கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!…. 32 … ஏலையா க.முருகதாசன்.

வேலை செய்த களைப்பும், யோகமலர் குங்கமப்பூ போட்டுக் காய்ச்சிக் கொண்டு வந்த பாலைக் குடிச்சதாலும் அது நித்திரையைக் கொண்டுவர பஸ்ஸில் நித்திரையாகிவிட்டன்.

ஆழ்ந்த நித்திரையாக இல்லாவிட்டாலும்,பஸ் போற சத்தம் கேட்டுக் கொண்டிருந்தாலும் சுகமான நித்திரையாகவிருந்தது.

நான் இரவு முழுக்க யோசிச்சு யோசிச்சே நித்திரை இல்லாமல் இருந்துவிடுவன் என நினைச்சு என்னை நித்திரை கொள்ள வைப்பதற்காகவே பாலில் குங்குமப்பூ போட்டு கொண்டு வந்து குடுத்திருக்கிறாள் என்று மனம் அந்த நித்திரையிலும் சொல்லியது.

என்னைவிட அதிகளவு தூரம் போய்த்தான் அவள் தனது வீட்டை அடைய வேணும்.அவளும் அரைநித்திரை கொண்டுதான் போவாளோ என்று அந்த அரைத்தூக்கத்திலும் நினைச்சுக் கொண்டன்.

குங்கமப்பூ போட்ட பாலின் வாசம் முலைப்பாலின் வாசத்திலிருந்தது.நான் சிறுவனாக இருந்த போது கண்ணுக்குள் ஏதாவது கட்டி வந்தாலோ இல்லாட்டில் தூசி ஏதாவது விழுந்து கஸ்டப்படுத்தினாலோ அம்மா அயலட்:டையில் முலைப்பால் வாங்கி கண்ணுக்கு விடுவார்.

அந்த முலைப்பாலின் வாசமும் யோகமலர் குங்கமப்பூ போட்டுத் தந்த பாலின் வாசமும் ஒரே மாதிரியிருந்தன.

பிள்ளைத்தாச்சிப் பொம்பிளையளுக்கும், குழந்தை பிறந்ததுக்குப் பிறகும் பாலில் குங்குமப்பூ போட்டுக் கொடுப்பதை ஞாபகப்படுத்திக் கொணடன்.

ஊரிலையிருந்த போது இதை அறிஞ்சிருந்தாலும்,குங்குமப்பூ போட்ட பாலை நான் குடிக்கவில்லை: அதற்கு சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை.ஆனால் மனைவி குடிச்சிருக்கிறார்.

பாலிலை தேன் விட்டுக் குடிச்சிருக்கிறன், சில நாட்களில் பேரீச்சம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சூடான பாலில் தேனையும் அதில் கலந்து குடிச்சிருக்கிறன்.

அரைநித்திரையில் பல ஞாபகங்கள் வந்து போயின.’பொஸ் எங்கடை இடம் வந்திட்டுது இறங்குங்கோ „ என்ற சூரியகுமாரின் குரலைக் கேட்டு விழிச்சு இறங்கின நான் நித்திரை மயக்கத்திலேயே அவனுடன் நடந்து கொண்டிருந்தன்.

நாளைக்கு யோகமலர் சொன்ன இடத்திற்குப் போவதற்காக எனது உடுப்புக்களை நேற்றே அடுக்கி வைச்சிட்டன்.மற்றவை நித்திரையாலை எழும்ப முந்தி வீட்டைவிட்டுப் போக வேணும் என்ற யோசனையுடன் சூரியகுமாருடன் நடந்து கொண்டிருந்த நான்’ சூரியகுமார் நான் நாளைக்கு விடியப்புறத்தோட சாய்ச்சி என்எம்பி பக்ரறி தந்த வீட்டுக்குப் போவதற்காக போய்விடுவன்.

நீங்களும் வேறை வேறை பக்ரறிக்குப் போய்விடுவியள்.விடிய உங்களின்ரை நித்திரையை குழப்பிச் சொல்லக்கூடாது இப்பவே சொல்றன்,உங்களை பிறகு எப்படிச் சந்திக்கிறது என்று தெரியேலை பார்ப்பம்.பரமேஸ்வரனிடமும் குமரேஸ்டாஸிடமும் கதைச்சு அறிந்து கொள்ளலாம், நான் காலமை நேரத்தோடயே வெளிக்கிட்டிடுவன் எல்லாருக்கும் சொல்லிவிடுங்கள்’ என்று வீட்டுக்குப் போகும் போது சூரியகுமாரிடம் சொன்ன நான் அதற்குப் பிறகு எதுவும் கதைக்கவில்லை.

நித்திரை மயக்கம் இருந்ததால் கட்டிலில் விழுந்தவுடனேயே நித்திரையாகிவிட்டன்.அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்த நான் நேரங் கிடக்குதானே நித்திரை கொள்ளாமல் கொஞ்ச நேரம் படுப்பம் என்று நினைத்து நான் படுக்க விரும்பவில்லை.

ஏனென்றால் நான் நித்திரையாகிவிட்டால் யோகமலர் குறிப்பிட்ட நேரத்தில் அவள் சொல்லிய இடத்தில் நிற்க முடியாமல் போய்விடுமே என்று பயந்ததால் உடனேயே எழுந்து குளிச்சு தேத்தண்ணி வைச்சு குடிச்சிட்டு நேரத்தைப் பார்த்தன் நாலேகாலகியிருந்தது.

வேகமாக உடுப்பைப் போட்டு கட்டியிருந்த சாரத்தையும் ஈரம் எடுத்ததால் கொஞ்சம் ஈரமாகிக் கிடந்த துவாயையும், மிகுதிச் சவர்க்காரம், பல்விளக்கும் பிறஸ்,பற்பசை, பாவித்த சேவ் செய்த பிளேட்,பிறஸ்,சேவிங் கிறீம் என எல்லாத்தையும் அள்ளி சூட்கேசுக்குள் போட்டன்.

அவற்றை நான் பாவித்தபடியால் ஒருவர் பாவித்ததை வேறொருவர் பாவிப்பது சுகாதாரத்திற்குக் கேடு என்பதால் அவற்றை விட்டுவிடாமல் கொண்டு போவதே நல்லது என்பது மட்டுமல்ல,அவற்றைக் குப்பையில்

போடவும் மனம் வரவில்லை.இன்னும் பாவிக்கக்கூடிய நிலையிலிருக்கும் அவற்றைக் குப்பையில் போட்டால் புதுசாக வாங்க வேண்டிவரும் நானிருக்கும் சூழ்நிலையில் அது வீண் சிலவு.

என்னதான் யோகமலரை நான் தேடிப் போகிறேன் என்றாலும் ஊரிலை இருக்கிற மனைவி பிள்ளைகளே முக்கியத்திலும் முக்கியம் என்பதை மனச்சாட்சி ஓயாமல் சொல்லிக் கொண்டே இருந்தது.

நான் மாதா மாதம் அனுப்பும் காசிலேயே அவர்கள் நிறைவாக வாழ வேண்டும்.அதனால் ஒவ்வொரு சதத்தையும் சேமிக்க வேண்டும் சிக்கனப்படுத்த வேண்டும்.அதனால்தான் பாவித்த அத்தனை பொருட்களையும் சூட்கேசிற்குள் அள்ளிப் போட்டன்.

நான் வைச்சிருந்த சூட்கேஸ் சிறீலங்காவிலிருந்து கொண்டு வந்த சூட்கேஸ். நீள்சதுரத்தில் சூட்கேசின் மூடி உட்பட எட்டு மூலைகளும் மண்ணிற நிறத்தில் முக்கோண வடிவில் பாதுகாப்பாக ஆணியால் தறையப்பட்ட, வெள்ளை நிறத்தில் மண்ணிற பூக்கள் போட்ட சூட்கேஸ் அது.

இந்தச் சூட்கேஸைத்தான் நாங்கள் ஜேர்மனிக்கு வந்த போதும் கொண்டு வந்திருந்தம்.

சூட்கேஸை மூடி எடுத்துக் கொண்ட நான், ஆழ்ந்த நித்திரையிலிருந்த எனதறை நண்பர்களை ஒருமுறை பார்த்தன்.

