கதைகள்

இதை எப்படி பார்ப்பது?…. ( சிறுகதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

மனித மனம் மரத்துக்கு மரம் தாவும் குரங்கு. இதைத்தான் “மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு” என்ற பாடல் அது திரைப்பட பாடலாக இருந்தாலும் அப்பாடல் ஒரு தத்துவத்தை உரைக்கத் தவறிடவில்லை. ஒரு தடவை இது சரியெனப்படும் மனதுக்கே அதுவே இன்னொருமுறை தப்பெனப்படும்.

சரியாக தோன்றும் ஒன்றை தப்பாக எண்ணுவதற்கு மனசாட்சியும் தனக்கு தீமை வரும் என்றாலும் மற்றவர்களுக்கு தீங்கிழைக்க வேண்டாம் என்ற பண்பட்ட பரந்ந நோக்கும் காரணமாக இருக்கலாம். ஒரு இனம் அது மெழுகுவத்தி போல தான் அழிந்து கொண்டிருப்பது தெரிந்தும் மற்றவர்களை அழிக்க முற்படவில்லை என்ற பண்புடன் வாழ்ந்தது என்று வரலாறு பேசாமலா போய்விடும்?

கற்பனைக் கதையாயிருந்தாலும் தன்னை நாடி வந்த புறாவுக்காக தன் சதையையே அறுத்து கழுகுக்கு ஈன்ற கதையை எல்லாம் கேட்டு வளர்ந்த பின்னும் இயல்புக்கு மாறாக ஒரு இனத்தால் எவ்வாறு மாறமுடியும்? இவ்வாறு மனம் என்ற குரங்கு பலவற்றை நினைக்க காரை ஸ்பிரிங்வேல் கல்லறை நுழைவு வாயில் வழியாக செலுத்தினான் ரகுவரன்.

நண்பர் ஒருவர் உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளச்சென்றவன்
குறிப்பிட்ட இறதிச்சடங்கு நடத்துமிடத்தை அடைந்ததும் இந்த இடம்தானா என்று உறதிசெய்தபடி உடன் பயணித்த நண்பன் திலகனிடம் கேட்டுக்கொண்டே கார்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் காரை நிறுத்த நண்பர்கள் இருவரும் காரிலிருந்து
இறங்கினர். கட்டடத்தின் முன்பக்கம் வைத்திருந்த பதிவேட்டில் இருவரும் பெயரைப் பதிவு செய்தபின் கட்டடத்துக்குள் நுழைந்தார்கள.

அமைதியான சூழலில் அக்கட்டிடத்தில் அலங்கரிக்கப்பட் ட சவப்பெட்டியில் அவர்களது நண்பனின் உறவினர்
வெங்கட்ராஜின் உடல் பார்வைக்கு
வைக்கப்பட்டிருந்தது. வரிசையில் நின்று எல்லோரும் இறுதி அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர். அந்த அமைதியையும் தாண்டி “சின்னஞ் சிறுகிளியே கண்ணம்மா
செல்லக் களஞ்சியமே” என்ற திரை இசைப்பாடல் மெல்லியதாய்  ஒலித்துக்
கொண்டுருந்தது.

இறதி அஞ்சலியை செலுத்தி விட்டு இருக்கையில் வந்து அமர்ந்ததும் திலகன் மெதுவாக ரகுவரனிடம்,

“ரகு, வெங்கட்ராஜ் தாய்மொழி தெலுங்கல்லவா? இப்படிப்பட்ட இடத்தில் தமிழ்ப்பாடல் அதுவும் திரைப்படப்பாடலை ஒலிக்க விட்டுருக்கிறார்களே?” என்று கிசுகிசுத்தான்.

“அவரின் தாய்மொழி தெலுங்குதான். கர்நாடகாவில் இரண்டு தலைமுறையாக வாழ்கிறார்கள். அவர் உறவுகள் எல்லோரும்
பல நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டில்தான் வசித்து வருகிறார்கள்.”

“அப்படியா? இங்கு திரை இசைப்பாடலை ஒலிக்க விடலாமா?”

