என்ற பண்பினை இந்த கொட்டல் நிர்வாகம் சொல்லிக் குடுத்திருப்பதையும் ,பணிவன்பு எங்கள் வாழ்க்கை வழிமுறை என்று சிங்கப்பூர் அரசு சொல்லிக் குடுத்திருப்பதையும் நினைச்சுக் கொண்டன்.

„நாங்க முதலிரவுக் கப்பிள்ஸ் என்று அவங்களுக்குத் தெரியும், ஆனா என் கழுத்தில தாலி இல்லைன்னு ஏதாவது கேட்பாங்களா’ என்று யோகமலர் கேட்க,’அவா கேட்கமாட்டா அப்படிக் கேட்டா இன்றிரவு தாலிகட்டப் போறன் என்ற உண்மையைச் சொல்லுவம் „ என்று நான் சொல்ல யோகமலர் அதற்கு சரி என்பது போலத் தலையை ஆட்டினாள்.

போன வேகத்திலேயே இராஜகுமாரி „நாண்’ என்று சொல்லுகின்ற ரொட்டி இரண்டையும் அதற்கு தேவையான கறியையும் எடுத்துக் கொண்டு வந்து எங்களோடு சாப்பிடத் தொடங்கினாள்.

நாங்கள் சாப்பிட்டு முடிச்சிருந்தாலும் இராஜகுமாரி சாப்பிடும்வரை காத்திருந்தோம்.அவள் சாப்பிட்டுக் கொண்டே’ எங்கே மறி பண்ணினனீங்க மலேசியாவிலா அல்லது இங்கையா என்றவள் யோகமலரின் கழுத்தை உற்றுப் பார்த்தாள்.

அவள் கழுத்தில் நான் குடுத்திருந்த சங்கிலி மட்டுமே இருந்தது.ஆனால் அவள் யோகமலரின் கழுத்தில் தாலி இல்லை என்று தெரிந்தும் அதைப்பற்றி எதுவுமே கேட்கவில்லை.

யோகமலர்’ என்னங்க சொல்லவா’என்று கேட்க,’ம் சொல்லுங்க’ என்றன்.

நான் தெல்லிப்பழையிலிருந்து ஏஜன்சி மூலமாக சிங்கப்பூருக்கு வந்தது.ஜிஇயில் வேலை செய்தது.அங்கு தான் என்னைச் சந்தித்தது.,காதலிச்சது.எந்த ஆண்களையும் ஏறெடுத்துப் பார்க்காது இருந்த தான் என்னைக் கல்யாணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டது,அடுத்த செவ்வாய்க்கிழமையிலிருந்து என்எம்பியில் இரண்டு பேரும் வேலை செய்யப் போறது,இன்றிரவு தனக்கு நான் கொட்டல் ரூமில வைச்சு தாலிகட்டப் போறது,தனது அண்ணாக்களும் அண்ணிமாரும் இந்த கொட்டலை எங்களுக்காக புக்பண்ணினது என்று எல்லாவற்றையும் சொன்ன யோகமலர்,நான்

கல்யாணம் செய்தவன் என்றோ எனக்கு மனைவியும் மூன்று பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லவில்லை.

யோகமலர் ஒவ்வொரு வார்த்தையாக அளந்து அளந்து யோசிச்சு யோசிச்சுப் பேசினாள். என்னைப் பார்ப்பதும் தொடருவதுமாக விபரித்துக் கொண்டிருந்தவள் வாய்தடுமாறியாவது நான் கல்யாணம் செய்தவர் என்பது வந்துவிடக்கூடாது என்பதில் அவதானமாக இருந்தாள்.

அவள் எமது சந்திப்பை, காதலை கொட்டல் அறையில் வைச்சுத் தாலிகட்டப் போவதை சொல்லிக் கொண்டிருந்த போது எனது மனச்சாட்சி என்னைப் பிசைந்து கொண்டிருந்தது.

பெற்றோருக்குத் தெரியாமல் கள்ளோ சாராயமோ குடிப்பவன் மனச்சாட்சிக்குப் பயந்தாலும் குடிக்க வேண்டும் என்ற ஆசை ஒருவனை எப்படி ஆட்டிப் படைக்குமோ அந்த மனநிலையில் நானிருந்தேன்.

சாராயம் குடிப்பதையோ கள்ளுக் குடிப்பதையோ மன்னிக்கலாம்.காலப் போக்கில் பலருக்குத் தெரிய வந்தாலும் உடலுக்குக் கேடு விளைவிக்காதவரையில் அளவாக குடிப்பதை சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளதால்; யாருமே குடிப்பவரை உற்றுப் பார்க்க மாட்டார்கள்.அது யாருக்கும் துரோகம் செய்யும் செயலும் அல்ல.

யோகமலர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, இராஜகுமாரி இடைமறித்து „அவருடைய பெற்றோரோ சொந்தக்காரரோ வரமாட்டார்கள் என்று தெரியும், மலேசியா கிட்டத்தானே உங்களுடைய அப்பா அம்மாவோ அண்ணாக்களோ அண்ணியோ வரமாட்டார்களா’ என்று கேட்க, „அவங்க யாருமே வரமாட்டாங்க,எனக்கு அவர் வேண்டுமென்ற பிடிவாதக் காதலாலை நடக்கிற கல்யாணம்ங்க இது ,முதல்ல நாங்க இரண்டு பேரும் லிவிங் ரூ கெதராக வாழ்றதென்னு முடிச்சப்போ என்னோட அப்பா அம்மாவும் அண்ணாக்களும் அண்ணிமாரும் உன்னோட விருப்பத்துக்கு குறுக்க நிக்கல ஆனா அவரைக் கொண்டு தாலியைக் கட்டுவி என்று சொன்னாங்க,இவரும் சம்மதிச்சாங்க அதான் இன்னைக்கு நடக்கப் போகுது’ என்று யோகமலர் சொல்லி முடிக்க, கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த இராஜகுமாரி என்னைப் பார்த்து’ இவாவை மறி பண்ணப் போறது உங்கடை அப்பா அம்மாவுக்குத் தெரியுமா’ என்று கேட்க „அப்பா அம்மா இல்லை அண்ணை மட்டுந்தான் இருக்கிறார், அவரிட்டைச் சொல்லிட்டன் அவரும் இது உன்ரை வாழ்க்கை நீதான் முடிவெடுக்க வேணும் என்று சம்மாதிச்சிட்டார் என்று முழப்பூசனிக்காயை சோத்திலை மறைப்பது போல பெரிய பொய்யொன்றைச் சொன்னன்.

இராஜகுமாரி நாங்கள் இரண்டு பேரும் ஒருவர் மாறி ஒருவர் பொய் சொல்வதை உண்மை என்று முழுசாய் நம்பினாள்.’உங்களுடைய கஸ்பெண்டுக்கு வேர்க்பெமிற் முடிஞ்சவுடனை அவர் ஊருக்குப் போயிடுவாரே அவரோட நீங்களும் சிறீலங்காவிலை இருக்கிற தெல்லிப்பழை என்ற ஊருக்குப் போய்விடுவீங்களா „ என்று கேட்டவள்’ஒரு வேண்டுகோள் தாலிகட்டிற நேரத்திலை உங்களோடை யாருமே இல்லையென்று கவலைப்படாதீங்க, நீங்க விரும்பினா நான் இவரோட

