கட்டுரைகள்

கண்ணால் காணாத குமரிக்கண்ட தமிழரையே மறக்காத தமிழரால் கண்முன்னே வாழ்கின்ற இலங்கைத் தமிழரை மறக்க முடியுமா?

எந்த நாடும் எமது நாடே எவ்வினத்தவரும் எம் சொந்தங்களே என்ற பரந்த மனங்கொண்ட வாழ்ந்த பண்டைத் தமிழர் எங்கே? மாறாக எங்கள் ஊர் எங்கள் மக்கள் என்ற குறுகிய எண்ணத்தோடு மாறிவிட்ட இன்றைய தமிழர் எங்கே? மகாவம்சத்தை முன்னிறுத்தி இலங்கை வரலாற்றில் தமிழர் வரலாற்று முதன்மையை இருட்டடிப்பு செய்வது ஒருபுறம் நடந்தேறி விட்டது. இன்னொரு புறம் கீழடி அகழ்வாராய்வு தமிழினத் தொன்மைக்கு சான்றாக நின்றும் அந்த அகழ்வாராய்வை முடக்கி விட்டார்கள்.

ஏன் என்று கேட்டு போராடியும் பயனற்ற நிலையில் தற்போது வட இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்வின் சான்றுகளைக் காட்டி அதை கீழடிக்கும் முற்பட்டது என்று நிறுவ முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்காக பதினொருபேர் கொண்ட குழு ஒன்று இந்திய வரலாற்றில் தமிழர் தொன்மையை மறைத்து இந்திய நாகரிகம் வேத நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டது என்று நிலைநாட்டவும் முயன்று வருகிறது. இதில் இந்தியா வெற்றிபெற்றால் இந்தியாவிலும் தமிழரின் தொன்மை அழித்தொழிக்கப் பட்டுவிடும்.

அதன்பின் வருங்காலங்களில் உலகின் மூத்தகுடி தமிழ்க்குடிதான்,தமிழ்மொழிதான் உலகில் மூத்தமொழி என்ற வரலாற்று உண்மை அழிந்து போகும். இதைப்பற்றி எல்லாம் கவலை சிறிதளவும் இன்றி நாம் எதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். முத்தையா முரளீதரன் வாழ்க்கை படமாகிறது. அதில் விஜய் சேதுபதி ஏன் நடிக்கக்கூடாது என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம். அப்படியே விஜய் சேதுபதி நடித்து முத்தையா முரளீதரன் வரலாறு திரைப்படமாக வந்து விட்டால் இழந்த காணிகளெல்லாம் திரும்பக் கிடைத்து விடுமா? போரில் காணாமல் போனவர்கள் எல்லாம் கிடைத்து விடுவார்களா? இல்லை தேவாரம் பாடத்தான் கோவிலில் அனுமதி கிடைத்திடுமா?

இப்படியாக மாறிவரும் சூழலிலும்
ஈழத்தமிழரின் இணைப்புப்பாலம் என்றில்லாமல் உலகத்தமிழரின் உறவுப்பாலம் என்ற உயர்கருத்தைத் தாங்கி கணியன் பூங்குன்றன் வழிநடக்கும் பண்பினைக் கொண்டவர்களும் பாரில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதைக்காணும்போது கங்கைவென்றான் கடாரம் கொண்டான் என்று இலங்கைவரை ஆண்ட சோழனை
தமிழனாக எண்ணி பெருமையடைய முடிகிறது.

தமிழ்நாட்டில் ஒருசாரார் எதற்கெடுத்தாலும் இலங்கைத் தமிழரை பயன்படுத்துவது போல் இலங்கைத் தமிழரிலும் ஒருசாரார்  இந்தியத் தமிழரை பயன்படுத்துவதே வாடிக்கையாகி விட்டது. இந்த இருசாரருக்கும் ஒருவரை
ஒருவர் குறைசொல்வதைத் தவிர ஒட்டுமொத்த தமிழினத்தையும் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகள் என்னவென்பதை எண்ணிப் பார்ப்பதில்லை.

2009ல் தமிழினத்துக்கு ஏற்பட்ட பெருந்துயரம் மறந்து போகக்கூடியது அல்ல. இதற்கு அன்று தமிழ்நாட்டை ஆண்டகட்சியையும் முதல்வரும் ஒரு காரணம் என்றாலும் ஒட்டுமொத்த காரணம்
என்று குறைகூறவதை உலக அரசியல் நகர்வுகளை உற்றுநோக்கிய எவரும் ஏற்கமாட்டார்கள். உலக நாடுகளும் குறிப்பாக வல்லரசுகளுடன் இந்தியாவும் இலங்கையும் இணைந்து போரை தோல்வியுறச் செய்ததை உலகம் அறியும்.