“அதுதான் அவரின் தமிழ்ப்பற்று. தமிழ்த் திரைப்படம் என்றால் அவருக்கு உயிர். அதிலும் பாரதி மற்றும் பாரதிதாசனின் திரைப்படத்தில் வந்த பாடல்கள் என்றால் அவருக்கு மிக மிக பிடிக்கும். சிங்கப்பூர் அதிபரின் இறதிச் சடங்கில் “தமிழுக்கும் அமுதென்றுபேர்” என்ற பாடலை ஒலிக்க விடவில்லையா? அவராவது தமிழர் ஆனால் இவர் தெலுங்கராய் இருந்தும் இவரின்
இறுதிச் சடங்கில் தமிழ்ப் பாடல் ஒலிக்கிறது” என்றான்.

அவர்கள் மெதுவாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே அப்பாடல் நின்று “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?” என்ற பாரதிதாசன் பாடல் ஒலித்தது.

இப்படியாக இறந்துபோன வெங்கட்ராஜ் பற்றி பேச்சு தொடர ரகுவரன் இன்னும் சிலவற்றயும் சொன்னான். உனக்கு நன்றாகத் தெரியும் அவரது மகன் ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணைத்தான் திருமணம் செய்துள்ளான். இங்கும் தெலுங்கு பேசும் மக்கள் நிறைய இருக்கின்றனர். அவர்கள் நினைத்திருந்தால் அவர்கள் மொழிபேசும் இனத்திலேயே திருமணம் செய்திருக்கலாமே என்று சொன்னான். அதற்காக என்னைப்பார்த்து நீ தெலுங்கனா என்று கேட்காதே நான் பச்சைத் தமிழன்தான் என்றான்.

பார்வை நேரம் முடிய எல்லோரும் இருக்கையில் அமர்ந்தார்கள். இறதிச்சடங்கு நடைபெற்று சவப்பெட்டியை தள்ளிச் செல்லும் வண்டியில் வைத்தனர். பின் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் வெளியே நின்றிருந்த அதற்கான வாகனத்தை நோக்கி மெதுவாக தள்ளிச்சென்றனர். அதைத் தொடர்ந்து
அக்கட்டிடத்தில் இருந்து எல்லோரும் வெளியேறினர்.

வீட்டுக்கு ரகுவரனும் திலகனும் காரில் திரும்பிக் கொண்டிருக்கும்போது மீண்டும் பேச்சு தொடர ரகுவரன் திலகனிடம்,

“இப்போது சொல் இதுபோன்று பல தலைமுறைகளாக தமிழருடன் ரத்தமும் சதையுமாக இரண்டற கலந்து விட்டவர்களை நான் வேறு நீ வேறு என்று அறுத்து எறியமுடியுமா?”
“……………”
“இன்னும் சொல்கிறேன் கேள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் என்று சொல்பவர்களெல்லாம் தமிழினத்துடன் கலந்து விட்டார்களா? அது போகட்டும் மார்வாடி சேட்டுக்களும் குஜராத் பணியாக்களும் தமிழரோடு தமிழராக ஐக்கியமாகிவிட்டார்களா?”

இவ்வாறு ரகுவரன் சொல்லச் சொல்ல இதில் இவ்வளவு விசயம் இருக்கிறதா? என்று யோசிக்க ஆரம்பித்தான். இவ்வளவு நியாயம் பேசும் நாம் இன்னொரு நாட்டில் வந்து குடியேறி உயர்ந்த பதவிகளிலும் மேலான வாழ்க்கையையும் வாழ்ந்து கொண்டிருக்க இம்மண்ணின் மைந்தர்கள் சாலைகள் போட்டுக் கொண்டும் வீடுகள் கட்டிக் கொண்டும் குழாய்களைப் பழுதுபார்க்கும் தொழில்களை எல்லாம் பண்ணவில்லையா? ஆனால் அவர்கள் நாட்டை ஆளவிடுகிறார்களா?

அவர்கள் விழிப்புடன் இல்லாவிட்டால் வேற்றின மக்கள் ஆளவந்து விடுவார்கள் என்பது தெரிந்து அதற்கு தக்கதுபோல் நடந்து கொள்கிறார்கள். வேற்றுமொழியினரை நம்மை சூறையாட விட்டுவிட்டு இப்போது குத்துதே குடையுதே என்றால் அது யார் தவறு? என்றெல்லாம் யோசித்த திலகன் ரகுவரனிடம் நீ சொல்வதிலும் உண்மை இருக்கிறது. நம்மவர்கள் சரியில்லாததால்தான்
மற்றவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று கூறினான்.

அப்போது பழைய பாடல் விரும்பியான ரகுவரனின் வாகனத்திலிருந்து “யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே, அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலே, பேதம் புரியலே” என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *