கதைகள்

அகதியின் நாட்குறிப்பு!…. அத்தியாயம்….. 13…. குடத்தனை உதயன்.

“ஏய் மொனிக்கா ….”
குசினிக்க வேலை செய்யிறவனுக்கெல்லாம் நீ கொண்டு வந்து பரிமாறக் கூடாது உனக்குத் தெரியாதா..?
“இங்க நான் தான் Chef..!”
உந்தக் கறுப்பு நாய் என்ன உனக்குப் புருசனா..?
எனக் கத்தியவாறு ஆதியின் முன் வைத்திருந்த தேநீர்க் கோப்பையை எடுத்துத் தேநீரை ஊத்திய பின்பு கோப்பையை வீசி எறிந்து விட்டு மாட்டின் திரும்பவும்…,
ஆதி கோபத்துடன் கழுவுமிடத்தில் எரிந்து, ..எரிந்து.. களையிழந்து உயிரற்றுக் கிடந்த மதியம் சமைத்த சட்டியைக் கையிலெடுத்து உயிர் கொடுத்த போது மொனிக்கா ஆதியின் கையைப் பற்றிப் பிடித்துப் பறித்தாள்.
“ஆதி…”
பொறுமை … பொறுமை … அவனுக்கு மண்டையில சுகமில்லை.
என ஆதியை அடக்கினாள்.
ஏய்..
யாரைப் பார்த்து என்ன சொல்கிறாய்..?
அப்பன் பெயர் தெரியாதவளே…!
என்று கத்தினான் மாட்டின்.
ஆதியின் பொறுமை எல்லையைக் கடந்தததும், அருகில் கிடந்த கோப்பை மாட்டினை நோக்கிப் பாய்ந்தது. நல்ல வேளை மாட்டின் குனிந்த படியால் சுவரில் பட்டுத் தெறித்து, கணீர்… என அவலக் குரலெழுப்பிக் கீழே விழுந்து நொறுங்கியது.
நீ.. என்ன பெரிய கிட்லரோ…?
யாருக்குப் பூச்சாண்டி காட்டுறாய்..!
எனத் தமிழில் கத்தியவாறு, கத்தி தீட்டும் இரும்புச் சட்டத்தை எடுத்துக் கொண்டு ஆதி மாட்டினை நோக்கிப் பாய்ந்தான்.
மாட்டின் அவனது கோழிக் கூட்டை நோக்கி ஓடினான்….!
நிலவறைக்குள்ளிருந்து வெளியில் வந்த நசார் இருண்டதும் தெரியாது, விடிந்ததும், தெரியாமல் என்ன சத்தம் என்று ஓடி வர.., ஆதி சன்னதம் கொண்டு மாட்டினை நோக்கிப் பாய…, நசார் வந்து ஆதியைப் பிடித்து ஒரு உலுக்கு, உலுக்கி, அவனைச் சாதாரண நிலைக்குக் கொண்டு வந்தான்.
கண்ணாடிக் கூண்டுக்குள் நின்று குரங்கு போன்று எட்டிப் பார்த்த மாட்டினை..,
“ வா… வா… வாடா…”
உனக்கு நான் யாரெண்டு காட்டுறன். என்னை என்ன நசார் என்று நினைத்தியோ..?
என்று கத்தினான் ஆதி.
மொனிக்கா பேச்சு மூச்சின்றி ஆதியையே பார்த்துக் கொண்டிருந்தாள். எல்லாம் சில நொடிப் பொழுதுகள் தான் நடந்து முடிந்தன. மற்ற இரு ஜேர்மன் நாட்டினர் செய்வதறியாது நின்று கொண்டிருந்தார்களோ, அல்லது மாட்டினுக்கு இரண்டு போடு போடட்டுமென்று விட்டார்களோ தெரியாது.
ஆதியின் மனது தூக்கணாங் குருவி போன்று தொங்கிக் கொண்டிருந்தன. தூக்கணாங்குருவி தனது கூட்டைக் கட்டி களிமண்ணைத் தனது அலகுகளில் எடுத்து வந்து கூட்டைச் சுற்றி மெழுகி மின்மினிப் பூச்சியை அதில் ஒட்டி அழகு பார்க்குமாம். அதேபோன்று வாழ்க்கை இருக்க வேண்டுமென்று அம்மம்மா சொன்னது அவன் மனதில் ஓடியது.
ம்… ம்… வாழ்க்கையை எங்க அழகு பார்க்கிறது. இவங்கள் வாழ்க்கையை வாழ விட்டாலே போதுமே.. என நினைத்து வருந்தினான்.
ஆதி அவனது செயலுக்காக மனம் வருந்தினான். ஏன் அவனுக்கு இப்படி ஒரு கோபம்..? அவன் என்ன தவறிழைத்தான்? மாட்டின் ஏன் இப்படி இருக்கிறான்…? இனவெறியும், ஆணவமும், பொறாமையும், அவனை இப்படிக் ஒரு கீழ்த்தரமான வேலையை செய்யத் தூண்டுகிறதா…? ஆதி வேலைக்குப் பிந்தி வந்தது தப்புத்தான். இருந்தும் அவன் வேண்டுமென்று செய்யவில்லை .
ஆதி பிரச்சனைக்கான காரணத்தை அவனிலிருந்து தேட முயன்றான். அதன் பின்பு நடந்தது உங்களுக்குத்தான் தெரியுமே..!
ஒரு குடும்பத் தலைவனோ… அல்லது தலைவியோ …. ஒரு நிறுவனத்திற்குப் பொறுப்பாக இருப்பவனோ, மற்றவர்களுக்கு முன்னுதரணமாக இருக்க வேண்டும். இப்படியெல்லாம் என்னால் வாலாட்டிக் கொண்டிருக்க முடியாது. என்னில் பிழையிருந்தால் தான் நான் பயப்பிட வேண்டும் . குற்றமுள்ள நெஞ்சுதானே குறு… குறுக்கவேண்டும். வருவது வரட்டும் என ஆதி ஒரு நிதானத்திற்கு வந்தான்.
**********************************************************
Heer Muller மூன்று உணவு விடுதி வைத்து நடத்துகிறார். ஆரம்பத்தில், நமது நாட்டவருடன்தான் வேலை செய்தவர். அதனால் அவர்கள் மனநிலை, பண்பாடு, விசுவாசம் எல்லாம் நன்கு அறிந்தவர். நம்மவரில் நிறைந்த அன்பு கொண்டவர். வியாபார மனநிலை அவரிடம் இருந்தாலும் மனச்சாட்சியுள்ள நல்ல மனிதர்.
மற்றைய உணவு விடுதியில் தமிழர்கள் நான்கு பேர்வரை வேலை செய்கிறார்கள். ஒரு உணவு விடுதியில் தான் குட்டி மாமா வேலை செய்கிறார், போதாக் குறைக்கு நடேசனும் புதிதாகச் சேர்ந்துள்ளான்.
இன்று ஒரு குறிப்பிட்ட விருந்தினர் சாப்பிட வருவதாக முன்னேற்பாடு செய்திருந்தார்கள். வேலை தலைக்கு மேலிருக்கு ஆனால் மாட்டின் “குறுக்கால போவான்” எல்லாத்தையும் தலை கீழாக மாத்தி வைத்துள்ளான். முல்லர் வேற மற்ற உணவகத்திலிருந்து வந்து நிற்கிறார். வேலை அதிகமான நேரங்களில் முல்லர் மாறி, மாறி, மூன்று உணவகத்திற்கும் போவார்.
கனவைப் பற்றி பின்பு ஒரு தடவை சொல்கிறேன் என்றேனல்லவா..? காண்கின்ற எல்லாக் கனவுகளும் நடப்பதில்லை, ஆனால் சில கனவுகள் வாழ்க்கையை தலைகீழாக்கி விடும்.
ஆதி அவன் கண்ட கனவை நினைத்துக் கொண்டான். சனியன் பிடித்த கனவு இரவும் வந்து, இன்று பின்னேரமும் இதற்குத்தான் வந்து தொலைத்ததோ..? கண்ட கனவை நொந்து கொண்டான் ஆதி.
ஆதி அவனுக்குக் கொடுத்த வேலைகளை எவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து கொண்டிருந்தான். அவன் மிகவும் சுறு சுறுப்பானவன் வேலைகளை நுணுக்கமாகத் தனக்குள்ளே ஒரு வரைபை வரைந்து நேர்த்தியாகச் செய்யத் துவங்கியிருந்தான். தமிழ் வாத்தி அடிக்கடிச் சொல்வார்.., “செய்வன திருந்தச் செய்” வேலைக்கு வந்த நாளிலிருந்து அந்தச் சொல் அடிக்கடி அவன் மனதில் தோன்றி நெட்டி முறித்தது. அருகில் வந்த நசார் ஆதியைப் பார்த்து, அவன் முதுகில் தட்டி…
“ஆதி..”
உன்னிடம் இவ்வளவு நெருப்பு இருக்குமெண்டு நான் நினைத்துப் பார்க்கவில்லை.
“மச்சான் நசார்..”
கடுகு சின்னன் என்றாலும், காரம் பெரிதடா என்று தமிழில் கூறினான் ஆதி.
“ஏய்.. என்ன சொன்னாய்.. என்ன ….?
நசார் ஆவலுடன் கேட்டான்.
நசார் எனக்கு பழமொழிகளை மொழிபெயர்க்கத் தெரியாது.
மிளகாய் பாத்திருக்கிறாய் அல்லவா?
ம், ம், என்னடா கேள்வி..?
எங்கள் நாட்டு சமையலில் உப்பு இல்லாமல் சமைப்பார்கள். ஆனால் மிளகாய் இல்லாமல் சமையல் இருக்காது என்றான் நசார்.
நசார் பெரியமிளகாய் , சின்ன மிளகாய், இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
சின்ன மிளகாய் காரம் அதிகம் , பெரியமிளகாய் காரமில்லை.
உனக்கு சின்ன மிளகாய் விருப்பமா , பெரியமிளகாய் விருப்பமா..?
சின்ன மிளாகாய்தான் விருப்பம் .
ஆதி சிரித்தவாறு கூறினான் நசார் நாங்கள் சின்ன மிளகாய். மாட்டின் பெரியமிளகாய்.
டேய் ,,, டேய்,,,
அவன்ர பெயரைச் சொல்லாதே, அருண்டதெல்லாம் பேயென்று நினைக்கிற ஆளடா அவன் என்றான் நசார்.
நசார் நான் என்ர கடமையைச் செய்வதற்கு நூறு வீதம் முயற்சிக்கிறன்… ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ள நினைக்கிறேன். அதனால் நான் யாருக்கும் பயப்பிடப் போவதில்லை. நீ எனக்கு மரியாதை தந்தால்.. நான் உனக்கு மரியாதை தருவன்.
.”மடியில கனமிருந்தால் தானே பயப்பிட வேண்டும்”. என்றான் ஆதி.
திரும்பவும் தமிழா..? என்றான் நசார்.
நல்ல தமிழை அரைகுறையா மொழிபெயர்த்து , எனது மொழியில் நஞ்சு கலக்க விரும்பல என்றான் ஆதி சிரித்தவாறே.
மாட்டின் ஆதிக்கு எழுதிக் கொடுத்த துண்டைச் சரிபார்த்தான் நசார்.

இவ்வளவு விரைவாக முடித்துள்ளாய்

வாழ்த்துக்கள்

.என்றான் நசார்.

ஆதி சிரித்தவாறு நன்றி… நன்றி… என்றான்.
சரி பிறகு வாறன் எனச் சொல்லி சென்ற நசார், திரும்பி வந்து ஆதியின் காதுக்குள், “ஆதி..” நீ இனிமேல் பிந்தி வா.. என்றான் பகிடியாக.
டேய் நீ மாட்டினின் காலை நக்கிறாயென்றால்… ஆதி சொல்லி வாய் மூடவில்லை ,
உன்னைத் திருத்த முடியாது என்றவாறு நகர்ந்தான் நசார்.
மாட்டின் இல்லையென்றால் கிறிஸ்ரியான் தான் அடுத்த நிலையில் உள்ளவன். இவன் ஓரளவு பறவாயில்லை. ஆதியின் அருகில் வந்து முதுகிலே தட்டி நீ ஒன்றுக்கும் யோசியாதே என்றான்.
கிறிஸ்ரியான் இதில் யோசிக்க என்ன இருக்கு ?
எனப் பதிலளித்தான்.
அருகில் வந்த கிறிஸ்ரியான் இதைப்பற்றி நாங்கள் பிறகு கதைப்பம் என்றான்.
ஆதியும் சரி எனத் தலையாட்டினான்.
அன்ரி அடிக்கடிச் சொல்லுவா.. “வாயில்லாட்டி உன்னை நாயும் தேடாது என்று.” அதைத்தான் கௌரவமாகச் சொல்வார்கள் “வலியது வாழுமென்று” என நினைத்துச் சிரித்துக் கொண்டான்.
ஆதி உதிரியான வேலைகளைச் செய்து முடித்த பின்பு , பாத்திரம் கழுவும் இடத்திற்கு வரும் போது, சமைத்த பாத்திரங்கள் மலைபோல் குவிந்து கிடந்து அவனைப் பார்த்து அலுப்பு முறித்துக் கொண்டது.
பெருந் தொகையாகச் சனங்கள் சாப்பிட வரும்போது கழுவலுக்கு ஒருத்தி உதவிக்கு வருவாள், ஆனால் அவளின் பிள்ளைக்கு ஏதோ சுகவீனமென்று அவளின்று வரவில்லை. ஆதி பானைகளைக் கழுவிக் கழுவி இன்று எல்லா வேலையும் தன் தலைமேல் தானென்று நினைத்தான்.
சிறிது நேரத்தில் முல்லர் , திருமதி முல்லர் , இருவரின் குரல்கள் குசினிக்குள் ஒலித்தன.
எல்லாரும் நலம்தானே… ?
எல்லாம் ஆயத்தப்படுத்தி வைத்துள்ளீர்களா..?
அனேகமா எல்லாம் முடிச்சாச்சு ஒருமுறை சரி பார்க்க வேண்டும் என்று கிஸ்ரியான் சொன்னான் .
“எங்கே ஆதி…?”
என்றார் முல்லர். அதற்கிடையில் முல்லரின் மனைவி சுசானா..
அன்பே இங்க வா … !
வந்து பார்..!
எனக் குளிரூட்டி அறைக்குள் இழுத்துச் சென்றாள்.
கிறிஸ்ரியான் யார் சலாட் செய்தது…?
இருவரும் ஒருசேர வினாத்தொடுத்தனர்.
ஆதிதான் செய்தான் என்றான் கிறிஸ்ரியான்..
இருவரும் ஆதியை நோக்கி வந்தனர்..!
தொடரும்………

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *