கதைகள்
அகதியின் நாட்குறிப்பு!…. அத்தியாயம்….. 14…. குடத்தனை உதயன்.

வாழ்த்துக்கள் .. “ஆதி”.
ரோஜாப்பூ மாதிரி “சலாட்” செய்து வைத்திருக்கிறாய், ஒரு சிந்தல், சிதறல் இல்லை.
நீ…. நீயாகவே இரு ….! நன்றி ….நன்றி…

என்றார் முல்லர்.

அவர்களின் பேச்சு அவனுக்கு உற்சாகத்தைக் கொடுத்தாலும், வெள்ளைக்காரன் இறால் போட்டுச் சுறாப் பிடிப்பதில் கெட்டிக்காரன். இருந்தாலும் மனம் திறந்து பாராட்டுகிறானோ தெரியாது, பாராட்டும் பண்பு அவனிடமுள்ளது. ஆனால் முல்லரின் கண்களில் திறந்த மனதின் ஒளி மிளிர்ந்தன.
நசார் சுத்திக்கொண்டு வந்து காதுக்குள் கிசு…கிசுத்தான்.
“ஆதி..” மாட்டின் வீட்ட போட்டான்…!
“பெரிசு” எல்லாரையும் தனித்தனியாகக் கூப்பிட்டுக் கதைத்தவர். என்னை இன்னும் கூப்பிடவில்லை. முல்லரை நசார் பெரிசு என்றுதான் அழைப்பான்.
ஆதியின் மனதில் சுர்ரென்று பெரிய காற்று வந்து திறந்திருந்த கதவை அடித்துச் சாத்தியது போன்றிருந்தது. என்ன இருந்தாலும் நாங்கள் மனட்சாட்சியுடன் வாழ்பவர்களென மனதின் ஓரத்தில் நினைக்காமல் இல்லை…!
இப்படியான மிருகக் குணம் கொண்டவர்களை இப்படித்தான் அடக்க வேண்டும். அநியாங்கள், பெரிதாகச் சிறிதாக இருக்கலாம், தட்டிக் கேட்பதற்கு “அல்லா” உன்னை இங்கு அனுப்பியுள்ளார் என்று கூறினான் நசார்.
அவனின் வார்த்தைகள் சந்தோசத்தில் துள்ளி விழுந்ததை ஆதி உணர்ந்து கொண்டான். என்ர தலைதான் கடைசியா உருண்டு போச்சு. பறவாயில்லை பூனைக்கு எப்படியோ யாரோ ஒருவர் மணி கட்டித்தானே ஆகணும். என்னால் சிலர் சந்தோசப்படுகிறார்கள் என்றால் கடவுள் அருள் தானென மனதில் தோன்றிய எண்ண அலைகள் கண்களில் நீராட நசாரைப் பார்த்தான் ஆதி.
ஒன்றுக்கும் யோசியாதே என்பது போல் முதுகில் தட்டிச் சென்றான் நசார்.

முல்லர் என்ன கேட்கப் போறாரோ..? என யோசித்தவாறு, குவிந்து கிடந்த பானைகளை அசுர வேகத்தில் இளம் கன்றுக்குட்டி துள்ளி விளையாடுவது போன்று கழுவி முடித்தான்.
குசினியர் உடைக்கு மாறியிருந்தார் முல்லர். அருகால் நடந்து சென்றவர் , கிறிஸ்ரியானைப் பார்த்து ..,
“ஏய் கிறிஸ்ரியான்…”
ஆதிக்கு “வயாகரா” குடுத்தாயா…?
இவ்வளவு விரைவாக வேலை செய்கிறான்..!
“ஆதி” எப்பவும் அப்படித்தான்…, ஆனால் மாட்டின் அவனைச் சும்மா நிற்க விடுவதில்லை.
என்று பதிலளித்தான் கிறிஸ்டியான்.
ஓ..கோ… எனத் தலையாட்டினார் முல்லர்.
அன்று வேலை அதிகம் தான். ஆனால் இன்று போல் சிரித்துச் சிரித்து , மற்ற குசினியர் வேலை செய்ததை ஆதி ஒருநாளும் பார்க்கவில்லை.