இந்திய மக்கள்தொகையில் வெறும் 5.9 சதவீதமே தமிழர் இருக்கிறார்கள். இந்தியாவில் இருபத்தியிரண்டு தேசிய இனங்கள் இருக்கின்றன. இதை ஒப்பிடும்போது இலங்கை மக்கள் தொகையில் 15 சதவீதம் தமிழர் இருக்கிறார்கள். அங்கு இருப்பதோ இரண்டு தேசிய இனம்தான். அப்படியிருக்க இலங்கைத் தமிழரால் செய்ய இயலாததை
இந்தியத் தமிழரால் எப்படி சாதிக்க முடியும்.
இருபத்தியொன்று தேசிய இனங்களையம் மீறி குறைந்த அளவு மக்கள் தொகையை வைத்துக் கொண்டு மத்திய அரசை எதிர்த்து தமிழ்நாட்டு அரசோ தமிழக முதல்வரோ என்ன சாதித்துவிட முடியும் என்பதை நியாயமாகவும் தேர்மையாகவும் எண்ணிப்பார்ப்பவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

தமிழினத்தை வலுவிழக்கவைக்க வேறுயாரும் தேவியில்லை. தமிழரே போதும். சீனமொழி பேசும் சீனர்களும் ஆங்கில மொழிபேசும் வெள்ளையரும் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அரசியல் வேறு இனம் வேறு என்றே பார்த்து மொழியால் இணைகிறார்கள். தமிழர் மட்டும் மொழி ஒன்றாயிருந்தாலும் நாட்டால் பிரிந்து நிற்பதிலேயே நாட்டம் காட்டுகிறார்கள்.
இதில் ஒட்டு மொத்தமாக எல்லோரையும் நான் குறிப்பிடவில்லை.

இனத்துள் வாழும் நாட்டின் அடிப்படையில்
பேதம் பாராட்டுவதில் என்ன லாபம். இலங்கையில் நம் இனத்தைச் சேர்ந்தவர்களே இனம் என்ற இடத்தில் தமிழ் என்று அடையாளப் படுத்தாமல் மதத்தை அடையாளப் படுத்துவதாகக் கேள்விப்பட்டேன். இது எவ்வளவு தூரத்துக்கு உண்மை என்று எனக்குத் தெரியாது. என்று உலகத் தமிழராக ஒன்றிணைந்து சாதிக்கப் போகிறோம். நான் பெரியவனா நீ பெரியவனா என்பதில் மலேசியாவில் ஆட்சிமொழி அதிகாரம் இல்லாமல் போனது. சிங்கப்பூரில் வட இந்தியர்களால் போகவிருந்த தமிழ் மொழியின் ஆட்சிமொழி அதிகாரம் சிங்கப்பூர் அரசின் நன்றியறிதலுடன் கூடிய பெருந்தன்மையால் காப்பாற்றப் பட்டது. இப்போது எஞ்சியிருக்கும் தமிழருக்குள்ளும் பேதம் பார்த்து எதைச் சாதித்திடப் போகிறோம். எருதுகள் போல் நம் ஒற்றுமையின்மையை காட்டி சிங்கம் அடித்துக் கொல்வதற்கு வேண்டுமானல் வழிவகுப்போம்.

ஆங்கிலேயரைத் தவிர ஆங்கிலேயர் ஆட்சி செய்த நாட்டிலெல்லாம் அவர்கள் மொழியுடன் ஆங்கிலம் கலந்து பேசவே செய்கிறார்கள். எனக்கு தெரிந்த எத்தனையோ இலங்கைத் தமிழர்களும் இந்தியத் தமிழர்களும் தமிழுடன் ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள். அது ஒன்றும் கொலைக்குற்றமாகத் தெரியவில்லை. உலகளாவிய வியாபார மொழி என்பதால் அதன் தாக்கம் இருக்கவே செய்யும். ஒருவர் தமிழில் என்ன சாதனை புரிந்துள்ளார் என்று பார்க்க வேண்டுமேயொழிய அவர் எத்தனை தடவை ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துகிறார் என்று பார்ப்பது கதைக்கு உதவாது.

ஒருவர்  புகழ் வெளிச்சத்தில் இருக்கும் போது அவர் என்ன செய்தாலும் விமர்சனத்துக்குள்ளாகும் என்பதை எல்லோரும் அறிவர். அதையே குப்பனும் சுப்பனும் கொலையே செய்தாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

தமிழ்நாட்டுத் தமிழரின் பிரச்சனையை அவ்வளவு எளிதாகச் சொல்லிவிடமுடியாது.
தமிழகம் களப்பிரர்கள், பல்லவர்கள், மராத்தியர்கள், நாயக்கமன்னர்கள், நவாப்கள் போன்றோரின் படையெடுப்புக்கு உள்ளாகியது. மராத்தியர்கள் மற்றும் நாயக்கர்காலத்தில் மராத்தியரும் தெலுங்கர்களும் வந்து குடியேறியதால் அவர்களுடன் பலநூற்றாண்டுகளுக்குமேல் சேர்ந்து வாழும் நிலை ஏற்பட்டது. இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு மேல் இங்கேயே பிறந்து வாழும் அவர்களுக்கு தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் தெரியாது. அவர்களை தெலுங்கர், கன்னடர், மராத்தியர் என்று பிரித்துப் பார்க்க முடியாது.

இன்று வெவ்வேறு நாடுகளில் குடியேறிய தமிழரின் வாரிசுகளை இன்னும் இருநூறு ஆண்டுகள் கழித்து இது உங்கள் நாடல்ல ஓடிப் போங்கள் என்றால் அவர்கள் எங்கு போவார்கள். அந்த வலியை உணரும்போதுதான் அது புரியும்.
அடுத்ததாக ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் சென்னை ராஜதானி என்றிருந்த போது தலைமையகமாக இருந்தது மெட்ராஸ் என்ற இன்றைய சென்னைதான். அப்போது சென்னையில் தென்னிந்திய மொழி பேசும் எல்லா மொழியினரும் இருந்ததால் பெரியாரை கன்னடர் கலைஞரை தெலுங்கர் எம்.ஜி. ஆரை மலையாளி என்றெல்லாம் தமிழ்நாட்டுத் தமிழர் பிரித்துப் பார்க்கவில்லை.

தமிழ் நாட்டில் சமூகநீதிக்கும் பெண் அடிமைத்தனத்துக்கும் பொருளாதார ஏற்ற தாழ்வுக்கும் சுயமரியாதைக்கும் பாடுபட்டவர் பெரியார். அதனால் தான் அவரது கடவுள் மறுப்புக் கொள்கையை எதிர்ப்பவர்கள் கூட அவரை பெரியார் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரே கூட எனது எல்லா கொள்கைகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை உங்கள் மனசாட்சிக்கு சரி என்று பட்டதை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதேபோல்தான் கலைஞரையும் அவர் தமிழுக்கு ஆற்றிய பணிக்காக அவரை தெலுங்கர் என்று பார்த்ததில்லை. ஒரு காலத்தில் உலகத்தமிழர் எல்லாம் கலைஞரை அவரது தமிழுக்காகவே பாராட்டியவர்கள் என்ற உண்மையையும் மறக்க முடியாது. இன்று அத்தகைய கலைஞரை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதையும் மறைக்க முடியாது. அதே சமயம் மேதகு பிரபாகரன் அவர்களை தமிழினத் தலைவராக ஏற்று
சீமான் போன்ற தலைவர்களும் தமிழ் நாட்டில் இருக்கவே செய்கிறார்கள்.

ஒரு மூட்டை அரிசியில் சில கற்களும் சில பதர்களும் இருக்கவே செய்யும். அதைவைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாக ஓரிருவர் செய்த தவறுக்காக எல்லோரையும் பூதக்கண்ணாடி கொண்டு பார்த்து குறை சொல்வது என்ன நியாயம்?  நெஞ்சில் கைவைத்து மனசாட்சியுடன் எண்ணிப் பார்த்தால் எல்லா இலங்கைத் தமிழரும் இந்தியத் தமிழரை வெறுப்பதில்லை. எல்லா இந்தியத் தமிழரும் இலங்கைத் தமிழரை வெறுப்பதில்லை. வெறுப்பு அரசியல் பின் செல்லும் சிலர்தான் கோடாரி கொண்டு பிளவினை ஏற்படுத்த எத்தனிக்கிறார்கள்.

ஒருகாலத்தில் லால்பகதூர் சாஸ்திரி மற்றும் ஶ்ரீமாவே ஒப்பந்தத்தால் இலட்சக் கணக்கானவர்கள் குடியுரிமை இழந்து தாயகம் வந்து அழிவின் விளிம்புக்கு சென்று
அழிந்தும் போனார்கள். பர்மாவிலிருந்தும் எண்ணற்றோர் உரிமைகளையும் உடைமைகளையும் இழந்த தமிழர் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்த வரலாறும் உண்டு. அதை வைத்து அரசியல் பண்ணியும் இருக்கிறார்கள்.

ஆதலால் அரசியல்வாதிகள் திரைப்படத் துறையினர் பின் சென்று மாசு கற்பிப்பதில் மாண்பொன்றும் காணமுடியாது. ஆனால் ஒன்றுமட்டும் எனக்கு புரியவே மாட்டேன் என்கிறது. நாம் என்னதான் திரைப்படத்தையும் திரைப்படப் பாடல்களயும் அரசியல்வாதிகளையும் ஊடகங்களையும் தமிழில் ஆங்கிலத்தைக் கலந்து பேசுவதையும் ஒருபுறம் கண்டித்தாலும் வெறுப்பை உமிழ்ந்தாலும்
மறுபுறம் இவற்றிலெல்லாம் மூழ்கி
முத்தெடுத்து அட்டவணை தயாரித்து வெளியிட்டு ஆர்ப்பரிக்கின்றோமே அது எதனால்? இதை ஊருக்குத்தான் உபதேசம்
என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா
என்று வடிவேல் பாணியில் எடுத்துக் கொள்வதா?

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button