அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் நினைவுகள்!… அங்கம் – 01…. சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன்.

மனிதனென்பவன் தெய்வமாகலாம்!![]()
அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் நினைவுகள் – அங்கம் – 01
சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் – அவுஸ்திரேலியா
( தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகம்)![]()
இலங்கையில் வடக்கே உடுவில் – மானிப்பாய் பங்குகளில் சமயப்பணிகளில் ஈடுபட்டுவந்த தம்பதியர் சாமிநாதர் குருசாமி பத்திநாதன் – செலின் அன்னரத்தினம் பத்திநாதன் ஆகியோரின் புதல்வனாகப் பிறந்த ஜேம்ஸ் அவர்கள் பிறந்த கதையும் பின்னாளில் அவர் வணக்கத்திற்குரிய மதகுருவாக வளர்ந்த கதையிலும் சுவாரசியமும் ஆன்மீகமும் உணர்ச்சியும் இணைந்தோடியிருக்கிறது.
பெற்றோர் சமயப்பற்று மிக்கவர்கள். தாயார் மகன் ஜோனை வயிற்றில் கருவாகச் சுமக்கும் காலத்தில் , தான் பணியாற்றிய பாடசாலைக்கு கை ரிக்ஷாவில் சென்றுவருவது வழக்கம். தந்தையார் மற்றும் ஒரு பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
அவர்களுக்கு எல்லாமாக ஒன்பது பிள்ளைகள். அதில் ஐந்து பெண்கள். நான்கு ஆண்கள்.
மனைவி சென்று திரும்பும் வழிவரையில் தனது சைக்கிளில் பின்தொடர்வது அவரது வழக்கம். மனைவி சென்று திரும்பும் குறிப்பிட்ட கைரிக்ஷாவின் சக்கரங்களில் ஒன்றின் அச்சாணியை அந்தப்பகுதியில் விளையாடித்திரியும் சிறுவர்கள் சிலர் குறும்புத்தனத்துடன், கழற்றியிருக்கின்றனர்.
இந்தக் குறும்பால், ஆசிரியை வரும்போது ரிக்ஷா குடைசாய்ந்து வீதியில் சரிந்தது.
இந்த எதிர்பாராத சம்பவத்தினால் தெய்வாதீனமாக கர்ப்பிணித் தாயார் தப்பிப்பிழைத்தார். அவ்வாறு தான் தப்பியது தேவனின் கிருபைதான் என்று அக்கணமே அவர் உணர்ந்தமையால், பிறக்கும் குழந்தையை இறைபணிக்கே தத்தம் செய்து கொடுத்துவிட வேண்டும் என மனதிற்குள் தீர்மானித்துக்கொண்டார். அவரது விருப்பத்தை இறைபணியில் அவருடன் தொடர்ச்சியாக ஈடுபடும் கணவரும் ஏற்றுக்கொண்டார்.
குழந்தையும் சுகமாக பிறந்தது. தங்கள் குழந்தையின் சுகப்பிரசவத்தையடுத்து தாங்கள் எண்ணியவாறே தமது நேர்த்திக்கடனை செலுத்தவும் தீர்மானித்தனர். பிறந்த குழந்தைக்கு ஜோன் எனப்பெயரிட்டு தேவாலயத்திற்கெனவே பிறந்த செல்வன் என ஆசிர்வதித்தனர்.
அக்காலப்பகுதியில் மானிப்பாய் பிரதேச பங்குத்தந்தையாக இருந்தவர் வண. பிதா குலாஸ் அவர்கள். அவர் இறைபணியில் நாளும் பொழுதும் ஈடுபடும் ஜோனின் பெற்றோரைப்பார்ப்பதற்கு அவர்களின் இல்லத்திற்கு வருகை தருவது வழக்கம்.
அவ்வாறு அவர் வரும்போதெல்லாம் குழந்தை ஜோனின் வளர்ச்சியையும் அவதானித்து, ஆசீர்வதிக்கத் தவறுவதில்லை. ஜோன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகையில், ஒருநாள், “ ஜோன் எப்பொழுது குருபீடத்திற்கு வருகிறாய்..? “எனவும் கேட்டார்.
