சிங்கள பாரம்பரிய சமையலும் …. வளவும்!… ஏலையா க.முருகதாசன்.

சிங்கள மக்களின் உணவுகள் எனக்குப் பிடிக்கும்.அவர்களுடைய பாரம்பரிய சமையலை வெளிப்படுத்துகின்ற சமையல் முறைகள் காணொளிகளில் தொடர்ச்சியாக வெளிவருகின்றன.அப்படி வந்த ஒரு சமையலை நான் நன்றாகவே இருசித்துப் பார்த்தேன். பாரம்பரியத்துடன் புதுமையாகச் செய்வதில் அவர்கள் வல்லவர்கள்.
இன்னொன்று அவர்கள் கிடைக்கும் பொருட்களை வைத்து எளிமையான அலங்காரங்களைச் செய்வார்கள்.அவை பார்ப்பதற்கு நன்றாகவே இருக்கும்.
நான் பார்த்த காணொளி கூறும் கதை.அந்த வீட்டில் மூன்று பேர் இருக்கிறார்கள்.ஒருவர் தாய் மற்றைய இருவரும் மகளும் மகனும்.
இது ஒரு சிங்கள பாரம்பரியச் சமையலை வெளிப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட காணொளிகள்தான்.
தமது வீட்டு வளவில் நட்டு வைத்த வீட்டுத் தோட்டத்திலிருந்து கிடைக்கும் காய்கறிககளையும் கிழங்கு வகைகளையும் பயன்படுத்தி தமது அன்றாட உணவைச் சமைத்துச் சாப்பிடும் வாழ்வைக் குறிக்கிறது இந்தக் காணொளிகள்.
முதல் காணொளியில் காலைச் சாப்பாடு செய்கிறார்கள்.சுண்டங்காயை தமது வளவுக்குள்ளிருந்து பிடுங்கிக் கொண்டு வந்து, அதனை கமுகமர மடலில் போட்டு மடித்து ஒரு சிறு உலக்கை போன்ற ஒன்றால் நசுக்கிறாள் அந்தப் பெண்.
(குறிப்பு: அம்மாவும் சுண்டைக்காய் குழம்பு வைப்பதற்கு அம்மயில் வைத்து ஒரு தட்டுத் தட்டி வைப்பார். ஆனால் கமுக மடலில் வைத்துத் தட்டி பிய்ப்பது இன்னொரு முறையாக இருந்தது.)
பிறகு அதனை தேங்காய்ப்பூ பொரித்த நெத்தலிக் கருவாடு போட்டு கறியொன்றை வைத்த பின், சொதியும் வைக்கப்படுகின்றது.வெள்ளைமா இடியப்பம் அவித்து தாய் பிள்ளைகள் மூவரும் சாப்பிடுகிறார்கள்.
மத்தியானச் சாப்பாட்டுக் கிடையில் ஒரு பானம் தயாரித்துக் குடிக்கிறார்கள்.அது,பிள்ளைக் கற்றாளைத் தண்டுகள் நாலைந்தை வெட்டிக் கழுவி கரைப்பக்கங்கள் இரண்டையும் கீறி வெட்டியபின் நடுவாலை பிளந்தெடுத்து உள்ளிருக்கும் சதையைக் கரண்டியால் வழித்து சட்டியொன்றில் போட்ட பின், பொமிலா என்ற தோடம்பழ குடும்ப வகையைச் சேர்ந்த ஒரு பழத்தின் சுளைகளை பிள்ளைக் கற்றாலைக் களிக்குள் போட்டு தண்ணீர் ஊற்றி இனிப்பாக இருப்பதற்கு ஒருவகை சிரப்பையும் கலந்து குடிக்கின்றனர்.(பொமிலா பழம் ஐரோப்பிய நாடுகளில் கடைகளில் விற்கப்படுகின்றன)
வளவுக்குள்ளிருந்து பப்பாசிக்காயை பிடுங்கிக்; கொண்டு வந்து துண்டு துண்டுகளாக வெட்டி அதை வெள்ளைக் கறியாக சமைக்கிறார்கள்.வெள்ளைச் சோறு, காலையில் சமைத்த சுண்டங்காய்க கறி, பொரித்த கருவாடு இவை, அவர்களுடைய மத்தியானச் சாப்பாடு.அத்துடன் சிறிய செத்தல் மிளகாய், சிறு சிறு துண்டுகளாக அப்பளம், உடைத்த கச்சான் கடலை இவை எல்லாவற்றையும் பொரித்தெடுத்து மத்தியானச் சாப்பாட்டுக்குச் சேர்க்கிறார்கள்.மிகுதி பிள்ளைக் கற்றாளைத் துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பொரித்து அதற்கு, சரக்கு வகைகள் மிளாய் போட்டு சிறிதளவு தேங்காய் எண்ணைவிட்டு அச்சாறு செய்து வைத்து,அதனையும் சோற்றோடு சாப்பிடுகிறார்கள(குறிப்பு: நான் சிங்கப்பூரில் வேலை செய்த போது கன்ரீனில் மத்தியானச் சாப்பாட்டுக்கு பொரித்த நெத்தலியும் பொரித்த கச்சான் கடலையும் கலந்து வைப்பார்கள்.நெத்தலியும் கச்சானும் சாப்பிடும் போது அவை இரண்டும் கலந்து சுவையாகவிருக்கும்)
மாலைத் தேநீருக்கு கேக் செய்கிறார்கள்.நீத்துப் பூசணிக்காயை வளவுக்குள் இருந்து கொண்டு வந்து அதனைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி பச்சை,சிவப்பு,ஓரஞ் வர்ண உணவுச் சாயங்களை கலந்து வெயிலில் காய வைத்து எடுத்து, கேக்குக்கு அடித்த மாவுடன் கலந்து குழைத்து தட்டில் போட்டு வளவுக்குள் இருக்கும் சிறிய போரணையில் வைத்து எடுக்கிறார்கள்.கேக்குடன் மாலை வேளைக்கு பால் தேநீர் போட்டுக் குடித்தார்கள்.
