Featureகட்டுரைகள்

யாழ் பல்கலைக் கழகத்தினால் ,ஈழத்து இலக்கிய ஆளுமைக்காக முதுமானிப் (M.A (Hons)பட்டத்தை கொடுத்து மேன்மைப்படுத்தப்பட்ட இலக்கியகர்த்தா திரு.டொமினிக் ஜீவா அவர்கள்!… ஏலையா க.முருகதாசன்.

ஈழத்து இலக்கிய கர்த்தாவான திரு.டொமினிக் ஜீவாவை அறியாத ஈழத்து எழுத்தாளர்கள் எவரும் இருக்க முடியாது.

நீணட காலமாக ஈழத்து இலக்கிய உலகில் தனது எழுத்துப் பாதங்களை அழுத்திப் பதியவைத்த மிடுக்காளர்தான் மல்லிகையின் திரு.டொமினிக் ஜீவா அவர்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களின், தாழ்த்தப்பட்ட மக்களின் உள்ளக்குமுறல்களை கோபாக்கினியை சூட்டோடு ஒன்றுதிரட்டி மல்லிகையில் எழுத்துருவில் தீட்டியவர்.

ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து பாருங்கள் அவர்கள் வலி உங்களுக்குப் புரியும். எங்களை ஏன் ஒதுக்குகிறார்கள் என்ற அவர்களின் கோபம் உங்களுக்கும் வரும்.

கிணற்றில் அள்ளினால் தீட்டுப்பட்டுவிடும்,பாம்பு விழுந்துவிடும் என்றும் பாவப்பட்ட நீசர் எனப் பெயர் சூட்டி அவர்களை ஒதுக்கப்பட்டவர்களாக்கி, குடத்தைக் கொண்டு வந்து கிணத்தடியில் வைத்துவிட்டு பிள்ளை கொஞ்சம் தண்ணீர் வாந்துவிடுங்கோ என்று கையேந்தி நிற்பதாக நீங்கள் இருந்தால் அப்பொழுது தெரியும் மனக்குமுறல்.

தாயின் கையையோ,தகப்பனின் கையையோ பிடித்துக் கொண்டு கோவிலுக்கு வெளியே நின்று கும்பிடும் போது பெற்றோரைப் பார்த்து ‘ஏனம்மா எல்லாரும் கோவிலுக்குள்ளை நின்று கும்பிடுகினம் நாங்கள் ஏன் வெளியில் நின்று கும்பிடுகிறம் என்று கேள்வி கேட்கும் பிள்ளையாகி நின்று பார் தாயின்,தகப்பனின் பரிதவிப்பு புரியும்.

நாங்கள் உள்ளே போகக்கூடாதாம் என்று தாய் சொல்ல,ஏன் போகக்கூடாதாம் என்று பிள்ளை கேட்க, கிரேக்க தத்துவஞானி சாக்கிரட்டீஸ் கிரேக்கத்தின் வீதிகளிலே நின்று ஏன்? எதற்கு? என்று கேட்பது போலக் கேட்டதை தாயாகவும் பிள்ளையாகவும் நின்று பார்த்தால் தெரியும் வேதனையினதும் கோபத்தினதும் வெப்பம்.

சாதிமான்களின் பள்ளிக்கூடங்களிலே தன் பிள்ளையைச் சேர்க்கக் கொண்டு போகும் போது தாழ்த்தப்பட்டவன் பிள்ளை என்பதற்காக,பிள்ளைகள் கூடிப் போச்சு என்று தட்டிக்கழிக்கையில், தட்டிக் கழித்த உண்மைக் காரணத்தை உணர்கையில் அந்தப் பெற்றோராக இருந்து பார்த்தால்தான் தெரியும் வேதனையும் ஆற்றாமையும்.

எல்லோரும் தேநீர்க்கடைக்குள்ளே இருந்து தேநீர் குடித்துக் கொண்டிருக்க, வெளிப்பேணி எடுத்து, அதில் வார்ப்பவர் வெளிப் பேணி பட்டுவிடாமல் தேநீர் வார்க்க போவோர் வருவோரைக் கூனிக்குறுகி நாணிக் கோணி பார்த்துக் கொண்டே தேநீர் குடிப்பவனாக இருந்து பார்த்தோமானால் தெரியும் தன்மானத்தின் அளவீடு.