“முல்லர்” தான் பெரிய முதலாளியென்பதை மறந்து நிமிடத்துக்கு ஒரு பகிடிக் கதை சொல்லிக் கொண்டேயிருந்தார். நேரம் ஆக …ஆக ஆதியும் அவர்கள் சிரிப்பில் கலந்து கொண்டான். வேலைக் களைப்பே அன்று தெரியவில்லை.
சாப்பாடு அனுப்பி முடிந்ததும் அவரவர் இடத்தைச் சுத்தம் செய்தார்கள். மாட்டினென்றால் ஆதியைக் கூப்பிட்டுச் சுத்தம் செய்யச் சொல்லி விட்டு கோழிக் கூட்டுக்குள் போய்விடுவான்.
பெடியள் என்ன… குடிக்கப் போறீங்கள்…?
என்று முல்லரின் குரல் கேட்டதும்..,
மற்ற ஜேர்மன்காரர் இருவரும் “பீர்” என்று சொன்னார்கள். நசார் “ரிவேலா” , சொன்னான்.
“ஏய்.. ஆதி..”
நீ.. என்ன குடிக்கப் போறாய்..? “பீர்”…?
என்று கேட்டார் முல்லர்.
அவனுக்கு இன்னும் பதினாறு வயது முடியவில்லை..,
என்றான் கிறிஸ்ரியான்.
அவன்ர மாமாவிடம் விசா எடுக்க வேண்டுமென்று அலக்ஸ் சொன்னான்.
மற்றவர்கள் எல்லோரும் சிரித்தார்கள். அவர்களின் சிரிப்பு சட்டி பானைகளில் முட்டி மோதியது.
இன்றைய வேலை நாள் எப்படிப் போனது..?
என்று முல்லர் கேட்டார். எல்லாரும் ஒரே குரலில்..,
“சுப்பர் “ என்றார்கள்.
“யா” ஆனால் மாட்டின்….., என கிறிஸ்ரியான் இழுக்கவும்.
மாட்டினின் கதையை விடுங்கோ.., எனக்கு நல்ல மன நிறைவாக இருந்தது. நீங்கள்.. சகோதரர்கள் மாதிரி சேர்ந்து வேலை செய்தால்.. வேலைப்பழு இருக்காது. நான் எல்லாம் கேள்விப் பட்டேன் நானும் , சுசானாவும் , இன்று நடந்த நிகழ்வுகளை வைத்து எடுத்த முடிவு அல்ல. கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில் எடுத்த முடிவு தான். நளையிலிருந்து குசினிப் பொறுப்பு கிறிஸ்ரியான் பார்ப்பான் . அவனுக்கு உங்களின் ஆதரவைக் கொடுக்க வேண்டும்.
வாழ்த்துக்கள்
என்றார் முல்லர்.
“ஆதி….”, “நசார்…” இருவரும் இங்கே வாருங்கள்..
என்றார் முல்லர்.
இருவரும் ஒருவரையொருவர் பாத்துக் கொண்டார்கள்.
பலதரப்பட்ட விடயங்களைக் கேட்டறிந்த முல்லர், தலையாட்டியவாறு இனிமேல் எல்லாம் நன்றாக நடக்கும் என்றார்.
சம்பளம் தராவிட்டாலும் பறவாயில்லை மரியாதையும் , சுய உரிமை, சுயகௌரவம் வேண்டும் என்று ஆதி சொன்னான்.
முல்லர் சிரித்தவாறு ஆதியை நிமிர்ந்து பார்த்து, நிச்சயமாக என்றார்.
இருவரும் முல்லரிடம் விடை பெற்றார்கள்.
“ஆதி..” உனக்கு.. இனிமேல் சம்பளம் இல்லை. சுயகௌரவம் மாதா மாதம் சுசானா போடுவாரென்று சிரிப்புடன் முல்லர் சொன்னார்.
ஆதியும் சிரித்தபடியே சரி.. எனத் தலையாட்டினான்.
