கதைகள்

நடுகைக்காரி!….தொடர் 22 ….. (குறுநாவல் ) ஏலையா க.முருகதாசன்.

பாறுவை பூரணியும் தனமும் ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தனர்.அப்பொழது பெரிய அலுமினியச் சருவச்சட்டியில் சோறும் இன்னொரு சின்ன அலுமினியச் சருவச்சட்டியில் கத்தரிக்காய் வெள்ளைக்கறி, மற்றச் சருவச்சட்டியில் முருங்கைக்காயுடன் வாழைக்காய் போட்டு வைச்ச கறியையும் ஞானமும் அவனின் நண்பன் சண்முகராஜாவும் கொண்டு வந்து அட்டாளைக்குள் வைச்சனர்.

லிங்கம் கபேயில் மரக்கறிச் சாப்பாடுள் மட்டுமே சமைப்பதால் ஞானம் கேட்டுக் கொண்டதற்காக லிங்கம் பத்து முட்டைகளை பொரித்துக் குடுத்திருந்தார்.

„இவற்றைக் கொண்டுவர இரண்டுதரம் போயிருக்க வேண்டும், நல்ல காலம் ராஜா லிங்கம் கபேயில் தேத்தண்ணி குடிச்சுக் கொண்டிருந்ததாலை அவரும் எனக்கு உதவி செய்தான்’ என்று சொல்லிக் கொண்டே சோற்றுக்கு மேலை வாழையிலை போட்டு அதற்கு மேலை வைச்ச முட்டைப் பொரியலை தனியாக ஞானம் எடுத்து வைச்சான்.

„சரி ஞானம் நான் போட்டு வாறன் வேறை உதவி தேவையா’ என்று சண்முகராஜா கேட்க’இருந்து சாப்பிட்டிட்டுப் போவன்’ என்று ஞானம் கேட்க,’ஐயையோ வேண்டாம் இப்பத்தான் கொஞ்ச நேரத்திற்கு முந்தி லிங்கண்ணையிட்டை வடையும் போண்டாவும் சாப்பிட்டனான், நீயும் பார்த்தனிதானே’ என்று சொல்லி அவன் போவதற்குத் திரும்ப, „ராஜா லிங்கண்ணையிட்டை போண்டா இன்னும் இருப்பதைக் கண்டனியா,இருந்தால் நான் சொன்னது என்று வாங்கிக் கொண்டு வாறியா’ என்று சொல்ல,’இப்ப எதுக்கு போண்டா அதுதான் நிறையச் சோறும் கறியுமிருக்கே, அதோடை முட்டைப் பொரியலும் இருக்கு, வேண்டாம்’ என்று பாறு சொல்ல,பின்னேரம் சாப்பிட ஏதாவது வேண்டாமா அதுக்குத்தான்’ என்று பாறுவுக்கு ஞானம் சொல்ல,’ அதுக்கு மரவெள்ளிக்கிழங்கு இரண்டைப் பிடிங்கி அவிப்பம், எப்பவும் கடைச்சாப்பாடு வேண்டாம், பழைய எண்ணையிலை பொரிப்பினம் வேண்டாம், தேவையில்லாமல் காசைச் செலவழிக்க வேண்டாம் „ என்று பாறு சொல்ல,’இதற்கு மேலை இனி அப்பீல் இல்லை „ என்று சிரிச்சுக் கொண்டே சொன்ன சண்முகராஜா „நான் வாறன்’ என்று சொல்லிவிட்டுப் போக, „அடக் கடவுளே…இப்பவே எஜமானியம்மா இப்படியென்றால் நாளைக்கு என்ன நடக்குமோ தெரியாது, போண்டா சாப்பிடுறதையும் கெடுத்திட்டியே’ என்று கேலியும் கிண்டலுமாக தனம் சொல்ல ஞானமும் பாறுவும் பூரணியும் அதை கேட்டு இரசித்தனர்.

ஞானம் வாழையிலையை வெட்டிக் கொண்டுவர எல்லாரும் அட்டாளைக்குள் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினர் லிங்கம் அகப்பையும் கரண்டிகளும் குடுத்திருந்தார்.

பாறு ஒவ்வொருவருக்கும் பக்குவமாக பறிமாறிவிட்டு பித்தளை மூக்குப் பேணியில் தண்ணீர்விட்டுக் கொண்டு வந்து வைச்சுவிட்டு சாப்பிடத் தொடங்கினாள்.

பாறு வந்து சாப்பிடும் வரை காத்திருந்த ஞானம் அவள் சாப்பிடத் தொடங்க அவனும் சாப்பிடத் தொடங்கினான்.

அதைக் கண்சாடையால் பூரணி தனத்துக்குக் காட்ட, அதைக் கண்டுவிட்ட பாறு „ என்ன கண்சாடை எனக்கும் ஏன் காட்டினனீங்கள் என்று விளங்கும்’என்றவள் குனிஞ்சு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

சாப்பிட்டுக் கொண்டே தனம் „நாங்கள் இரண்டு பேரும் நாளைக்குப் படம் பார்க்க யாழ்ப்பாணத்துக்கு போறம் நீயும் வாறியா பாறு’ என்று கேட்க’ நானும் வாறன் அவரும் என்னோடை வருவார்,அது சரி உங்கடை இரண்டு; பேற்றை மனுசன்மாரும் வருகினமோ’ என்று பாறு கேட்க „ கேட்டனாங்கள் அவை வரேலையாம் என்று சொல்லிப் போட்டினம், எங்கினையோ திருவிழா நடக்கப் போகுதாம் அங்கை சின்னமோளம் வருதாம் அதைப் பார்க்க நாளையிரவு அதுக்குப் போயினமாம்’

„சரி எத்தனை மணிக்கு தெல்லிப்பழை யூனியன் கண்ரீனடிக்கு நான் வரவேணும்’ என்று பாறு கேட்க,’நீ என்ன தனியாகவா வரப்போறாய் நீ எங்களோட வாவன், அவர் யூனியன் கண்ரீனடிக்கு வரட்டும்;,சரியா எட்டமுக்கால் பஸ் எடுக்க வேணும், எங்கட வீட்டடிக்கு எட்டு மணிக்கே வந்திடு நடந்து அங்கை போக எப்பிடியும் எட்டரை மணியாகிடும்,

நீ என்ன சீலைகட்டப் போறியா,இல்லாட்டில் சட்டை போடப் போறியா „ என்று தனம் பாறுவைக் கேட்க, „அவர் சொல்லட்டும்,நான் என்ன உடுக்க’ என்று ஞானத்தைக் கேட்க „சீலை வடிவாய் இருக்கும்,சீலையை உடுங்கள், „ என்று சொன்னதும்’ம்’ என்று தலையாட்டுகிறாள் பாறு.’நான் எட்டு மணிக்கு யூனியன் கண்ரீனடியிலை நிக்கிறன் „ என்று ஞானம் சொல்ல, „கொம்மாவுக்கு வாய் தவறித்தன்னும் சொல்லிப் போடாதை ஞானம் தம்பி வாறதை’ என்று பூரணி சொல்ல, „நானேன் சொல்றன்’ என்று கதையை முடிக்கிறாள் பாறு.

நாளைக்கு எந்தச் சீலையைக் கட்டலாம் என்று யோசிச்சபடியே பாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

வெயில் வெக்கைக்கும் களைப்புக்கும் ஏற்ற சாப்பாட்டை சாப்பிட்ட பூரணியும் தனமும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போகலாம் என்று நினைச்சாலும் சரியில்லை என்ற நினைப்பில் திரும்பவும் வெங்காயத் தோட்டத்திற்கு போக என்று எழும்புகையில் ஞானம், „கொஞ்சம் ஆறிவிட்டு போங்க, இன்னும் கொஞ்ச வேலைதானே இருக்கு,நீங்கள் பின்னேரம் வீட்டுக்கு கெதியாய் போகலாம், பாறு கொஞ்ச நேரம் இங்கை இருக்கட்டும், நான் கூட்டிக் கொண்டு வந்து விடுறன்……

„நீங்கள் இரண்டு பேரும் போக முந்தி மரவள்ளிக் கிழங்கு அவிச்சுப் போடுவம் அதையும் சாப்பிட்டிட்டு தேத்தண்ணியையும் குடிச்சிட்டுப் போகலாம், இப்ப கொஞ்ச நேரம் இதுக்குள்ளை ஆறுதலா இருந்திட்டுப் போய் வேலை செய்யத் தொடங்குங்கோ’ என்று சொல்லிக் கொண்டே சோறு கறி கொண்டு வந்திருந்த

பாத்திரங்களை கழுவுவதற்கு எடுக்க பூரணி’மரவள்ளிக் கிழங்கா அதைத்தானே தினம் தினம் சாப்பிடுறம்.தோட்ட வேலை செய்யப் போற இடத்திலை எல்லாரும் அவிஞ்சது பாதி அவியாதது பாதியாயும் நொறுக்கு கிழங்காக சமைச்சுக் கொண்டுவந்து தருகினம், இஞ்சை என்ன அவிச்ச கிழங்கு அவ்வளவுதான்’ என்று சொல்லி முடிக்க, „ஐயையோ என்னைக் குறை சொல்லாதீங்க நான் போண்டா வாங்கித்தரத்தான் யோசிச்சனான்,ஆனால் உங்கடை ஆள்தான் வாங்க வேணடாம் என்று சொல்லிட்டாவே நான் என்ன செய்யிறது’ என்று ஞானம் சொல்லி முடிக்க முந்தி பூரணி ‘ எங்கடை ஆளா அது அப்ப இப்ப அவள் உங்கடை ஆள், இந்த தோட்டத்தினரை எஜமானி …இல்லையில்லை …முதலாளியம்மா….இந்த அம்மா சொல்றதைத்தான் நீங்களும் கேட்கப் போறியள்…..அவள் கிழிச்ச கோட்டை இனி உங்களாலை தாண்டவே முடியாது…அதுதான் தெரிஞ்சு போச்சே…போண்டா விசயத்திலை…சரி…இனி என்ன செய்யிறுது ….எங்களுக்கு போண்டா சாப்பிட கொடுப்பனவும் இல்லை…லிங்கத்தாருக்கு அவற்றை போண்டாவை விற்கிற அதிர்ஸ்டமும் இல்லை’ என்று பூரணி சொல்லி முடிக்க,’என்ன போண்டா போண்டா என்று இப்பிடி அங்கலாய்க்கிறா…அப்பிடி என்ன லிங்கத்தின்ரை அந்த உருண்டை போண்டா அப்பிடி உருசியோ….’ ஏன்று தனம் கிண்டலாக சிலேடையாக கேட்டுக் கொண்டே தலையைக் குனிந்து கண்ணை உயர்த்தி பார்த்துக் கொண்டிருந்த பாறுவிடம் கண்ணைச் சுழற்றி கண்ணாலை ஞானத்தைக் காட்டி இங்கேயும் அப்படித்தானோ என்று முகபாவனையால் கேட்க, ஞானத்தைக் கடைக் கண்ணால் பார்த்த பாறு வெட்கத்துடன் தலையைக் குனிகிறாள்.

போண்டாவை எதோடு ஒப்பிட்டுப் பேசுகிறாள் என்பதை பூரணி அறியாதவளல்ல, அவளும் பூடகமாகச் சிரிக்கிறாள்.

ஞானமும்; „லிங்கத்தின்ரை’ என்று சொல்லை அழுத்திச் சொன்னதன் அர்த்தத்தையும் சிலேடையையும் புரிந்து கொண்டாலும் புரியாத கல்லுளி மங்கன் மாதிரி பாத்திரங்களை கழுவுதற்காக கிணத்தடிக்கு கொண்டு போக எடுக்கிறான்.

எந்த இடத்தில் யாரோடு எப்படிக் கதைக்க வேண்டும் என்பதை ஞானம் தெரிந்து வைச்சிருந்தபடியால் தனம் கதைச்ச சிலேடைக் கதையை கேட்டும் கேளாதமாதிரி இருக்க’ புல்லுப்புடுங்க முந்தி ஒரு வாய் வெத்திலை பாக்குப் போட்டால்தான் சாப்பிட்ட சாப்பாடும் செமிக்கும் „ என்று பூரணி தான் கொண்டு வந்து புற்பையிலிருந்து பாக்கு வெத்திலையை எடுக்க, „ உங்களுக்கு பாக்கு வெத்திலை வாங்கிக் கொண்டு வந்தனான் கதைப் பிராக்கிலை மறந்தே போயிட்டன் „ என்று துணிப் பையிலிருந்து அவற்றை எடுக்கப் போனவனை’ எங்களிட்டை இருக்கு நீங்கள் போடுங்கள் என்று வேண்டாம் என்கிறாள் பூரணி.

ஞானத்திற்கு பாக்கு வெத்திலை போடும் பழக்கம் உண்டு.தாயும் தகப்பனும் போடுகிறபடியால் அவனையும் அது தொற்றிக் கொண்டது.ஆனால் தொடர்ச்சியாக போடுபவன் அல்ல.

கழுவுவதற்காக எடுத்த பாத்திரங்களை கீழை வைச்சிட்டு வீட்டிலையிருந்து கொண்டு வந்த பாக்குச் சீவலையும் வெத்திலையையும் எடுத்து ஒரு வெத்திலையில் பாக்குச் சீவல் சிலதுகளை வைச்சு, ஒரு வெத்திலையில் மடிச்சு வைச்சிருந்த சுண்ணாம்பில் கொஞ்சத்தை எடுத்து வெத்திலையில் பூசி பாக்கை மூடி வெத்திலையை மடிச்சு அதை பாறுவிடம் நீட்ட அவளும் அதனை வாங்கி வாய்க்குள் வைச்ச சப்பத் தொடங்குகிறாள்.அவனும் வெற்றிலை பாக்கை வாய்க்குள்ளை போட்டு சப்பத் தொடங்கினான்…

ஞானம் வெத்திலை மடிச்சுக் குடுத்ததைப் பார்த்த பூரணியும் தனமும் „ம்…’ என்று மூச்சை இழுத்துவிட, அதில் பூரணி „பார்த்தியா நடக்கிறதை „ என்று முகபாவனை செய்ய, முகத்தை பின்பக்கமாகத் திருப்பி „இனி அவளுக்கு அது நடந்து சொண்டு சிவக்கவில்லை, பாக்கு வெத்திலை சப்பித்தான் சொண்டு சிவந்தது என்று இவள் கதை விடுகிறாளோ இல்லையோ பார் „ என்று பூரணிக்கு மட்டும் கேட்கிற மாதிரி காதுக்குள் சொல்லிக் கொண்டு பாக்கு வெத்திலை சாப்பிட்டு செருமல் வந்தது போல செருமிக் கொண்டே முகத்தைத் திருப்பி எல்லாரையும் பார்த்தாள்.

„ என்ன பூரணியக்கா செருமலோடை கதை சொல்லி முடிச்சிட்டியல் போலை…ம் …..நடக்கட்டும்’ என்று பாறு சொல்ல, எங்களுக்கும் வி…ள….ங்…கு…..ம் கேட்டதும்கூட „ என்று சொல்ல அதற்குப் பிறகு எதுவுமே சொல்லாது தனமும் பூரணியும் மிகுதி வேலையைச் செய்வதற்காக வெங்காயத் தோட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் போனதும்,ஞானம் சாப்பாடு கொண்டு வந்த பாத்திரங்களை கழுவுவதற்காக கிணத்தடிக்கு எழுந்து போக பாறுவும் அவனுடன் எழுந்து போகிறாள்.

போகும் போதே அடுப்பிலிருந்து அவதானமாக நெருப்பில்லாத சாம்பலை எடுத்தவள் தென்னம்பொச்சு இருக்கின்றதா என்று சுற்றுமுற்றும் பார்த்தவளுக்கு அட்டாளைக்கருகில் அரைவாசி மண்ணிற்குள்ளும் அரைவாசி மேலேயும் தலை நீட்டிக் கொண்டிருந்த தென்னம்தும்பைக் கண்டதும் எடுத்து வந்து ஞானம் தண்ணி வார்க்க அதைக கசக்கு கசக்கு என்று கசக்கி அதில் படித்திருந்த மண்ணைப் போகச் செய்தவள், தண்ணி வார்க்கும் முகரிக் கட்டிலிருந்து சாம்பலைப் போட்டுப் பாத்திரங்களைத் தேயக்கத் தொடங்கினாள்.

தண்ணியை அள்ளி வார்த்துக் கொண்டிருந்த ஞானம்’ பாக்கு வெத்திலை போட்டு உங்கடை சொண்டு நல்லாய்ச் சிவந்து போய்ச்சுது „ என்று சொல்ல பாறு உடனேயே „அதைவிடவா’ என்று திருப்பிக் கேட்க’ எதை’என்று அவன் தெரியாத மாதிரிக் கேட்க,’ஓகோ உங்களுக்கு தெரியாதோ,எல்லாத்தையும் செய்து போட்டு இந்தப் பூனையும் பால்குடிக்குமா என்று நடிக்கிறியள்’ என்று பாறு சிரிக்கிறாள்…,தொடர்ந்து அவள் „நான் உங்களைக் கரைச்சல் படுத்திறன் என்று நினைக்காதையுங்கோ தயவு செய்து ஏதாவது ஒரு வேலைக்குப் போங்கோ,இப்பிடி நானும் நீங்களும் சிங்களம் படிக்கப் போற நேரத்திலையும் ஆற்றையேன் தோட்ட வேலை செய்யேக்கை பயந்து பயந்து வந்து சந்திக்கிறதும்,இண்டைக்கு மாதிரி

வெங்காயத்துக்குள்ளை புல்லுக்கிடக்குது என்று அப்பா அம்மாவுக்குப் பொய் சொல்லி இல்லாத புல்லைப் பிடுங்க வாறதும் …இப்படி எத்தனை நாளைக்கு..நீங்கள் வேலையானால் …யார் எதிர்த்தாலும் நாங்கள் இணர்டு பேரும் துணிஞ்சு வாழலாம்…’ என்று சொல்லி முடிக்க…

„எனக்கும் அந்த யோசனை இல்லாமலில்லை…தெல்லிப்பழை யூனியனிலை சங்கக்கடை மனேஜர் வேலை இருக்குதாம்..அதற்கான விண்ணப்பப் படிவம் என்னட்டை இருக்குது அதை நிரப்பித் திங்கட்கிழமை குடுக்கப் போறன்..எப்பிடியும் வேலை கிடைச்சிடும்’ என்கிறான்.

அதற்கு பாறு „ ஏன் அங்கை கிளார்க் வேலை ஏதும் இல்லையோ உங்களுக்கு குவாலிபிக்கேசன் இருக்குதே’ என அவள் சொல்ல’இருக்குதான் ஆனால் சனத்தோடை புழங்கிற வேலைதான் எனக்கு விருப்பம்…’என்றவன்,பாறு மினுக்கிக் குடுத்த பாத்திரங்களை எடுத்து வெயில்படக்கூடியதாக காய வைக்கிறான்.

„ இதுகளைக் கொண்டு போய்க் குடுக்க முந்தி இரண்டு மரவள்ளிக் கிழங்குகளைப் பிடிங்கித் தந்திட்டுப் போங்கோ, கட்டை மரவள்ளிக் கிழங்கு வேண்டாம், சீமை மரவள்ளிக் கிழங்குகளைத்தான் பிடுங்கித் தாங்கோ அதுதான் கரைஞ்சு அவியும்,அதோடை இதுகளைக் குடுத்திட்டு வரேக்கை….கடையிலை சக்கரை வாங்கிக் கொண்டு வாங்கோ இல்லாட்டி உங்கடை வீடு கிட்டத்தானே அங்கை போய் எடுத்துக் கொண்டு வாங்கோ….’ ஏன்று அவள் சொல்ல „இப்பவே அரை மனுசிக்காறியாய் விட்டியள் „ என்று சிரித்தவன் பாறுவையும் கூட்டிக் கொண்டு மரவள்ளிக் கிழங்குகள் பிடுங்க போய்க் கொண்டிருந்தான்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *