சிங்கப்பூரில் சிலகாலம்!….. 33 …. (உண்மைக் கதை) … ஏலையா க.முருகதாசன்.

நானும் யோகமலரும் கதைத்துக் கொண்டிருக்கும் போதே, அவளின் அண்ணன்மார் இருவரும் அவர்களின் மனைவிமாருடன் வந்து கொண்டிருந்தனர்.
எங்களை நோக்கி அவர்கள் கையைக் காட்ட நானும் யோகமலரும் அவர்களுக்குக் கையைக் காட்டினோம்.
யோகமலரின் வேரும் பூர்வீகமும் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி.பொதுவாக தமிழகத்தில் உள்ள ஊர்களில் வாழ்பவர்கள் ஊருக்கு ஊர் வித்தியாசமான உடல்வாகிலும் முகத் தோற்றத்திலும் இருப்பார்கள்.
திருநெல்வேலிக்காரர்கள் என்றால், அதில் ஆண்கள் கொஞ்சம் கறுப்பாகவும் உயரமாகவும் தடித்த உடலுடன் சொண்டை மறைத்து நிற்கும் மீசையுடையவர்களாகவும்; இருப்பார்கள் என்ற விம்பமே எனது மனதில் இருந்தது.
யோகமலர் மெலிதாக இல்லாமலும் தடித்து இல்லாமலும் நீளமான மூக்குடன் அளவான ஊடல்வாகும் அழகும் கொண்டவள்;.
அவளுடைய தோழிகள் அவள் முன்பிருந்த நிலையை விபரிக்கும் போது அகங்காரமான முகமுடையவளாக இருந்தவளென்றும் என்னைச் சந்தித்ததன் பின்பு அந்த முகமே இல்லாது போய்விட்டதாகவும் சொல்லியிருந்தார்கள்.
யோகமலரின் அண்ணன்மார் இருவரும் நான் எதிர்பார்த்ததைவிட பொது நிறத்திலும் உயரமாகவும் நடுத்தர உடலமைப்புடன் கம்புpரமாகவும் இருந்தார்கள்.அண்ணிமாரும் பொது நிறத்திலும் அழகாகவும் அளவான உயரத்திலும் யோகமலரின் உடல்பருமனிலும் இருந்தார்கள்.
எங்களுக்கருகில் நால்வரும் வந்ததும், யோகமலரின் அண்ணன்மார்கள் „வணக்கம்ங்க’ என்று சொல்லி நட்பான புன்னகையுடன் கைலாகு தர அவர்களின் மனைவிகளும் „வணக்கம்ங்க’ என்று சொல்லிக் கொண்டே கைலாகு தந்தார்கள்.யோகமலரின் அண்ணிமாரில் ஒருவர் ஆசரியையாகவும், இன்னொருவர் ஜோகூர்பாருவில் உள்ள அரசாங்க திணைக்களத்தில் வேலை செய்பவர் என்பதை ஏற்கனவே யோகமலர் என்னிடம் சொல்லியிருந்ததால் அவர்களிடம் அதற்கான நடை உடை
பாவனை இருந்ததைக் கவனிச்சன்.இருவரும் நேர்த்தியாக சீலை கட்டியிருந்தார்கள்.
தமையன்மாரில் மூத்த தமையன் மண்ணிற நீளக் காற்சட்டையும் வெளிர் நீலநிறத்தில் சட்டையும் போட்டு முக்கால்கைவரை சட்டைக்கையை மடிச்சு விட்டிருந்தார்.
இரண்டாவது தமையன் கறுப்பு நீளக் காற்சட்டையும் பட்டர்கலர் அரைக்கைச் சட்டையும் போட்டிருந்தார்கள்.
யோகமலரின் அண்ணன்மார்’ எப்படி இருக்கிறீங்க, நலமா „ என ஒருவர் மாறி ஒருவர் கேட்க அண்ணிமார் அதில் பங்கு கொள்வது போல கனிவான சிரிப்புடன் என்னைப் பார்த்தனர்.
யோகமலரின் மூத்த அண்ணன் „அங்க சொப்பிங் சென்ரரில ஏதாவது கொபி சொப்லயிருந்து பேசுவோமா „ என்று சொல்ல எல்லாரும் சொப்பிங் சென்ரரை நோக்கிப் போக நானும் எனது சூட்கேஸை தூக்கிக் கொண்டு அவர்களுடன் போக எத்தனிக்கையில் „பிளீஸ் அத என்னிடம் கொடுங்க,நான் கொண்டு போய் காரில வைச்சிட்டு வாறன், சிஸ்ரரின்ரை ரவல்லிங் பாக்சும் அவளோட திங்சும் காரிலதான் இருக்கு, அப்புறமா ஒன்னா எடுத்துக்கலாம் „ என்று சொன்ன யோகமலரின் சின்ன அண்ணன்,என்னிடமிருந்து சூட்கேசை வாங்கிக் கொண்டு அவர்களின் காரில் வைக்கக் கொண்டு போக நாங்கள் அவர் திரும்பி வரும் வரையும் தாமதிச்சு நின்று அவர் வந்ததும் எல்லாருமாக அந்த சொப்பிங் சென்ரருக்குள் போனம்.
நிலத்தளத்திலேயே ஒரு அகலமான கோப்பிக் கடை இருந்தது.சனங்கள் அதிகமாக அங்கை இல்லை ஆறு பேர் இருக்கக்கூடிய மேசையும் கதிரைகளும் இருந்த இடத்தில் எல்லாரும் போய் அங்கை உட்கார்ந்தம்.
நான் எதிர்பார்த்ததைவிட அவர்களிடம் ஒரு கனிவான பார்வையும் ஜென்ரில்மன் தன்மையும் இருந்தது.அவர்கள் என்னுடன் என்னதான் கதைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பினால் மனதில் படபடப்பு ஏற்பட்டது.
கொஞ்ச நேரம் எதுவுமே பேசாது எல்லாரும் இருந்தம்.அப்பொழுது கடைப் பணிப் பெண் நாங்கள் இருந்த மேசைக்கருகில் வந்து எமக்கு என்ன வேண்டு மென்று கேட்க மெனுக் காட்டை எல்லாரும் எடுத்துப் பார்த்து தமக்குத் தேவையான உணவைத் தெரிவு செய்ய, எமக்கருகில் இருந்த மெனு காட்டை நான் பார்க்க எனக்கருகில் இருந்த யோகமலர்
விரலால் இத நாம இரண்டு பேரும் ஓடர் பண்ணுவம் என்றாள்.பிறேக்பாஸ்ட்டுக்கு நன்னா இருக்கும் கப்புச்சுனோவுக்கும் ஒடர் பண்ணுவம் சரியா உங்களுக்கு ஓகேயா „ என்றாள்.
அவள் தெரிவு செய்தது எப்படியான உருசியில் இருக்கும் என்று தெரியவில்லை.ஆனால் உருசியாக இருக்கும் என்று நினைச்சு „ ஓகே உங்களுடைய விருப்பம்’ என்றன்.
யோகமலர் பணிப் பெண்ணிடம் தான் தெரிவு செய்ததை சொல்லி இரண்டு கப்புச்சினோவுக்கும் ஓடர் பண்ணினாள்.
மற்றவையும் தமக்குத் தேவையானதைச் சொல்ல, அவற்றைக் கொண்டு வர பணிப்பெண் போக,எப்படிக் கதையை ஆரம்பிப்பது என்று தெரியாமல் அவளின் அண்ணன்மாரும் அண்ணிமாரும் தடுமாறுவதை கண்டன்.
ஒரு வழியாக அவளின் மூத்த அண்ணன்’ இப்ப நீங்க பார்க்கிற எங்க சிஸ்ரர் நாங்க பார்த்த சிஸ்ரர் இல்ல.எப்பவுமே கோபக்காரியாக அகங்காரம் பிடிச்சவளா,யாரையுமே மதிக்காதவளா இருந்தாள்.நாங்களும் அப்பா அம்மாவும் இவளுக்கு எப்படித்தான் மறீஜ் நடக்கப் போகுதோன்னு கவலைப்பட்டிட்டே இருந்தம்ங்க…..’
