நடுகைக்காரி!….தொடர் 24 ….. (குறுநாவல் ) ஏலையா க.முருகதாசன்.

![]()
![]()
வீட்டிலை சக்கரை எடுத்துவரப் போன ஞானம் சக்கரையுடன் திரும்பி வந்து அட்டாளைக்குள் நுழைஞ்சு இருந்த போது அவனுடைய முகம் மாறியிருந்ததை கவனிச்ச பாறு „ ஏன் முகம் ஒரு மாதிரியாய்க் கிடக்குது „என்று கேட்டும் அவன் பதில் சொல்லாததால் „ வாங்க வெளியிலை’ என்று பாறு அட்டாளையை விட்டு எழும்பி வெளியே வந்தபடி கேட்க’ ஏன் இப்ப எதற்கு’என்று ஞானம் கேட்க’ முதலிலை வாங்க சொல்றன் ஏனெண்டு’ என்று பாறு கட்டாயப்படுத்த அவளுடன் எழுந்து வெளியே போகிறான்.
அட்டாளையைவிட்டு கொஞ்சம் தள்ளி அவளைக் கூட்டிக் கொண்டு போன பாறு, உண்மையைச் சொல்லுங்கள் போன இடத்திலை என்ன நடந்தது’ என்று கேட்க,கடையடியில் நற்குணம் வலியவந்து தங்களிருவரைப் பற்றிக் கதைச்சதையும்,சிவசம்புவின் பெண்சாதி தன்னைக் கூப்பிட்டு „ உங்களைக் கட்டப் போறதையும் கேட்டா அது எனக்குப் பிடிக்கேலை,அந்தக் கோபத்தை என்னால தாங்கவும் முடியேலை, அதை மறக்கவும் முடியேலை…அதுதான் „என்று ஞானம் இழுக்க,படக்கென்று சிரித்தவள் „ அட இவ்வளவுதானா…நான் ஏதோவெல்லாம் யோசிச்சன்,நாங்கள் இரண்டு பேரும் புருசன் பெண்சாதியாவது சாதாரண விசயமாக இருக்காது,ஓட்டப் போட்டியில் தடைதாண்டி ஓடுவது போல நிறைய தடைகளைத் தாண்ட வேண்டி வரும், அதை விடுங்கோ…அதையெல்லாம் யோசிக்காதையுங்கோ.. நீங்கள் மதகில் இருந்து முசப்பாத்தி விட்ட ஆளாகவே அப்படியே என்றும் இருக்க வேணும்;; முதலிலை ஒரு வேலையைத் தேடுங்கள் தனமக்காவும் பூரணியக்காவும் புல்லுப் பிடுங்கி முடிச்சுப் போட்டினம், சக்கரை போட்டு மரவள்ளிக் கிழங்கு கிண்டப் போறன் அவை சாப்பிட்டிட்டுப் போகட்டும்’ என்றவள் ஞானத்தைக் கூட்டிக் கொண்டு திரும்பவும் அட்டாளைக்குள் போகிறாள்.
இரண்டு பேரும் என்ன கதைச்சிருப்பினம் என்று ஞானத்தின்ரை முகத்தையும் பாறுவின் முகத்தையும் தனமும் பூரணியும் ஆராயத் தொடங்கினர்.
