சாமானியனின் சரடு!…..16 ….. ( கட்டுரை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

![]()
இரண்டு வாரங்கள் சென்றன. காலையில் பள்ளி சென்றுகொண்டிருந்தேன். எதிரே கடிதம் வரவில்லை என்று சொன்ன அத்தை வந்து கொண்டிருந்தார்கள். எனக்கு என்ன சொல்வார்களோ என்று திக்திக் என்று இருந்தது. குற்றம் உள்ள நெஞ்சு குறகுறுக்கத்தானே செய்யும். அந்த சமயத்தில் ஒன்றை கற்றுக் கொண்டேன். தெரியாமலே ஒரு தவறைச் செய்திருந்தாலும் மனது உறுத்தும் என்பதே. அப்போதிருந்து என் செயல்களில் தவறு செய்யாமல் பார்த்துக் கொண்டேன். ஆனால் பெரிய பெரிய மாபாதகங்களைச் செய்துவிட்டு ஒன்றுமே நடவாதமாதிரி நடமாடுபவர்கள் தம்மை ஒழுக்கசீலர்களாக
காட்டிக் கொள்வதெப்படி?
இவ்வாறெல்லாம் எண்ணங்கள் ஆட்டிப்படைக்க காரணமாக இருந்தவர்
வடக்குத் தெருவில் ராசுப்பிள்ளை என்பவர்.
அவரை கீழத்தெருவிலுள்ள திடியூராள் என்ற பெண்ணை வைத்திருக்கிறார் என்று
பேசிக்கொண்டார்கள். அதென்ன திடியூராள் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? நம்ம ஊர் பெயரைச்சொல்லி ஆளை அழைக்கும் பழக்கம்தான். சொக்கம்பட்டியான், கொக்கிரகுளத்தாள் என்பது மாதிரி. இந்த அம்மையார் திடியூரைச் சேர்ந்ததால் அப்படிப் பெயர்.
கிராமங்களில் ஒழுக்கம் என்பது ரெம்பவும் முக்கியம். ஊரில் என்ன நடந்தாலும் நாலுபேர் கூடி நின்று பேச ஆரம்பித்து விடுவார்கள். அருகில் சிறுவர்கள் இருக்கிறார்களே நாம் பேசும் ஊர்வம்பில் ஒழுக்கக் குறைவானவற்றை பேசும்போது
தேவையற்றவற்றை புரிந்து கொள்ள மாட்டார்களா? அநாகரிகமாக மற்றவர் விவகாரத்தில் தலையிடுகிறோமே, இது தப்பில்லையா? என்று நினைப்பதெல்லாம் கிடையாது. எதையும் ஒழிவு மறைவின்றி பேசுவது அவர்கள் பண்பாகும். இதை நான் என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். அப்படி நான் கேள்விப்பட்டதற்கு விளக்கத்தையும் நான் என்பாட்டியிடம் கேட்டிருக்கிறேன்.
அப்படி கேள்விப்பட்ட வார்த்தைதான் வைப்பாட்டி. பாட்டியிடம் கேட்டதற்கு எதை எதையோ சொல்லி சமாளிக்கப் பார்த்தார்கள். ஆனால் நான் பாட்டியை
விடுவதாக இல்லை. கடைசியாக என்பாட்டியிடமிருந்து விடை கிடைத்தது. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இவன்தான் ஒரு விவரம் கெட்டவன் என்றால் இவனது பாட்டியும் கூறுகெட்வள்தான் போலிருக்கிறது என்று எண்ணி விடாதீர்கள். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருளைக் கேளுங்கள். லட்சுமிப்பட்டி சீதாப்பாட்டி போல வைப்பாட்டியும் ஒரு பாட்டி என்று சொல்லி என் வாயடைக்கப் பார்த்தார்கள்.
அவர்களது பதிலில் எனக்கு உடன்பாடு இல்லாததால் தான் பாட்டியை விடாமல் நச்சரிக்கத் தொடங்கினேன். அவர்களையே திருப்பிக் கேட்டேன். அவங்க ஒன்னும் பாட்டி மாதிரி இல்லையே அத்தை மாதிரி அல்லவா இருக்காங்க. நீங்கசொல்ற மாதிரியே வைத்துக் கொண்டாலும் வைப்பத்தை என்றுதான் சொல்லவேண்டும். எப்படி வைப்பாட்டி என்று கூறபுடியும் என்று கேட்டு பாட்டியை நான் விடவில்லை. அதற்காக உண்மையான காரணத்தைச் சொல்லவா முடியும்? நான் விடாமல்
ஏன் அப்படி பெயர் வைத்திருக்கிறார்கள் என்று கேட்பேன்.
