Featureகட்டுரைகள்

அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் நினைவுகள்!… அங்கம் – 02…. சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன்

மனிதனென்பவன் தெய்வமாகலாம் – அங்கம் – 02

அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் நினைவுகள்!

சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன்….   அவுஸ்திரேலியா.

( தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகம்)

தமிழ் அகதிகளை கல்லூரி வளாகத்தில் வைத்திருப்பதற்கான காலக்கெடு நெருங்கியிருந்த நிர்க்கதியான சூழலில்தான், நெடுங்கேணி, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு பகுதிகளில் ஐந்து ஐந்து – ஐந்து ஏக்கர் காணிகளில் மக்கள் குடியேறாமல் தரிசு நிலங்களாகக் காணப்பட்டன. அந்தக் காணிகளில் எமது மலையக மக்களை குடியமர்த்தினோம்.

இவ்வேளையில் அம்மக்களின் புனர்வாழ்வுப்பணிகளில் தமிழ் இளைஞர் பேரவையைச்சேர்ந்த உமா மகேஸ்வரன், ஊர்மிளா, பரராஜசிங்கம், சந்ததியார், சாந்தன், பேபி முதலானோர் பக்கபலமாக நின்றனர்.

இதற்குச்சில வருடங்களுக்கு முன்னர் அந்தப்பகுதிகளில் பெரும்பான்மை இன மக்களிடத்தில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக சில தனிப்பட்ட நிறுவனங்களுக்கு வரிவிலக்கு சலுகைகளுடன் சுமார் ஐநூறு ஏக்கர் காணிகள் குத்தகை அடிப்படையில் அரசாங்கத்தில் வழங்கப்பட்டிருந்தன.

நெடுங்கேணி, ஒட்டுசுட்டான், முல்லத்தீவு முதலான பிரதேசங்களில் இப்படியிருந்த காணிகளின் முகாமையாளர்களிடம் இந்த மக்களைக் குடியேற்றும் திட்டத்திற்காக நாடினோம்.

அம்மக்களுக்கு நிரந்தரமாக நிலங்கள் கிடைக்கும் வரையில் அங்கு தங்கவைக்க அனுமதித்ததுடன், வாழ்வாதாரங்களை வழங்கவும் முன்வந்தன.

இந்த அடிப்படையில்தான் பின்னாளில் பிரபல்யம் பெற்ற கென்ற் ஃபார்ம், உமா மகேஸ்வரனின் பொறுப்பிலும் டொலர் ஃபார்ம் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மேற்பார்வையிலும், நாவலர் சபை ஃபார்ம், குட்டிமணி – தங்கத்துரை ஆகியோரின் பொறுப்பிலும் இயங்கின.

அந்த நாட்களில், அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கான ஈடுபாடுகளை கொண்டிருந்ததாலும் இவர்கள் பொது மக்களிடத்தில்

பரவலாக அறியப்படவில்லை. ஏன், எமக்கும் கூட அவர்களின் வேர்களோ, விழுதுகளோ தெரிந்திருக்கவில்லை.

இவ்வாறு குடியமர்த்தப்பட்ட மக்களின் தேவைகளை தமிழ் இளைஞர் பேரவையினர் கவனித்தனர். தமிழ்க்குடும்பங்களை பரவலாக குடியமர்த்தவேண்டும் என்ற நோக்கத்தில் இயங்கிய காந்தீயம் அமைப்பினைச்சேர்ந்த மருத்துவர் ராஜசுந்தரத்தின் நெறிகாட்டலின் கீழ் சில குடும்பங்கள், செட்டிகுளம், செவிடன் குளம், குஞ்சன் குளம், பாலமோட்டை முதலான பகுதிகளில் குடியேறுவதற்கு முன்வந்தன.

இவர்களின் காணிகளை அடையாளம் கண்டு உரிமைக்காரன் சம்மதத்தை பெற்றாலும், இவர்களின் அடிப்படைத்தேவைகளை நாளுக்கு நாள் கவனித்து ஆவனசெய்வதற்கு நம்பிக்கையானவர்களை தேடவேண்டிய நெருக்கடியும் தோன்றியது.

