கட்டுரைகள்

எதிர் துருவங்கள் ஈர்க்கும்!…. சங்கர சுப்பிரமணியன்.

ஒரு பொருளான காந்தத்தின் எதிர் துருவங்கள் கூட ஒன்றை ஒன்று ஈர்க்கும். எதிர்மறைக் கருத்துள்ளவர்கள் மோதிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒருவர் ஒரு சித்தாந்தத்தை பின் பற்றி ஒன்றைக் கூறுகிறார். இன்னொருவர் மற்றொரு மற்றொரு சித்தாந்தத்தை பயன்படுத்தி அதற்கு மாறாக ஒன்றைக் கூறுகிறார்.

சித்தாந்தங்கள் முரண்படுவதால் சித்தாந்திகள் முரண்பட்டு முட்டிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. கிட்டத்தட்ட இது ஒரு கருத்தரங்கம்
போன்றது. அவரவர் கருத்தை அங்கே பதிவிடுவார்கள். ஒவ்வொருவருக்கும் அவர் வழிவந்த பண்பாட்டை ஆய்வு செய்து குறைநிறை கூறும் உரிமையுள்ளது.

அதை விடுத்து ஒட்டு மொத்த பண்பாட்டையே குத்தகைக்கு எடுத்த மாதிரியான சர்வாதிகார மனப்பாங்கு நான் அறிந்தவரை நல்ல பண்பாளர்களிடம் இருந்ததில்லை. இதற்கு சான்றாக பலரை குறிப்பிடலாம். மகாத்மா காந்தியும் ஜவஹர்லால் வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்டிருந்தாலும் சேர்ந்தே செயல் பட்டனர்.

முரண்பாடான சித்தாந்தமிருப்பினும் மகாத்மா விடுதலைக்குப்பின் நேருவிடம் முரண்பாட்டைப் பயன்படுத்தி
பதவிக்காக மோதக்கூட இல்லை. அங்கே அவரது பண்பு வெளிப்பட்டது. பண்பாளர்கள் பகைவராயிருப்பினும் சித்தாந்த கருத்துக்களுடன் மட்டுமே மோதுவார்கள். தனிநபர் விமர்சனத்தை தவிர்ப்பார்கள்.

அடுத்ததாக, பெரியாரும் ராஜாஜியம் சித்தாந்தங்களில் சிறிதும் சமரசம் செய்துகொள்ளாத தீவிரத்தை கடை பிடித்தவர்கள். இவர்கள் இருவரும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ ஒருவரை ஒருவர் அவதூறு செய்ததேயில்லை. சித்தாந்தம் வேறுபட்டாலும் அவர்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் என்பதைவிட சிறந்த பண்பாளர்கள்.

மனத்தத்துவ ஆய்வுப்படி எவரொருவரிடம் தத்துவார்த்த ரீதியாக தக்க பதில் இல்லயோ அவர் தன் பலவீனத்தை மறைக்க மற்றவரைக் காயப்படுத்துவார். இதுதான் காலங்காலமாக தொடரும் வரலாற்று உண்மை.

இன்றைய திரைப்படத் துறையில் நடிகர்கள் ரஜனியும் கமலும் முரண்பட்ட சித்தாந்தங்களைக் கொண்டவர்கள். ஒருவர் ஆன்மீக அரசியல் என்றால் மற்றவர் மக்கள் நலம் சார்ந்த அரசியல் என்ற கருத்தை முன் நிறுத்துகிறார். இவர்கள் கொள்கையளவில்
வேறுபட்டிருந்தாலும் தனிப்பட்ட முறையில் சிறந்த நண்பர்களே.

ஊடகங்களில்கூட ஒருவரை ஒருவர் சிறுமைப்படுத்த மாட்டார்கள். ஏனெனில் இவர்களுக்கு நன்றாகவே தெரியும் ஒருவர் தம் திறமையினால் மட்டுமே பெருமையடைய முடியுமேயன்றி மற்றவர்களை குறைகூறி பெருமை கொள்ள முடியாதென்று. இந்த இருவருமே பெரிதாக ஒன்றும்
படித்ததில்லை. இருப்பினும் ஒருவரை ஒருவர் மதிக்கும் தலைசிறந்த பண்பிருக்கிறது.

படித்தவர்கள் எல்லோரிடமும் பண்புள்ளதா என்றால் அது சிலரிடம் இல்லை. படிக்காதவர்வர்களிடம் பண்பிருக்காதா? இருக்கிறது. படிக்காத மேதை பெருந்தலைவர் காமராஜ் சிறந்த பண்பாளர். இவரைப் பற்றிய ஓர் உண்மை இவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் இவர் சொல்லியிருக்கும்  கருத்தைப் பாருங்கள். அடுத்த மனுசன் நல்லாயிருக்கணும்கிறதுதான்
வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான்
பிரார்த்தனை. இதுல
நாம சரியாக இருந்தா, தெய்வம்னு ஒன்னு இருந்தா அது நம்ம வாழ்த்தும்னேன் என்றார்.

பகுத்தறிவாளராயிருந்தாலும்
பண்பாய் இருந்ததால் எதிர் துருவமாய் இருந்தாலும் ஈர்க்கப் பட்டார். எனவே ஒருவர் பகுத்தறிவாளராய் இருப்பதால் அவரை பண்பற்றவர் என சாயம் பூசிவிட முடியாது. எனவே ஒருவரது சித்தாந்தத்தை சொல்லி நாம் யாரையும் குறைகூற இயலாது.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button