எனது பாரவையில் திரை இசைப்பாடல்…..15…. “வாழ நினைத்தால்”…..

சிலசமயம் நம்வாழ்வு இருண்டு போயிருக்கும். அந்த இருளிலிருந்து
முதலில் மீளவேண்டடும். ஒரு சராசரி வாழ்வையாவது கவலையின்றி வாழவேண்டும். அதன்பின் உல்லாசமான வாழ்க்கைக்காக உழைத்து முன்னேற வேண்டும். இதை படிப்படியாக வாழ்வில் காணும்போது மனதில் தோன்றும் உற்சாகமும் ஆனந்தமும் அந்த இருளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருபவர்களுக்கு மட்டும்தான்
தெரியும். இளவயதில் செல்வச்செழிப்பில் வளர்ந்தவர்களுக்கு அது தெரியாது. அந்த வகையில் வாழ்க்கையில் பலவற்றையும் அனுபவிக்க என்னை அச்சூழலில்
விட்டுச்சென்ற என் தந்தைக்குத்தான் நன்றி
சொல்லவேண்டும். பொன்னும் பொருளையும் சேர்த்து வைத்திருந்தால் என் ஊரில் இப்போது இருக்கும் என் பணக்கார நண்பர்கள் மாதிரிதான் நானும் இருந்திருப்பேன்.
அந்த இருண்ட சூழலில் நமக்கு ஆறுதல் கிடைக்கும்படி உற்சாகப்படுத்துபவரோ
அல்லது சூழ்நிலையோ இருந்தால் நமக்கு ஒளிமயமான எதிர்காலம் தெரியும். சிலசமயங்களில் சோதனைமேல் சோதனையாக அடிமேல் அடிவிழும். அதற்கெல்லாம் தளர்ந்து விடக்கூடாது. நான் பள்ளிப்படிப்பை முடித்ததும் கோவை விவசாயக் கல்லூரியில் நான் விரும்பிய
படிப்பை படிக்க உதவித்தொகை கிடைத்தும் படிக்க முடியாமல் குடும்ப நிலை தடுத்தது. தபால் தந்தி துறையில் நான் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் எழுத்தர் வேலை கிடைக்கும்
வாய்ப்பிருந்தும் அரசு வேலைக்கான
பதினெட்டு வயது முடியவில்லை. கடைசியில் ஆபீஸ் பையன் வேலை கிடைத்த தினமலர் அலுவலகமும் அருகில் இல்லை. பேருந்தில் அவ்வேலைக்கு சென்றுவரலாம் என்றால் அதற்குத் தகுந்த சம்பளம் இல்லை.
இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க ஆசைப்படலாமா? முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா? இருக்கும் பழமொழிகளெல்லாம் எனக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் போல் தெரிந்தது.
பழமொழிகளின் அறிவுறுத்தலுக்கேற்ப
பதினொரு கிலோமீட்டர் போக பதினொரு கிலோமீட்டர் வர என தினமும் இருபத்து
இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து எனது முதல் வேலையை முழுமனதோடு ஏற்றேன். நடந்து செல்லும்போது கால் வலித்தாலும் பேட்டை கடைத்தெரு வழியாகவும் திருநெல்வேலி நகர் வழியாகவும் நடந்து செல்லும்போது என்னை உற்சாகப்படுத்தி நம்பிக்கையை ஊட்டும் நிகழ்வுகளும் நிகழ்ந்ததுண்டு.
அது என்னவென்றால் அவ்வழியே நடந்து செல்லும்போது வாரத்தில் இரண்டு மூன்று தடவையாவது அந்த திரைப்படப் பாடல் என் காதில் விழுவதுண்டு. அப்பாடல் பலே பாண்டியா என்ற படத்தில் கண்ணதாசன் எழுதி விஸ்வநாதன் ராம்மூர்த்தி இசையில்
டி. எம். சௌந்தர்ராஜனும் பி. சுசீலாவும் இணைந்து பாடிய “வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்” என்ற பாடல்தான். தமிழரை திரைப்படத்துக்கு அடிமைகள் என்றும் திரைப்படத்தையும் திரைப்படப் பாடல்களையும் வெறுக்கும் அறிவாளிகளான தமிழர்களும் உண்டு. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால்
திரைப்படப் பாடல்கள் ஏதாவதொரு மூலையில் இருந்து காதில் விழுந்து கொண்டே இருக்கும். நகரத்தில் வாழ்ந்தாலும் திரைப்படங்களையும் திரை இசைப்பாடல்களையும் (திரைப்படங்களில் இடம் பெற்றிருந்தால்) விரும்பும் மனிதர்கள் உலகம்முழுக்க எல்லா மொழிபேசும் மனிதர்களிலும் இருப்பார்கள் என எண்ணுகிறேன்.
“வாழ நினைத்தால்” என்ற இப்பாடல் வாழ்வதற்கு பூமியில் எத்தனையோ வழி உள்ளது என்று இப்பாடலை கேட்பவர்களுக்கு அவர்கள் விரக்தியில் இருந்தாலும் நம்பிக்கையை ஊட்டுகிறது. ஆழமான கடல்கூட சோலையாக மாறும் வாழவேண்டும் என்று ஆசை இருந்தால் நீந்தி வா என்று சொல்வதால் அந்த நம்பிக்கை உறுதியாகிறது.
பாரக்கத் தெரிந்தால் பாதை தெரியும் என்பதன் மூலம் வாழ என்ன வழி
இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிராமல் முயற்சித்தால் வழி கிடைக்கும் என்ற கருத்தினைக் கூறுகிறது.
பார்த்து நடந்தால் பயணம் தொடரும் என்பதும் சரியான வழியைப் பின்பற்றினால் தடையேதுமின்றி வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதையும் அறிவுறுத்துகிறது. பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் என்பதன் மூலம் முன்னேறிய வாழ்வில் பலனான பயன் கிடைக்கும் என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.
அப்படியான பயன் கிடைக்கும்போது அதுவரை அதற்காக பட்ட துன்பம் என்ற கவலை தீர்ந்துவிடும். எப்போது நாம் உழைத்த உழைப்புக்கும் எடுத்த முயற்சிக்கும் பலனான பயனை நாம் அடைகின்றோமோ அப்பொழுதே அதைப்பெறுவதற்கான துன்பமான கவலைகள் எல்லாம் மறையத் தொடங்குகிறது. கவலை மறையும்போது மகிழ்ச்சியடன் வாழலாம் என்பதை இப்பாடல் நமக்கு உரைக்கிறது. முயற்சி திருவினையாக்கும் என்ற தத்துவத்தை எவ்வளவு அழகாக கண்ணதாசன் எளிமைப் படுத்தி உணரவைத்திருக்கிறார் என்பதை எண்ணும்போது உண்மை விளங்குகிறது.
இப்பாடலை நான் கேட்கும்போதெல்லாம் என் வாழ்க்கையை நான் பின்னோக்கி பார்க்கிறேன். நான் வாழ்க்கையில் கடந்து வந்த கரடுமுரடான பாதைகள் என்கண் முன்னே விரிய அதைக் கடந்துவர எவ்வளவு சிரமங்களை எல்லாம் மேற்கொண்டேன் எனபதையும் எண்ணிப் பார்க்கிறேன். வாழ்க்கையில் உறுதியுடன் முயன்றால் எத்தனைமுறை விழுந்தாலும் போராட்டத்தில் வெற்றி காணலாம் என்பதை உறதிப்படுத்துவதால் எனக்கு இப்பாடல் மிகவும் பிடித்த பாடலாகும்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()