மெதுவாக அடுத்த அறைக் கதவைத் தள்ளித் திறந்து பார்க்கையில் சூரியகுமார் மெதுவான குரலில் „குட்பை பொஸ்’ என்று சொல்ல பதிலுக்கு எதுவுமே சொல்லாமல் கையை மட்டும் காட்டிவிட்டு சூட்கேசுடன் வீட்டை விட்டு வெளிக் கதவை சத்தம் போடாமல் மெதுவாகச் சாத்திவிட்டு வந்தன்.

அந்த மாடி வெளி நடை பாதையில் ஒரிருவர் லிப்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தனர்.

பொம்பிளைப் பிள்ளைகள் இருந்த முன் பில்டிங்கைப் பார்த்தன், இனி இவர்களைச் சந்திக்க முடியுமோ தெரியாது என நினைச்சுக் கொண்டன்.

லுpப்டில் ஏறி இறங்கும் தரையடிக்கு வந்ததும் லிப்டை விட்டு வெளியே வந்தவுடன், எனது கண்கள் கடிதங்கள் வந்து சேரும் கடிதப் பெட்டிகளைப் பார்த்தன.ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும்

வெள்ளிக்கிழமைகளிலும் மனைவியின் கடிதம் வந்திருக்கின்றதா என்ற ஆவலோடு திறந்து பார்ப்பதை நினைச்சுக் கொண்டன்.

நான் அனுப்பிய லேஞ்சியும் பிலிம் றோலும் கிடைச்சன என்றும் சுகம் விசாரிப்புகளுடன் பிள்கைள் அப்பா எப்ப வருவார் என்ற பாசமும் கலந்த கடிதங்களை தனக்குள் வாங்கி எனக்குத் தந்த அந்த எமது வீட்டு இலக்கத்தை குறித்திருக்கும் பெட்டியருகில் நின்று சில விநாடிகள் அதைப் பார்த்தன்.

நானிருந்த வீட்டுக் கட்டிடத்தை விட்டு வீதிக்குப் போகும் நடைபாதையில் நின்று நிதானித்து அந்த வீட்டுக் கட்டித்தைப் நிமிர்ந்து பார்த்தன்.நானிருந்த ஒன்பதாவது மாடியைப் பார்த்தன்,எனது நண்பர்களில் யாராவது எழும்பி என்னைப் பற்றிக் கதைச்சுக் கொண்டிருப்பார்களோ என்று நினைச்ச நான்;,என் நண்பர்களில் யாராவது யன்னலுக்கூடாகப் பார்க்கிறார்களா என்றும் பார்த்தன்.

அப்பொழுது அங்கிருந்து ஒரு கை என்னைப் பார்த்து அசைத்தது.கண்ணுக்கு மேல்தான் அந்த உருவம் தெரிஞ்சது. அது இராஜரட்ணமாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைச்சன்.இராஜரட்ணம் கட்டையானவர் அவராகத்தான் இருக்கும் என நினைச்சபடி கையைக் காட்டிவிட்டு இன்னொரு பயணத்தை ஆரம்பிச்சன்

பஸ் எடுத்து யோகமலர் சொன்ன இடத்துக்கு போன போது நேரம் காலை ஏழரை மணி.அந்த பஸ்தரிப்பு நிலையத்திற்குப் பக்கத்தில் மூன்றடுக்கு மாடிகள் கொண்ட ஒரு சொப்பிங் சென்ரர் இருந்தது.

உள்ளே போய் தேத்தண்ணியோ கோப்பியோ குடிக்கலாமா என்று யோசித்த போது நான் அங்கிருக்கையில் சிலவேளை யோகமலரும் அவளுடைய அண்ணன்மாரும் அண்ணிமாரும் வந்து என்னைக் காணவில்லையென்று தேடினால் யோகமலர் பதைபதைத்துப் போவாளே என்று நினைச்ச நான் சொப்பிங் சென்ரருக்குள் போகாமல் ஏதாவது பேக்கறி திறந்திருக்கிறதா என்று பார்த்தன், எனது அதிர்ஸ்டம் ஒரு பேக்கறி திறந்திருந்தது.அது பக்கத்திலேயே இருந்தது.