எனினும் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்திடம் போதியளவு நிதிவளம் இருந்தது.

இக்காலகட்டத்தில்தான் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் செட்டிகுளத்தின் பங்குத்தந்தையாக இறைபணியாற்றிக்கொண்டிருந்தார். நான் அவரை தொடர்புகொண்டு, பங்கின் பணிகளையும் முன்னெடுத்தவாறு, அப்பகுதியில் குடியமர்த்தப்பட்ட மக்களையும் பொறுப்பேற்க முடியுமா..? பராமரிக்க முடியுமா..? எனக்கேட்டேன்.

ஏனென்றால், எமது புனர்வாழ்வுக்கழகத்தினால் அனுப்பப்படும் நிதியை முறையாக அந்த பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழங்கவேண்டியிருந்தது, அதற்கு நம்பிக்கையான ஆளணியும் தேவைப்பட்டது. கணக்கு வழக்குகளை சீராக பராமரிக்கவும் வேண்டியிருந்தது.

அதனால்தான் அருள் தந்தை ஜேம்ஸ் அவர்களை தொடர்புகொண்டேன். அவர், யாழ். மறைமாவட்டத்தின் கட்டுப்பாடுகளுக்கு அமைய, மனிதாபிமான ரீதியில் அந்த மக்களுக்கு சேவையாற்ற முன்வந்தார்.

என்றும் மக்களுடனே வாழ்ந்து, அவர்கள் பணியே மகேசன் பணியென அன்புருவாக வாழ்ந்து, முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.

யாழ். மறைமாவட்டத்தின் அனுமதியைப் பெறுவதற்காக, அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் நானறிவேன். அவரிடம் இயல்பாகவே குடியிருந்த மனிதநேய உணர்வுதான், தான் சார்ந்திருந்த மதத்திற்கு அப்பாலும், பாதிக்கப்பட்ட எந்த இன, மத மக்களுக்கும் உதவவேண்டும் என்ற தூண்டுதலைத் தந்திருக்கவேண்டும். அவரது

அர்ப்பணிப்பான சேவையினால், காந்தீயத்தின் பணிகளை வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிரதேசங்களிலும் முன்னெடுக்க முடிந்தது.

1978 – 1979 ஆம் ஆண்டுகாலத்தில், தமிழ் இளைஞர் பேரவையினரும் இந்த குடியேற்றத்திட்டங்களுக்கு அனுசரணை வழங்கியதன் மூலம் வளர்ந்தனர். இந்த வளர்ச்சியை அன்றைய அதிகார வார்க்கமும் ஆயுதப்படைகளும் கண்காணிக்கத் தொடங்கின.

தமிழ் எல்லையோரக்கிராமங்களில், மலையகத் தமிழ் மக்களை, யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த தமிழ் இளைஞர்கள் அத்துமீறிக்குடியேற்றுகிறார்கள் என்ற எண்ணப்பாடு அரச மற்றும் ஆயுதப்படையினர் தரப்பில் எழத்தொடங்கியது.

அந்தக்குடியேற்றங்களுக்குத் தேவையான நிதிவளம் வெளிநாடுகளிலிருந்து பெறப்படுகிறது என்ற தகவலையும் அரச சார்பு ஊடகங்கள் வெளியிடத்தொடங்கின. அதில் ஓரளவு உண்மை இருந்தது என்பதற்கும் மாற்றுக்கருத்து இல்லை.

முன்னைய கல்லோயா சிங்கள குடியேற்றம் முதல், அதன்பின்னர் மகாவலி திசைதிருப்பத்தின் பேரில் நடந்த அரசின் குடியேற்றங்களை நாம் மறந்துவிட முடியாது.

அவ்வேளையில், திருகோணமலைப் பிரதேசத்தில் ஏராளமான காணிகள் கபலீகரம் செய்யப்பட்டன. 1965 – 1970 காலப்பகுதியில் குமரங்கடவை, பன்குளம் முதலான தமிழர் பிரதேசங்களிலும் தமிழர்களின் காணிகளில் பெரும்பான்மை இனத்தவர்கள் அரசினால் அத்துமீறிக் குடியேற்றப்பட்டதை மறந்துவிட முடியாது. அந்த அக்கிரமிப்பு டீ.எஸ். சேனாநாயக்கா முதல் ஜே. ஆர். ஜெயவர்த்தனா காலம் வரையில் தொடர்ந்தது.

இது தொடர்பாக அன்றைய தமிழ்த்தலைவர்கள், அன்றைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கு கண்டனக் கடிதங்களும், அத்துமீறல் குடியேற்றங்களை நிறுத்துமாறு அனுப்பிய அவசரத்தந்திகளும் ஏராளம். ஆனால், அவற்றை இன்றுவரையில் நிறுத்தமுடியவில்லை.

அத்துடன் நாடாளுமன்றில் குறிப்பிட்ட தமிழர்பிரதேச காணிகளின் தொன்மைகள் பற்றியெல்லாம் எடுத்துரைத்தார்கள். ஆனால், எந்தவித பலனும் கிட்டவில்லை.

1982 – 1983 காலப்பகுதியில், பதவியாவிலிருந்து நெடுங்கேணி , முல்லைத்தீவு வரையில் சில பௌத்த குருமார்கள், பயணித்து, அந்தப்பிரதேசங்களில் எங்கெங்கே பெரும்பான்மை இன மக்களை குடியேற்றலாம் என்று நோட்டமிட்டனர்.

இதனை அறிந்த கென்ற் பண்ணையில் இருந்த பேபி, தன்னுடன் மேலும் சில இளைஞர்களை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு, பதவியா பிரதேசத்திலிருந்தவர்களிடம் சென்று, “ யார் வந்தது…? .” எனக்கேட்டால், “ “தங்களது மாடுகள் வழிதவறி இந்தப்பக்கம் வந்துவிட்டன. தேடி வந்தோம் “ என்று ஏதாவது சாக்குப்போக்குத்தான் சொல்வார்கள். பேபியை எதிர்த்து நின்றவர்கள் இல்லை.

கென்ற், டொலர், மற்றும் நாவலர் பண்ணைகளில் அத்தகைய ஊடாட்டங்கள் நடைபெறவில்லை. ஆனால், இந்த பாதுகாப்பு வியூகங்கள் தற்போது தலைகீழாக மாறிவிட்டன. இப்போது மணலாறையும் மேற்குறிப்பிட்ட பண்ணைகளையும் இழந்து, அத்துமீறல் நீராவியடி பிள்ளையார் கோயில் வளாகம் வரையில் வந்துவிட்டது.

அதற்காக எமது தலைவர்கள் நாடாளுமன்றிலும் பேசினார்கள், நீதிமன்றம் வரை சென்றனர். எனினும் அந்த எதிர்ப்பு கோஷங்கள் யாவும் வெற்றுவேட்டாகிவிட்டன.

இன்று நீதியும் மறுக்கப்பட்டு, மண்ணும் மறுக்கப்பட்டு, வாழ்வாதாரமின்றி நிர்க்கதியாக நிற்கின்றோம்.

கொக்கிளாய், கொக்குத் தொடுவாய் முதலான பாரம்பரிய தமிழர் பிரதேசங்கள் அரச மட்ட ஊடுறுவலால் பறிபோய்க்கொண்டிருக்கிறது.

தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளிலும் ஊடகங்களில் அறிக்கை விடுவதிலுமே காலம் கரைந்துகொண்டிருக்கிறது. ஆனித்தரமான வழிமுறைகளை இதுவரையில் நாடவில்லை. இதுவரை போராடியது போதும், அடுத்த தேர்தல் வரையில் இந்த கோஷம் தாக்குப்பிடிக்கும் , வரவிருக்கும் அடுத்த தேர்தலில் எமது ஆதரவு அரசுக்கு தேவைப்படும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற இயலாமையில் உருண்டுகொண்டிருக்கிறோம்.

ஈழவிடுதலைப்போராட்டங்களின் வேர்களுக்குச்செல்லாமல், அருட் தந்தை ஜேம்ஸ் அவர்கள், தமிழர் குடியேற்றங்களில் காண்பித்த தன்னலம் கருதாத ஈடுபாட்டை பற்றி சொல்வதற்கு வருகின்றேன்.

அவர், செட்டிகுளம், வவுனியா அகதிகளின் நலன்கள் தேவைகளுக்காக அனைத்து மதத்தினருடனும் சிநேகபூர்வமாக உறவாடி அனைவரதும் நன்மதிப்பினையும் பெற்றிருந்தார்.

அவரது அந்த உன்னதமான நோக்கினால், கத்தோலிக்கத் திருச்சபையிடத்திலேயே, தேவனுக்கான சேவை தேவாலயங்களில் மாத்திரம் வரையறுக்கப்பட்டிருக்கவில்லை, மானுடத்தின் மேம்பாட்டிலும் தங்கியிருக்கிறது என்ற செய்தியை வழங்கினார்.

அதனால் சில இளம் பாதிரிமாரும் கன்னியாஸ்திரிகளும் யாழ். மாவட்டத்திலிருந்து பயணித்து தமிழர் குடியேற்றங்களில் தன்னார்வத்தொண்டர்களாக இயங்கினார்கள். அக்குடியேற்றங்களுக்கிடையிலிருந்த தூரகங்ளை கடப்பதற்காக சில இளைஞர்கள் குறுக்குவழிகளையும் கண்டடைந்தனர்.

அதன்மூலம் இராணுவ – பொலிஸ் கெடுபிடிகளையும் தவிர்க்கமுடிந்தது.

சிலவேளைகளில் இடைவழியில் நேர்ந்துவிடும் தாமதங்களினால், இரவு நேரங்களில் தங்குவதற்கு ஏற்ற இருப்பிடங்களைத் தெரிவுசெய்வதிலும் ஊக்கமுடன் இயங்கினர்.

ஆனால், அவ்வேளைகளில் பல இளைஞர்களுடன் பழகும் வாய்ப்பும் கிட்டியது.

பின்னாட்களில், அவ்விளைஞர்கள் பொலிஸாரிடமும் ஆயுதப்படையினரிடமும் சிக்குண்டு சித்திரவதை செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டவேளையில், அவர்களை மீட்பதற்காக பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள் எங்கும் ஏறி இறங்கவேண்டியதாகியது.

அச்சந்தர்ப்பத்தில்தான், அவ்விளைஞர்களில் சிலருக்கு அக்காலப்பகுதியில் தோன்றியிருந்த ஈழவிடுதலை இயக்கங்களுடன் தொடர்பிருந்தது என்பதும் எமக்குத் தெரியவந்தது.

அவர்களின் திட்டங்களிலோ நடவடிக்கைகளிலோ எமக்கு நேரடியாக தொடர்புகள் இல்லையென்றாலும், நாம் அவர்களுக்கு உதவ முன்வந்தமையால், எம்மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.

அக்காலப்பகுதியில் தமிழினத்தின் விடிவெள்ளிகளாக திகழ்ந்த தமிழ்த் தலைவர்களின் அரசியலுக்கு அப்பால், நாம் மேற்கொண்ட பாதிக்கப்பட்ட மக்கள் மீதான எமது செயல்திறனில் அவ்விளைஞர்கள் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டனர்.

ஆனால், இலங்கை அரசு, நாமும் அந்த இளைஞர்களின் பங்காளிகள்தான் என்ற பார்வையை கொண்டிருந்தது. அதற்கு அக்காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவங்களும் காரணம்!

ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னெடுப்பில் துப்பாக்கிச் சூடுகளும் எதிர்மறையான கொலைகளும் தொடர்ந்தன.

சில கொலைகளுக்கு உரிமை கோரப்பட்டன. சிலவற்றை யார் செய்கிறார்கள்…? என்பது புதிராகவே இருந்தது!

இடையில் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையில் தோன்றிய முறுகல் நீயா..? நானா..? என்றவாறு பிளவுகளையும் உருவாக்கியது. இதனால் அந்த ஒன்றுபட்ட விடுதலை

இயக்கம் உடைந்தது. அதனால் தொடர்ந்த இயக்கமோதல்கள், சகோதரப்படுகொலைகள் ஒரு புறத்தில், பொலிஸ் – ஆயுதப்படைகளின் அத்துமீறல்கள் மறுபுறத்தில், இவற்றுக்கிடையே பாதிக்கப்பட்டு குடியேறிய மக்களும் அவர்களுக்காக தொண்டாற்ற வந்த நாமும் மிகுந்த மனஉளைச்சல்களுக்கு ஆளானோம்.

இயக்க மோதல்களை அவ்விளைஞர்கள் நிறுத்தவேண்டும் என்பதற்காக, அவர்களை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடி, இத்தகைய முட்டாள்தனமான செயல்களை தொடரவேண்டாம் என்று மன்றாடிக்கேட்டோம்.

ஆனால், எமது வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகவே மாறியது.

இந்த நெருக்குவாரத்திற்கு மத்தியில், நானும் காந்தீயம் டேவிட் அய்யா, மருத்துவர் ராஜசுந்தரம், அருட் தந்தையர் ஜேம்ஸ், ஆபரணம் சிங்கராயர் ஆகியோருட்பட சிலர் அரசதரப்பினால் குறிவைக்கப்பட்டோம்.

அதனையடுத்து எம்மை தனித்தனியாக தீர்த்துக்கட்டுவதற்கும் தமிழ்குடியேற்றத்திற்கு அருகாமையில் அரசினால் அத்துமீறிக் குடியேற்றப்பட்ட பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த சில ஆயுததாரிகளினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தச் சம்பவங்களின்போது நாம் தெய்வாதீனமாக உயிர் தப்பினோம்.

அருட்தந்தை சிங்கராயரின் கைது, களத்தில் நின்று பணியாற்றிய டேவிட் அய்யா, மருத்துவர் ராஜசுந்தரம், அருட்தந்தை ஜேம்ஸ் மற்றும் வவுனியா ( முன்னாள் ) பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் நாதன் ஆகியோரை நேரடியாக குறிவைக்கவும் உதவியது.

இவர்கள் ஈழவிடுதலை இயக்கங்களுடன் நேரடித் தொடர்புகளைப்பேணி அவர்களின் பங்குதாரர்களாக விளங்குகிறார்கள் என்பதற்கு அரச – ஆயுதப்படைத்தரப்பு தமது தேடுதல் நடவடிக்கைகளுக்கு காரணம் கற்பித்தது.

டேவிட் அய்யாவும் மருத்துவர் ராஜசுந்தரமும் கைதுசெய்யப்பட்டதையடுத்து நாம் சோர்ந்துபோனோம். காந்தீய இயக்கத்தின் நிருவாகமும் முடங்கியது.

அதன் மேற்பார்வையிலிருந்த குடியிருப்புகள் நிர்க்கதியாகின. எனினும், அங்கே தொடர்புகளுடனிருந்த பாதிரிமாரும் கன்னியாஸ்திரிகளும் தம்மால் முடிந்தவரையில் அம்மக்களுக்கு உதவினார்கள். அருட்தந்தை ஜேம்ஸ், இக்காலப்பகுதியில் செட்டிகுளத்திலோ, யாழ்ப்பாணம், மன்னார் மறைமாவட்டங்களிலோ

சென்று அடைக்கலமாக தங்கியிருக்கமுடியாத சூழ்நிலையும் தோன்றியது.

அருட்தந்தை ஆபரணம் சிங்கராயரின் கைதையடுத்து, அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களும் கைதானால், அது யாழ்ப்பாணம் மறை மாவட்டத்திற்கே பெரிய அபகீர்த்தியாகிவிடும் என்ற தொனியில் அபிப்பிராயங்கள் வெளியாகத் தொடங்கின.

( தொடரும் )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *