தனித்துப்போன முதிர் வெண் பறவை பறந்து போனது. மரணம்கூட ஒரு வகையில் ஒரு வரம்தான்!…. சி. மௌனகுரு.

கரிசல் மண்ணையும் அம்மக்களின் வாழ்வையும் அவர்தம் பேச்சுமொழியையும் நமக்கு அறிமுகம் செய்தவர் கிரா ஆவர்.
முதன் முதலில் எழுத்துலகில் கி ராஜ நாராயணன் என்று அழைக்கப்பட்ட கி,.ரா வை 1998 இல் பாண்டிச்சேரியில் குண்சேகரன் வீட்டில் ஓர் நாள் சந்திக்கிறேன்.
முதன் முதல் பாண்டிச்சேரி சென்ற எனக்கு அறிமுகம் செய்ய நண்பர் குணசேகரன் தன் வீட்டிற்குப் பல நாடகக் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் பல்கலைக்கழகம் சார்ந்தோரையும் அழைத்திருந்தார்
பேரா, பஞ்சாங்கம்,
வெளி ரங்கராஜன்,
பிரேம்,
நாடகக் கலைஞர் ஆறுமுகம்
எனச் சிலர் ஞாபகம் வருகிறார்கள்.
அவர்களுள் கி.ராவும் ஒருவர்.
அப்போதுதான் கிராவை நான் முதன் முதலில் காண்கிறேன்
வெள்ளை வேட்டி
வெள்ளை ஜிப்பா,
வெள்ளை முடி,
வெள்ளைப் பற்கள் தெரிய
பிரகாசமான் ஒரு வெள்ளை மனிதராக அவர் எனக்கு தரிசனம் தந்தார்
அவர் பேசப் பேச அவரது வெள்ளை உள்ளம் என்னைக் கொள்ளை கொண்டது
வாழ்வில் மறக்க முடியாத நல்லதோர் உரையாடல்
அவர் என்னிடம் இலங்கை பற்றியும் என் செயல் பாடுகள் பற்றியும் சில கேள்விகள் கேட்கிறார்
நான் அனைத்திற்கும் இலங்கைத் தமிழ் பாசையில்
ஓம் ஓம்
எனப்பதில் அளிக்கிறேன்
“ஓம்’ என்பது நாம் இங்கு இயல்பாக நாம் பாவிக்கும் சொல்
அன்றாடப் பேச்சு வழக்கு
ஆமா ஆமா என்ற இந்தியத் தமிழுக்குப் பழக்கமானவர் அவர்
ஓம் ஓம் என ஒலித்த அந்த ஓங்காரம் அவரைக் கவர்ந்து விட்டிருக்க வேண்டும்
இந்த ஓம் ஓம் எனும் ஒலியை அவதானித்த
அவதானிப்புத் திறனும் பேச்சுத் தமிழில் காவியம் செய்யும் மஹா நாவலசிரியருமான கிரா
“.ஓம்! ஒம்! ஓம்! எத்தனை ஓம்காரங்கள்”
என அந்த ஓமை ரசிக்கிறார்
இந்த ஓமைத் தன் மனைவியும் கேட்க அவாவுற்றார் போலும்
பாண்டிச்சேரியை விட்டுப்போகுமுன்னர் எங்கள் வீட்டுக்கும் ஒரு தடவை அவசியம் வாருங்கள்
என என்னை அழைக்கிறார்.
கரும்பு தின்னக் கூலி ஏன்?
சற்றுத் தொலைவிலிருந்த அவர் வீட்டுக்கு மறுநாள் நண்பர் குணசேகரனுடன் செல்கிறேன்
அவர் வீட்டில் அவர் அன்பு மனைவியாரைக் காணுகின்றேன்
அலங்கார உருவம்
அலங்காரமான புன்னகை
அலங்காரமான எளிமை
இவைதான் முதலில் என்னைக்கவர்ந்தன
அதுவும் ஓர் வெள்ளை மனமே என்பதை அவர் பேச்சு, செயல்கள் காட்டுகின்றன
வயது சென்ற அத்தம்பதிகளின் வாழ்வு எனக்குப் பல அர்த்தங்களை உணர்த்துகின்றது
.
வாழ்வை அனுபவித்து வாழ்ந்தனர்
இருவரும் குழந்தைகளாக
இரு முதிர் பறவைகளாக எனக்குக் காட்சி தருகின்றனர்
அதன் பின்னர் பாண்டிச்சேரி போகும் நேரமெல்லாம் இவ்விரு சோடி முதிர் பறவைகளையும் தரிசித்து வருதலும் வழக்கமாகிவிட் டது
ஒவ்வொரு சந்திப்பும் ஒவ்வொரு அனுபவம்
அம்மாவின் காப்பியில் ஒரு தனி ருசி தெரியும்
அனுபவஸ்தர் போடும் காப்பி அல்லவா அது.?
சுவையும் மணமும் மிகுந்த அக்காப்பியை அருந்தியபடி கி.ரா வுடனும் அம்மாவுடனும் உரையாடிய அந்த இனிய நாட்கள் ஞாபகம் வருகின்றன.
சோடிப் பறவைகள் எனக் கூறி மகிழ்ந்தேன்
அச் சோடிப்பறவைகளில் பெண் பறவை இந்த ஆண் பறவையை விட்டு சில காலத்துக்கு முன் பறந்து விட் ட து
பறந்தபோது போது அதற்கு வயது 95
அதனிலும் மூத்த கி,ரா. என்ற ஆண் பறவை இங்கு தனித்துப்போனது
கொடுமை கொடுமை முதுமையில் தனிமை
தனித்துப்போன அந்த முதிர் பறவை மேலும் 3 வருடங்கள் வாழ்ந்து பார்த்தது
வாழ முயன்றது
தனிமையிலும் முதுமையிலும் அந்த ஆண்முதிர்பறவை என்ன நினைத்திருக்கும்?
அந்த தனிமை வாழ்வை, நினைவுகளை அது எழுத்தில் பதிந்ததா என த் தெரியவில்லை
ஆனால் தனித்துப்போன அந்த முதிர் பறவையும் இன்று நம்மை விட்டுப் பறந்து போய் விட்டது
எப்படி நாம் இதனைப் பார்க்கலாம்?
தனித்துப் போன இந்த முதிர் பறவை
தன் தனிமையை வென்றது
தன் முதுமையையும் வென்றது
மரணம் கூட சில நேரங்களில் ஒரு வரம்தான்
சி. மௌனகுரு
![]()