ஆனால் எதைப்பற்றியுமே கவலைப்படாது பாறு அவிஞ்ச மரவள்ளிக்கிழங்குத் தண்ணியில் கொஞ்சத்தை வடித்தெடுடுத்துவிட்டு
மரவள்ளிக் கிழங்கை மசித்துக் கொண்டே தனமக்கா நான் மசிச்சு மசிச்சுக் கிழங்கைக் கிண்டக் கிண்ட சக்கரையைக் கொஞ்சம் கொஞ்சமாக போடுங்கள் „ என்ற சொல்லிக் கொண்டே மசிக்க, சக்கரையை போட்டுக் கொண்டே, மரவள்ளிக் கிழங்கிலை உறைப்புக் கறி இல்லாட்டி வெள்ளைக் கறி வைப்பம் இல்லாட்டில் அவிச்சு சம்பலோடை சாப்பிடுவம் இல்லாட்டில் சுட்டுச் சாப்பிடுவம் நீ என்னடி விண்ணாணம் செய்யப் போறாய்’ என்று கேட்க,’செய்து முடியேக்கை பாரனக்கா நான் என்ன செய்திருக்கிறன் என்றவள்’ இஞ்சருங்கோ பள்ளத்தாலை ஏறி வரேக்கிலை பனைகளோடை சின்ன வடலிகள் நிற்கிறதைக் கண்டனான் அங்கை போய் அகலாமான வடலி ஓலைகள் இரண்டை வெட்டிக் கொண்டு வாறியளே „ என்று ஞானத்திடம் பாறு சொல்ல எதுக்கு ஏன் என்று கேட்டகாமல் ஞானம் எழுந்து போகிறான்.
சக்கரையைப் போட்டு கிண்டிக் கிளறிக் கிளறி மசித்ததால் இராசவள்ளிக் கிழங்கு மசியல் மாதிரி மரவள்ளிக் கிழங்கு வந்துவிடுகிறது.மசியலுக்குள் இருந்த கிழங்கு நரம்புகளை கவனமாக எடுத்து பாறு எறிகிறாள்.
„ என்னடி இது புது மசியல் „ என்று பூரணி கேட்க,மசிச்சு முடிஞ்சாப் பிறகு சாப்பிட்டிட்டுச் சொல்லுங்கோ என்றவள்,’பூரணியக்கா நாலு வாழையிலையள் வெட்டிக் கொண்ட வாறியளா’ என்று பாறு பூரணியைப் பார்த்துக் கேட்க,பூரணி பாறுவைப் பார்த்து’ம்…இப்பவே இப்படியென்றால்….போறன் போய் வெட்டிக் கொண்டு வாறன் „என்று எழும்பிப் போக „நானும் வாறன் „ என்று தனமும் எழும்பி பூரணி கூடவே போகிறாள்.
பத்து வாழையடிகளே ஞானத்தின் தோட்டத்தில் இருந்தன. அதில் ஐஞ்சு அடிகள் இதரை வாழையடிகள் ஐஞ்சு கதலி வாழையடிகள்.
பூரணி தன்னிடமிருந்த புல்லுப் பிடுங்கும் கத்தியால் வாழையிலையை வெட்டிக் கொண்டே’ பார்த்தியே அவளின்ரை போக்கை, பாறு முந்தி மாதிரி இல்லை….’என்று பூரணி சொல்லி முடிக்க முந்தி, „ ச்சா நீ நினைக்கிற மாதிரி அவள் அப்பிடி இல்லை, உதவி கேட்டிருக்கிறாள், அவள் எங்களுக்கு கிழங்கு மசியல் செய்கிறாள்தானே „ என்று தனம் சொல்ல, எதுவுமே பேசாது தனம் வாழையிலைகளை வெட்டி முடிக்க தனமும் பூரணியும் அட்டாளையை நோக்கி வருகிறார்கள்.
அட்டாளைக்குள் ஞானம் வடலியோலைகளை கினாட்டு கினாட்டாக வெட்டிக் கொண்டிருந்தான்.
அட்டாளைக்குள் தனமும் பூரணியும் குனிந்து உள்ளே போக’ தனமக்கா,… பூரணியக்கா இவள் என்னை வேலை வாங்குகிறாள் என்று என்னைப் பற்றிச் சொல்லியிருப்பாவே’ என்று தனத்தைப் பார்த்துக் கேட்க, தனம் கள்ளச் சிரிப்புடன் உட்காருகிறாள்.
„தனமக்கா கள்ளச் சிரிப்புச் சிரிக்கிறதைப் பார்த்தால் ஏதோ நடந்திருக்குது’ என்று பாறு சிரித்துக் கொண்டே சொன்னவள்’சரி சாப்பிடுவம் „என்றவள் „வாழையிலைகளில் கிழங்கு மசியiலை போட்டு கொடுக்க, கினாட்டு கினாட்டாக வெட்டி வைச்சிருந்த வடலியோலை கினாட்டை ஞானம் எடுத்துக் குடுக்க எல்லாரும் சக்கரை போட்டு மசித்த மரவள்ளிக் கிழங்கை ஓலைக் கினாட்டால் சாப்பிட்ட ஞானம் „அருமையாயிருக்கு இப்படிச் செய்வதை உங்கடை அம்மாவா பழக்கினவா’ என்று பாறுவைக் கேட்க „இல்லை இதை நான் வீட்டிலேயே செய்தனான்’ என்றவள்,’இந்த யோசனை எனக்கு எப்பிடி வந்ததென்றால் அம்மா அடிக்கடி இராசவள்ளிக் கிழங்கு அவிக்கிறவா அதற்கு சக்கரையும் தேங்காய்ப்பாலும் விட்டு கிண்டுறவா, ஒரு நாள் அம்மாட்டைக் கேட்டன் இராசவள்ளிக் கிழங்கும் மரவள்ளிக் கிழங்கும் கிழங்குகள்தானே அப்ப ஏன் மரவள்ளிக் கிழங்கையும் இது மாதிரிக் கிண்ட ஏலாது என்று,அம்மா சொன்ன நீ சொன்ன மாதிரிச் செய்து பார்க்கலாம் என்று ஒரு நாள் அம்மா சீமை மரவள்ளிக் கிழங்கு கொண்டு வர நானும் அம்மாவும் சேர்ந்து இப்படிச் சக்கரையும் தேங்காய்ப் பாலும் விட்டு கிண்டிப் பார்த்தம் உருசியாயிருந்துது அதுதான் இங்கை தோட்டத்திலை சீமை மரவள்ளியைக் கண்டதும் அதைப் போலச் செய்ய வேணும் என்று ஆசை வந்துது அதுதான் இது, இதுக்கு தேங்காய்ப் பால் விட்டால் இன்னும் நல்லாய் இருக்கும் சீமை மரவள்ளிக் கிழங்குதான் இதுக்கு சரியாயிருக்கும், அதுதான் நல்லாய் கரையும் „ என்று பாறு சாப்பிட்டுக் கொண்டே சொல்லி முடிச்சாள்.
„அப்ப நான் வீட்டை சக்கரை எடுக்கப் போகேக்கிலை தேங்காய்க்குச் சொல்லியிருந்தா நான தேங்காயைத் திருவிக் கொண்டு வந்திருப்பனே பாலை இங்கை பிழிஞ்சிருக்கலாமே „ என்ற ஞானத்திற்கு „ அது ஆறுதலாகச் செய்ய வேண்டிய வேலை, இண்டைக்கு அது சரி வராது இன்னொரு நாளைக்குப் பார்ப்பம்’ என்றவளை இடை மறித்த பூரணி’ கொம்மா எல்லாக் கதையும் சொல்லுறவா இப்படியும் மரவள்ளிக் கிழங்கைச் செய்து சாப்பிடலாம் என்றதைச் சொல்லேலையே’ எனக் கேட்க,’ அதுக்கு நான் என்ன செய்யிறுது அவாவைத்தான் நீங்கள்
கேட்கனும்,கெதியிலை சாப்பிடுங்கள் நன்னாரித் தேத்தண்ணி வைச்சுத் தாறன் இரண்டு பேரும் குடிச்சிட்டு கெதியிலை வீட்டை போங்கள் „ என்று பாறு சொல்ல’ ஏன் இப்ப அவசரமாய் எங்களைத் திரத்திறாய் நீ வரேலையே….. „ தனம் கேட்க „ நீங்கள் போங்கள் பாறு பிரைவேற்றாக எஸ்.எஸ் சி சோதனை எடுக்கிறது பற்றி அவவோடை கதைக்க வேணும் கதைச்சுப் போட்டுக் நானே பாறுவைக் கூட்டிக் கொண்டு வந்துவிடுறன்’ என்று ஞானம் சொல்ல, தனமும் பூரணியும் ஒருவரையொருவர் பார்க்க அதைக் கடைக் கண்ணால் பாறு பார்த்துவிடுகிறாள்.
„சரி நாங்கள் போகேக்கை ஒழுங்கையடியிலை கொம்மா எங்களைக் கண்டு உன்னை எங்கையெண்டு கேட்டா நாங்கள் என்ன சொல்றது’
„பாலத்தடி ஒழுங்கையாலை போனால்தானே எங்கடை வீடு தாண்டிப் போகோணும்,இண்டைக்கு அதாலை போகாமல் யூனியன் கொலிஜ்யடி ஒழுங்கையாலை போங்கள், தற்செயலாய் அம்மா கண்டிட்டால் சோதனைப் பாடங்கள் விசயமாய் கதைச்சுக் கொண்டு நிக்கிறாள் வருவா’ எண்டு சொல்லுங்களக்கா,’ஒ என்றவளுக்கு’எங்களைப் பொய் சொல்லச் சொல்லுறாய்..ம்… சொல்றம், எள்ளேன் காயுது எண்ணைக்கு, எலிப்புளுக்கையேன் காயுது எள்ளோடை கூடின குற்றத்துக்கு எண்டது போல எங்கடை நிலைமை’ என்று தனம் அலுக்க, „அப்ப நான் எலிப்புளுக்கையே’ என்று பாறு கேட்க „ ஐயோ கடவுளே நான் ஒரு கதைக்குச் சொன்னனான் ,சரி அதைவிடு நாளைக்குப் படத்துக்குப் போற பிளானை மறக்காதை, அங்கையும் சொல்லி வை „என்று ஞானத்தின் பக்கம் கண்ணைக் காட்டுகிறாள்; பூரணி.
பூரணி பிளான் என்ற சொல்லைச் சொன்னதும் ஞானம் அவளை நிமிர்ந்து பார்த்து முகம் மலருகிறான்.
நடுகைக்காரிகள் என்றால் படிக்காதவர்கள் என்றுதான் பலர் நினைச்சுக் கொள்கிறார்கள்.நடுகை என்பது ஒரு தொழில்.அதையும் படிப்பையும் முடிச்சுப் போட்டுப் பார்ப்பதே தவறு என நினைக்கிறான் ஞானம்.
நடுகைக்காரிகளில் சிலர் எஸ்.எஸ்.சி வரையும் படிச்சவர்களாகவும் சிலரே எட்டாம் வகுப்பு வரை படிச்சவர்களாகவும் இருப்பதை தோட்டக்காரர்களில் சிலர் உணர்வதில்லை.நடுகைக்காரிகளில் பலர் யூனியன் கல்:லூரியில் படிச்சவர்களாகவே இருந்தனர். யூனியன் கல்லூரி ஆங்கிலக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த கல்லூரி.
யூனியன் கல்லூரியில் படிச்சவர்களில் பல இளைஞர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவதை ஞானம் சந்தித்திருக்கிறான்.
தெல்லிப்பழை ஆனந்த பவான் தேத்தண்ணிக் கடையில் சிலவேளைகளில் ஞானம் தேத்தண்ணி குடிக்கச் செல்லும் போது அங்கு சில இளைஞர்கள் தேத்தண்ணி குடிச்சுக் கொண்டே ஆங்கிலத்தில் கதைச்சதை அவன் இரசித்திருக்கிறான்.
இயல்பாக மாநிறமாக இருக்கும் நடுகைக்காரிகள் தோட்ட வேலைகள் காரணமாக வெயிலாலும் வேர்வையாலும் கறுத்துவிடுவதால் கறுப்பான நடுகைக்காரிகள் படிக்காதவர்கள் என்று சாதிமான்கள் சிந்திக்கத் தவறுதில்லை.
