நடுகைக்காரி!…. 26…. ( நாவல் ) ….. ஏலையா க.முருகதாசன்.

![]()
![]()
„பொழுது செக்கல்படுது கெதியிலை என்னைக் கொண்டு போய் வீட்டிலை விடுங்கோ, அம்மா தேடப் போறா தனமக்காவையும் பூரணிக்காவையும் அம்மா கண்டாவெண்டால் எல்லாம் பிரச்சினையாகவிடும்’ என்று பாறு சொல்ல , வேகமாக ஞானமும் பாறுவும் நடந்து அட்டாளையடிக்கு வருகிறார்கள்.’கள்ளுப் போத்தலை உங்கடை வீட்டுக்கு கொண்டு போக வேண்டாம் நானே கொண்டு போகிறன், இப்ப பைக்குள்ளை வைக்கிறன் வீட்டுக்குப் போனதும் எடுக்கிறன் என்று பாறு வெற்றுக் கள்ளுப் போத்தலை பைக்குள்ளை வைக்க,ஞானம் கேத்தல் மூக்குப் பேணிகளை எடுத்து சாக்குப் பைக்குள் வைச்சு அதை சைக்கிள் காண்டிலில் கொழுவியபடி பாறுவின் முகத்தைப் பார்க்கிறான்.
அவளின் பார்வையைப் புரிந்து கொண்ட பாறு சம்மதம் போல பேசாமலிருக்க பாறுவின் சொண்டுகளைச் சிவக்க வைக்கிறான் ஞானம்.
ஞானத்தின் தோட்டத்திலிருந்து பெரிய வரம்பைத் தொடுக்கும் குறுக்கு வரம்பினில் நடந்து பெரிய வரம்பினில் ஏறி நடந்து வெள்ளவாய்க்காலில் இறங்கி நடந்து தெருவுக்கு வருகிறார்கள்.
செக்கல் பொழுது, ஞானம் திரும்பி அம்பனைச் சந்தியைப் பார்க்கிறான்.வடக்குப் பக்கத்து மதகில் இருவரும் தெற்குப் பக்கத்து மதகில் மூவரும் இருப்பதும் அவர்கள் யார் என்பதையும் அவன் கண்டு கொள்கிறான்.
அதில் இருவர் மண்வெட்டிகளின் அலகுகளை கால்களால் அமத்திப் பிடித்தபடியும்,அதன் பிடிகளை கைகளால் பிடித்தபடி இருக்க மற்றையவர்கள் இருகைகளையும் மதகில் ஊன்றியபடி இருக்கிறார்கள்.
சீனியம்மானின் தேத்தண்ணிக் கடை இரவு எட்டுமணிவரையும் திறந்திருக்கும்.ஆரம்பத்தில் பெற்றோமாக்ஸ் விளக்கு கொழுத்தப்பட்டு வியாபாரம் நடந்து வந்தது.மின்சாரம் வந்ததன் பின் மின்சார வெளிச்சத்தில் வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது.
தேத்தண்ணிக் கடையிலிருந்து ஒருவர் வந்து மதகில் உட்காருவதையும் கவனிக்கிறான்.எல்லாரும் பலமாகச் சிரித்துக் கதைக்கிறார்கள்.அதிலிருந்தவர்களில் ஒருவன் ஞானம் என்று குரல் குடுத்து கையைக் காட்ட,இன்னொருவன் சீழ்க்காய் அடிக்கிறான்.ஞானமும் கையைக் காட்டுகிறான்.
சீழ்க்காய் சத்தத்தைக் கேட்டதும் பாறுவின் முகம் மாறுகின்றது.ஞானம் அம்பனைச் சந்தியைத் திரும்பிப் பார்த்ததும் மதகில் இருந்தவர்களையும் சீனியம்மானின் தேத்தண்ணிக் கடையால் வந்து மதகில் இருந்ததையும் ஞானம் கவனித்தது ஒரு நிமிடங்களுக்குள் முடிகிறது.
„ மினக்கிடாமல் போவம் நெஞ்சு படக்படக்கென்கிது’ என்று சொல்லிவாறு பாறு சைக்கிள் காண்டிலில் ஏறி இருக்க,அவர்கள் இருவரையம் கடந்து சீனியம்மானின் மருமகன் நாகரத்தினம் சைக்கிளை உருட்டிக் கொண்டு போக அவரின் தாயார் நடந்து மகாஜனக் கல்லூரிப் பக்கமாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
நாகரத்தினத்தின் தாயார் சீனியம்மானின் தங்கச்சி.அவர்களின் வீடு மகாஜனாக் கல்லூரியின் மேற்குப்புற எல்லை வேலியோடு விராங்குடைக் குறிச்சியை நோக்கிப் போகும் ஒழுங்கையில் கல்லூரியின் விடுதிக்கு கொஞ்சம் தெற்கு நோக்கி ஒழுங்கையின் மேற்குப் பக்கத்தில் இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் பின்னேரத்தில் சீனியம்மானின் தேத்தண்ணிக் கடைக்குப் போய் அங்கு தோசை வடை சுண்டல் போன்றவற்றை அடுத்த நாள் விடிய அதையதை சுடுவதற்கும் அவிப்பதற்கும் ஏதுவாக உழுந்தாட்டியும்,கடலையை நனையவிட்டும் தமையனுக்கு உதவி செய்துவிட்டு வருவார் நாகரத்தினத்தின் தாயார்.
ஞானத்தையும் பாறுவையும் நாகரத்தினமும் தாயாரும் கடந்து போய்க் கொண்டிருக்கையில்,சைக்கிள் காண்டிலில் இருந்த பாறுவைக் கண்டதும் நாகரத்தினத்தின் தாயார்’ இதார் இந்தப் பிள்ளை’ என்று மகனைக் கேட்க, „ நானும் கொஞ்ச நாளாய் கவனிச்சனான் புல்லுப்பிடுங்க வாறவள்’ என்று தாயாருக்கு நாகரத்தினம் பதில் சொல்ல,’பொடியன் அண்ணனோ „ என்று தாயார் கேட்க,’நாகரத்தினம் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு அம்மா அந்தப் பொடியன் யாரென்று தெரியுமே,பன்னாலை சுப்பையற்றை கடைசிமகன்.நல்ல மூளைசாலி இங்கிலீசிலை தடல்புடலாக கதைப்பான் நல்லாயும் எழுதுவான், எங்கடை கடைக்கும் வாறவன் நல்ல மரியாதையாகப் பழகக்கூடிய பொடியன், கொஞ்சம் முசுப்பாத்திக்காரன்தான்;.
இந்தப் பொடியன் எதைப் பற்றியும் ஆழமாக விவாதிக்கக்கூடியவன் ஏன்தான் புல்லுப் புடுங்குகிறவளை சைக்கிளிலை ஏத்திக் கொண்டு திரியிறானோ தெரியாது உலையப் போறான்.சிக்குப்படப் போறான். அவளவையலுக்கு என்ன புளியம் கொம்பாய் பிடிக்க நினைக்கிறாளவை. இது எங்கை போய் முடியப் போகுதோ தெரியாது „என்று நாகரத்தினம் நடந்தபடியே சொல்லிக் கொண்டிருக்க அவர்களைக் கடந்து சைக்கிளில் போய்க் கொண்டிருந்த ஞானத்தின் காதிலும் பாறுவின் காதிலும்; „சுப்பையற்றை கடைசி மகன் என்பதும், புளியங் கொம்பாய் பிடிக்க நினைக்கிறாளவை’ என்று சொன்னதும் கேட்கவே’ எங்களைப் பற்றித்தான் அவை இரண்டு பெரும் கதைக்கினம், அவையை உங்களுக்குத் தெரியுமோ „ என்று பாறு கேட்க’ தெரியும், நாகரத்தினண்ணையின் மாமன்தான் அந்தத் தேத்தண்ணிக் கடையை நடத்துகிற சீனியம்மான.;
கதைக்கிறவை கதைக்கத்தான் செய்வினம் உலை வாயை மூடினாலும் ஊர்வாயை மூடமுடியாது, அதைப்பற்றியெல்லாம் யோசிக்க வேண்டாம்’ என்கிறான் ஞானம்.
மகாஜனாக் கல்லூரிக்கு முன்னால் இருந்த லிங்கம் கபேக் கடையையும் சின்னக்கண்டுவின் சலவைக் கடையையும் ஞானமும் பாறுவும் தாண்டிய போது
முன்பு போல சின்னக்கண்டுவோ,லிங்கமோ ஆவலாதிப்பட்டு ஓடிவந்து பாலத்தில் நின்று நையாண்டிக் கதையும் கதைக்கவில்லை நையாண்டிச் சிரிப்பும் சிரிக்கவில்லை.
எல்லாப் புதினமும் நாள் செல்லச் செல்ல ஆறின கஞ்சி பழைய கஞ்சியானதைப் போல ஆகிவிடும்.பாறுவும் ஞானமும் அவர்களிருவரின் கடைகளைக் கடந்து போகையில் லிங்கம் தேத்தண்ணி ஆத்திக் கொண்டிருக்க சின்னக்கண்டு உடுப்பை மினுக்கியபடியே’ மெய்யே லிங்கம் போயினம் கவனிச்சனியளோ „ என்று கேட்க’ம்..ம்.. ஓமோம் பார்த்தனான் „ என்கிறார் லிங்கம்.
கொஞ்ச நேரம் பாறுவும் எதுவும் கதைக்கவில்லை ஞானமும் எதுவும் கதைக்கவில்லை.
அமைதியைக் கலைத்து பாறுவே கதைக்கத் தொடங்கினாள்.’ இப்பிடி எத்தனை நாளைக்குத்தான் அவைக்குப் பயந்து இவைக்குப் பயந்து இரண்டு பேரும் கதைக்கிறதும் பழகிறதும்,கெதியிலை ஏதாவது வேலைக்குப் போங்கள், வேலைக்குப் போனால்தான் துணிச்சலாக முடிவெடுக்கலாம்,உங்களோடை தோட்டத்திலை தனியாக இருக்கிறதும் இப்பிடிச் சைக்கிளிலை வாற அளவுக்கு எனக்குத் துணிச்சலைக் குடுத்தது நீங்கள் என்னைக் கைவிடமாட்டியள் என்ற முழுநம்பிக்கையில்தான்……’
„ஆனால் உங்கடை அவசரத்தைப் பார்க்கிற போது நாங்களிரண்டு பேரும் எம்மை மீறி நடந்திடுவோமோ என்று பயமாயிருக்கு’ என்று பாறு சொல்லிக் கொண்டிருக்கும் போதே,பாறுவின் தலையை தடவிக் குடுத்தபடியே’ ச்சாச்சாய் நான் எல்லைமீறி நடக்கமாட்டன் பயப்பட வேண்டாம் திங்கட்கிழமை தெல்லிப்பழை யூனியனில் கொண்டு போய் விண்ணப்பப் படிவத்தைக் குடுக்கிறன்,எப்படியும் ஒரு கிழமைக்குள்ளை இன்ரர்வியூவுக்கு கூப்பிட்டிடிவினம், அது சரி சோதனைக்கு அப்பிளிகேசன் போடச் சொன்னனான் போட்டாச்சா’ என்று ஞானம் கேட்க,’திங்கட்கிழமை பசுபதியண்ணையிட்டை உறுதிப்படுத்தும் கையொப்பம் வாங்கி அன்றைக்கே போட்டிடுவன் „ என்றவள் ,என்னோடை வருகிறபோது உங்கடை பிரண்ட்சுக்கு கைகாட்ட வேண்டாம், பார்த்தனீங்கள்தானே சீழ்க்காய் அடிச்சதை,நீங்களஇ அவையோடை தனியாயிருக்கிற போது நடந்து கொள்ளுறதுக்கும் என்னோடை இருக்கிற போது நடக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குது’ என்று சொல்ல மௌனமாக அதை ஆமோதிக்கிறான்.
அவர்கள் இருவரும் கதைத்தபடியே சைக்கிளில் சந்தையடிப் பாலத்தைக் கடந்து பாறுவின் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கையில் „ எங்கடை வீட்டுக்குக் கொஞ்சம் தள்ளி தனமக்கா வீடு இருக்கு, அவாவின்ரை வீட்டைக் காட்டிறன் அதிலை சைக்கிளை நிற்பாட்டுங்கோ „ என்று பாறு சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளின் வீட்டைக் கடந்து இருபது மீற்றர் போனதும்’ ஆ..ஆ..இதிலை நிற்பாட்டுங்கோ’ என்றவள், குதிக்காத குறையாக சைக்கிளைவிட்டு இறங்கி சாக்குப் பைக்குள்ளிருந்து வெற்றுக் கள்ளுப் போத்தலை எடுத்தவள்’ நீங்கள் போங்கள் நான் தனமக்காவோடை கதைச்சுப் போட்டு என்ரை வீட்டை போறன், நாளைக் காலமை
எட்டரை மணிக்கு யூனின் பஸ் ஸ்ராண்டடிக்கு வாங்கோ படம் பார்க்க போறதுக்கு
,கெதியிலை போங்கோ இங்கை சுத்தவர எங்கடை சொந்தக்காரர்தான் இருக்கினம்..ஆரேன் கண்டுடிவினம் எங்கடை வீட்டடியாலை போகாமல் காளி கோவிலடியாலை போங்கள்….இல்லை இல்லை வேண்டாம்…செக்கல் பட்டுப் போச்சுது காளி கோவிலடியாலை போக வேண்டாம்…எங்கடை வீட்டடியாலை போங்கள் „ என்ற பாறு வேகமாகவும் மெதுவாகவும் சொல்ல, ஞானம் அவளையே கூறுகுறிப்பாகப் பார்க்க, „ஐயோ ..கடவுளே …உங்களை எப்படித்தான் சமாளிக்கப் போகிறேனோ தெரியாது …இப்பவே இப்படியென்றால் ..’என்று அவள் அமைதியாக, அவன் அவளுக்கு சொண்டோடு சொண்டு வைத்து முத்தமிட, „சரி போதும் போங்கள்’ என்று சொல்ல „ அடுத்த முறைவரை இது போதும் „ என்றவன் அவளின் தலையை தனது நெஞ்சோடு அணைத்து அவளின் தலையை மெதுவாக தடவிக் கொடுத்துவிட்டுப் புறப்படுகிறான்.
„தனமக்கா „ என்று பாறு கூப்பிட தனம் வீட்டுக்குள் இருந்து வெளியே வருகிறாள்.பாறுவுக்கு அருகில் வந்தவளிடம் „இந்தா இதை முதலில் பிடியக்கா இதை வீட்டுக்கு கொண்டு போக முடியாது அம்மா கண்டுட்டா என்றால் கேள்வி மேலை கேள்வி கேட்பா „ என்று சொல்லியவாறு தனத்திடம் போத்தலைக் குடுக்க, அதை வாங்கிய தனம்’ இப்பத்தான் அம்பனையிலிருந்து வருகிறியா இவ்வளவு நேரமும் இரண்டு பேரும் அங்கை என்ன செய்தனீங்கள்,எங்கை அவர் என்று கேட்க, „அவர் என்னை இதிலை விட்டிட்டுப் போயிட்டார், அது சரியக்கா அம்மா உங்களைக் கண்டவாவே’ என்று கொஞ்சம் பயத்துடன் கேட்க, அம்மா இந்தப் பக்கம் வரவில்லை, ஆனால் கொப்பாவும் உன்ரை மாமாவும் அதிலை நின்று கதைச்சதைக் கண்டனான், கதைச்சுப் போட்டு உன்ரை மாமா என்னட்டை வந்து „அக்கான்ரை மோள் உங்களோடையோ அம்பனைக்கு வாறவள் என்று கேட்டார், நான் கொஞ்சம் தயங்கியபடி இவர் ஏன் இதைக் கேட்கிறார் என்று யோசிச்சபடி ஓம் என்னோடையும் பூரணியோடையும் சேர்ந்து வாறவள், அவள் அப்பவே எங்களோடை வந்திட்;டாளே என்று பொய் சொல்ல ,அதற்கு அவர் இல்லை பாறுவைப் போல சாயலில் ஒரு பிள்ளையை வழுக்கையாற்றடியிலை கண்டனான்,அது அவளல்ல என்று எனக்குத் தெரியும்,சில கதையளும் என்ரை காதிலை விழுந்தது, அவள் கெட்டிக்காரி புத்திசாலி கவனமாயிருப்பாள் அவளைக் கவனமாய் கூட்டிக் கொண்டு போய்க் கூட்டிக் கொண்டு வாருங்கள் என்று சொன்ன உன்ரை மாமா நல்ல காலம் உன்ரை வீட்டுப் பக்கம் போகாமல், தன்ரை வீட்டுப் பக்கமாக போனவர்’ என்று சொன்ன தனம் ,’கொப்பாவோடை என்ன கதைச்சாரோ தெரியாது எதுக்கும் நீ கவனமாயிரு, எல்லாப் பக்கத்திலையும் உனக்குச் சிக்கலிருக்குது நானும் பூரணியும் உனக்காக எவ்வளவெண்டு பொய் சொல்றது,ஒரு நாளைக்கு எல்லாம் தெரிய வர எங்கடை புருசன்மார் சாத்து சாத்தென்று சாத்துவினம். கெதியிலை போ கொம்மா ஏதாவது கேட்டா எங்களோடை அப்பவே வந்திட்டன் என்னோடை கதைச்சுக் கொண்டிருந்தது என்று சொல் „ என்று தனம் சொல்லிப் பாறுவை போகச் சொல்கிறாள்.
உள்ளுக்குள்ளை பயமிருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாதவளாக படலையைத் திறந்து பாறு முற்றத்தைக் கடந்து வீட்டுப் படியில் காலெடுத்து வைக்க , விறாந்தையில் படிச்சுக் கொண்டிருந்த பாறுவின் தம்பியார் செல்வராசா’ அம்மா அக்கா வந்திட்டா’ என்று சொல்ல, அடுப்படியைவிட்டு வெளியே வந்த தாய் „இவ்வளவு நேரமும் புல்லுப் பிடுங்கிப் போட்டா வாறியள்’ என்று கேட்க,’ ஓமம்மா ஞானத்தின்ரை வெங்காயத் தோட்டத்துக்குள்ளை கோரைப் புல்லும் அறுகம் புல்லும் பத்தைமாதிரி சடச்சுப் போய்க் கிடந்துது,நாங்கள் இதை புடுங்க ஏன்தான் ஓமென்றம் என்று வெறுப்பாய்ப் போச்சுது சீயென்று போச்சுது „ என்று முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல பாறு பொய் சொல்ல,தாய் அவள் சொல்வதை நம்புவது போல காட்டிக் கொண்டாலும் தாய் அதை நம்பவில்லை என்பதை தாயின் முகத்திலிருந்து கண்டு கொண்டாள்.
„அம்மா நான் நாளைக்கு பூரணியக்காவோடையும் தனமக்காவோடையும் படத்துக்குப் போறன்,போன கிழமையே சொல்லி வைச்சனான்’ என்று படத்துக்கு போறதை நினைவுபடுத்த „சரி போ’ அது பிரச்சினையில்லை,கொப்பா உன்னோடை ஏதோ கதைக்க வேணுமாம்,குளிச்சுக் கொண்டிருக்கிறார் வந்து கதைப்பார் „ என்று தாய் சொல்ல பாறுவுக்கு பகீர் என்றது…
(தொடரும்)
![]()