தங்கச்சியா வந்து ஒரு மச்சாளா தாலி கோத்து விடவா,இவரைப் பார்க்க எனக்கு ஒரு அண்ணன் போல தெரிகிறார்,நீங்கள் இரண்டு பேரும் உங்கடை உண்மையான காதலிலை வென்றிட்டியள், நான் வரவா நீங்கள் விரும்பினால் மட்டும்’ என்றவளுக்கு யோகமலர் வேகமாக பூரிப்புடன் „ வாங்க வாங்க ….இது எங்களுக்கு லக்கல்லவா ஓ…இவருக்குத் தங்கச்சியாக வாறீங்களா..கடவுளே மாரியம்மா ஆச்சி நாங்கள் குடுத்து வைச்சவங்க..ஆறரை மணிக்குத்தான் நல்ல நேரம் அப்பத்தாங்க அவரு தாலி கட்டுவாரு நீங்க ஐஞ்சரை மணிக்கே வாறீங்களா’என்று ஆர்வமாகச் சொல்லிய யோகமலர் „நீங்க கேட்டீங்க இவரோட வேர்க்பெமிற் முடிய இவரோட ஊருக்குப் போயிடுவீங்களா என்று, ஆமாங்க அவரோட தெல்லிப்பழை ஊருக்குப் போயிடுவேணுங்க’ என்றவள், இராஜகுமாரியின் இரண்டு கைகளையும் பொத்திப் பிடிச்சு „மறக்காம வந்திடுங்க என்றாள்.

மூவருமாக சாப்பிட்ட கோப்பைகளை வைக்க வேண்டிய இடத்தில் வைச்சிட்டு மூவரும் ஒன்றாக சிற்றுண்டிச்சாலையைவிட்டு லிப்ட்டில் ஏறி எங்களுடைய அறையிருந்த மாடியில் இறங்க,இராஜகுமாரி எங்கள் இரண்டு பேருக்கும் கைலாகு தந்து குட்பை ஐஞ்சரை மணிக்குச் சந்திப்பம் என்று சொல்லி விடைகொடுத்து லிப்டில் கீழ்தளம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள்.

எமது அறையை நோக்கி நடந்து கொண்டிருந்த போதே,’ நீங்க ரொம்ப லக்கியான ஆளுங்க, உங்க சிறீலங்காகாரங்க நிறையப் பேரைச் சந்திக்கிறீங்க,மொலக்சிலை உங்க ஊரப்பிள்ளையைச் சந்திச்சீங்க அவங்க அம்மா கொடுத்துவிட்டாங்கன்னு சாப்பாடெல்லாம் கொண்டு வந்து கொடுத்தாங்க,அப்புறமா நாங்க இங்க புறப்படுற போது எங்க வீட்டெதிர் வீட்லேயிருந்து வந்தாங்களே ஒரு யங் லேடி அவங்களும் சிறீலங்கா ஜெனரேசனாம்,இப்ப இவங்க இராஜகுமாரி,ஆமாங்க சிங்கப்பூரிலேயும் மலேசியாவிலும் நிறைய நிறைய சிறீலங்காவைச் சேர்ந்தவர்கள் இருக்காங்க’ என்றவள்,நீங்களும் எனக்குக் கிடைச்ச லக்குங்க ,வரமுங்க நான் கும்பிடுற மாரியம்மன் உங்களோட என்னைச் சேர்த்து வைச்சிட்டா „ என்று சொல்லிக் கொண்டே தனது கைகளை எனது கைகளுக்குள் செருகி எனது தோள்மீது சாய்ந்தவாறு நடக்க அவளின் இடுப்பை கைளால் வளைத்து அணைத்து அவளுடன் எங்கள் அறையை நோக்கி நடந்து கொண்டிருந்தம்…நான் யோகமலரின் கழுத்தில் தாலிகட்டிற போது இராஜகுமாரி அந்த இடத்தில் நிற்பது ஒருவித ஆறுதலைத் தந்தாலும்…சிலவேளை அவள் அதனைப் படம் பிடிச்சு வைச்சிருந்து…அவளுடைய தாய்தகப்பனுக்கு …அனுப்பி அவர்கள் அதை வைச்சு…..என்னைப் பற்றி தெல்லிப்பழையில் உள்ளவர்கள் யாரிடமாவது விசாரித்தால்……எனது மனம் சங்கடப்படத் தொடங்கியது…

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *