அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் நினைவுகள்!… அங்கம் – 04…. சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன்

அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் நினைவுகள் –
சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன்
( தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகம்)
தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தில் இணைந்திருந்த சட்டத்தரணி கந்தசாமி, லண்டனை விட்டு வெளியேறுவதில் உறுதியாகவிருந்தார். கந்தசாமியை நான் நன்கு அறிவேன். அவருடைய பிடிவாதத்தையும் எதனையும் தாமதிக்காது உடனுக்குடன் நடத்தவேண்டும் என்ற அவரது மனவுறுதியையும் கலைப்பது சுலபமல்ல.![]()
எங்களை நம்பி, இரங்கி வெளிநாட்டு நிதியங்கள் தருகிற பணத்திற்கு ஒழுங்காக கணக்கறிக்கை கொடுத்து அவை மக்களுக்கு பிரயோசனப்படுகிறதா என்று மேற்பார்வை பார்ப்பதா…? அல்லது அதனை விசிறி எறிந்துவிட்டு, கணக்கு காண்பிப்பதா…? என்று எனது வாயை அடைத்தார்.
அத்துடன் மற்றவர்கள் வருகிறார்களோ இல்லையோ, தான் நாடு திரும்பவேண்டுமென்பதில் உறுதியாக நின்றார். நாங்கள் வெளிநாடுகளில் இருந்தாலும், தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் இயக்கம் நடந்துகொண்டிருந்தாலும், தொடர்ந்து நீடித்த யுத்தத்தாலும் நிதிப்பற்றாக்குறைகளும், சேவையாளர்கள் எதிர்நோக்கிய சவால்களும் சாமானியமானதல்ல.
நாட்டில் இயங்கியவர்களிடையே ஏற்பட்ட அபிப்பிராய பேதங்கள், சில உட்பூசல்கள், அவற்றைப்பாவித்து உள்ளே புகுந்து விளையாடிய இயக்கங்கள் என அன்று பல பிரச்சினைகள் இருந்தன.
இதனிடையில், கழகத்தின் தலைவராக இருந்த விஸ்வலிங்கம் காலமானார். அந்த வெற்றிடத்திற்கு சிலரது பெயர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டாலும், பேராசிரியர் கா. சிவத்தம்பி அதனை ஏற்றுக்கொண்டார். அவருக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடத்திலும் நல்ல அறிமுகம் இருந்தது. அத்துடன் இயக்கங்களின் முக்கியஸ்தர்களுடனும் அவர் நல்லெண்ணத்தை சம்பாதித்திருந்தவர்.![]()
கந்தசாமி அங்கு திரும்பிய நாட்களிலும் இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட காலப்பகுதியிலும் தமிழர் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் சில முஸ்தீபுகளும் இயக்கங்களின் ஈடுபாட்டாலும் ஏற்பட்டன. புனர்வாழ்வு
தகவல் நிலையம் ( Rehabilitation Information Centre ) யாழ்ப்பாணம் புனர்வாழ்வு கூட்டமைப்பு (Jaffna Rehabilitation Consortium ) வட – கிழக்கு மாகாண ஆலோசனைக் குழு ( North – East Province Consultation Committee – NEPCO ) முதலான பெயர்கள் பேசுபொருளாகின. இவற்றை கூட்டாக இணைத்து அரசசார்பற்ற நிதியங்களின் கூட்டுறவு அமைப்பு (Co – Ordinating Committee for NGO) ஒன்றை உருவாக்குவதற்கு மட்டக்களப்பு ஆயர் அருட்தந்தை கிங்ஸ்லி சுவாம்பிள்ளை முயற்சி எடுத்தார்.
அவருடன் நடந்த பேச்சுவார்த்தைகளின் பெறுபேறாக கந்தசாமி, அகதிகளின் புனர்வாழ்வுக்காக, அதனுடன் கூட்டாக சேர்ந்து இயங்கக்கூடிய நிதியங்களுக்கு அவர்களின் கருத்துக்களைக்கோரி ஒரு மகஜர் அனுப்பினார். இது ஏதோ ஒரு வழியில் ஈரோஸ் (EROS ) இயக்கத்தினரின் கையைச் சென்றடைந்தது. அந்த இயக்கம் தாங்கள் தொடங்கிய திருகோணமலை மாவட்ட வளர்ச்சி நிறுவனம் ( Trincomalee District Development Foundation – TDDF ) மற்ற மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படுவதால், வேறு புனர்வாழ்வு உத்திகள் தற்சமயத்திற்கு தேவையற்றவை, வேண்டுமானால், குறிப்பிட்ட TDDF உடன் இணைந்து செயற்படவேண்டும் இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படுமென்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
எந்த நிதியத்தின் பணமும் மக்களுக்காகவே தரப்படுபவை. அவை இயக்கங்களின் அனுமதியுடனேயே செலவழிக்கப்படவேண்டும், அன்றேல் விளைவுகளைச் சந்திக்கநேரிடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த அச்சுறுத்தல்கள் நேசவுணர்வுள்ள செயற்பாடுகளாக கந்தசாமிக்குத் தோன்றவில்லை.
அதைத்தொடர்ந்து சில பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும், கந்தசாமி 1988 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி கடத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து காணாமலாக்கப்பட்டார்.
வெளி நிதிநிறுவனங்களின் பணம், புனர்வாழ்வுக்கழகத்தின் நன்மதிப்பின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பின்னணியில் உழைத்த கந்தசாமி அருட்தந்தை ஜேம்ஸ் முதலானோரின் தனிப்பட்ட குணாதிசயங்களினாலும் நம்பிக்கையிலும் கொடுப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கந்தசாமியின் மறைவைத்தொடர்ந்து, இந்த உதவிகள் யாவும் மீளப்பெறப்பட்டன. அருட்தந்தை ஜேம்ஸ் நாடு திரும்ப விரும்பியிருந்தாலும் அந்தத் திட்டங்களை ஏற்பதில் புனர்வாழ்வின் திசை தெரியா போக்கும் அவரது பணியை கேள்விக்குரியாக்கியது.
அவரும் மற்றவர்களும் சிரமப்பட்டு தேடிய உதவிகள் யாவும் விழலுக்கிரைத்த நீராகியதைக்கண்டு வேதனையுற்றார்.
சிறிது காலம் தனது இலங்கைப்பயணத்தை ஒத்திவைத்துவிட்டு, 1990 இல் அங்கு திரும்பினார். அவரது திருப்பம், நாட்டின் நிலைமைகளின் காரணத்தினால், யாழ். மறைமாவட்டத்திற்குள்ளேயே அவர் இறைபணியாற்ற நேர்ந்தது.
![]()
மறை மாவட்டத்தின் HUDEC என்ற உதவிக்கரத்தின் மேற்பார்வையாளராக பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றத்தில் அக்கறை செலுத்தினார்.
முதலில் கிளிநொச்சி மாவட்ட பங்கு குருவாக பொறுப்பெடுத்து, அங்கு முக்கியமாக “ ஆரோபணம் “ ஆசிரமத்தை வழிநடத்தி, அதனை விஸ்தரித்தார். அவரின் ஏற்பாட்டில், லண்டனிலிருந்து புலம்பெயர் தமிழர், போரினால் பாதிக்கப்பட்ட பெற்றோரை இழந்து தவித்த சிறார்களின் பராமரிப்புக்காக ஆரோபணத்தை நிறுவினார்கள்.
இலங்கையில் தமிழ் இளைஞர்களை உள்ளடக்கிய அமைப்பொன்றை நிர்வகிப்பது அன்றைய போர்ச்சூழலில் அபாயகரமானது. இயக்கங்களின் கெடுபிடிகள், ஆட்சேர்ப்புக்கு அழைத்துச்சென்றவர்களை விடுவித்தல், ஆயுதப்படைகளின் மிரட்டல்கள், மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புதல் முதலான பலதரப்பட்ட சிக்கல்களையும் அவர் சமாளிக்க நேர்ந்தது.
அருட்தந்தை ஜேம்ஸின் பூதவுடல் யாழ்நகருக்கு எடுத்துச்செல்லப்பட்டபோது, செல்லும் வழியில் சில நிமிடங்கள் ஆரோபனத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அந்த நிமிடங்களில், ஆரோபணத்திலிருந்து பராமரிக்கப்பட்டு படித்து வெளியேறிய இளைஞர்களின் உணர்ச்சிமிக்க அஞ்சலி அங்கிருந்த எல்லோரையும் மனமுருகச்செய்து, மனிதநேயம் என்பது எவ்வளவுதூரம் பாயும் என்பதையும் பறைசாற்றியது.
கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவுக்குச் சென்று அவர் பணியாற்றியதுடன், மக்களோடு மக்களாக வாழ்ந்து மறைப்பணிகளையும் நிறைவேற்ற உழைத்தார். தனது குடும்ப உறவுகளிடமிருந்தும் வெளிநாடுகளில் வாழ்ந்த கருணை உள்ளம்கொண்டவர்களிடமிருந்தும் ஆதரவுகளைப்பெற்றே அங்கு வாழ்ந்த ஏழை மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கினார்.
மக்கள் அவரை மறை விசுவாசியாகப் பார்க்கவில்லை. மறையின் உதாரணமாகவே அன்பை சொல்லவல்ல, அன்பை பரிபூரணமாக தந்து உணர்ந்தவராகவே பார்த்தனர். முல்லைத்தீவு பொறுப்புகள், அவரை
அவ்விடத்தில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து , புலிகளுடன் இணைந்து இயங்கவேண்டிய தேவையையும் ஏற்படுத்தியது.
அவர்களின் மேல்மட்ட தலைவர்களுடன் சேர்ந்து, மக்களின் பொதுவாழ்விற்கான பணிகளில் ஈடுபட்டார். அதே சமயம் அவர்களின் செற்பாடுகள் சிலவற்றையும் இடித்துரைத்தார். தலைவரின் மதிப்பும் நேசமும் அவர்மீது வளர்ந்தன. 2004 இறுதியில் சுநாமி கடற்கோள் அநர்த்தத்தின் பின்னர் இடம்பெற்ற புனர்வாழ்வுப் பணிகளின்போது அந்த மதிப்பும் நேசமும் பன்மடங்காக உயர்ந்தது.
ஆயினும் , அவர் கவனித்த உட்பூசல்கள், தனிப்பட்ட கோபங்கள், குரோதங்கள் விடுதலையை வேட்கையை எவ்வளவு தூரம் பாதிக்கிறது…? என்று விசனித்தார்.
சர்வதேசத்திற்கு மக்களின் நிலையை எடுத்துரைப்பதிலேயே கவனம் செலுத்தினார். யுத்தம் மக்களை கிரமம் கிரமமாக குடிபெயரவைத்து நிர்க்கதியாக்கிற்று.
வன்னிமாவட்டத்திற்கு குடிபெயர்ந்த 350, 000 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பழைய மாத்தளன், பொக்கனி, முள்ளிவாய்க்கால் முதலான சிறிய பிரதேசங்களுக்குள் வழியின்றி அடைந்து கிடந்தார்கள். அவை பாதுகாப்பு வலயம் என்று பிரகடனப்படுத்தப்பட்டதால் நம்பிக்கையின்பேரில் மக்கள் இதற்குள் அடைந்தார்கள்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமுமே, நிராதரவாக இவர்களோடு முடங்கியது. போரில் கொல்லப்பட்டவர்களை புதைப்பதற்கும் பிரத்தியேக இடங்களில்லாது, அவர்கள் மரணித்த அந்தந்த இடங்களிலேயே புதைத்தார்கள். அவ்வாறு இறந்தவர் எம்மதத்தைச்சேர்ந்தவராக இருந்தாலும், சககுருவானவர்களுடன் சேர்ந்து இரவு பகல் பாராது ஆராதனை நடத்தி இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு முன்னின்று உழைத்தார்.
உணவுப்பற்றாக்குறை, யுத்தத்தின் உக்கிரம், மருந்துகளின் தட்டுப்பாடு எல்லாமே மக்களை வெறிகொள்ளவைத்தன. தப்பியோடுவதற்கு எவ்வளவோ முயற்சித்தனர். அவ்வாறு தப்பியோட எத்தனித்தவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டது. அதனைப்பார்த்து பொறுக்கமாட்டாத, அருட்தந்தை ஜேம்ஸ், சககுருமார்களும் புலிகளின் தளபதிகளிடத்தில், மக்களை பாதுகாப்பதற்கு வழி இனி இருப்பதாகத் தெரியவில்லை, எனவே அவர்களை வெளியேற்றிவிட்டு, தொடர்ந்தும் யுத்தத்தை மேற்கொள்ள விரும்பினால் யுத்தத்தை நடத்துமாறும் ஆலோசனை சொன்னார்கள்.
ஆனால், பொறுப்பிலிருந்தவர்கள் அந்த யோசனைகளை செவிமடுக்கவில்லை. மாறாக, அவரது பொறுப்பிலிருந்த சில
இளைஞர்களை முள்ளிவாய்க்காலுக்கு அனுப்பவேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்கள். அந்தக்கூற்று மறுக்கப்படவே, அவரும் குறிவைக்கப்பட்டார்.
அது இயக்கத்தின் மேல்மட்டத்தால் எடுக்கப்பட்ட முடிவல்ல. எவரும் எதுவும் செய்வதறியாது தடுமாறிக்கொண்டிருந்த சூழலில், தடி எடுத்தவர் எல்லாம் தண்டல்காரர்களாகும் நிலைதான் உருவாகியிருந்தது.
2009 ஆம் ஆண்டு ஏப்ரில் 22 ஆம் திகதி, அதிகாலை வலைஞர்மடத்திலிருந்த தேவாலய குருமடத்தில் அருட்தந்தை ஜேம்ஸ் இருந்தவேளையில் ஷெல் தாக்குதலுக்கு ஆளாகி காயமடைந்து உடனடியாக புல்மோட்டை ஆஸ்பத்திரிக்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டார்.
அந்த ஆஸ்பத்திரியிலிருந்து சிகிச்சை பெற்ற அவர் வவுனியாவுக்கு திரும்பியபோது யுத்தம் முடிவுற்றிருந்தது. அதுவரையில் அவரோடு இருந்த மக்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். உடனடியாகவே தாமதிக்காமல், அந்த பாதிக்கப்பட்ட மக்களின் மனச்சுமைகளை தணிப்பதில் அவர் இறங்கினார்.
அவர்களுக்கு மாற்றுடைகளும் துணிமணிகளும் உலர் உணவும் சேகரித்துக் கொடுப்பதிலும் புலிகள் இயக்கத்திலிருந்தவர்கள் என்ற சந்தேகத்தில் தடுப்பிலிருந்தவர்களையும் சந்தித்து, அவர்களுக்கும் வாராந்தம் உடைகள், உணவு, சவற்காரம், பற்பசை, முதலான அத்தியாவசிய தேவைகளை பெற்றுக்கொடுப்பதிலும் மதவழிபாட்டுக்கும் ஏற்பாடு செய்துகொடுத்தார்.
2010 இல் அவர் மாங்குளத்திற்கு வந்தபோது, மனிதநேயப்பணி பன்மடங்காகியது. போரினால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து, வானம்பார்த்து நின்ற மக்கள், அவர்களோடு இன்னும் நிர்க்கதியாக நின்ற மக்கள் என்று பலர் அபயக்கரம் நீட்டினார்கள். மக்கள் கூடுவதற்கும் தஞ்சம் புகுந்து படுத்துறங்கவும் இடிந்து கிடந்த மாங்குளத்திலிருந்த சென். அக்னஸ், வவுனிக்குளத்திலிருந்த வேளாங்கன்னி தேவமாத கோவில்களை திருத்துவித்தார்.
![]()
அதேபோன்று மறை மாவட்டத்தின் நிதியுதவியோடு, பணிக்கன்குளம், வடகாடு குழந்தை யேசு கிராமம் அம்பாள்புரம், போன்ற கிராமங்களில் சிறு சிறு தேவாலயங்களை நிறுவி, மரங்களுக்கு கீழே குடியிருந்த மக்களை ஆதரித்தார்.
அநாதைகளான பெண்பிள்ளைகளை பராமரிக்க குட்ஷெப்பர்ட் பிள்ளைகள் நிலையத்தை (Good Shepherd Children Home) தொடங்கினார். பெற்றோரை இழந்த நிலையிலிருந்த குழந்தைகள்
நீதிமன்றங்களின் பொறுப்பிலிருந்து , இந்த நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால், அவர்களை பராமரிப்பதற்கு அவர் மீண்டும் குடும்பத்தவர்களையும் நண்பர்களையுமே நம்பினார். குடும்பமென்றால் என்ன நட்புகள் என்றால் என்ன, அவர்களின் தரப்பில் பெறப்பட்ட உதவிகளுக்கு உடனுக்குடன் பற்றுச்சீட்டுக்களையும் வரவு – செலவுக் கணக்குகளையும் வழங்கினார்.
அவர் சேவையாற்றிய கிராமங்களில் கத்தோலிக்க மக்கள் பெருந்தொகையாக இல்லை. ஏனைய மதத்தினரே கூடுதலாக இருந்தனர். அதனால், அவர் கிராமத்தில் சபைக்கூட்டங்களை மத ஆராதனையின் பின்னர் நடத்தி, அனைவரதும் முன்னிலையில் வரவு செலவு கணக்கு விபரங்களை சமர்ப்பிப்பார்.
அவ்வாறுதான், கிராமங்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை அனைவரதும் புரிந்துணர்விலும் அங்கீகரிப்பிலும் முன்னெடுத்து, அனைவரிடத்திலும் நம்பிக்கையை வளர்த்தார். இவ்வாறு அவர் மேற்கொண்ட பணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
அவருடைய 50 ஆம் ஆண்டு குருத்துவப்பட்ட நிறைவு விழாவை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டுமென்ற அவரது உடன்பிறப்புகளும், மறைமாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் விரும்பினர்.
எனினும் அக்காலங்களில், தான் தியானத்திற்கு போகவிருப்பதாகவும் விழாவுக்காக செலவிடப்படவுள்ள நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும்படியும் அவர் வேண்டினார்.
ஆனால், அவரது குடும்ப உறவுகளோ விடவில்லை. நச்சரித்துக்கொண்டே ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தனர்.
ஆனால், அவையெல்லாவற்றுக்கும் முன்னர் ஆண்டவர் அவரை நித்திய துயிலோடு மக்கள் எல்லோரையும் பரிதவிக்கவிட்டு அழைத்துச்சென்றார்.
அவரது மறைவிற்குப்பிறகு, முல்லைத்தீவில் அவருக்கு சிலை வைக்கவேண்டும் என்ற பிரேரணை எழுந்தது. அது எல்லாத்திசைகளிலும் ஆமோதிப்பை பெற்றது.
அது தொடர்பான உரையாடல்கள் வந்தபோது, அவருடன் நெருங்கிப்பழகிய சிலரிடம் தர்க்கமாகப் பேசிப்பார்த்தேன். ஏன் அவருக்குச் சிலை…? எங்களது உரிமைப்போராட்டத்தில், எத்தனையோ பாதிரிமார்கள் அடக்குமுறைக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்காகவும் உயிரைக்கொடுத்துள்ளார்களே..?!
அருட்தந்தை மேரி பஸ்தியானிலிருந்து, பலரதும் பெயர்களைச் சொன்னேன். எல்லோருமே, அவர்களது தியாகங்களை அன்புடன் மதித்தாலும், அருட்தந்தை ஜேம்ஸ்தான் மக்களின் இறுதிநேர அவலங்களை அவர்களோடு இருந்து, அவர்களது சுமைகளை சுமந்தவர். எங்களுக்குத்தான் அந்த சுமையின் வலி தெரியும். உங்களுக்குப் புரியாது என்றார்கள்.
சிலைகள் கடவுளுக்கு மாத்திரம் வைக்கப்படுவதல்ல.! கடவுளாகப் பார்க்கப்பட்டவர்களுக்கும் மக்கள் நெஞ்சுருகி வைப்பார்கள். கடவுளின் சிலைகள் , கடவுளாகப் பார்க்கப்படுவதற்கும், மனிதர்களில் புனிதர்கள் சிலைகளாகப் பார்க்கப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்றார்கள். இந்த நன்றியுணர்விலிருந்து மனிதனென்பவன் தெய்வமாகலாம் என்னும் பொன்னான வாசகத்தை புரிந்துகொள்ளமுடிகிறது.
அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள், தனது குருத்துவத்தில், அதிகாரங்களுக்காக அந்த மறைமாவட்டத்திலோ அல்லது, நாடாளவிய ரீதியிலோ முன்னேற முடியவில்லை. தன்னைத் தேடிவந்த அதிகார பதவிகளையும் அவர் நாடவில்லை. மாறாக மக்களின் துன்பங்களை சுமந்து, அவற்றில் பங்குபற்றுவதிலேயே அக்கறையாக இருந்தார்.
தமிழ் மறை மாவட்டங்களுக்கிடையே, அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பல குருவானவர்களையும் கன்னியாஸ்திரிகளையும் அந்தப்பணியில் இணைத்தார். அதன் பெறுபேறாக அவருடைய பூதவுடல், விதைக்கப்பட்ட சமாதியில் யாழ். மறைமாவட்ட பங்கைச் சார்ந்த அருட்தந்தை இம்மானுவேல் அடிகளார் ( தலைவர் – Global Tamil Forum ) சில குருவானவர்களுடன் இணைந்து, பின்வரும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டினை பதித்தார்.
“ கிறிஸ்துவின் பணியாளனாக நீர் மக்களை முக்கியமாக துன்பத்திலிருந்தவர்களை நேசித்தீர். உமது இறைபணியின் முழுக்காலத்தையும் அவர்களுடன் இருப்பதற்காகவுவும், அவர்களின் தேவைகளை பார்ப்பதற்காகவுமே ஈடுபடுத்தினீர். தேவன் உமக்கு நித்திய சந்தோஷத்தை தருவானாக. “
எனது இந்த தொடர் நினைவுப்பதிவில், அருட் தந்தை ஜேம்ஸ் அவர்கள் தனது முதல் திருப்பலியையும் பிரசங்கத்தையும் மானிப்பாயில் நடத்தியதாக முதலில் குறிப்பிட்டிருந்தேன். அது தவறு என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதுடன், அந்த நிகழ்வு மானிப்பாய் பங்கிலுள்ள மல்வம் தேவாலயத்திலேயே நடத்தினார் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.
அவரது பெற்றோர் மல்வத்துக்கு சமீபமாகவுள்ள பாடசாலைகளிலேயே ஆசிரியப்பணி மேற்கொண்டவர்கள். அக்காலப்பகுதியில்தான் அவருடைய கர்ப்பிணித் தாயார் பணிக்கு பயணித்த ரிக்ஷா வண்டி குடைசாய்ந்து தெய்வாதீனமாக உயிர்பிழைத்து, அதனால் தனது குழந்தையை அவர் இறைபணிக்கு நேர்ந்துவிட்ட சம்பவமும் நடந்த அதே மல்வம் பிரதேசத்திலேயே அந்த நேர்த்திக்கடனும் நிறைவேற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
இந்தத் தொடரின் இரண்டாம் அங்கத்தில் குறிப்பிடப்பட்ட நாவலர் சபை ஃபார்ம், பரந்தன் ராஜனின் பொறுப்பில் இயங்கியது என்பதையும் இந்தப்பதிவில் சுட்டிக்காண்பிக்க விரும்புகின்றேன்.
![]()
அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்கள் நினைவுகளாக என்றும் எம்முடனும், எந்த மக்களுக்காக அவர் வாழ்ந்தாரோ அம்மக்களின் நினைவுகளிலும் வாழ்ந்துகொண்டிருப்பார்.
அவருடைய நினைவாக அவர் பணியாற்றிய வன்னி பெருநிலப்பரப்பில் போரினாலும் வறுமைக்கோட்டினாலும் பாதிக்கப்பட்ட சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதற்கு ஏற்ற அறக்கட்டளை உருவாக்கப்படல் வேண்டும்.
அதுவே அன்னாரின் தன்னலம் கருதாத மக்கள்சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ஏற்ற சிறந்த ஆக்கபூர்வமான பணியாகும்.
( நிறைவு )
![]()