இத்தனையும் கொண்ட அடக்கப்பட்ட,ஒடுக்கப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்களின் மனக்குமுறல்களை அவர்களின் வெப்பியாரத்தை, இதயத்துடிப்போடும் மூச்சுக்காற்றோடும் கலந்த தன்மான வெளிப்பாடுகளை,நாங்கள்தான் உங்களைவிட உயர்ந்தவர்கள் என்ற மேட்டுக்குடி சாதிமான்களின் எகத்தாளமான பார்வைக்கு முன்னால் அவமானப்பட்ட மக்களாக கூனிக்குறுகி நின்றவர்களின் மனவெளி விலங்குடைத்த பத்திரிகைதான் மல்லிகை சஞ்சிகை.

போர்களில் எதிரியைச் சங்காரம் செய்து சின்னாபின்னப்படுத்தி இரத்தம் கொட்ட வைக்கும் வாள் போல திரு.டொமினிக் ஜீவாவின் பேனா எவருக்கும் அச்சப்படாது தொடர்ந்து அடக்கு முறைகளைச் சங்காரம் செய்து மனச்சங்காரம் செய்தது.

ஈழத்து இலக்கிய உலகம் மல்லிகை ஆசிரியரை தவிர்த்துவிட்டு அவர்களால் ஒரு போதுமே ஒரு வரலாற்றை எழுத முடியாது.சிங்கள இலக்கியவாதிகளை வியப்புடன் பார்க்க வைத்தவர் மல்லிகை ஆசிரியர்.

யதார்த்த இலக்கியங்களே உண்மையின் வடிவங்களைக் காட்டி நிற்பவை.பூசி மெழுகப்பட்டு நமது சமூகத்துக்குள் எதுவுமே இல்லையென்பது போல இலக்கியம் படைத்தவர்களையும் ,ஒரு குறிபபிட்ட மேல்தட்டு வர்க்கத்தின் வாழ்வியலை மட்டுமே சுட்டிநின்ற ஈழத்து எழுத்தாளர்களை அச்சம் கொள்ள வைத்தது இவரது எழுத்துக்கள்.

கண்டுகொள்;ளாது விடுதல் என்பது கயமைத்தனம்.அந்தக் கயமைத்தனத்தை ‘இது என்ன எழுத்தா’ என்று தவிர்க்க முயற்சித்த கல்விமான்கள்,எழுத்தாளர்கள் எவரைப் பற்றியும் அக்கறைப்படாது ஒரு படைத்தளபதிக்குரிய கம்பீரத்துடன் எழுத்துலகில் நடந்தவர்தான் மல்லிகை ஆசிரியர்.

இவரது மல்லிகை சஞ்சிகை யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலையில் வனப்புமிக்கு தமிழகத்து சஞ்சிகைகளுக்கு மத்தியில், நான் ஈழத்தவன், எனக்குரிய மிடுக்கு எளிமை என்ற தோற்ற வெளிப்பாட்டுடன் காட்சியளிப்பதைக் கண்டிருக்கிறேன்.

நான் திரு.டொமினிக் ஜீவாவைச் சந்தித்தது நான் படித்த கல்லூரியான மகாஜனக் கல்லூரியில் இடம்பெற்ற மாணவர் மன்ற விழாவின் போதுதான்.அவர் அங்கு பேச வந்திருந்தார்.சிறுகதைகள் எப்படி இருக்க வேண்டுமென்பதை அவர் விளங்கப்படுத்தி உரையாற்றியிருந்தார்.

அவருடைய தண்ணீரும் கண்ணீரும் என்ற அவரின் முதலாவது சிறுகதைகள் தொகுப்பை, எமது அயலவரான திரு.ஆ.சிவநேசச்செல்வன் அவர்களின்; வீட்டுக்குப் போன போது ‘இந்தப் புத்தகத்தைக் கொண்டு போய் வாசித்துப் பார் என்று அவர் தந்தார்.அதை வாசித்த போதுதான் ஒரு புதிய யதார்த்த ஈழத்து இலக்கிய உலகத்தை உணர்ந்தேன்.

தமிழக சஞ்சிகைகளை வாசித்து அதன் வாசனையை நுகர்ந்து மூழ்கிப் போயிருந்த எனக்கு,’தண்ணீரும் கண்ணீரும்’ என்ற சிறுகதைத் தொகுதி ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை சொல்லிய விதம் ஈழத்து சஞ்சிகைகளை வாசிக்க வேண்டும் ஆர்வத்தை மட்டுமல்ல,எம்மோடு அக்கதைகள் உறவாடியதையும் உணர முடிந்தது.

திரு.ஆ.சிவநேசச்செல்வன் அவர்களின் (வீரகேசரி தினக்குரல் முன்னாள் ஆசிரியர்) நண்பர்தான் திரு.டொமினிக் ஜீவா அவர்கள்.

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள அவரின் பணிமனைக்கு பின்புறத்தில் அவரின் அச்சுக்கூடமிருந்தது.

ஒரு நாள் திரு.ஆ.சிவநேசச்செல்வன் அவர்களுடன் சென்று ,திரு.டொமினிக் ஜீவாவை சந்தித்தேன்.அதுதான் எனது முதல் சந்திப்பு. ஒரு சின்னஞ்சிறு அறையொன்றினை அச்சுக்கூடமாக்கி,தானே அச்சுக்கோத்து,தனது அச்சகத்திலேயே மல்லிகையை அச்சடித்த ஒரு செயல்வீரர்தான் மல்லிகை ஆசிரியர்.

வெளி அச்சகத்தில் ஒரு சஞ்சிகையை அச்சடிக்கும் செலவுக்காக மட்டுமின்றி,அவரின் இலக்கிற்கான பயணத்துக்கு தன்னை வருத்தியாவது வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற தாகமுமே அதற்குக் காரணமென நான் கருதுகிறேன்.

அந்த முதல் சந்திப்புக்கு பிறகு அவரைப் பலமுறை யாழ்ப்பாணத்தில் அங்குமிங்குமாகப்; பல இடங்களில் சந்தித்திருக்கிறேன்.யாழ் ராஜா தியேட்டரின் வடக்குப்புறச் சுவரோடு ஒரு சிறிய அறையில் பின்னாட்களில் அவரின் மல்லிகை அச்சுக்கூடம் இருந்தது.அங்கும் போய் அவரைச் சந்தித்திருக்கிறேன்.

யாழ்ப்பாணத்துக்கு போகும் வேளைகளில் பூபாலசிங்கம் புத்தகசாலைக்குச் சென்று ‘மல்லிகையை’ வாங்கி வருவேன்.சிங்கள இலக்கியம் பற்றி அறிந்து கொள்ள முற்படாத காலகட்டங்களில் சிங்கள இலக்கியங்களையும், சிங்கள முற்போக்கு அரசியல்வாதிகளைப் பற்றியும் மல்லிகை தொடர்ச்சியாக சொல்லி வந்ததை அச்சஞ்சிகையிலிருந்துதான் நானும் அறிந்து கொண்டேன்.

ஈழத்து இலக்கிய உலகின் ஆரம்ப காலகட்டங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு எழுத்தாளர்களைத் தவிர சிங்கள மொழி இலக்கியம் பற்றி அறிய வைக்க கல்வியாளர்களும் முயற்சிக்கவில்லை, எழுத்தாளர்களும் முயற்சிக்கவில்லை.

தன்னின இலக்கியத்தோடு இலக்கியப் பரப்பினை குறுக்கிக் கொண்டு,தனது நாட்டிலே சகோதர இனமாக வாழும் சிங்களச் சமூகக் கதைகள் பற்றி தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பினை எட்டி நின்று எட்டிப் பார்க்கும் தமிழ் எழுத்தாளர்களின் மனப்பான்மை காரணமாக அறிந்து கொள்ள முடியவில்லை.

மல்லிகையின் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கும் போதுதான்,இனப் போராட்டத்திற்கான போராட்டக் குழுக்கள் தோற்றம் பெற்றன.மல்லிகை ஆசிரியர் தொடர்ச்சியாக, சமூக மாந்தர்களை சாதி ரீதியாக ஒடுக்கி வைத்துவிட்டு இன விடுதலைக்காக போராடுவதால் என்ன இலாபம் என்ற கேள்வியுடன் அடிப்படைத் தவறு முழுத் தவறையும் ஏற்படுத்தும் என்பதை கட்டுரை வழியாகவும் கதைகள் வழியாகவும் சுட்டிக்காட்டிக கொண்டேயிருந்தார்.

இனவிடுதலைக்காக புறப்பட்ட போராளிக் குழுக்கள் நான் பெரிதா நீ பெரிதா என்று முரண்பட்டுச் செய்த சகோதர படுகொலைகளை அவர் அச்சமின்றி எழுத்து மூலமாகச் செல்லிக் கொண்டிருந்தார்.

எனக்கு திரு.டொமினிக் ஜீவாவை நினைத்தால்,இப்படியும் ஒருவரா என்ற பெருமைளுயும் மகிழ்ச்சியும் ஏற்படுகின்றது.

மல்லிகை சஞ்சிகையை மட்டுமல்ல அவர் எழுதிய மற்றைய நூல்களையும் , ஒரு நீள் சதுரமான பையொன்றில் போட்டு ஆங்காங்கே வினியோகிபபதற்காக யாழ் தெருக்களில் புன்னகையுடன் நாசனல் சட்டை வேட்டியுடன் நடந்து போன காட்சிகள் இன்னும் என் கண்ணுக்குள் நிற்கின்றன.

தெருக்களில் சந்திக்கும் வேளைகளில் இரண்டொரு நிமிடம் என்னுடன் கதைத்து கலைப்பெருமன்றச் செயல்பாடுகள் எப்படிப் போகின்றன என்று கேட்பார்.

ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்த இலக்கியவாதி மட்டுமல்ல சிங்கள இலக்கியகர்த்தாக்களும் கொண்டாடிய முற்போக்கு எழுத்தாளர் திரு.டொமினிக் ஜீவா அவர்கள்.

அவர் எழுதிய கதைகள்:-

‘தண்ணீரும் கண்ணீரும்’

‘பாதுகை’

‘சாலையின் திருப்பம்’

‘வாழ்வின் தரிசனங்கள்’

டொமினக் ஜீவா சிறுகதைகள்’

அவர் எழுதிய கட்டுரைகள்:-

‘அனுபவ முத்திரைகள்’

‘தலைப்பூக்கள்’

‘ஈழத்திலிருந்து ஒரு இலக்கியக் குரல்’

‘தூண்டில்’

‘முன்னுரைகள்’

‘முப்பெரும் தலைநகரில் 30 நாட்கள்’

‘எனது நினைவுகளில் கைலாசபதி’

‘மல்லிகை முகங்கள்’

‘அட்டைப்பட ஓவியங்கள்’

‘தமிழ்மொழியில் பெயர்க்கப்பட்ட 15 சிங்களக் கதைகள்’

‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’

அவர் பெற்ற விருதுகள்:-

1961 இலங்கை சாகித்திய அகடமி விருது (தண்ணீரும் கண்ணீரும்)

1963 இலங்கை சாகித்திய அகடமி விருது (பாதுகை)

2001 முதுமானி (எம்.ஏ (ஓனர்ஸ்) யாழ் பல்கலைக்கழகம்.

Loading

2 Comments

  1. மல்லிகை ஜீவா அவர்கள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் வழங்கிய முதுகலைமாணிப்பட்டத்தை நிராகரித்தார். அதனை அவர் நிராகரித்து யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கு 17-09-2001 ஆம் திகதி கடிதமும் எழுதி அனுப்பினார்.

    தான் ஏன் அந்தப்பட்டத்தை ஏற்கவில்லை என்பது பற்றி மல்லிகை ஜீவா தெரிவித்த கருத்துக்கள் தொகுக்கப்பட்டு வெளியான பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் என்ற நூலை , மல்லிகையால் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாள் மேமன் கவி அவர்கள் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டுள்ளார்.

    முருகபூபதி – அவுஸ்திரேலியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *