நிறம் மாறும் பூக்கள்!… சங்கர சுப்பிரமணியன்.

பூக்கள் நிறம் மாறுகின்றனவா? ஆம், மாறுகின்றன. மொட்டாக இருந்து மலரும்போது ஒரு நிறம், நன்றாக மலர்ந்தபின் ஒரு நிறம், வாடும்போது ஒருநிறம் மற்றும் வாடி உதிரும்போது ஒருநிறம். பூக்கள் மட்டுமா நிறம் மாறுகின்றன? ஏன், மனிதர்கள்கூட நிறம்மாறத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பற்றிப் பார்ப்போம்.
தமிழ் மீது பற்றுள்ளது என்று சொல்பவர்களெல்லாம் பற்றுள்ளவர்களா என்றால் இல்லை. இப்போது ஒரு திரை இசைப்பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. அந்த பாடலில் இரு வரிகளை எழுதிவிட்டு பின் இவ்வரிகளை ஒட்டி என் கருத்தைச் சொல்கிறேன்.
“பெண் பெருமை பேசிப்பேசி தம்மை வளர்ப்பார்
தம் பெருமை குறையுமென்றால் பெண்ணை அழிப்பார்”
இந்த வரிகளை ஒட்டி என்கருத்து:
“தமிழ் பெருமை பேசிப்பேசி தம்மை வளர்ப்பார்
தம் பெருமை குறையுமென்றால்
தமிழை அழிப்பார்”
சிலர் தமிழ் மீது
பற்றிருப்பதுபோல் தமிழ், தமிழ் என்பார்கள். ஆனால் தமிழுக்கு ஓர் இழுக்கு ஏற்பட்டால் தாம் இருக்குமிடம் தெரியாமல் இருப்பார்கள். எங்கோ வானவேடிக்கை நடக்கிறது என்பதுபோல் கண்டும் காணாமல் இருப்பார்கள். சும்மா சொல்லவில்லை. ஆதாரத்துடன் சொல்கிறேன். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சங்கராச்சாரியார் எழுந்து நிற்காமல் தமிழ் மொழியை அவமதித்தால் வாய் பேசாமடந்தையாகி கருத்து கூட சொல்ல மாட்டார்கள்.
அதுமட்டுமா? மறை என்றால் மதம் சார்ந்திருக்கும். ஆனால் மதம்சாரா உலகிற்கே பொதுமறை தந்த திருவள்ளுவரைப் பற்றி பெரிதாக எதுவும் பேசமாட்டார்கள். ஏனெனில் அவர்,
“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய் வருந்தக் கூலிதரும்”
“தெய்வம் தொழாஅள் கொழுநன் தாள் தொழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
என்று சொல்லிவிட்டதால் அவர் மேல் கோபமிருக்கலாம். திருவள்ளுவருக்கு உலகளாவிய பெருமதிப்பிருப்பதால் அவரை உதாசீனம் பண்ணவும் முடியாது. ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். ஆதலால் ஏற்றுக் கொண்டு வடிவேல் நானும் ரவுடிதான், நான் ஜெயிலுக்கு போறேன், நான் ஜெயிலுக்குப் போறேன் என்று சொல்வதைப் போல திருவள்ளுவரைப் பற்றி எப்பவாவது ஏதாவது பேசிவிட்டு எனக்கும் திருவள்ளுவர் மேல்
பற்றுள்ளது என்று சொல்லிக்
கொள்வார்கள். நல்ல வேளை இது போன்ற குறளுக்காக அவரை அவதூறு செய்யாது
விட்டார்களே என ஆறதலடையலாம்.
இப்படி எனக்கு தெரிந்த ஓன்றிரண்டு தமிழ்ப் பற்றாளர்கள் பெங்களூரில் இருக்கிறார்கள். சங்கராச்சாரியார் தமிழ்மொழியை அவமதித்த சமயம் அவர்களுடன் பேசிப் பார்த்தேன் பிடி கொடுக்காமல் நழுவி விட்டார்கள். சிலர் தமிழ்மீது அதிகப் பற்றிருந்தாலும் வெளிக்காட்டமாட்டார்கள். ஆனால் தமிழ்மொழிக்கு இழுக்கு என்றால் தம் கருத்தை வலுவாக முன்வைப்பார்கள்.![]()
உங்களுக்கு தெரிந்த இப்படிப்பட்ட தமிழ்ப்பற்றாளர்கள்
இருக்கிறார்களா? யோசித்துப் பாருங்கள் உங்களுக்கும் ஒன்றிரண்டுபேர் சிக்குவார்கள்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()