இக்கேள்வி அவர் அங்கு வரும்வேளைகளிலெல்லாம் தொடர்வதும் வழக்கமானது.
அதற்கான நாளும் வந்தது.
வண.பிதா குலாஸ், மீண்டும் ஒரு நாள் அங்கே வருகைதரும் வேளையில், மகன் ஜோனை அவருடன் அனுப்பிவைப்பதற்கு பெற்றோர்கள் தயாரானார்கள். அப்போது, ஜோனின் தம்பியான ஜேம்ஸ், தானும் உடன் வரப்போவதாக சொல்லிக்கொண்டு, ஏற்கனவே அடுக்கிவைத்திருந்த உடைகளுடன் புறப்படுகிறார். தடுக்கவேண்டாம் எனச்சொல்லும் பிதா, குலாஸ், ஜேம்ஸையும் அழைத்துச்செல்கிறார்.
“ சகோதரர்கள் இருவரும் குருப் படிப்பிற்காக ஒன்றாக வரட்டும். சில வேளை குழந்தை ஜேம்ஸின் மனம் மாறக்கூடும். “ எனவும் சொல்கிறார்.
இரண்டு பிள்ளைகளையும் அவ்வாறு குருத்துவப்பணிக்கு அனுப்பினால், வீட்டிலிருக்கும் ஏனைய பிள்ளைகளுக்கு மனச்சோர்வு வந்துவிடும் என்று பெற்றோர் கலங்குகின்றனர். அதே சமயம் குருப் படிப்பிற்குச்சென்ற பிள்ளைகளுக்கு, வீட்டில் விளையும் மாம்பழம், பலாப்பழம் முதலானவற்றை தனது சைக்கிளில் பெட்டி கட்டி ஏற்றிச்சென்று கொடுப்பதிலும் பிள்ளைகள் ஜோன் – ஜேம்ஸ் சகோதரர்களின் தந்தை அக்கறை காட்டினார்.
குருப்பிள்ளைகளுக்காக பெற்றோர் கொடுக்கும் சலுகைகளினால், மற்ற சகோதரர்கள் ஏங்கினாலும் அவர்களும் தங்கள் குடும்பத்தில்
இருவர் குருமார்களாக வரப்போகிறார்கள் என்பதில் பெருமிதம் கொண்டனர்.
இவ்வாறாக நாட்கள் கரைந்து, மாதங்களாகி, சில வருடங்களுமானது.
ஆனால், ஒரு நாள் வண. பிதா குலாஸ் அவர்கள், வண. பிதா எமாலியானுஸ் பிள்ளை ஆண்டகையின் கடிதத்துடன் வீட்டுக்கு வருகிறார்.
அதில், மகன் ஜோன், குருப் படிப்பில் ஆர்வம் காண்பிப்பதாகத் தெரியவில்லை என்றும், அத்துடன் மகிழ்ச்சியோடு அதனைத்தொடர்வதாகவும் தெரியவில்லை என்றும், அதனால், மகன் ஜோனை குருபீடத்திலிருந்து மீள அழைத்துச்செல்லுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இக்கடிதம், பெற்றோருக்கு ஏமாற்றமாகவிருந்தது. தங்களால் ஆண்டவருக்கென அர்ப்பணிக்கப்பட்ட பிள்ளை, அவருக்கு வாரிசாகவில்லையே என்ற ஆழ்ந்த துயரம் துளிர்விட்டது.
வீடு தேடி வந்த அக்கடிதத்தையடுத்து, பெற்றோர்கள் மூத்தவர் ஜோனை அழைத்து வருவதற்காக, குருமனைக்கு வந்தார்கள். வண. பிதா எமாலியானுஸ் பிள்ளை ஆண்டகையிடம் “ தங்களுக்குச் சம்மதமானால், ஜோனுடன், இளைய மகன் ஜேம்ஸையும் அழைத்துச்செல்ல விருப்பம் “ எனச்சொன்னதும், ஜேம்ஸ், தான் தொடர்ந்தும் குருமனையில் தங்கியிருந்து குருத்துவக்கல்வியை தொடரவே விருப்பம் எனச்சொல்லிவிட்டார். அவர் இளவயதினர்.
இது எதிர்பாராத நிகழ்வு!
பின்னர் ஜேம்ஸின் விருப்பத்தின் பிரகாரம் அவர் அங்கேயே தொடர்ந்து தங்கியிருந்து படிப்பதற்கு பெற்றோரும் ஆயரும் விரும்பினர்.
ஜேம்ஸ் அவர்கள், புனித மதகுருவான கதையின் முதல் அங்கம் இப்படித்தான் தொடங்கியது.
படிப்பிலும் ஆய்விலும் இறைபணியிலும் ஆர்வம் காண்பித்துவந்த ஜேம்ஸ், குருவானதும், ஊர் மக்களால் வரவேற்கப்பட்டு, தவில் – நாதஸ்வரம் ஒலிக்க, வெண்ணிற நிலவிரிப்பிலே மானிப்பாய் தேவாலயத்திற்கு அழைத்துவரப்பட்டார்.
அங்கு அவர் தமது முதலாவது பிரசங்கத்தை நிகழ்த்தினார். இந்த புனித நிகழ்வு 1970 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 06 ஆம் திகதி நடந்தது.
சுமார் அரைநூற்றாண்டு காலத்தின் பின்னர், கடந்த 2019 ஆண்டு ஜூலை மாதம் யாழ்ப்பாணம் பெருந்தேவாலயத்தில் (Cathedral)
அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் பூதவுடல், அவரது குடும்ப அங்கத்தவர்கள், ஊர்பொதுமக்கள், வணக்கத்துக்குரிய பிதாக்கள் புடைசூழ கண்ணீர் அஞ்சலியைப்பெற்றது.
அவரது குடும்பத்திலிருந்து எதிர்பாராத சூழ்நிலையில் குருத்துவம் கற்கச்சென்று, தங்கு தடையின்றி இறைபணியைத் தொடர்ந்து, என்றும் மக்களுடனேயே வாழ்ந்து, அவர்கள் பணியே மகேசன் பணியென அன்புருவாக வாழ்ந்தவரின் வாழ்வும் பணிகளும் முன்மாதிரியானவை.
அன்று சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தமது முதலாவது பிரசங்கத்தை நடத்தியது முதல், கடந்த ஆண்டு, மக்களிடமிருந்து நிரந்தர ஓய்வுபெற்று இறையிடம் தன்னை ஒப்படைக்கச்சென்ற காலம் வரையில் சமயப்பணிகளுடன் மாத்திரமல்லாமல், நாட்டு நிலைமையுடனும் விடுதலைப்போராட்டங்களுடனும் இரண்டறக்கலந்தவை. இவற்றைப்பிரித்துப்பார்க்க இயலாது.
![]()
இறுதி நிகழ்வில் கூடியிருந்த பொதுமக்கள் வடித்த கண்ணீருக்கு மத்தியில் அவர் பெற்ற பிரியாவிடையை அவதானித்தபோது, அந்த மக்கள் கூட்டம், அவ்வளவு கண்ணீர் சிந்தியதற்கு அவரிடமிருந்து பெற்றது என்ன..? அவரது மறைவால் இழந்தது என்ன…? என்ற கேள்விகளே மேலோங்கிற்று.
அருட்தந்தை ஜேம்ஸ், தான் சார்ந்த மறையை மக்களுக்கு போதித்து வளர்த்து வளம்படுத்தும் பணியில் மாத்திரம் தனது இறைபணியை வரையறுத்துக்கொள்ளவில்லை. அதற்கும் அப்பால் சென்று மனிதநேயத்தையும் அவர் வளர்த்தார். மக்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்று, மனிதாபிமான செயற்பாடுகளை முன்னெடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக இறை அன்பு என்பதை உதட்டளவில் சொல்லாது, அன்பு செலுத்தி உணரவைத்தார்.
செட்டிகுளம் பங்கில் அவர் இறைபணி மேற்கொண்ட காலப்பகுதியில் அந்தப்பிரதேசத்தில் அரச ஆயுதப்படைகளின் அடக்குமுறை தலைவிரித்தாடியது. அந்த நெருக்கடி மாங்குளம், வவுனியா, முல்லைத்தீவு என விரிவடைந்தது. பின்னாளில் சுநாமி கடற்கோள் இயற்கை அநர்த்தமும் மக்களை சூழ்ந்தது.
இவ்வேளைகளிலெல்லாம் அருட் தந்தை ஜேம்ஸ் மக்களோடுதான் நின்றார்.
அதன் பெறுபேறாகத்தான் அன்றைய தினம் அவருடை இறுதி நிகழ்வில் மக்கள் இன, மத, மொழி பேதமின்றி ஒன்றுகூடி இறுதி அஞ்சலி செலுத்திய காட்சியை அவதானிக்கமுடிகிறது. தமிழர்கள் – சிங்களவர் இவர்கள் மத்தியிலிருந்து இந்துக்கள், கத்தோலிக்கர், பௌத்தர்கள் , இஸ்லாமியர்களின் மனங்களையெல்லாம்
வென்றவராக மனநிறைவான இறைபணியை மேற்கொண்டவராகவே அன்று மக்களிடமிருந்து அவர் விடைபெற்றார்.
அவரது தன்னலம் கருதாத சேவைதான் மக்களை இனமத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைத்தது என்றும் கருத முடிகிறது.
மக்கள் யாரை நேசிக்கிறார்கள்..? யாரை நம்புகிறார்கள்..? யாரை முன்மாதிரியாக ஏற்கிறார்கள்..? என்பதையெல்லாம், நேசிக்கத்தகுந்த – நம்பத்தகுந்த – முன்மாதிரியாக கொள்ளத்தகுந்த ஒருவரின் இறுதிபிரியாவிடையில் சிந்தும் கண்ணீரிலிருந்து புரிந்துகொள்ளமுடியம்.
மக்களோடு மக்களாக வாழாமல், பம்மாத்துக்காகவும், தற்பெருமைக்காகவும் மலர் மாலை , பொன்னாடைகளுக்காகவும் மக்கள் கூட்டத்தை திரட்டி வைத்துக்கொண்டு ஊடகங்களில் தமாஷாக்களை நடத்துபவர்களைப்பொருத்தமட்டில் அவையெல்லாம் ஒருநாளின் வெற்று சதிராட்டம்தான். அதன்பின்னர் அவர்கள் யாரோ – மக்கள் யாரோ என்றாகிவிடும்.![]()
அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் உறவுமுறையில் எனக்கு சகலனாக இருந்தபோதிலும், குடும்ப உறவுக்கு அப்பால், இன அடக்குமுறைக்கு எதிராக என்னுடன் புரிந்துணர்வோடு பழகியவர்.
தமிழ்மக்களின் அபிலாஷைகளும், அதனையொட்டிய ஆக்கபூர்வமான பணிகளுமே எம்மிடையேயான சந்திப்புகளில் பிரதான பேசுபொருளாகவிருக்கும்.
தந்தை வழியில் வேலணையிலும் தாய்வழியில் உரும்பராயிலும் எமது முன்னோர்கள் சைவசமய ஆசாரங்களை பின்பற்றியவர்கள்.
இந்தப்பின்னணியில், நான் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் குடும்பத்தைச்சேர்ந்த அவரது தங்கையை விரும்புகிறேன் என்பதை அறிந்த எமது குடும்பத்தினரும் நான் விரும்பிய பெண்ணின் தரப்பினரும் எமது உறவை ஏற்கமுடியாமல் தவித்தனர்.
எனது குடும்பத்தின் தரப்பில் எழுந்த எதிர்ப்பலையை விட, நான் விரும்பிய பெண்ணின் பக்கத்திலிருந்து எழுந்த எதிர்வினைகள் அதிகம்.
நான் ஆழமாக நேசித்தவரின் அப்பம்மா, அப்பப்பா ஆகியோர் சைவப்பரம்பரையில் வந்தவர்கள். ஆனால், தாயும் தந்தையும் கிறிஸ்துவின் நற்செய்திகளால் கவரப்பட்டு கத்தோலிக்கத் திருச்சபையில் இணைந்தவர்கள். தங்களுக்கு பிறந்த குழந்தைகள் அனைவரையுமே முழுமூச்சாக கத்தோலிக்க சமய முறைப்படியே பக்தி சிரத்தையோடு வளர்த்தனர்.
அவ்வாறு தம்மிடையே வளர்ந்த ஒரு மறி, பாதை மாறிப்போகிறது என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அதிலும் அக்குடும்பத்தில் ஒருவர் அருட்தந்தையாக குருவானவராக இருக்கையில், எப்படி இந்த மாற்றத்தை ஏற்பது..? என்ற விசனமே அவர்களிடம் மேலோங்கியிருந்தது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த வடபுலத்தின் சமய – சமூகக்கட்டுக்கோப்புகளை – வரைமுறைகளை எளிதாக கடப்பதென்பது கடினமானது.
அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களும் நானும் சமய நம்பிக்கைகளுக்கு அப்பால், மிகவும் புரிந்துணர்வோடு எமது நட்பை பேணிவந்தோம். இந்த நல்லுறவு அவரது மறைவுவரையில் நீடித்திருந்தது.
எனக்கும் அவரது தங்கைக்கும் 1976 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அதனையடுத்து எதிர்பாராதவகையில் எமது நாட்டில் 1977 இல் மூண்ட இனவாத வன்முறைக்கலவரத்தில் தென்னிலங்கையிலும் மலையகத்திலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்கால நலன் கருதி , இக்காலகட்டத்தில் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் ( T. R. R.O) தோன்றியது. பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி வளாகம் அகதிகளின் முகாமாக மாறியது.
இவ்வேளையில் உடைமைகளை இழந்து பரிதவித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலையக தமிழ் மக்களை மீள்குடியேற்றவைக்கவேண்டிய பாரிய பணியும் எமது கழகத்தின் பொறுப்பிற்கு வந்தது.
அதற்கான நடைமுறைப்பணிகளை முன்னெடுக்கவேண்டிய கடமைகள் என்னிடத்தில் தரப்பட்டன. அப்போது மலையகத்தில் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கித் திரும்பியிருந்தவர்கள், மீளவும் தங்கள் ஊர்களுக்கு அச்சத்தின் காரணத்தினால் திரும்பிச்செல்லத்தயங்கி மறுத்தனர்.
இவ்வேளையில், அம்மக்களை தமிழ்மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் குடியேற்றுவதே சாலப்பொருத்தமானது என்ற நிலைப்பாட்டுடன், அப்பொழுது கொழும்பில் இயங்கிவந்த தமிழ் இளைஞர் பேரவை எமது அமைப்புடன் இணைந்து இயங்குவதற்கு முன்வந்தது.![]()
அந்த இளைஞர் அமைப்புடன் சேரந்து, வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடி, நூறு மலையகக் குடும்பங்களை அவர்களின் பிரதேசங்களில் குடியமர்த்துவதற்கு ஆலோசித்தோம்.
எனினும் எமது வேண்டுகோள் அந்தத் தலைவர்கள் தரப்பினால் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
“ அவரைக்கேளுங்கோ – இவரைக்கேளுங்கோ “ என்ற சாக்குப்போக்குகளை முன்வைத்து எமது வேண்டுகோளை தட்டிக்கழித்தனர். அதேசமயம் அம்மக்களை தொடர்ந்தும் ஒரு கல்லூரி வளாகத்தில் வைத்திருப்பதற்கான காலக்கெடுவும் நெருங்கிவிட்டது.
( தொடரும் )
![]()