நடுகைக்காரி!….தொடர் 23 ….. (குறுநாவல் ) ஏலையா க.முருகதாசன்.

![]()
![]()
மரவள்ளிக் கிழங்கு பிடுங்க பாறுவைக் கூட்டிக் கொண்டு போன ஞானம் கட்டை மரவள்ளி என்று சொல்லுகின்ற ஊர் மரவள்ளியை விட்டிட்டு உயரமாய் வளர்ந்திருந்த மரவள்ளி ஒன்றை இழுத்துப் பார்த்தான்.
கொஞ்சம் ஈரலிப்பான தரையாக இருந்தாலும் இழுக்கும் போது மண் கொஞ்சம் மேல் கிளம்பினவே தவிர கிழங்குகளால் வெளிவரமுடியாது அறுந்துவிடும் என்றதைக் கண்ட ஞானம் பாறுவை நிற்கச் சொல்லிவிட்டு அட்டாளைக்குப் போய் பாரையை எடுத்துக் கொண்டு போக, பாறு குனிந்து மேல் கிளம்பிய மண்ணை கைளால் வறுகி கொண்டிருந்தாள்.
பாரையோடு வந்த ஞானத்தைக் கண்டதும் பாறு, தள்ளி கால்களை நீட்டியபடி இருக்க ஞானம் மெதுவாக கிழங்கு வேரோடியிருக்கும் திசையைக் கவனித்து பக்குவமாக பாரையால் கிண்டி நான்கு கிழங்குகளை வெளியே எடுத்தவன் மரத்தோடிருந்த கிழங்கு வேர்களை பாரைக்கூராலேயே வெட்டி எடுக்கிறான்.
இன்னும் மூன்று கிழங்குகளாவது மரத்தில் இருக்கும் என்று நினைச்சவன் கிண்டிய பள்ளத்தில், கிண்டி எடுத்த மண்ணைப் போட்டு நிரப்பி கால்களால் அமத்தி விடுகிறான்.
அட்டாளைக்கு திரும்பிய பாறுவும் ஞானமும் கிணத்தடிக்குப் போய் கிழங்குகளைக் கழுவுகிறார்கள்.ஒவ்வொரு கிழங்காக எடுத்து கை விரல்களால் பொத்திப்பிடித்தபடி இருக்க பாறு தண்ணி வார்க்க பொத்திபிடித்த கையை முன்னுக்கும் பின்னுக்கும் கொண்டு போய் கை உரசலில் தண்ணியோடு சேர்த்து மண் போக கழுவிக் கொண்டிருந்தவன்’ பார்த்தியளே கிழங்கை, நேரான இறுக்குமான இந்த கிழங்கை,பொத்திப் பிடிக்கேக்கை தெரியும் அதன் இறுக்கம் எப்படி என்று.வாழப்பழத்தைப் பொத்திப் பிடித்தால் அதன் இறுக்கம் கையுக்குத் தெரியும். ஊர்மரவள்ளி இருக்கே அது இதைவிட இறுக்கம் பொத்திப் பிடிக்;கேக்கை அது தெரியும், ஆனால் என்ன கொஞ்சம் கட்டை’ என்றவனை கண்ணை உயர்த்திப் பார்த்த பாறு பற்களால் சொண்டை மடிச்சு வெட்கத்துடன் கடிச்சாள்.
ஞானம் தாயைப் போலச் சிலேடையாகப் பேசுவதில் கெட்டிக்காரன்.அவன் சிலேடையாகக் கதைக்கிறானா அல்லது வெகுளியாகக் கதைக்கிறானா என்பதை யாராலுமே கண்டுபிடிக்க
முடியாது.அவன் கதைப்பதைக் கேட்பவர்கள் பூடகமாகச் சிரிப்பார்கள் சிலர் தலையைக் குனிஞ்சு கொணடு சிரிப்பார்கள். ஆனால் அவன் சிரிக்கவே மாட்டான்.
பாறு சொண்டைக் கடிச்சதைக் கண்ட ஞானம் „நான் கதைக்கேக்கை ஏன் சொண்டைக் கடிச்சனீங்கள்’ என்றவன் கழுவி முடிய கிழங்குகளில் இரண்டை அவளிடம் குடுத்து தானும் இரண்டை எடுத்துக் கொண்டு எட்டி இரண்டடி வைச்சு அட்டாளைக்குள் இரண்டு பேருமாக நுழைஞ்சவன் „ பார்த்தியளே கிழங்குளை அடிமட்டம் மாதிரி நேரானது „ என்று சொன்னவன் „ ஆனால் எல்லாக் கிழங்குகளும் நேராய் இருக்காது சிலதுகள் கொஞ்சம் வளைஞ்சிருக்கும், ஆனால் என்ரை கிழங்கு இல்லை இல்லை எங்கடை தோட்டத்து கிழங்குகள் நேரானது „ என்று சொல்ல, தலைகுனிஞ்சு அவன் சொல்வதை வெட்கத்துடன் கேட்டுக் கொண்டிருந்தவள் „ ஆ..இனிப் போதும் போதும் வளைஞ்ச நிமிர்ந்த கிழங்குக் கதை, எழும்பிக் கெதியிலை போய் நான் சொன்ன சக்கரையை வாங்கிக் கொண்டு வாங்கோ, நான் கிழங்குகளை அளவாக வெட்டி அவிக்க ஆயத்தப்படுத்துகிறன் „என்று சொல்ல ஞானம் எழுந்து லிங்கம் கபேயிலிருந்து சோறு கறி கொண்டு வந்து கழுவிக் காய விட்டிருந்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு ஆடுகால் மரத்தோடு சாத்தியிருந்த சைக்கிளையும் எடுத்துக் கொண்டு போகிறான்.
கிழங்குளை கிணத்தடியிலை வைச்சு கழுவிய போதும் அட்டாளைக்குள்ளை வந்தபிறகும் ஞானம் கிழங்கை வர்ணித்ததை நினைச்சு இரசித்து வெட்க்கப்பட்டபடி கிழங்குகளை துண்டு துண்டாக வெட்டி தோலை உரித்தெடுத்தாள்.
மண்ணிறத்தோலிற்கு அடுத்தபடியாக வெள்ளைத் தோல் இருக்கும்.
சீமை மரவள்ளியின் வெள்ளைத் தோளின் மேற்பகுதி கொஞ்சம் றோஸ் கலரில் இருக்கும் அதை தனியாக எடுத்து இரசித்தவள்,ஞானம் சொன்ன கதையைக் கேட்டு தன்னையறியாமலே கிலுக்கென்று சிரிச்சுவிடுகிறாள்.
லிங்கம் கபேயில் கழுவிய பாத்திரங்களைக் கொண்டு போய் கொடுத்த ஞானம், பாறு சக்;கரையை வாங்கிவரச் சொன்னதை நினைச்சுக் கொண்டவன் பண்டத்தரிப்பு வீதியிலிருந்து பன்னாலைக்கு திரும்பும் வீதி முகரியிலிருந்த மணியத்தின் கடையில் சக்கரை வாங்கலாம் எனப் போனவனை கடையடியில் நின்ற நற்குணம்’ என்ன ஞானம் வெங்காயத்துக்குள்ளை மண்டிக்கிடக்கிற புல்லுப் பிடுங்கல் புது
நடுகைக்காரியை வைச்சு ஆரவாரமாக நடக்குது போல…ம் நடக்கட்டும் புல்லுப் பிடுங்கினால் வெங்காயத் தோட்டம் வெளிக்கும்….’ என்று சொல்லி முடிக்க நற்குணம் ஏதோ அறிஞ்சுதான் நக்கலாக கேட்கிறார் என்பதை உணர்ந்த ஞானம்’ தோட்டப் பயிர்களுக்குள்ளை புல்லுக் கிடந்தா புடுங்க வேண்டியதுதானே, அது வெங்காயத்துக்குள்ளை கிடந்தாலென்ன வெள்ளாமைக்குள்ளை கிடந்தாலென்ன, அது பெரிய விசயமில்லையே அது சரி இப்ப எதற்காக இதைக் கேட்டனீங்கள்,எங்கடை தோட்டத்துக்குள்ளை நடுகைக்காரிகள் புல்லுப் பிடுங்கிக் கொண்டிருக்கினம் என்று ஆர் உங்களுக்குச் சொன்னது „ என்று கேட்க,ஞானமும் நற்குணமும் கதைச்சுக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த கடைக்கார மணியம்,’ வேறையார் சொல்றது காராளியின்ரை மனுசி கைராசி போற போக்கிளை அட்டாளைக்குள்ளை சாக்கு விரிச்சுக் கிடந்த கதையையும் சொல்லிப் போட்டுப் போறா’ என்றவுடன்’ அவாவுக்கு வேறை இல்லை…ம் சரி அதைப் பிறகு கதைப்பம்
..மணியண்ணை நல்ல வெள்ளை களிச் சக்கரை இருக்கா…என்று கேட்க’ அது முடிஞ்சு போச்சுது கறுப்புக் கட்டிச் சக்கரை கிடக்குது „ என்று மணியம் சொல்லி முடிக்க முந்தியே, சைக்கிளை எடுத்தவன் „ அது வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே வீட்டிலை இருக்கிற சக்கரையை எடுப்பம் என்று யோசித்துக் கொண்டு வீட்டுக்குப் போகிறான்.
அவசரம் அவசரமாக வீட்டுக்குப் போய் சக்கரையை எடுத்துக் கொண்டு ஒழுங்கையால் வேகமாக சைக்கிளில் வந்தவனின் காதில் „ஞானம் நில்’! என்று குரல் கேட்கவே , சட்டென்று சைக்கிளை நிற்பாட்டி கூப்பிட்டது யாராக இருக்கும் என்று ஞானம் திரும்பிப் பார்க்கிறான்.
ஞானத்தின் வீட்டிலிருந்து மூன்றாவது வீட்டிலிருக்கும் சிவசம்புவின் மனுசிக்காறி அவையின்ரை வீட்டுப் படலையடியில் நிற்பதைக் காண்கிறான்.
திரும்பிப் பார்த்த ஞானத்தை „இஞ்சை ஒருக்கா வா’என்று கையைக்காட்டிக் கூப்பிட, வேண்டா வெறுப்பாக அரைகுறை மனசுடன் அவையின்ரை வீட்டுப் படலையடிக்குப் போனவன்’ நான் அவசரமாக போக வேணும் அங்கை தோட்டத்திலை நடுகைக்காரிகள் புல்லுப்பிடுங்கிக் கொண்டு நிக்கினம், ஏன் இப்ப என்னைக் கூப்பிட்டனீங்கள்’ என்று கேட்க,’ ஓ…நடுகைக்காரிகள் புல்லுப்
பிடுங்கினமோ…நாங்களெல்லாம் அவைக்கு சிரட்டையிலை தண்ணி குடுத்தா, உங்கடை குடும்பம் நீங்கள் பாவிக்கிற மூக்குப் பேணியிலை….’என்று முடிக்க முந்தி, „இஞ்சை வாங்க, என்னைக் கூப்பிட்டு மெனக்கெடுத்தி தேவையில்லாத கதையைக் கதைச்சுக் கொண்டிருக்கிறியள், நாங்கள் எங்கடை மூக்குப் பேணியிலை குடுப்பம்…விடுவம் அது எங்கடை பிரச்சினை அதிலை நீங்கள் தலையிடத் தேவையில்லை….அது கிடக்கட்டும் போன என்னை இப்ப எதற்காக கூப்பிட்டனீங்கள் அதைச் சொல்லுங்கள்’ என்று ஞானம் கோபமாகக் கேட்க, காராளியின்ரை பெண்சாதி எல்லாம் விபரமாகச் சொல்லிப் போட்டா, உங்களை எங்கடை ஆட்கள் என்று சொல்லவே வெட்கமாயிருக்கு…புல்லுப் பிடுங்க வந்த ஆரோ புதுப் பெட்டையாமே கிணத்திலை கொடி பிடிச்சு தண்ணி அள்ளினாளாமே, குளிச்சு முழுகி கைலியெல்லாம் காயவிட்டாளாமே,புல்லுப் பிடுங்க வந்த பெட்டை மாதிரி தெரியேலையாம் தலைமயிரை பறக்கவிட்டிட்டு அட்டாளைக்குள்ளை இருந்தவளை கையைப் பிடிச்சு வெளியே இழுத்து கட்டிப் பிடிச்சு அவளைத்தான் கட்டப் போறன் என்று சொன்னியாமே …உண்மையா’ என்று கேட்க ஞானத்திற்கு கோபம் உச்சிமேல ஏற „ ஓம் அவளைத்தான் கட்டப் போறன்,அவள்தான் என்ரை பெண்சாதி, அவள்தான் சுப்பையாவின்ரையும் சண்முகவல்லியின்ரையும் மருமகள், நான் சொன்னதை இந்தச் சுற்றுவட்hரத்திலைப் போய்ச் சொல்லுங்கோ’ என்று கோபத்துடன் வேகம் வேகமாகச் சொன்னவன் தனது தோட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.
வெங்காயத் தோட்டத்துக்குள்ளை ஒருசிறுபுல்லுக்கூட இல்லாதவாறு பிடுங்கி முடிச்சதைப் பார்த்த போது வெற்றிலைத் தோட்டத்து துப்பரவுத்தன்மை தெரிஞ்சுது.
தனமும் பூரணியும் புல்லுப் பிடுங்கி முடிச்சதும் அட்டாளைக்கு வந்தவர்கள் முகமலர்ச்சியோடு சாதுவான சிரிப்புடன் மரவள்ளிக் கிழங்குத் துண்டுகளை கழுவி எடுத்து ஒரு ஆலுமினியச் சட்டிக்குள் பாறு போட்டுக் கொண்டிருப்பதைக் காண்கின்றனர்.
அட்டாளைக்குள் குனிஞ்சு போய் உட்கார்ந்த இருவரில் தனம்’எங்கை பாறு உன்ரை ஆளைக் காணேலை’ எனக் கேட்க,’ அவரைச் சக்கரை வாங்க அனுப்பியிருக்கிறன்’ என்றவளின் முகம் மலர்ச்சியாக இருப்பதைக் கண்ட பூரணி’ பாறு உன்ரை முகம் வழமைக்கு மாறாக வித்தியாசமாயிருக்கு, ஏதோ நடந்திருக்கு…என்னடி நடந்தது’
என்றவளுக்கு „ ஒண்டுமில்லை „ என்று பாறு சொல்ல மீண்டும் பூரணி „
எங்களை ஒண்டுமில்லை என்று சொல்லி நம்பச் சொல்றியா’ என்று வற்புறுத்திக் கேட்க, மரவள்ளிக் கிழங்கை கழுவிய போது ஞானம் கல்லுளி மங்கன் போல சிலேடையாக மரவள்ளிக் கிழங்கை ஒப்பிட்டுச் சொன்னதைச் சொல்ல, ஒரே நேரத்திலை தனமும் பூரணியும் வாயிலை கையை வைச்சு’ அடக் கடவுளே அந்தளவுக்கு கதைக்கத் தொடங்கிட்டியளா’ என்று தனம் சொல்ல, „ எனக்கென்றால் இது எங்கேயோ பெரிய சிக்கலில்தான் போய் முடியப் போகுது „ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஞானம் சைக்கிளை எறியாத குறையாக ஆடுகால் மரத்தோடை சாத்திப் போட்டு அட்டாளைக்குள் நுழைய அவனின் முகம் மாறி கண்கள் சிவந்திருப்பதைக் கண்டதும் பாறு திகைச்சுப் போய் இவருக்கு ஏதோ நடந்திருக்கு என்று யோசிச்சவளாக „ ஏன் முகம் ஒரு மாதிரியாயிருக்கு’ என்று கேட்க, ஞானம் மேலை பார்த்தபடி „ ஒண்டுமில்லை’ என்று சொல்ல, அதை நம்ப மறுத்த பாறு……
(தொடரும்)
![]()