புpளான் என்ற ஒரு சொல்லு ஞானத்தை பல விடயங்களை அசை போட வைச்சது.
மரவள்ளிக் கிழங்கு மசியல் கிண்டலை இரசித்து சாப்பிட்டிட்டு அதற்கு உவப்பாக நன்னாரித் தேத்தண்ணியைக் குடிச்ச தனமும் பூரணியும் அட்டாளையைவிட்டு வெளியே வந்து ,தனம்’ பாறு இஞ்சை வா ஒருக்கா „ என்று கூப்பிட அட்டாளையை விட்டு எழுந்து வந்த பாறுவை அட்டாளைக்கு கொஞ்சம் தள்ளிக் கூட்டிக் கொண்டு போய், „நாளைளக்கு படம் „என்று ஞானத்திற்கு கேட்கத்தக்கதாகச் சொல்லியவள் மெதுவாக’ நீ அவரோடை தனியாய் இருக்கிறதை நினைச்சால் பயமாயிருக்குதடி, ஞானத்திற்குப் பெண்டாட்டி ஆகிற வரைக்கும் பல்லைக் கடிச்சுக் கொண்டு பொறுமையாயிரடி,அந்தத் தம்பி பிழை விடமாட்டார் என்ற நம்பிக்கை இருக்குது, ஆனால் இரண்டு பேருக்கும் பொல்லாத வயசு,நீ உன்னைக் கண்ணாடியிலை பார்த்திருக்கிறியா, முகம் மாறி பூரிப்படைஞ்சு போயிருக்கிறாய்; இப்பவே நீ அவருக்கு அரைப் பெண்சாதியாகிவிட்டாய், நாங்கள் என்ன ஆட்கள் அவர் என்ன ஆட்கள் என்றதை மறக்காதை கவனம் புளியடி வைரவரிட்டைப் பாரத்தைப் போடு, வெயில் வெக்கையும் சாக்குச் சூடும் பொல்லாதவை மனசைக் குழப்பும், நாங்கள் இரண்டு பேரும் குடும்பகாரர்கள்.’ அதில்’ அனுபவமிருக்கு….’ தனம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பாறு கண்கலங்கத் தொடங்கினாள்’ அக்கா அவர் நல்லவர் மனச்சாட்சிக்கு விரோதமாய் நடக்க மாட்டார்,தனிமையில் எல்லையைத் தாண்டமாட்டார்….’
„ என்னையும் அவரையும் எங்கடை ஆட்கள் ஒதுக்கி வைச்சாலும் சரி அவற்றை ஆட்கள் ஒதுக்கி வைச்சாலும் சரி தனியனாய் வாழுவம் என்று கனதரம் எனக்குச் சொல்லிட்டார்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஞானம் அட்டாளையைவிட்டு எழும்பி வருவதைக் கவனிச்ச பூரணி „வாறார் கண்ணைத் துடை கவனமாயிரு’ என்று சொல்லுறாள்.
மூவருக்கும் கிட்ட வந்த ஞானம்’ இந்தாங்க காசு „ என்று பூரணிக்கும் தனத்துக்கும் நடுகைக் கூலியைக் குடுக்க’ அப்ப எனக்கு இல்லையா „ என்று பாறு கேட்க, „ ம்…இந்தாங்க „ என்றவன் கையிலிருந்த முழுக் காசையும் குடுக்கிறான்.
தனது கையிலிருந்த காசில் பத்துப் பத்து ரூபாயை எடுத்து பூரணியின் கைக்குள்ளும் தனத்தின் கைக்குள்ளும் வைக்கிறாள் பாறு.
தனமும் பூரணியும் „சரி வாறம் „ என்று சொல்லிக் கொண்டே போக ஞானமும் பாறுவும் அவர்களைப் பார்த்தபடி நின்றவர்கள் அட்டாளைக்குள் போகிறார்கள்…
(தொடரும்)
![]()