கட்டுரைகள்

சாமானியனின் சரடு…..சரடு…6….. சங்கர சுப்பிரமணியன்.

சங்ககாலத்தில் தேனும் பாலும் ஆறாக ஓடிய தமிழகமா என்று அப்போது சிலசமயம் நான் நினைப்பதுண்டு. படித்திருப்பதால் அப்போது பதிலும் கிடைக்கிறது. ஐவகை நிலங்களல் ஒன்றான பாலை நிலத் தெய்வம் கொற்றவை என்றும் அங்கு வாழ்பவர்கள் தொழில் வழிப்பறி செய்வது என்று படித்திருக்கிறேன். தாத்தாவும் நானும் நடந்து வந்த பகுதி பரம்பு என்பதால் அதுவும் கிட்டத்தட்ட பாலை மாதிரியே. அதனால்தான் சங்ககால வழிப்பறி இன்றும் நடக்கிறது என்று உணர்ந்து கொண்டேன்.

என் தாத்தா ஊர் குளங்களையும் கிணறுகளையும் கொண்டு விவசாயம் செய்யும் நிலப்பகுதி. தமிழகத்தில் ஐவகை நிலங்களும் கொண்ட ஒரே மாவட்டம் திருநெல்வேலி மாவட்டமாகும். சரி விசயத்துக்கு வருவோம். தாத்தா முன்செல்ல அவர்பின் நான் நடந்து செல்கிறேன். திடீரென்று என் தாத்தா தோளில் கிடந்த துண்டை எடுத்து முன்னால் நிற்கும் எதையோ அடிப்பதுபோல் வீசியபடியே “ ஏய், மூதேவி ஓடிப்போ. யாரு கிட்ட வந்து உன் வேலையை காட்டுற. வழிய விட்டு ஓடிப் போயிடு” என்றார். அவர் முன்னால் எதுவும் எனக்கு தெரியவில்லை.

இதுபோல் இரண்டு மூன்று தடவை செய்த என் தாத்தாவிடம் என்ன என்று கேட்டேன். அதற்கு என் தாத்தா ஒன்றமில்ல தாத்தா பின்னாலேயே வா. பயப்படாதே என்று மட்டும் சொன்னார்.ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தோம். பாட்டி கதவைத் திறந்து விட்டாள். அப்புறம் பாட்டியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது இரண்டு மூனு தடவை வழிய மறிச்சு தகராறு பண்ணிச்சு. விரட்டினேன் போயிடுச்சு என்றார். அவர் பேயைத்தான் சொல்கிறார் என எனக்கு புரிந்தது. நான் பயப்படுவேன் என்பதால் வெளிப்படையாகச் சொல்ல மறுக்கிறார் என எண்ணினேன். ஆனால் நான் எதையும் பார்க்கவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் காரைக்காலில் இருந்து குடும்பத்துடன் இரவில் காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது நள்ளிரவு. டிரைவர் தேநீர் குடிப்பதற்காக ஓரிடத்தில் காரை நிறுத்தினார். ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதி. தேநீர்க் கடையத் தவிர எல்லா பக்கமும் கும்மிருட்டு. தேநீர் குடித்த பின் சற்று தூரம் சென்று சிறுநீர் கழிக்க டிரைவர் செல்லவே நானும் உடன்சென்றேன். அப்போது எதிர்திசையில் வேலி ஒன்று தென்பட்டது. அந்த வேலியின் உட்பக்கமாக வெள்ளை நிறத்தில் ஓர் உருவம் நடந்து செல்வதை நன்றாகவே பார்த்தேன்.

அவ்விடத்தை விட்டு அகன்றதும் டிரைவரிடம் அதுபற்றி பேசினேன். அப்போது அவர் நீங்களும் அதைப் பார்த்தீங்களா என்றார். யாரது? அந்த நேரத்தில் அங்கே என்று நான் கேட்கவும் யாருமில்லை. அது பேய் என்றார்.
சும்மா, கதைவிடாதீர்ககள் என்றேன்.

அதற்கு அவர் நம்புறதும் நம்பாறதும் உங்கள் விருப்பம். இந்த நடு ராத்திரியில் அக்கம் பக்கம் எந்தவித கட்டடங்களும் இல்லாதபோது அங்கே யாருக்கு என்ன வேலை என்றார். நீங்கள் பயப்படக்கூடாது என்பதற்காகத்தான் அங்கே சொல்லவில்லை என்றார். நீங்கள் சொல்லியிருந்தால் ஒரு கல்லை எறிந்து பார்த்திருக்கலாமே என்றேன். உங்களை பத்திரமாய் மதுரை கொண்டு சேர்க்கவேண்டும் என்று உங்கள் உறவுனர்களின் கட்டளை. அதுதான் என் வேலையை மட்டும் பார்க்கிறேன். இப்போதுகூட நீங்க கேட்டதால்தான் சொன்னேன் என்று சொல்லி அமைதியானார். அவர் கவலை அவருக்கு என்று நானும் அமைதியானேன்.

சமீபத்தில் பேயைப்பற்றி ஒரு சுவையான தகவலை ஒரு தொலைக்காட்சியில் கண்டேன். சிங்கப்பூர் மாப்பிள்ளை அமெரிக்கா மாப்பிள்ளை என்றால் ஊர்ப்பக்கம் ஒரு மதிப்பு. அதுபோல
பேய்களிலும் சாதாரணமாய் கரிசல்குளம் பேய் என்றால், அந்த ஊருக்கும் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மட்டும் தெரியும். ஏலகிரி மலையில் உள்ள பேய்க்கு
தொலைக்காட்சிவரை வந்து செலிபிரிடி தகுதி கிடைத்திருக்கிறது. இப்போது அந்த பேய்பற்றி பார்ப்போம். ஏலகிரி மலையில் ஏற நிறைய கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்லவேண்டும். அந்த வளைவுகளில் ஒரு குறிப்பிட்ட கொண்டை ஊசி வளைவில்தான் இந்த பேய் இருக்கிறதாம்.

பயணிகள் வாகனங்களில் இந்த வளைவருகே வரும்போது அது ரோட்டை கடந்து செல்லுமாம். திடீரென்று எதிரே வெள்ளை உருவம் தன்முன் கடந்து செல்வதைக் காணும் வாகன ஓட்டி செய்வதறியாது திகைக்கும்போது விபத்து நடந்து விடுமாம். நிறைய வாகனங்கள் இந்த விபரீத விளைவுகளை சந்தித்து உயிரிழப்புக்களையும் பெரிய காயங்களையும் அடைந்துள்ளனர்.

எனவே இந்த பேயை கண்டுபிடித்து விடவேண்டும் என்று இப்போது நாம் கொரோனாவை ஒழித்து விடவேண்டும் என்று முயன்று கொண்டிருப்பதைப் போல ஒரு குழு முயற்சியில் இறங்கியது. மாலையிலேயே குறிப்பிட்ட இடத்துக்கு வந்து காத்திருந்தார்கள். நடிகர் நடிகைகளை நேரில் காண ஆர்வமுள்ளவர்களைப்போல் இந்த பேயையும் காண காத்திருக்க வேண்டி இருந்ததால் இந்த பேய்க்கும் செலிபிரிடி ஸ்டேடஸ் கிடைத்து விட்டது.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button