சூட்கேசுடன் அந்தக் கடையடிக்குப் போனன். அது மலாய்க்காரர் நடத்துகிற கடை என்பதைப் புரிந்து கொண்டு „ஒரு கோப்பி „என்றன்.அவர் „ஸ்ரோங் ஓர் லைட் „என்றார்.’ஸ்ரோங் „ என்றன்.

நான் கேட்ட கோப்பியை ஒரு பொலித்தீன் பைக்குள் விட்டு அதற்குள் உறிஞ்சிக் குடிக்கும் ஸ்ரோவையும் வைச்சு தர அதை வாங்கிக் கொண்டு சொப்பிங் சென்ரருக்கு முன்னாலிருந்த வட்டவடிவமான உயரமானதும்

குட்டையானதுமான இருக்கைகளில் எனது உயரத்திற்கு ஏற்ற இருக்கைகளில் ஒன்றைத் தேர்வு செய்து சுற்றுமுற்றும் வேடிக்கை பார்த்தபடியும் சொப்பிங் சென்ரர் வாசலைப் பார்த்தபடியும் கோப்பியைக் குடிச்சுக் கொண்டிருந்தன்.

கிட்டத்தட்ட முழுக் கோப்பியையும் குடிச்சு முடிச்சுக் கொண்டிருக்கும் போது „புருசனாரே வந்து ரொம்ப நேரமாச்சுதா’ என்ற குரல் கேட்டு பின்னால் திரும்பிப் பார்த்தன் யோகமலர் நின்றிருந்தாள், எனது தோளில் கைவைத்தபடி.

அவளைப் பார்த்த எனக்கு அதிர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.பச்சையும் மஞ்சளும் கலந்த கலரில் சீலையும் மஞ்சள் கலரில் யூ கழுத்தும் முழங்கைக்கு கொஞ்சம் வரையும் நீண்ட கை பிளவுசும் போட்டிருந்தாள்.

இடுப்புத் தெரியாத மாதிரியும் முதுகு தெரியாத மாதிரியும் கழுத்தோடு பிளவுசும் போட்டிருந்தது மட்டமல்ல தலைமயிரைக் போனிரைல் போல் கட்டி நீள மயிருக்கு மஞ்சள் போல்ஸ் வைச்ச அதற்கென்ற றப்பர் பாண்டும் இடைக்கிடை கட்டியிருந்தாள்.

உச்சியிலும் நடு நெற்றியிலும் குங்குமம் வைச்சிருந்த அவளை எழுந்து வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க’என்னங்க கண் வெட்டாமல் உங்க பெண்டாட்டியைப் பார்க்கிறீங்க’ என்ற யோகமலரிடம்’ கிட்டத்தட்ட இதைப் போலத்தான் சாரி,மஞ்சள் கலரில் முழங்கைக்கு கீழ் பிளவுஸ்,யூ கழுத்து, முதுகு தெரியாது கழுத்தொடு உள்ள பிளவுஸ், இடுப்பை மறைத்த நீளமான பிளவுஸ்,தலைமயிரை போனிரைலாகக் கட்டி நீளமான தலைமயிருக்கு இடைக்கிடை போல்ஸ் போட்டு இறுக்கி „ஒரு நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள ராணித் தியேட்டருக்கு மனைவி என்னுடன் படம் பார்க்க வந்ததைச் சொன்னதும் „அப்படியா உண்மையாகவா நான் இப்ப டிரஸ் பண்ணின மாதிரியா அக்கா டிரஸ் பண்ணியிருந்தவா’ என்று பூரித்தவள் „பார்த்தீங்களா அக்கா இல்லாத இடத்தில உங்கள ஆறதல்படுத்ததான் என்னைக் கடவுள் உங்களுக்கு காட்டியிருக்கிறாருங்க’ என்று சொல்லி கலங்கியவளிடம்’ எங்கை உங்களுடைய அண்ணாக்களும் அண்ணிமாரும் „என்று கேட்க „அவங்க காரைப் பார்க் பண்ணிட்டு வருவாங்க நீங்க இங்க உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும் என்ன இறக்கிவிட்டிட்டுப் போனாங்க’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் கையைக் காட்டியபடி வந்து கொண்டிருந்தார்கள்….

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *