கதைகள்
அகதியின் நாட்குறிப்பு!…. அத்தியாயம்….. 15…. குடத்தனை உதயன்.



மனதிலே கனமிருக்கும் போது , கலகக்காரன் போன்று நித்திரையும் ஆதியுடன் இரவு முழுவதும் சண்டையிட்டுக் கொண்டிருந்தது. தூக்கமில்லாத விழிப்பிருக்கே..! அதைப் போல் துன்பம் இந்த உலகிலில்லை என்பதை ஆதி உணர்ந்து கொண்டது அந்த இரவுதான்.
காலை கண்கள் எரிவெடுத்தன “மொனிக்கா“ வேற இன்று காலை உணவுக்கு அழைத்திருந்தாள். அந்த அழைப்புத்தான் ஆதியின் குழப்பத்திற்குக் காரணம். கடிகாரத்தைப் பார்த்து அவன் மனது எரிச்சலடைந்தது இன்று தான். “மனது எங்களைப் புரிந்து கொள்ளாது. நாங்கள் தான் மனதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்பது அப்பாவி ஆதிக்கு புரிந்திருக்க வாய்பில்லைத்தான்.
நடேசன் கால் முதல் தலைவரை இழுத்துப் போர்த்தித் தூங்கிக் கொண்டிருந்தான். “பாழ் படுவான்“ மூச்சடக்கிச் சாகப் போறானென அவன் மனது எண்ணியது.
ஆதி எழுந்து சென்று மீண்டும் தலைக்குக் குளித்தான். உடைமாற்றி வெளியில் செல்ல நினைக்கையில்.. நேற்று ஊரிலிருந்து வந்த கடிதம் சோகமாக இவனைப் பாத்துக் கொண்டு மேசையில் கிடந்தது. அதையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு மெதுவாக வெளியேறினான்.
வெளிநாட்டில் நம்மவரிடம் ஒரு எளிய பழக்கம் லீவு நாளென்றால் இழுத்துப் போர்த்துக்கொண்டு பதினொரு மணிவரை தூங்குவது. தூங்கியெழுந்தால் அரைநாள் விடுப்பு காற்றுடன் கரைந்து போய்விடும். அதனால் ஆதி தனக்குள் சில சுய கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.

அதிகாலை பனிப்புகார் வான வெளியெங்கும் மூடியிருந்தது. கண் பார்க்கும் தூரத்தில் ஒருவர் நின்றால் கூட தெரியாதளவுக்கு பனிக்கூட்டம் அலைந்து திரிந்து கொண்டிருந்தன. காற்றைக் கட்டிப் பிடிக்க எண்ணும் மனது போன்று, பனிக் கூட்டங்களை அள்ளி அணைக்க அவனது மனது துடித்தது. “மொனிக்கா” பெயரை உச்சரித்து தனக்குள் சிரித்துக் கொண்டான் . அவளுடன் என்ன கதைப்பது..? அவள் என்ன கதைக்கப் போறாள்..? அவனது மனது கேள்விகளால் வேள்வி செய்தது.
அவள் சொன்ன இடத்திற்கு நடையிலேயே வந்து சேர்ந்து விட்டான். அவன் உடலைக் குளிர் சீண்டியது கூட அவனுக்குத் தெரியவில்லை. மனது அதற்குப் பிடித்தமான எண்ணங்களை பிரசவித்து அழகு பார்க்கும் போது, உணர்வுகள், தன்னைச்சுற்றி நடப்பவற்றை மறைத்துக் கொள்ளுமோ..? அதை அவன் அறியமாட்டான்.
குளிர்க் கோட்டைக் கழற்றிக் கொழுவும் போதுதான் “சைற் பொக்கற்றுக்குள்” ஊரிலிருந்து வந்த கடிதம் பரிதாபத்துடன் எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, அட.. இந்தக் கடிதத்தை வாசிப்பமென்றால் நினைவு தப்பிக் கொண்டு போகிறதே..? என்ற கேள்வியுடன் அக் கடிதத்தை எடுத்துக் கொண்டான்.
“அழகான காலை வணக்கம்… “
என்ன.. குடிக்கிறீர்கள்…?
ஒரு அழகான இளம் பெண் தாமரை மலர் போன்ற சிரிப்புடன் அருகில் வந்து நின்றாள்.
சிரிப்பு இவர்களுக்குக் கிடைத்த வரமா என்ன..? எந்தக் கவலையில் வரும் மனிதனையும் இவர்களுடைய சிரிப்பு அந்தக் கவலையை மறக்கடிக்கச் செய்து விடும். என நினைத்துக் கொண்ட கணப் பொழுதில் அவளை நிமிர்ந்து பார்த்து..,
எனக்கொரு “கோப்பி” தாங்கோ.
என்றான் ஆதி.
அத்துடன் ஏதாவது சாப்பிட ?
என அடுத்த கேள்வி அவளிடமிருந்து வெள்ளிச்சலங்கைகள் நிலத்தில் விழுந்து ஒலி எழுப்புமே அதேபோன்று அவன் காதில் ஒலித்தது.
ஆதி இப்போது அவள் கண்களை நேராகப் பார்த்தான், சில நொடிப் பொழுதுகள் தான் இருவர் கண்களும் மௌனத்தில் ஒளித்துப் பிடித்து விளையாடியன. அவள் சிரித்தாள். ஆதி இயல்பு நிலைக்கு வந்து, இல்லை.. எனது நண்பி வருவாளெனத் தொண்டைக் குழிக்குள் வந்த வார்த்தைகளை அடித்து விரட்டி..,
இப்போதைக்கு இது போதும் என்றான்.
ஆதி கடிதத்தை படிக்கத் தொங்கினான்.
அன்பின் அண்ணா.. , குட்டிமாமா அறிவது..
நாங்கள் நலம், நீங்கள் நலமா..? அண்ணா…! அம்மா நாளும் பொழுதும் உனது புராணந்தான். பாவம் என்ர பிள்ளை என்ன கஸ்ரப் படுகிறானோ..? சாப்பிட்டானோ..? என்று நாளுக்கு, நாள் தனிமையிலையே கதைக்கின்றா. எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை.
இங்கு நிலமை இன்னும் மோசமாகி வருகின்றது. அண்ணா என்னை மன்னித்துக்கொள். பேபியக்கா இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் வீரமரணத்தைத் தழுவிக் கொண்டார்.
துப்பாக்கி ரவைகள் தீர்ந்ததும் அந்த இடம் பேரமைதியாக இருந்ததாம்..! குறிப்பிட்டளவு இராணுவத்தை பேபி அக்கா கொன்று குவித்தாளாம், ஆனால் இராணுவம் அந்த இடத்தைச் சுற்றி வளைத்திருந்தது. வயிற்றுப் பகுதியில் காயப்பட்டிருந்த அவள், சாறத்தால் கட்டுப் போட்டுக் கொண்டு, தனது சக போராளியின் உடலைச் சுற்றி நின்ற இராணுவத்தின் மீது குண்டுடன் பாய்ந்து, தனது உயிரை எமது தாயக மண்ணுக்கு ஈர்ந்துள்ளாள்.
இப்படியான பல வீரம் செறிந்த கதைகள் களத்திலே உலாவிக் கொண்டிருக்கின்றன.
எனக்குத் தெரியும் பேபி அக்காவின் இழப்பை நீ.. தாங்கிக் கொள்ள மாட்டாயென்று. ஆனால் என்ன செய்வது மண் மீட்புப் போராட்டத்தில் எல்லாத்தையும் தாங்கித்தானே ஆக வேண்டும்.
ஆதியின் மூளைக்குள் ரசாயணக் குண்டு வெடித்துக் கசிவை எற்படுத்தி எரிவது போன்று விறு விறுப்பை உண்டாக்கியிருந்தன. கையில் இருந்த தேநீர்க் கோப்பையைப் பலம் கொண்டு உடைத்து விட்டான். அதன் சத்தம் கேட்டு “வெயிட்டர்” ஓடிவந்து பதட்டத்துடன்..,
ஏய்.. என்ன நடந்தது..?
எனக் கேட்டவள் வழிந்தோடிய இரத்தத்தைப் பார்த்ததும், கையை உயர்த்திப் பிடிக்குமாறு கூறி விட்டு முதலுதவிப் பெட்டியை முன்னால் கொண்டு வந்து வைத்துக் காயத்தைப் பார்த்து மருந்திட்டுக் கொண்டிருக்கையில் மொனிக்காவும் வந்து சேர்ந்து விட்டாள்.
ஆதியின் உடம்பு வேர்த்துக் கண்கள் சிவந்திருந்தன. மொனிக்கா ஆதியின் தலையை வருடி..
என்ன நடந்தது..?
எதுவானாலும் அமைதியாக இரு என்றாள்.
மொனிக்காவின் மனதில் ஆதிக்கு ஏதாவது மன நோய் இருக்குமோ..? போர்ச் சூழலில் வாழ்ந்தவர்கள். என அவள் மனம் எண்ணிக் கொண்டிருக்கையில், வெயிட்டர் கூறினாள்.
“ காயம் பெரிதாக இல்லை..”
கோப்பையின் துகள்கள் காயத்துக்குள் இருக்குமோ..? எனப் பார்த்தேன்
ஒன்றுமில்லை..
என்ற அவளின் குரல் கேட்டு மொனிக்கா தன்னிலைக்கு வந்து அவளுக்கு நன்றி கூறினாள். பின்பு தான் அறிந்தாள் அவளொரு மருத்துவத் தாதியென்று.
மேசைமீது கிடந்த கடித்தில் ஆதியின் இரத்தக்கறை கோடிழுத்து இருந்தன. கடிதத்தைப் பார்த்த மொனிக்கா புரிந்து கொண்டாள். ஏதோ அவன் வீட்டில் நடக்க கூடாதது நடந்திருக்க வேண்டுமென்று. ஆதி கவிழ்ந்த தலையை நிமிர்த்தாமல்..,
“மொனிக்கா என்னை.. மன்னித்துக்கொள்..”

என்றான்.
எல்லாம் சரியாக உள்ளதா..?
என்றாள் மீண்டும் வந்த வெயிட்டர் பெண்.
ஆதி தலையை நிமிர்த்தி அவள் கண்களைப் பார்த்து.., என்னை மன்னிக்கவும் என்றான்.
உங்கள் பெயரை நான் அறியலாமா..?
என வினாவினாள் அவள்.
ஓ.. தாராளமாக..
எனது பெயர் “ஆதி” என்றான்.
என்னுடைய பெயர் “லீசா”
“ஆதி..” நான் சொல்வதைக் கேட்டு நீ.. குறை நினைக்கக் கூடாது.
எந்தச் சந்தர்ப்பத்திலும் நிதானம் தவறக் கூடாது என்றாள் அவள்.
ஆதி நன்றி சொல்ல, மொனிக்கா தலையாட்டினாள்.
ஆதி கடிதத்தைப் பார்த்தான் குருதியால் கறை படிந்திருந்தது. அவனது மனது ஊருக்கு உருக்குலைந்து ஓடியது. பேபி அக்கா..! அவளை எப்படி மறப்பது. அவளின் சிரிப்பு மலையிலிருந்து விழும் அருவி போன்று அழகானது. மனிதனின் கவலைகளை ஓட.. ஓட விரட்டும் பாதரசம் போன்றது அவளது பேச்சு.
பேபி அக்காவின் நினைவுகள் மலரும் பூவாக, முற்புதர்களாக, பலவித தோற்றத்தில் அவன் மனதில் கொடிவிட்டுப் படர்ந்து கொண்டிருந்தன.
மொனிக்காவுக்கும், அவனுக்குமிடையில் புயலுக்கு முந்திய பேரமைதி இளையோடிக் கொண்டிருந்தது. ஆதி அவனது கண்களை மட்டும் மூடி மூடித் திறந்தான். மொனிக்கா ஆதியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனின் உதடுகளிலிருந்து வலிந்த சிறிய புன்னகை உதிர்ந்து விழுந்தன.
“மொனிக்கா..”
நீ அரசியல் விஞ்ஞானம் படித்தனி. உனக்கு எங்கள் நாட்டு அரசியல், எங்கள் போராட்டத்தின் தார்மீகம் தெரியுமென நம்புகிறேன்.
நிச்சயமா “ஆதி…”
நாங்கள் உங்கள் நாட்டு அரசியல் மட்டுமல்ல, உலக நாட்டு அரசியல் எல்லாம் படித்திருக்கின்றோம், எனக்கு சிறிலங்காவின் இயற்கை அழகு பிடிக்குமென்பதால், அதிகமாக உங்கள் நாட்டைப் பற்றி கரிசனை செலுத்தி ஒரு ஆய்வை மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றேன்.
இப்போது ஆதி நிமிர்ந்து நேராக இருந்தான்.
“ஆதி..”
உங்கள் போராட்டம் நியாயமானது. அதன் தார்மீகத்தை நாமறிவோம்.
உங்களை நல்வழிப்படுத்த நல்ல தலைமை உண்டு.
உலகத்தில் நல்ல தலைமைக்காக மக்கள் ஏங்குகிறார்கள். உங்களுக்கு அப்படி ஒரு தலைமை உண்டு அவரை நீங்கள் எப்படிப் பயன் படுத்தப்போறீர்கள் என்பது உங்கள் கைகளில் தான் தங்கியுள்ளது.
ஆதி வைத்த கண்களை அசைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சரி நீ சொல்லு என்ன நடந்தது.?
“மொனிக்கா…”
இந்திய இராணுவத்தின் வருகையை நாங்கள் பெரிதாக எதிர் பார்த்தோம். ஆனால்… நாங்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பது கடந்தகால நிகழ்வுகள் எங்களுக்கு உணர்த்தியுள்ளன.
எங்கள் கிராமம் மிகவும் சிறியது. இயற்கையின் கைக்குழந்தை. கடல் வளமும் கொண்ட மிகவும் அழகிய கிராமம். நீங்கள் இங்கு பனிச் சறுக்குவது போன்று அங்கு நாங்கள் தென்னம் பாளைகளில் “சினோபோட்” செய்து மணலில் சறுக்கி விளையாடுவோம்.
பசிக்கும் போது நாவல் பழம், ஈச்சம் பழம், இலந்தைப்பழம், பாலைப்பழம், என்று இயற்கை எமக்கு அள்ளித் தந்த வனப்புகளை உண்டு கழித்து வாழ்ந்து கொண்டிருந்தோம்.
அந்த வாழ்க்கை இந்த உலகக் கொள்ளைக்காரர்களுக்குப் பொறுக்க வில்லை.
எங்கள் கிராமத்தில் பத்து ஆண்களுக்கு சமமானவள் பேபி அக்கா. அவள் பேச்சும், சிந்தனையும், துணிவும் அபாரம். யாரையும் நிமிர்ந்து பார்க்க வைக்குமளவுக்கு, விரலை வாயில் வைக்குமளவுக்கு அவளின் செயற்பாடுகள் இருக்கும். அவளின் செயல் இந்திய இராணுவத்தையும், மற்றவர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
அவள் ஒரு தமிழ் ஆசிரியை. எங்கள் உரிமைக்காக, நீங்கள் சொல்லும் ஜனநாயக வழியில் மக்களை ஒன்று திரட்டிப் போராடினாள். என்றவாறு.. அவனுள் கொழுந்து விட்டு எரியூட்டிக் கொண்டிருந்த மூச்சை வெளித்தள்ளி மொனிக்காவைப் பார்த்தான்.
பேபியின் கதையைச் சொல்லத் தொடங்கினான் ஆதி.
ஒரு அதிகாலைப் பொழுது விடிந்தும், விடியாததுமான விடியலுக்கு முந்திய பொழுது. நாய்களெல்லாம் ஒன்று கூடி குரைக்கத் தொடங்கின. நாய்கள் ஓடி, ஓடி, குரைப்பதும் பின்னகர்வதும், அதன் சத்தத்தை வைத்தே அரக்கர் கூட்டம் எங்கு நிற்கிறார்களென்று கணிப்பிடலாம். அம்மா என்னைப் பதட்டத்துடன் எழுப்புகிறார்.
“தம்பி … தம்பி …”
எழுப்படா..”
உந்தக் கொள்ளையில போவார் கொள்ளிவைக்க வந்திட்டாங்கள்….
என்னையும் ஒரு வித பதட்டம் ஒட்டுண்ணி போன்று. தொற்றிக் கொண்டது.
நான் யன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன் எங்கள் வீட்டு வாசலில் இரு சிப்பாய்கள் நிற்கின்றார்கள். வழமையாக இராணுவத்தினர் வந்தால்… எல்லோரையும் அழைத்து ஒரு பொது இடத்தில் இருத்தி வைப்பார்கள். ஆனால் அன்று எல்லாம் எதிர் மாறாக நடக்கிறது.
அம்மா வேற அடிக்கொரு தடவை வாயை… வாயைப் போட்டு அடித்தாள்…பே பி வீட்டுப் பக்கம் தான் நாய் குரைக்கிறது. என்ர அம்மாளாச்சி ஏதும் ஏடாகூடமா நடக்கக் கூடாது. கல்லாகக் கண்களை மூடிக் கொண்டிருக்கும் கடவுளையெல்லாம் துணைக்கு இழுத்தாள்.
அவளால் பாவம் வேறு என்ன செய்ய முடியும்.?
மீண்டும் சிறு அமைதி இருவர் மத்தியில். ஆதியின் கண்கள் நீர் கோத்து வழிந்தன. உண்மையைச் சொன்னால் அவனால் அவனைக் கட்டுப் படுத்த முடியவில்லை.
மொனிக்காவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இந்தச் சூழல் அவளுக்குப் புதிது. ஆதியுடன் பல விடையங்கள் கதைக்க வேண்டும் என்று நேற்று முழுவதும் நினைத்திருந்தவள். ஆனால் இங்கு நிலமை வேறாக உள்ளது. நினைப்பதெல்லாம் நினைத்தபடி நடக்குமா என்ன? மனதில் எண்ணிக்கொண்டாள்…..
“ஆதி…”
நீங்கள் விடுதலைக்குப் போராடும் இனம்.
அழுவதால் எந்தப் பலனுமில்லை.
இங்கிருந்து என்ன செய்ய வேண்டுமென்பதைச் சிந்திக்க வேண்டும்.
“மொனிக்கா…”
நீ…. சொல்வது சரிதான்.
ஆனால் என் வயதை உடையவர்கள் ஆண், பெண் பேதமின்றிப் பார்க்கக் கூடாததையெல்லாம் பார்த்துள்ளோம், வார்த்தைகளால் சொல்ல முடியாதவை.

அதற்காக நாங்கள் ஜடங்கள் இல்லையே…?
“ஆதி….”
நீ சொல்லும் அர்த்தத்தில் நான் சொல்லவில்லை.
என்னை மன்னித்துக் கொள்.
கவலைகளை அழுது தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் மனதைப் பலவீனப்படுத்தி கோழையாக்கக் கூடாது. விடுதலை வேண்டிப் போராடும் இனத்திற்கு பலவீனம் இருக்கக் கூடாது. பலவீனத்தில் இருந்து தான் சுயநலம் பிறப்பெடுக்கும்.
என்றாள் மொனிக்கா.
ஆதி பேபியின் கதையைத் தொடர்ந்தான்……..
அன்றைய காலைப் பொழுது ஆயிரம் கருநாகங்கள் ஒன்று கூடி நஞ்சைக் கக்கியது போன்று எங்களது பொழுது புலர்ந்தது. நான் எங்களது பின் வளவுக்கால் பேபி அக்காவின் வீட்டைப் பார்க்கிறேன். சுற்றுப் புறத்தைப் பார்க்கிறேன் …. ஓலமிட்ட நன்றிக்குரிய நாய்களின் குரைப்புகளும் அடங்கி விட்டன.
சுடுகாட்டின் பேரமைதி எங்கள் கிராமத்தைச் சூழ்ந்து கொண்டிருந்தன. கொடியவர்கள் போய்விட்டதை உறுதி செய்தாலும் கூட சில வேளைகளில் அவர்கள் திரும்பி வரக்கூடுமென்ற பயம் எங்களுக்கு.
அண்டன் காகம் கூடிக் கூடி கரைந்து கொண்டு திரிந்தது. சாதாரணமான நாட்களென்றால்… அம்மா கத்தியிருப்பா.. “உந்தக் கோதரியில போன காகத்தை கலையுங்கடா” என்று. அல்லது தம்பி ஒரு சீனவெடி கொழுத்திப் போட்டிருப்பான்.
அம்மா வீட்டுக்குள்ளேயே வளையில தொங்கித் திரியும் எலியைப் பிடிப்பதற்கு ஓடித்திரியும் பூனை போன்று அங்கும், இங்கும் நடந்து கொண்டிருந்தாள்.
எங்கள் கருப்பனும் பேபியக்காவின் வீட்டுப் படலைக்குப் போவதும், என்னுடன் வந்து முனகி உரசுவதுமாய், எனது சாரத்தைப் பிடித்து இழுத்து ஏதோ சொல்ல வருகிறான். என்னால் என்ன ஏது என்று அணுமானிக்க முடியவில்லை. என்னுள் இருந்த பட படப்பு அதிகரிக்கத் துவங்கியிருந்தது.
“அண்ணா…”
அவங்கள் போட்டாங்கள் வா…
எனக் குரல் கொடுத்தான் தம்பி.
வீட்டு முற்றத்தில் பேபியக்காவின் தாய், தந்தை இருவரின் வாய்க்குள் துணிகள் அடைக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டுக் கிடந்தார்கள்.
தம்பியை அவர்களின் கட்டுக்களை அவிழ்த்து விடுமாறு கூறி விட்டு, வீட்டுக்குள் ஓடினேன்…
தொடரும்……..
![]()