இன்னொரு காணொளி வள்ளிக் கிழங்கை கிண்டிக் கொண்டு வந்து துண்டு துண்டுகளாக வெட்டி அவிக்கிறார்கள்.அதற்கு உவப்பாகச் சீனிச் சம்பலும் தேங்காய்ப் பூவும் தேநீரும் காலைச் சாப்பாடாகின்றது.
மத்தியானச் சாப்பாடாக சேர்றும் வள்ளிக் கிழங்கை கறியாகச் சமைத்துச் சாப்பிட்டார்கள்.
மிகுதியாக இருந்த வள்ளிக் கிழங்குத் துண்டுகளை நசித்து, மீன் துண்டொன்றை அவித்து அதை உதிர்த்தி, நசித்த வள்ளிக் கிழங்கோடு பிசைந்து மிளகு, மிளகாய் போன்றவற்றை கலந்து கட்லட் செய்தார்கள்.
வளவுக்குள்ளிருந்து இஞ்சிக் கிழங்கை பிடுங்கி கொண்டு வந்து தேநீர் போட்டு அதற்குள் சிறு சிறு துண்டுகளா வெட்டிப் போட்டு இஞ்சித் தேநீரும் கட்லட்டும் சாப்பிட்டார்கள்.
இது சிங்கள மக்கள் சட்டியில் சமைக்கின்ற பாரம்பரியமான சமையலைக் குறிக்கும் காணொளிதான்.அதுமட்டுமல்ல உணவுப் பொருள் வாங்க காசில்லை வழியில்லை என்று மனம் கலங்காதே,வளவுக்குள் வழியிருக்கிறது என்பதையும் இக்காணொளி சொல்கின்றது.
நான், இது ஒரு காணொளி என்பதை ஒரு ஓரமாக வைத்துவிட்டு அவர்களோடு நானும் ஒருவனாக அவர்கள் சமையல் செய்வதை இரசித்தேன்.
வீட்டுத் தோட்டத்தின் பெறுமதியை இந்தக் காணொளி சுவைபடக் கூறியிருந்தது.இதை நான் இரசித்துப் பார்ப்பதற்கு காரணம் ஒரு நானும் தோட்டக்காரன்தான் என்பதாகும்.
நான் சிலாபத்திலும் கொச்சிக்கடையிலும் இருந்த காலங்களில் சிங்கள மக்களின் வாழ்க்கையை இரசித்திருக்கிறேன்.
சிங்கள மக்களை எனக்கு நன்றாகவே பிடிக்கும்.வறுமையான வாழ்க்கையிலும்கூட அதையும் அழகாக வாழ்பவர்கள்.
அவர்களின் வீட்டில் எப்பொழுதும் பூச்சாடிகளில் பூக்கள் வைத்திருப்பார்கள்.முற்றத்தில் அழகழகான பூச்செடிகளை பூமரங்களை நட்டிருப்பார்கள்.
ஊரில் எங்கள் வேலிகளிலும் பனை வடலிகளிலும் படர்ந்து இருப்பவைதான் குறிஞ்சா, முசுட்டை, மொசுமொசுக்கை போன்ற மூலிகைகள். முல்லையும் இருக்கும். தமிழர்களாகிய நாங்கள் அதை உணவாக பயன்படுத்தியது அரிதிலும் அரிது.
நான் சிலாபத்திலும் கொச்சிக்கடையிலும் குறிஞ்சாவை மயிர்க்கனதியில் வெட்டி இலையில் கட்டி சந்தைகளில் விற்றதைப் பார்த்திருக்கிறேன்.சிங்கள மக்கள் மீன் இறைச்சி எவ்வளவு சாப்பிடுகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு இலை வகைகள் காய்கறிகள் சாப்பிடுவார்கள்.
தமிழர்களில் முருங்கை இலைக்கறி சாப்பிடுபவர்களையும்,கற்றாளம் பூவை சாப்பிடுகிறவர்களையும், சண்டி இலை, வாதநாரயணி இலை, நிலங்களில் படர்ந்திருக்கும் பயிரி பசளி போன்றவற்றைச் சாப்பிட்டவர்களையும், ஒன்றுக்கும் வழியில்லாத வறுமைவாடிகள் என்று ஏளனம் செய்த மேட்டுக்குடி மனப்பான்மை கொண்டவர்கள் நாம்.
அதிலும் இன்றுவரையும் எத்தனையோ வேதனைகளை அனுபவித்த பின்பும் திருந்தாதவர்கள் யாழ் குடநாட்டுத் தமிழர்கள்.
புலம்பெயர் தமிழர்களில் நாமாகிய பலர் குறிஞ்சாவுக்கும் முருங்கை இலைக்கறிக்கும்,அகத்திக் கீரைக்கும், வல்லாரைக்கும் எங்கே அவை கிடைக்கும் என அங்கலாய்த்து திரிகிறோம்.
சிங்களப் பெண்களில் பெரும்பாலானவர்கள் கம்பீரமானவர்கள், வடிவானவர்கள், கேரளப் பெண்கள் மாதிரி.
![]()