கதைகள்
அகதியின் நாட்குறிப்பு!…. அத்தியாயம்….. 11…. குடத்தனை உதயன்.



இருள் மெல்ல இழுத்து விரிக்கத் தொடங்கியது. வலைப்பந்து விளையாடியவர்கள் ஒருவரையொருவர் அணைத்தும், உரசியவாறும் சென்றனர்.
வானதி ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள். நடேசன் தன்னை மறந்து அந்த ஜோடிகளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் நினைவில் கவிதா தான் வந்திருப்பாளென நினைத்து அவளின் மனம் நிலை கொள்ளாமல் துடித்தது.
வானதி தனது எண்ண ஓட்டங்களை அவன் வெளிநாடு போக முன்பு சொல்ல வேண்டுமென நினைத்திருந்தாள். ஆனால்.. அவர்கள் இருக்கும் சூழலில் உண்மையைச் சொன்னாலும் பொய்யென நினைக்கும் நேரம். இடம் , பொருள் , ஏவல் , இப்படியான ஒரு நிலைவரும் போது யோசித்துச் செயற்படச் சொல்லித்தான் அந்தக் கிழவன் எழுதி வைத்தாரோ..? என நினைத்துச் சிரித்துக் கொண்டாள் வானதி.
“சரி.. போவமா..? என்றாள் வானதி.”
“ஏதோ சொல்ல வந்தீர்..?”
ஒன்றுமில்லை… பின்பு ஒரு நேரம், சந்தர்ப்பம் வரும் போது சொல்கிறேனே.. எனக் கூறினாள்.
அவனுக்கு அறியும் ஆவல் இருந்தாலும் , ஏனோ தெரியவில்லை அவளிடம் கேட்காமல் தவிர்த்து விட்டான்.
*****************************************
நடேசன் நிமிர்ந்து செல்லப்பாவைப் பார்த்தான்.
“தம்பி..”
உன்ர மனம் என்ன சொல்கிறதோ அதைச் செய்”
“தம்பி… மனம் தான் பெரிய பள்ளியறை. நல்லா பகுப்பாய்ந்து அவசரப் படாமல் உன்ர மனதுடன் நீண்ட நேரம் பேசு.. நல்லதொரு முடிவு கிடைக்கும் என்றார் செல்லப்பா.
அதை விட விதி என்ற ஒன்று இருக்கடா “மோன”

இருவரும் அமைதியாக அவரவர் பிரச்சனைகளைச் சிந்தித்தவாறு நடந்தார்கள்.
ஆதி தொலைக்காட்சியில் ஒரு படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு.. இன்ன படம் தான் பார்க்க வேண்டுமென்ற விதிமுறையில்லை. என்ன படம் “டெக்குக்குள்.. இருக்கோ..! அந்தப் படம் ஓடும்.
கதவைத்தட்டி.. செல்லப்பாவும் , நடேசனும் உள் நுழைந்தார்கள்.
ஓ ….. ஓ… உழைப்பாளி வந்திட்டார்..!
நடேசன் சொன்னார்.
ஆதி வேலைக்குச் சென்று சில வாரங்கள் தான் ஆகின்றன.
“மோன..” எப்படி வேலை..?
என்று செல்லப்பா கேட்டார்.
ஆதிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவனின் முக மாறுதலை அவதானித்த செல்லப்பா..
ஆரம்பத்தில் எல்லாம் கடினமாகத்தான் இருக்கும்.
நாள் போகப்… போகப் பழகிவிடும் என்றார்.
ஆதிக்கு முதல் நாள் வேலைக்குச் செல்லும் போதிருந்த மகிழ்ச்சி தற்போது இருக்கவில்லை. நாரி எலும்பை எண்ணுமளவுக்கு உடற் பாகமெல்லாம் வலியெடுத்தது.
வீட்டில் ஒரு துரும்பைத் தன்னும் எடுத்துப் போட்டிருக்க மாட்டான். சாப்பாட்டுக் கோப்பை தன்னும் கழுவிய நாளை விரல் விட்டு எண்ணிவிடலாம். இங்க என்னடா என்றால்.. கூட்டல், கழித்தல், பெருக்கல் , விசுக்கல், என குசினிவேலை துவங்கியது. அந்தக் குசினிக்குள் மூன்று ஜேர்மன் நாட்டவர்கள், ஒரு துருக்கியன், ஆதி, மொத்தம் ஐந்து பேர்.
ஆதி வேலைக்குப் போனதிலிருந்து துருக்கியனுக்குப் பதவியுயர்வு கிடைத்தது. அவன் செய்த வேலையெல்லாம் ஆதியின் தலையில் பொறிந்தது. வேலைக்குச் சென்ற முதல் நாளே நிலவறை துப்பரவு செய்யும் வேலைதான். வேலைக்கு போகும் முன்பு மாமா உட்பட அங்கிருந்த மேதாவிகள் தங்கள் பொன்னான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். பகிர்ந்து கொண்டார்கள் என்பதை விடப் பயம் காட்டினார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
செல்லப்பா மட்டுந்தான் சொன்னார் உன்னால என்ன முடியுமோ..? அதைச் செய் என்றார்.
முதல் நாள் எல்லாரும் தங்கள் பெயர்களை அறிமுகம் செய்தார்கள். துருக்கியன் ஒரு வித வரட்டுச் சிரிப்புடன் அவனது பெயரை நசார் என அறிமுகம் செய்தான். அந்தச் சிரிப்பின் மர்மம் காலம் செல்லத்தான் ஆதிக்கு புரிந்தது. இறுதியாக ஒருவன் கண்ணாடிக் கூட்டுக்குள்ளிருந்து ஒரு நூறு கிலோ எடையாவதிருக்கும் பட்டத்து யானை அசைந்து… அசைந்து … வருவது போல வந்து.. எனது பெயர் மாட்டின் முதலாளி என அறிமுகம் செய்தான்.
ஆதி ஒன்றை மட்டும் அன்று உணர்ந்து கொண்டான். உந்தத் தடியனின் வேலையெல்லாம் சேர்த்து.. நாங்கள் தான் செய்ய வேண்டுமென்று.
நசார் தான் ஆதிக்கு குசினியைச் சுற்றிக் காட்டினான். எங்கே.. என்ன பொருள் இருக்கென்று. எல்லாம் முடிந்த பின்பு.. நசார் சொன்னான்.. இந்த நில அறையைச் சுத்தம் செய்..! எந்தளவு உன்னால் விரைவாக முடியுமோ..? முடித்திட்டு மேலே வா.. என்றான்.
ஆதியும் தனக்குத் தெரிந்தளவு சுத்தம் செய்த பின் மேல் தளத்திற்குச் சென்றான். நசார் கேட்டான்..
“ஆதி… “ முடிச்சிட்டியா…?
அவன் தலையாட்டினான்.
சரி… இந்தக் குளிரூட்டி அறையைச் சுத்தம் செய்.
ஒவ்வொரு பொருட்களாக எடுத்து இந்த வண்டிலில் வைத்த பின்பு வேலையைத் தொடங்கு.. என்றான் நசார்.
குளிருக்குப் பழக்கப்படாத ஆதியின் உடம்பு நிலைகொள்ளாமல் தவித்தது. வெண் புழுக்கள் கிணற்றடியிலிருக்கும் ஈரப்பதமுள்ள மணலுக்குள் நெளிந்து, வளைந்து போகுமே.. அதே போன்று ஆதியின் மனதிற்குள் அந்த நினைவு புணர்ச்சி கொண்டது.
வெளியே போய் நின்று உடலைச் சூடேற்றிய பின்பு, வந்து துடைக்கலாமென்றாலும் , என்ன சொல்வார்களோ..? என்ற அச்சம் அவனுக்குள்ளிருந்தது அருகிலுள்ள முட்டைப் பெட்டியை எடுத்து வண்டிலில் வைக்கும் போது கைவிரல்கள் விறைப்புக் கண்டு கீழே விழுந்து முட்டைகள் உடைந்து விட்டன. ஆதி வெளியில் வந்து பதட்டத்துடன்….
ஏய்.. “நசார்… நசார்..”
எனக் கூப்பிட்டு சைகையால் இங்க வா…. வா… என அழைத்தான்.
என்ன நாசம் விளைவித்தானோ..! என்று நினைத்தவாறு விரைந்து வந்தான் நசார்.
உடைந்த முட்டைகளைப் பார்த்ததும். நெற்றியில் அடித்தவாறு…
was hast du gemacht …? என்ன செய்து வைத்துள்ளாய் ?
தடியன் கண்டால் கத்தப் போறான்.
எனத் திட்டியவாறு வெளியில் ஓடிப் போய் சில துடைக்கும் துணிகளைக் கொண்டு வந்து சீக்கிரம்… சீக்கிரம் என அவசரம் காட்டினான்.
இவனுக்கு ஏன் இவ்வளவு பதட்டம் ? வேலை செய்யுமிடத்தில் தவறுகள் நடக்கும், அதற்காக உயிரை விட முடியுமா..? என ஆதி மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
அன்று வேலை முடிந்து மாலை வெளியில் வரும் போது ஆதி கேட்டான்.
“நசார்..” ஏன் நீ இவ்வளவு பதட்டப் படுகிறாய்…?
நசார் நீண்ட மௌன இடைவெளியின் பின்பு… ஆதி நான் இந்த குசினிக்குள்ள ஐந்து வருடங்களாக வேலை செய்கிறன். எப்படித்தான் இதய சுத்தியோட விசுவாசமா வேலை செய்தாலும்.. நன்றி என்ற வார்த்தையைக் கேட்க முடியாது.
தடியன் ஒரு நாய் வளர்க்கிறான். அந்த ஐந்தறிவு மிருகத்திடம் காட்டுற கருணை கூட எங்களிடம் காட்ட மாட்டான். அவன்ர உடம்பு முழுவதும் இந்த….. இந்தக் காரிருள் போன்று இனத் துவேசம் படிஞ்சு ஓடுது. நின்றாக் குற்றம், சிரிச்சாக் குற்றம், கதைத்தால் குற்றமெனப் பற்களை நெருமியவாறு.. அனல் கொதிக்கும் கவிதை போன்று கூறினான் நசார்.
.மூச்சு விடாமல் நசார் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தான்.
“ஆதி..”
எத்தனை தரம் அவனைக் கொலை செய்வதற்கு வெளியில் காத்திருந்திருப்பேன் தெரியுமா…?
இப்படியான இனத் துவேசிகளை விடக் கூடாதென்று இரத்தம் கொதிக்கும். ஆனால்.. எனக்கென்று மனைவி, பிள்ளைகள் , இருக்கிறார்கள் என்ற நினைவு வரும் போது, நானே என்னைச் சமாதானம் செய்து கொள்வேன் என்ற நசாரைப் பார்க்க ஆதிக்குப் பாவமாக இருந்தது.
ஏன் நசார் நீ வேறு ஒரு வேலை தேடலாமே…?
எங்க ஆதி வேலை தேடுறது..?
இங்க என்ன வேலையைப் பூட்டு லாச்சிக்க போட்டு பூட்டியா வைத்திருக்கிறான்.
நானும் பல வேலைகள் தேடிப் போனேன்.

வேலை செய்துகொண்டு வேலை தேடுவது எங்கள் பலவீனமென்பதைப் புரிந்து கொண்டு, அடி மாடுகளைச் சந்தையில் விலை பேசுவது போன்று சம்பளம் பேசுகிறார்கள். நூறு மார்க் குறைந்தாலும் , வருடத்திற்கு கணக்கைப் பார். தனி நபர் என்றால் வேறு ஆதி..! ஆனால்.. குடும்பம் என்றால்..! பலமுறை யோசிக்க வேண்டியிருக்கு. என்றான் நாசர். அப்போது.. கரிய இருளுடன் பறந்து வந்த குளிர் காற்று.. இருவர் முகத்திலும், விறாண்டிச் சென்றது.
ஆதி நசாரைப் பார்த்தான். குளிர்காற்றுக்கு அவனின் வெள்ளை நிற மூக்கு நுனி சிவந்திருந்ததை சாலையின் மின் விளக்கின் வெளிச்சத்தில் கண்டு கொண்டான். அவனின் முகம் ஊமல் கொட்டைபோன்று கோணிப் போயிருந்தது. நாடற்றவனுக்கு மனசும் , உடலும் வலியெடுக்கும் போது தான்.. சொந்த நாட்டின் தார்ப்பரியம் விளங்கும். திரும்பிய இடமெல்லாம் பிரச்சனை தான்.
எந்த ரூபத்தில் எப்படித் துன்பங்கள் வந்து சேரும் என்பதும், அவற்றை தாங்கிக் கொள்ளும் மனநிலை வாலறுந்த பட்டம் போன்று தான். என நினைத்தவாறு நசாரைப் பார்த்து….
“நசார்..” ஒன்றுக்கும் யோசிக்காதை தடியனுக்கு ஒரு வழி பார்ப்பம். ஒரு குரூரச் சிரிப்புடன் கூறினான் ஆதி.
நசார் ஒன்றும் புரியாமல் ஒரு திகைப்புடன் ஆதியைப் பார்த்தான்.
தொடரும்…….
![]()