எனவே கொஞ்சம் திணறிய பாட்டி பாட்டியின் முகத்தில் ஒரு தீர்மானமான முடிவெடுத்து விட்டதின் சாயல் தெரிந்தது.
அதற்கெல்லாம் சரியான பதில் எனக்குத் தெரியாது. எனக்கு தெரிந்த ஒரே பதில் முன்பே சொன்னபதில்தான் இன்னும் சந்தேகமாய் இருந்தால் பள்ளிக்கூடத்தில் உன் ஆசிரியரிடம் கேட்டுக்கொள். அல்லது கொஞ்சம் வருசத்துக்கு பொருமையா இரு உனக்கு அந்த வயது வரும்போது தானாகத் தெரியும் என்று சொல்லி தப்பித்தார்கள்.
ராசுப்பிள்ளை நடத்தை சரியில்லை என்று சொல்வார்கள். ஆனால் ராசுப்பிள்ளை திருநீரணிந்து பக்திப்பழமாக இருப்பார். இவரைப் போய் இப்படி எல்லாம் நினைக்கிறார்களே அதைப்பற்றி இவர் ஒன்றும் நினப்பதில்லயா என்று நினைத்துக் கொள்வேன். அவர் செய்வது தவறு என்று எண்ணாமல் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் இருக்கத்தானே செய்கிறார். ஒரு கடிதத்தை ஒருமாதமாக தபாலில் சேர்க்காமல் விட்டதை எண்ணி இவ்வளவு பதை பதைக்கிறதே மனம் என்று நினைத்துக் கொண்டிருக்கையிலே அந்த அத்தை அருகில் வந்துவிட்டார்கள்.
நான் வாய்திறந்து எதையாவது சொல்லி சமாளிக்குமுன்னே “ஐயா, மருமகனே ஊருல இருந்து கடுதாசி வந்துட்டுது” என்று சொல்லி மகிழ்ச்சியில் முன்னால் மேல்பல் ஒன்றின் ஓட்டையையும் மறந்து சம்பந்தமில்லாமல் சிரித்தார்கள். என்ன கடிதம் வந்து விட்டதா என்று கேட்டு தூக்கிவாரிப் போட்ட அதிர்ச்சியை அடக்கிக்கொண்டு “அப்படியா அத்தை அதுதான் உங்களிடம் சொன்னேன் இன்னும் ஒருமாதம் பார்க்கலாம்னு” என்று சொல்லி சமாளித்து அனுப்பினேன்.
எப்படியும் ஞாயிற்றுக் கிழமை அக்கடிதத்தை படித்துக்காட்டும்படி சொல்ல வருவார்கள். அப்படி படித்துக் காட்டும்போதுதான் அது எப்போது எழுதிய கடிதம் என்பது தெரியவரும். ஏனென்றால் கடைசியாக எழுதிய கடிதம் தபாலில் சேர்க்கப்படாமல் இன்னும் புத்தகப் பையிலேயே இருப்பதால் எனக்கு குழம்பமாக இருந்தது. எதிர்பார்த்தபடியே அந்த அத்தை தன் மகளையும் அழைத்துக்கொண்டு கடிதத்தைப் படித்துக் காட்டும்படி கேட்டு வந்தார்கள். படித்ததும் ஒரு விபரம் தெரிந்து என் குழப்பமும் அந்த அத்தையின் குழப்பமும் தீர்ந்தநு.
அக்கடிதம் நான் புத்தகப்பையில் அனுப்பாமல் வைத்திருந்த கடிதத்திற்கு முன் எழுதிய கடிதத்திற்கு வந்த பதில். அப்போதுதான் நான் செய்த தவறுக்கும் அவ்வளவு பாதிப்பில்லை என்பதை உணர்ந்தேன். உடனே சந்தர்பப்பத்தை பயன்படுத்தி அத்தைக்கு சமாதானம் சொன்னேன். பார்த்தீர்களா, போன கடித்த்துக்கு முன் எழுதிய கடிதத்துக்கே இப்போதுதான் பதில் வந்திருக்கிறது. ஆகையால் சமீபத்தில் போட்ட கடிதத்துக்கும் பதில் தாமதமாக வரும் என்று சமாளித்தேன்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()