********************************************************
ஞயிறு, திங்கள் லீவு.. என நினைக்கும் போது, ஆதிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வேலையை முடித்து ஆதி, நசார் இருவரும் வெளியில் வரும் போது, வேலையில்லாமல் அலைந்து திரிந்த காற்று வேலைக்களைப்பில் வந்து கொண்டிருந்த இருவர் முகத்திலும் பரிதாபத்துடன் தடவி வரவேற்றது.
ஆதி நடந்த நிகழ்வுகளை அசை போட்டான். மாட்டின் அவனிலுள்ள கோபத்தில் வேலை முடிந்து வரும் வழியில் ஏதாவது செய்யக் கூடுமென்று உள்ளுணர்வு எச்சரிக்கை அவனை சிந்திக்கத் தூண்டியது. நசார், ஆதி இருவரும் அமைதியாக நடந்து கொண்டிருந்தார்கள்.
“ஆதி..”
நீ… என்ன யோசிக்கிறாயென்பது எனக்குத் தெரியும்.
மாட்டின் சின்ன வயதிலிருந்தே கஞ்சா, “மரிவாணா” என்று ஒரு காட்டு மிராண்டி போல் வளர்ந்தவன்.
நீ… எதற்கும் கொஞ்சம் அவதானமாக இரு.
என்றான் நசார்.
ஆதி நிமிர்ந்து பார்த்தான்…!
உன்னை நான் பயமுறுத்துவதற்காகச் சொல்லவில்லை.
எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான்.
என்று கூறினான் நசார்.
“நசார்…”
எனக்குப் பயமென்று ஒன்றுமில்லை, ஆனால் மனட்சாட்சியென்று ஒன்று உள்ளது.
அடிக்க ….அடிக்க… ஒரு தன்மானமுள்ள மனிதனால் எவ்வளவு தூரம் ஓட முடியும்…?

“நசார்..”
எனக்கு.. கிறிஸ் கத்தி ஒன்று தேவை.
எப்படிப் பெற்றுக் கொள்ளலாம்..?
“நீ…” இன்னும் உன்னுடைய நாட்டு மனோபாவத்திலிருந்து விடு படவில்லை..
இல்லையா…?
என்றான் நசார்.
அப்படியில்லை “நசார்..”
அவரவர் தனது சுய பாதுகாப்பைத் தேடித்தானே.. ஆகணும்.
சாவு.. எப்படியும் வரலாம். ஆனால் அதிலும் அர்த்தம் இருக்க வேண்டும்.
நேற்றுக் கேள்விப்பட்டியா…?
“காசல்” என்ற இடத்தில இரவு எங்களின் பெடியள் இருவர் வேலையால் வரும் போது “நாசி” ஆட்கள் அடித்து.., இப்ப அவர்கள் வைத்தியசாலையில் உள்ளார்கள். ஒருவருக்குச் சரியான கடுமையாம். என்றான் ஆதி.
நசார் ம்… ம்…. எனத் தலையாட்டினான்.
“நாசி” பிரச்சனை ஏற்படுத்தும் இடங்களில், எங்கடையாட்கள் மிளகாய்த் தூளைக் கரைத்துச் சோடா போத்தல்களிலும், பேப்பரிலும் சுத்தி வைத்தும், வெளியில் போகும்போது கொண்டு போகின்றார்களென்று செல்லப்பா சொல்லவும்.., “அண்ண” இன்னும் விட்டா கறிச் சட்டியோடையும் எங்கட ஆட்கள் போவினம்”. என்று நடேசன் சொன்னது ஆதியின் மனதில் தோன்றி மறைந்தது.
“ஆதி..” நீ.. நிறைய யோசிக்காத. நல்ல வழிகள் உண்டு, ஆனால் பொன்னம்பலம் பிடித்தால் தான் பிரச்சனை. மிளகில் செய்த வாயுக்கள் நிரப்பிய ”ரின்கள் “ உண்டு ஆனால் வைத்திருப்பதற்கு அனுமதி பெறவேண்டும். என்றான் நசார்.
காவல்துறையைத் தான் எங்கட சனம் பொன்னம்பலமென்று பெயர் சொல்லி அழைப்பது. நம்மவர் காவல் துறைக்குக் காரணப் பெயர் வைப்பதற்கு நிறையக் கதைகள் உண்டு. அதைப் பின்பு ஒரு தருணத்தில் சொல்லலாமென நினைக்கிறேன்.
ஆதியின் மூளை ஒரு வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கத் தொடங்கியது.
குறிப்பு: பாதகமான வழி முறைகளைக் கதைகளினூடு சொல்வதற்குத் தயக்கமாக உள்ளது. எதிர் காலத்தில் வாசகர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த வழிகளைப் பின்பற்றி விடுவார்களோ.. என்று.
ஆதி நசாரிடமிருந்து விடைபெற்றுச் சுற்றுப் புறச் சூழலை அவதானித்தபடி விடுதியை நோக்கி நடக்கலானான். மாலை நடந்த சம்பவம்.., முள்ளம் பன்றி அதனது கூரிய பற்களால் உடற் தசைகளைக் கீறி விட்டது போன்று அவன் மனவெளியெங்கும் எரியூட்டின.
ஆனால் குட்டி மாமா என்ன சொல்லப் போறாரோ…? என்ற பயம் தான் அவன் மனதை அரித்துக் கொண்டிருந்தன. மற்றவைகளை பார்த்துக் கொள்ளலாம் என அவன் மனது எண்ணியது.
நேரத்தைப் பார்த்தான் குட்டி மாமா வருவதற்கு நேரமாகும் செல்லப்பாதான் தனியாக அறையிலிருப்பார். நடந்தவற்றை எல்லாம் சொல்லி விடவேண்டும் என்று நினைத்தவாறு நடக்கையில்…!
“கலோ…….”
என்ற குரல் கேட்டு திடுக்கிட்டான். அதன் பதட்டம் குறைய பல வினாடிகள் பிடித்தன. எதிர் அறையில் இருக்கும் ஆபிரிக்கா நாட்டைச் சேர்ந்தவன் தான் “கலோ” சொன்னது. அவனைப் பகலில் பார்த்தாலே பார்ப்பவருக்கு பயம் வரும் ஒரு விகாரமான தோற்றம். இரவில் அவனைப் பார்த்தால் எப்படியிருக்கும். ஆனால் விதம் விதமான பெண்கள் அவனின் அறைக்கு வந்து போவதை ஆதி கண்டிருக்கிறான்.
ஆபிரிக்காக்காரனின் ஆங்கிலம் ஆதிக்குப் பிடிக்கும். மற்றவர்கள் புரியும் விதமாக அவன் கதைப்பான். அதனால் ஆதி அவனை எங்கு கண்டாலும் நிற்பாட்டி வைத்துக் கதைப்பான். தனது மொழியை விருத்தி செய்யும் யுக்தி தான்.
வெளியில் தூக்கிவாரிப்போட்ட பனிக் குளிருக்கு, விடுதிக்குள் புகுந்ததும், “சொற்கத்தின் வாசல்” என்பார்களே.. அதில் எவ்வளவு உண்மைத் தன்மையிருக்கு என்பது ஆதிக்குத் தெரியாது. ஆனால் உடல் சுகம் என்ன என்பதை அதற்குள் உலாவித்திரியும் வெம்மை அவனுக்கு உணர்த்தியது. கதவைத் தட்டி உள் நுழைந்தான் ஆதி. செல்லப்பா தொலைக்காட்சியில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தார்.
ஆதி சனிக்கிழமையில் தலைக்குக் குளிப்பது வழமை. லீவு நாளில் நடேசனின் அறையில் தான் படுப்பான். அங்கு ஒரு மெத்தை ஒன்று உள்ளது அதைப் போட்டிட்டு நீட்டி நிமிர்ந்து படுப்பான்.
ஆதி குளித்துக் கொண்டிருக்கும் போது நடேசனின் குரல் பூட்டியிருந்த கதவையும், அழுது வடியும் நீரையும் மீறி கேட்டுக் கொண்டிருந்தது.
“செல்லப்பா..”
எங்க சண்டியன் வந்திட்டாரோ….?
என்ற வார்த்தை மட்டும் ஒலித்தது.
என்னடா “மோன”
புதுக்கதை சொல்லுறாய் …
என்ற செல்லப்பா.., அட… அட… வந்த “பெடியன” என்ன ஏது என்று கேட்காமல் குழந்தைத்தனமா இருந்திட்டன் என நினைத்து வருத்தப்பட்டார்.
குளியலறை முழுதும் ரயில் வண்டி புகை கக்கியது போன்று புகார் தோய்ந்து வடிந்து கொண்டிருந்தது. வெளியில் வந்த ஆதியைப் பார்த்து…
“வாங்கோ.. சண்டியர் வாங்கோ….”
என்ன… பெரிய விளையாட்டெல்லாம் காட்டுறியளாம்.
நடேசன் சொன்னான்.

குட்டி மாமா சிறு சிரிப்புடன் தலையைக் கவிழ்ந்து கொண்டிருந்தார்.
ஆதியின் மனது “முருகா….. முருகா…..” குட்டி மாமா ஒன்றும் சொல்லக்கூடாது, எனப் பட… படத்தது. தனது குரல் எப்படி வெளியில் வருமோ என அவனுக்குள் ஒரு சந்தேகம்.
என்னடா… மோன நடந்தது. நீ சொல்லு…
என்றார் செல்லப்பா.
ம்… பால் குடி மடியில் வைத்து பாலக் குடுங்கோ..
என்றான் நடேசன்.
சரி …. சரி…. கதை காணும் ஒரு “ரீ” போடுங்கோ நான் சொல்லுறன் என்று நடேசனைப் பார்த்து ஆதி சொன்னான்.
ஆதி நடந்தவற்றை ஒரு சிறு கசிவும் விடாமல் சொன்னான். சொல்லும் போது இடையிடையே குட்டி மாமாவையும் பார்த்துக் கொண்டான்.
அவன் செய்ததில் என்ன தப்பு…?
நீங்கள் என்றால் பின்னங்கால் குண்டியில அடிபட ஓடி வந்திடுவியள்.
என்று சொன்னார் செல்லப்பா.
ஆதியின் வலது கை மணிக்கட்டில் சிறு வலியேற்பட்டது. ஏன் என்று ஆதி சிந்தித்தும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் மனதில் அன்று நடந்த சம்பவங்கள் அலையலையாக தோன்றி மறைந்தன.
“அண்ண…”
குட்டி மாமா என்ன சொன்னார்…..?
நடேசனைப் பார்த்துக் கேட்டான் ஆதி.
“முல்லர் வந்து சொன்ன பின் கொஞ்சம் பயந்து போனார் , ஆனால் பிரச்சனையைக் கேள்விப்பட்டதும் , அங்கிருந்தவர்களே சொன்னார்கள். மாட்டினுக்கு இப்படித்தான் செய்ய வேண்டும். என்றான் நடேசன்
அதைக் கேட்டதும் ஆதியின் மனம் ஆறுதலடைந்தது.
அங்கையும் “ சாமுவல் “ என்ற ஒருத்தன் இருக்கிறான். நீ தான் அவனுக்குத் தகுந்த ஆளென்று கதைத்தவங்கள் என்றான் நடேசன்.
ஆகா…. ஆகா…
எனச் சிரித்தான் ஆதி.
ஆதி தலைமாட்டில் கை வைத்துத் தூங்கும் போது மணிக்கட்டில் மீண்டும் வலியெடுத்தது. இப்போது அவனுக்கு நினைவு வந்தது ஏன் கையில் வலியென்று. “ மொனிக்கா” பானையைப் பறிக்கும் போது ஏற்பட்ட அவளின் இறுக்கமான பிடிதான் . அதன் கிறுக்கம் அதிகாலை பனித்துளிகள் நுனிப் புல்லிலிருந்து உயிர்த்தெழுமே அதே போன்று அவன் மனது முழுவதும் வியாப்பிக்க ஆரம்பித்திருந்தது.
நாளைய விடியலுக்காய் அவனது மனது உயிர்த் துடிப்புடன் பள்ளி கொள்ளத் தொடங்கியது.
தொடரும்………
![]()