„எத்தனையோ புறப்போஸ்கள் வந்துதுங்க ,எங்க இரண்டு பேரோடை மனைவிங்க சைட்ல இருந்துகூட , எங்க சொந்த ஊரான திருநெல்வேலிலேயிருந்து ஐந்து புறப்போஸ்கள் வந்துதுங்க.ஆனா எதையுமேவேணாம் என்று சொல்லிட்டே இரந்தாள்;.அப்புறமா தனக்கு கல்யாணமே வேணாம்னு பிடிவாதக்காரியாக இருந்தாள்…எங்களால எதுவுமே பண்ண முடியல..ரொம்பக் கவலையாக இருந்தம்…’
„திடீரென அவள்ல ஒரு மாற்றம் தெரிஞ்சு.அவள் முகத்தில இருந்த கடுமையான அகங்காரம் மாறி ஒரு தெளிவு ஏற்பட்டதைப் பார்த்தம்…
„என்னோட மனைவியிடமும் என் தம்பியோட மனைவியிடமும் தான் உங்கள விரும்புவதாகவும் உங்களோட வாழ ஆசைப்படுவதாகவும் சொன்னவள் நீங்க சிறீலங்காவிலிருந்து வந்தவரென்றும் உங்களுக்கு மனைவியும் மூன்று பிள்ளைகளும் சிறீலங்காவில இருப்பதாகச் சொல்ல, அவங்க அதிர்ச்சியடைஞ்சு எங்ககிட்ட சொன்னாங்க, நாங்களும் அப்பா அம்மாவும் அதிர்ச்சியடைஞ்சம்….
„மறி பண்ணி மனைவி பிள்ளைங்களோட இருக்கிறவரை ஏன் விரும்பினாய் அவரோட எப்படி வாழ முடியும் அவர் சிறீலங்காவுக்கு போனப்புறம் உன்னோட வாழ்வு என்னாகும்னு என்று யோசிச்சு பார்த்தாயா என்று கேட்க, அவர் போகும் வரையிலாவது அவரோட வாழ்ந்து அவர் போக முதல்ல அவர் மடியிலே செத்துடுவன் அண்ணா என்று சொன்னதும் எங்க எல்லாருக்கும் அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி….
„ இது நேர்மையற்ற கல்யாணம்;னு எமக்குப் புரியுது, ஆனா இவள் பைத்தியக்காரியாகி விடுவாளோ என்று பயமாயிருந்துது, அதான் ஏதோ அவள் விதிப்படி நடக்கிறது நடக்கட்டும்னு ஒரு முடிவுக்கு வந்தம்…
„நீங்களும் அவளை விரும்பியிருக்கீங்க உங்களுக்கு மனைவி பிள்ளைங்க இருக்கத்தக்கதாக நீங்க எடுத்த முடிவு சரியா பிழையான்னு எங்களுக்கு சொல்லத் தெரியல, இப்படி எங்க ஜோகூர்பாருல நடந்திருக்கு, இரண்டு மனைவிங்க ஒரு கஸ்பெண்டோட சகிச்சிட்டு வாழ்றாங்க…அதைச் சரின்னு சொல்ல வரல….அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது….’
„ஆனா நீங்க ஊருக்குப் போனப்புறம் இவள் வாழ்க்கை என்னாகப் போகுதோ தெரியலை…..இப்போதைக்கு அவள் உங்களோட ஒன்னா இருப்பதைத் தவிர வேற சொலுசன் எதுவும் இல்லை…..நீங்க பச்சுலராக இருந்திருந்தா நாங்கள் சிறீலங்காவுக்குப் போய் உங்க ஊரில உங்க பெற்றோரோடயோ றிலேசன்சோடயோ கெஞ்சிப் பேசியாவது அவளுக்கு கட்டி வைச்சிருப்பம்…ஆனா இது….அதுவல்ல நீங்க இரண்டு பேரும் எடுத்த முடிவு….’
சொல்லிக் கொண்டிருந்த மூத்த தமையன் நிறுத்துவிட்டு என்னிடமிருந்து ஏதாவது பதில் வருகின்றதா என எதிர்பார்த்தார்.ஆனால் நான் என்ன பதிலைச் சொல்ல முடியும்.
என் மனநிலையிலேயே யோகமலரும் இருந்தாள்.அவள் பதட்டத்தில் இருந்தாள்.முகம் சிவந்து தலைகுனிஞ்சிருந்தாள்.அவளின் உடல் நடுங்குவதைக் கண்டு கொள்ள முடிஞ்சது.
அண்ணன்மார் அண்ணிமாருக்கு முன்னால் அவளை அணைச்சு ஆறுதல்படுத்த முடியாது.அது பண்புமல்ல.மேசைக்கு கீழே அவளின் விரல்களுக்குள் எனது விரல்களைப் பிணைச்சு இறுக்கிப் பிடிச்சுக் கொண்டன்.
அவளின் கைநடுங்கியது.கடைக்கண்ணால் என்னைப் பார்த்தாள்.கண்களில் கண்ணீர் திரட்டி நின்றது.குனிஞ்சபடியே வலது புறங்கையால் கண்ணீரைத் துடைச்சாள்.
எங்களிருவரையும் அவர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.யோகமலரின் இரண்டாவது அண்ணன் தங்கச்சியாரை கனிவோடு பார்த்தான்.
அந்தப் பார்வையில் தங்கச்சியாரிடம் வைச்ச பாசம் தெரிஞ்சது.அவள் ஆசைப்படுற வாழ்க்கையை அவள் வாழட்டும், அது அவள் விதி என்ற பார்வை இருந்ததைக் கவனிச்சன்.மற்றப் பக்கம் முகத்தைத் திருப்பி தனது கண்களைத் துடைச்சுக் கொண்டான்.
அவர்கள் என்னிடமிருந்து எதிர்பார்க்கிற பதில் எனது மௌனத்திலேயே இருந்தது.ஊரில் எனது மனைவி பிள்ளைகளை நினைச்சு மனம் அலை பாய்ஞ்சது.
இதற்கிடையில் பணிப்பெண் நாங்களனைவரும் சொல்லி சாப்பாடுகளையும் தேநீர் கோப்பி கப்புச்சினோ என எல்லாத்தையும் கொண்டுவந்து வைச்சாள்.
அமைதியாக நாங்களனைவரும் சாப்பிட்டு முடிச்சதும் யோகமலரின் மூத்த அண்ணி’ எல்லாரும் இருக்கிற இடத்தில யோகியாலும் எதுவும் பேச முடியல, உங்களாலும் முடியல,அதோட உங்களோட பேசனும் பிளீஸ் வாறீங்களா’ என்று வேண்டுகோளாக என்னிடம் சொல்லிக் கொண்டே யோகமலரின் சின்னண்ணியோட எழ நானும் யோகமலரும் எழுந்து அவர்களோடு போனம்.
கோப்பிக் கடைக்குக் கொஞ்சம் தள்ளி அந்த சொப்பிங் சென்ரரின் அகலமான நீளமான நடைபாதைக் கதிரைகளில் பலர் ஓய்வாக உட்கார்ந்து கதைச்சுக் கொண்டிருந்தனர்.இரண்டாவது அண்ணியின் கையில் ஒரு சிறிய ரவல்லிங்பாக் இருந்தது.
வெறுமனையாக எதிரெதிரே இருந்த சோபா போன்ற இருக்கைகளைத் தேடி நால்வரும் உட்கார்ந்தம்.அந்த நடைபாத விறாந்தாவில் ஆங்காங்கே சாடிப்பூங்கன்றுகளை வைச்சிருந்தார்கள்.
நானும் யோகமலரும் ஒரே சோபாவில் பக்கம் பக்கமாக உட்கார்ந்திருக்க,அவளுடைய அண்ணிமார் எதிரே உட்கார்ந்திருந்தனர்.
யோகமலர் எனது கைகளுக்குள் தனது கைகளை வைச்சிருந்தாள்.அவளின் அண்ணிமார் சில விநாடிகள் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தணர்.
மூத்த அண்ணியே கதைக்கத் தொடங்கினாள்’ நீங்க யோகிக்கு தாலி கட்டச் சம்மதிச்சதுக்கு உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதென்னு தெரியலங்க…. அவளோட வாழ்க்கை உங்ககூடதான்னு இறைவன் எழுதி வைச்சிட்டான் போல…உங்களுக்கும் அவள் இரண்டாவது மனைவியாகனும்னு விதிங்க…’என்றவள்.
இந்த பாக்குள்ள கோல்ட்ல செய்த ஒரு சிம்பிளான தாலிக்கொடி, உங்களுக்கு பட்டுவேட்டி சட்டை, யோகிக்கு பட்டுச்சாறி பிளவுஸ் சாறிக்கான எல்லா உடுப்புகளும்,அவளோட நகைகள் எல்லாம் இருக்கு….’
„இன்னக்கு இரவு சிக்ஸ் பிப்ரீனுக்கு நல்ல நாள்.இன்னைக்கு, நாளைக்கு, நாளன்னைக்கு „ என்று சொல்லியவள், தனது சகலியைத் திரும்பிப் பார்க்க, „ஆமா இன்னக்கு பிறைடே சறறர்டே சண்டே மூணு நாளைக்கு’ என்று சொல்ல மூத்த அண்ணி தொடர்ந்தாள்,’ சாய்ச்சியில உங்க ரெண்டு பேருக்கும் கோட்டல்ல ஸ்பெசல் ரூம் எடுத்திருக்கம்…..
„நீங்க மண்டேதான் சாய்ச்சியில இருக்கிற வீட்டுக்கு போவீங்க….சிக்ஸ் பிப்ரீனுக்கு மறுக்காமல் அவள் கழுத்தில தயவு செய்து தாலியைக் கட்டிடுங்க…தயவு செய்து….நெகிழ்ந்து கண்கலங்கி தனது கைகளால் கண்களைத் துடைச்சபடி சொன்னவள் „யோகி சொன்ன வார்த்தைகள்தான் எங்களை இப்படி ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது என்று சொன்னவள்,அவள் „எனக்கு யாராவது புறப்போசல் கொண்டு வந்தா அவரோட வாழ்ந்ததை அறிஞ்சவங்க,சிறீலங்காவிலேருந்து வந்தவரோட திருட்டு வாழ்க்கை வாழ்ந்தவள் என்ற பெயரால் எனக்கு கல்யாணமே நடக்காமல் இருக்க வேணும், ஏன்னா அவரைக்: காதலிச்சதும் உண்மை அவருக்கும் மனைவியாக வாழ்ந்ததும் உண்மை என்ற நினைப்பிலேயே வாழ்ந்து மகிழ்ச்சியாகவே செத்துப் போயிடுவன்’ என்றாள் அப்புறம் ஒரு நாள் உங்களோட வாழுறதால கர்ப்பமாகினால் நீங்க ஊருக்குப் போனால்கூட தனக்குப் பிறக்கும் குழந்தை ஆணா இருந்தா என்ன பெண்ணா இருந்தா என்ன அவரோட நினைப்பிலேயே வளர்ப்பேன் „ என்றாள்..
„ இதற்கு மேலே எங்களால என்ன செய்ய முடியும், ஊருக்குப் போறப்போ நீங்க விரும்பி உங்க மனைவியும் அக்சப்ட் பண்ணினா நீங்க
அவளை அழைச்சிட்டுப் போகலாம்’ என்றவள் ,’இந்த பாக்ல கோட்டல் பேப்பர்,பணம் கட்டிய றிசீது அப்புறம் ஐயாயிரம் சிங்கப்பூர் டொலர் எல்லாம் இருக்கு இந்தாங்க என்று பையை நீட்ட,இவரிட்டேய குடுங்கள் என்று சொல்ல யோகமலர் பையை வாங்கினாள்.’ஆமா இன்னொன்னு இன்னக்கே நீங்க இருக்கப் பொற வீட்ல உங்க பாக்சையும் திங்சையும் வைச்சிட்டு கோட்டலுக்கு தேவையானவற்றையே எடுத்திட்டுப் போங்க’ என்றாள் மூத்த அண்ணி.
„நாங்க உங்ககூட கோட்டலுக்கு வரலை, ஏன்னா நீங்க தனி ஆளா நிக்கிறீங்க..நாங்க நாலு பேரும் ஒன்னாகவும் நீங்க தனி ஆளா நிக்கிறதும் உங்களுக்கு சங்கடமா இருக்கும்.
இது உங்க வாழ்க்கை.நீங்களா முடிவெடுத்தது…’ என்று சின்னண்ணி சொல்லி முடிச்சதும், நாங்கள் நால்வரும் திரும்பவும் கோப்பிக் கடையை நோக்கிப் போக, யோகமலரின் இரண்டு அண்ணன்மாரும் எங்களை நோக்கி வர நாங்கள் எல்லாரும் சொப்பிங் சென்ரரை விட்டு அவர்கள் வந்த காரடிக்குப் போய்க் கொண்டிருந்தம்.
(தொடரும்)
![]()