கதைகள்

அகதியின் நாட்குறிப்பு!…. அத்தியாயம்….. 12…. குடத்தனை உதயன்.

“ஆதி…..”
“மோன.”… ஆதி….!
ஏன்ரா வேலைக்குப் போகலையோ…?
செல்லப்பாவின் குரல் பனித்துகள்கள் வீசுகின்ற காற்றுக்கு “சத்தார” வந்து காதுக்குள் கேட்டுக் கேள்விகளின்றி புகுந்து கொள்ளுமே அதே போல வேண்டாத விருந்தாளி போன்று வந்தொலித்தது. அப்படியே தூங்க விட்டால்… கோடி புண்ணியம் என்பது போல் ஆதியின் மனம் எண்ணியது.
செல்லப்பாவின் குரல் கேட்டு விழித்துக் கொண்ட ஆதி சலிப்புடன் குளியல் அறை சென்றான். குளிக்க வேண்டுமென்று நினைத்திருந்தான் ஆனால் அவனது மனது என்ன நினைத்ததோ… தெரியாது நினைப்பை மாற்றிக் கொண்டான்.
வெளியிலே வந்த ஆதியின் முகத்தில் பனிக்குளிர்..! பாளைக் கத்தியால் பாளை சீவும்போது பாளையின் கழுத்தை அறுத்ததும், ஓவென்ற குரலெழுப்பி வெண்ணிறப் பால் வியர்வைத் துளிகள் போன்று துளிர்க்குமே, அதே போன்று குளிர் முகத்தில் வெட்டிச் சென்றது.
குளிர்க் கோட்டுக்குள் இரண்டு கைகளையும் புதைத்துக் கொண்டான். வெளிவிடுகின்ற ஒவ்வொரு மூச்சும் புகையாக வெளி வந்து மீண்டும் பனிக்குளிரில் ஐக்கியமாகின.
ஊரில் அவர்கள் ஏதும் குழப்படி செய்தால்..! குட்டி மாமா அடிக்கடி சொல்வார்.! காதைப் பொத்திப் போட்டால் புகை கக்குமென்று. பனிக்குளிரில் வெளிவருகின்ற புகையைப் பார்த்ததும் குட்டி மாமா சொன்னதையும் நினைத்துப் பார்க்கையில் அவனுக்கு சிரிப்புத்தான் வந்தது.
ஆதியின் மனது இன்று எதுவித காரணமுமின்றி ஒரு பட படப்பில் இயங்கிக் கொண்டிருந்தது. அவனது நினைவுகளில் முதல் நாள் இரவு கண்ட கனவு மனதில் ஒருவித நெருடலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
அன்று வேலை முடிந்து ஆதி, நசார், மற்றவர்களுடன் மாட்டினின் “கோழிக்கூடு” அவனின் அலுவலகத்தை ஆதி அப்படித்தான் அழைப்பான். எல்லோரும் வேலைக்களைப்பில் தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருக்கையில் , தீடீரென உட்புகுந்த மாட்டின் காட்டுக் கத்துக் கத்தியவாறு எல்லோர் மேலும் சிறுநீர் கழித்து இடி விழுந்த சிரிப்பை உதிர்த்தான்.
அப்போது அவனின் முகம் காண்டா மிருகம் போன்றிருந்தது. ஆதியின் முகத்தில் விழுந்த சிறுநீர்.. முகத்தசைகளைச் சுட்டெரித்த போதுதான்…! செல்லப்பாவின் குரல் ஆதி என்று ஒலித்தது.
கனவுகளை எத்தனை பேர் நம்புகிறீர்களோ தெரியாது. ஆனால் ஆதி நம்பினான். அந்தக் கனவுக் கதை பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் சொல்லலாமென நினைக்கிறன்.
தார் வீதியிலே பனிக்கட்டிகள் கண்ணாடி போன்று படிந்திருந்தது. கொஞ்சம் கவனம் சிதைந்தாலும் எந்த நேரத்திலும் பிரடி அடிபடவோ, முகம் குப்புறவோ விழலாம். வீதியில் தொங்கிக் கொண்டிருக்கும் மின் விளக்குகள் கூட பனிப்புகார்களை உள்ளிழுத்து பல மெல்லிளை கொண்ட தந்திக் கம்பிகளை மூச்சிறைக்க வெளித் தள்ளுவது போன்று ஆதியின் பார்வைக்கிருந்தது.
எப்படியும் தடியன் இன்ன, இன்ன வேலை செய்ய வேண்டுமென்று பெரியதொரு துண்டில் எழுதி வைத்திருப்பானென நினைத்துக் கொண்டு நிமிர்கையில், அவன் ஏறும் பஸ் வந்து கொண்டிருந்தது.
அவனையறியாமலே அவனின் கால்கள் வேகமெடுக்கையில்.. அவனின் வலதுகால் முன்னுக்கு சறுக்கிக் கொண்டு போகவும் அருகிலிருந்த குப்பை போடும் வாளியைப் பிடித்துக் கொண்டான். நெஞ்சு பட.. படக்க.. “கடவுள் காப்பாத்தியது” என நினைத்துக் கொண்டான்.
வேகமாக வந்த பஸ் அவனுக்கு கை காட்டிச் சென்றது.
ஊரிலென்றால்.. ஒரு “மனிசர்” கை காட்டினாலோ.., ஓடி வருவதைப் பார்த்தாலோ… நிண்டு ஏத்திக் கொண்டு தான் போவாங்கள். இஞ்ச இவங்கள்… என அவன் மனதில் சலித்துக் கொண்டான்.
தடியன் இன்றைக்குக் கத்தப் போறான்..! என நினைத்து வருத்தப்பட்டான்.
ஆதி கண்ட கனவு ஈரப்பதம் நிறைந்த பகுதியில் மண்புழுக்கள் நெளிந்து, நெளிந்து ஊர்ந்து போகுமே அதே போன்று அவன் மனதில் மீண்டும் புணர்ச்சி கொண்டது.
ஆதி உடை மாத்திய பின்பு ஒரு வித தயக்கத்துடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தான். ஆதியைத் தவிர மற்றவர்கள் மாட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார்கள். ஒவ்வொருத்தர் செய்ய வேண்டிய வேலைகளை மாட்டின் கூறியவாறு நின்றான்.
நாசார் ஆதியை நிமிர்ந்து பார்த்து பரிதாபத்துடன் தலையைக் கவிழ்ந்து கொண்டான்.
மற்றவர்கள் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார்கள். ஆதி தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டான். மாட்டின் ஆதியின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டாதாகத் தெரியவில்லை.
இங்கு வேலை செய்ய விரும்பினால்… வேலை தொடங்குவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பு நிற்க வேண்டும்.
இது சிறீலங்கா இல்லை..!
என ஏதோவெல்லாம் கத்திக் கொண்டிருந்தான் .
அந்த வேளை மொனிக்கா குசினிக் கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்து மாட்டினை ஒரு பார்வை பார்த்தவாறு கடந்து போனாள்.
*********************************************
மொனிக்கா அங்கு பகுதி நேர வேலை செய்பவள். கிழமையில் மூன்று நாள் வேலைக்கு வருவாள். அவள் பேசுகின்ற ஒவ்வொரு சொற்களும் சிந்தனை கலந்து தாழம் பூப்போன்று அவள் வாயிலிருந்து வந்து விழும். அவள் “kellner” ஆக வேலை செய்பவள். அவள் வேலைக்கு வந்தாலே.. கல… கலப்புத்தான்.
சிரிப்பு அவளுடன் கூடப்பிறந்ததோ.. என்னவோ அவள் முகத்தில் அப்படியொரு ஒளி. அவன் வேலைக்கு வந்த மூன்றாம் நாள் குசினிக்குள் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
அன்று வேலை முடிந்து வரும்போது நசார் சொன்னான். ..
“ஆதி….”
நீ.. மொனிக்காவுடன் கண்டபடி கதைக்காதே….!
மாட்டின் நீண்ட காலமா அவள் பின்னால் சுத்தித் திரிகிறான்.
அவளும் பல முறை சொல்லி விட்டாள். மாட்டின் இது சரிவராதென்று.
மாட்டின் சொல்லுவான்.. “அடிக்கு மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் “ இந்தப் பழமொழிக்கேற்ப எப்பவோ ஒருநாள் அவள் என்னிடம் வருவாளென்று.
ஆதி விழுந்து … விழுந்து சிரித்தவாறு…
ஏன் நசார்…?
உந்த மூதேவி கண்ணாடியில தன்ர உருவத்தைப் பார்க்கேலையோ.?
ஆதி உனக்கு எந்த நேரமும் பகிடி தான்.
நான் சொல்வதைக் கேள்.
மொனிக்கா குசினிக்குள் யாருடனாவது கதைத்தால்..! அன்று முழுக்கச் செத்த வீடு தான் நெருப்பில் விழுந்த புளு மாதிரி அவன் கருகிப் போவான். என்று சொன்னான் நசார்.
“நசார்…”
நான் ஒன்று சொல்லவே… நாங்கள் அகதிகள் தான் பிழைப்புத் தேடி வந்தவர்கள் தான்.
ஆனால் இந்த உலகத்தில் யாரும், யாருக்கும் அடிமைகள் இல்லை. அதை நீ புரிந்து கொள். மாட்டின் இன்னும் நல்ல கடையில் சாப்பிடல.
நசார் ஒன்றும் புரியாமல் ஆதியைப் பார்த்தான்.
“நசார்…”
இங்கு ஒருதனுக்கு அடித்தால்.. என்ன தண்டனை கிடைக்கும் ?
அதன் விளைவுகளைப் பொறுத்து என்று நசார் பதில் சொன்னான்.
தற்பாதுகாப்புக்குக் குத்தினால்..?
“ஆதி…”
இங்கு உனக்கு யாருக்கும் அடிக்க உரிமையில்லை.
“நசார்.. “ நான் ஒன்றும் இயேசு நாதரோ, புத்தனோ, அல்லாஹ்வோ இல்லை. நான் மனிதன். புரியுதா உனக்கு?
அப்படி யாரும் உன்னைத் தாக்கினால் காவல் துறையிடந்தான் முறையிட வேண்டும் என்றான் நசார்.
ம்…ம்… அதை நான் கேள்விப்பட்டனான். போதையில் ஒன்றைச் செய்தால்…?
“டேய்….” நீ.. என்ன சொல்ல வருகிறாய்?
பொறுமையிழந்து நசார் கேட்டான்.
மாட்டின நல்ல பாடசாலையில படிப்பிக்க வேணும். அவனுக்கு எங்கள் நாட்டுப் பள்ளிக்கூடந்தான் சரி. என்றான் ஆதி.
நசார் ஒன்றும் புரியாமல் ஆதியைப் பார்த்தான்.
தேவையில்லாமல் பிரச்சினையில் மாட்டாத…
உழைக்கிற வழியைப் பார். என்றான் நசார்.
சரி…, சரி,..மொனிக்காவைப் பற்றிச் சொல்லு என்றான் ஆதி.
மொனிக்கா.. இங்குள்ள பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் கற்று அதில் “மாஸ்ரர்” பட்டம் முடித்திருக்கிறாள் .
அப்ப ஏன் நசார்.. அவளிங்க எச்சில் கோப்பை பொறுக்கித் திரிகிறாள்..?
********************************************
அன்று நசாருடன் நடந்த சம்பாசனையை நினைத்துப் பார்த்தவாறு.. ஆதி வேலையில் கவனத்தைச் செலுத்தினான். ஆனால் மாட்டினின் குரல் காதுக்குள் புகுந்து மனதை திருகிக் கொண்டிருந்தது. மன்னிப்புக் கேட்டும் அதற்கு ஒரு மரியாதை தரவில்லையே.. என்ற கோபம் ஆதியின் மனதை தீயாய்ச் சுட்டது. முகத் தசை நார்கள் கோபத்தில் இறுக்கம் கண்டது. அருகிலே வந்த நசார்….
“ஆதி…” சும்மா அவன் சொன்னதையே நினைத்துக் கொண்டிருக்காத.. நாய் குலைத்தால் குலைச்சிட்டுப் போகட்டுமென்று முதுகிலே தட்டிச் சென்றான்.
எதற்கும் கிறுங்காத ஆதியின் கண்கள் பனித்தன.
உணவகத்தின் பெரிய முதலாளி MULLER குசினிக்குள் வந்து மாலை வணக்கம் சொல்வது ஆதியின் காதில் விழுந்தன. ஆதியிடம் வந்து சுகம் விசாரிக்காமல் அவர் போவதில்லை. அதே போன்று தான் அவர் மனைவியும்.
அவர் வரப் போகிறாரென்பதை உணர்ந்து அருகிலே தொங்கிக் கொண்டிருந்த கை துடைக்கும் “பேப்பரை” இழுத்துப் பிய்த்துக் கொண்டு குளிரூட்டியறைக்குள் ஓடி கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.
அங்கு வேலை செய்பவர்களில் வயதில் குறைந்தவன் ஆதி தான். மாட்டினைத் தவிர்த்து மற்றவர்களெல்லாம் ஆதியுடன் அன்பாக பழகுவார்கள்.
Hallo junge Mann எப்படிச் சுகம்…?
நலம் …. நலம் … எனத் தலையாட்டினான்.
என்ன… ஒரு மாதிரி இருக்கிறாய்..?
உங்கள் வீட்டுக்காறரெல்லாம் சிறீலங்காவில் நலந்தானே..?
ஆம் எனத் தலையாட்டினான்.
அப்ப ஏன் ஒருமாதிரியிருக்கிறாய்..?
கொஞ்சம் தலைவலி..
என்றான் ஆதி.
நிறையத் தேநீர் அருந்து.. என முதுகில் தட்டியவாறு.., நல்ல பொழுதாக அமையட்டும் எனக் கூறிச் சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் மொனிக்கா குசினிக் கதவைத் திறந்தவாறு “கலோ ஆதி…” இந்தா உனக்கான தேநீர்..! சத்தமாகக் கூறியவாறு அருகில் கொண்டு வந்து வைத்தாள். எல்லோருக்கும் கேட்க அவள் வேண்டுமென்று கூறியதாகத்தான் ஆதி உணர்ந்தான்.
ஆதி என்ன என்பது போல பார்வையால கேட்டான். Heer Muller தான் சொன்னார். அதை மட்டும் மெதுவாகச் சொன்னாள்.
எங்கோ நின்ற மாட்டின் குடு… குடு… என நத்தை அசைந்து, அசைந்து வருவது போன்று ஆதியை நோக்கி வந்து கொண்டிருந்தான்……!
ஆதியின் கண்கள் நெருப்பெனச் சிவந்தது.
தொடரும்…….

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *