என் வாழ்வில் அயேன் பொட்டி!…. ஏலையா க.முருகதாசன்.

கூழ் என்றாலும் குளித்துக் குடி கந்தையென்றாலும் கசக்கிக் கட்டு என்ற வாக்கியத்தில் அடங்கி இருப்பது சுத்தம் துப்பரவு மட்டுமே.
சுத்தம் துப்பரவும் இரண்டும் ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டது.வாழ்விடம் குடில் என்றாலும் அதனையும் துப்பரவாக சுத்தமாக அழகாக வைத்திருப்பதில் தமிழ்ச் சமூகம் மிகுந்த அக்கறை கொண்டது.
கந்தையென்றாலும் கசக்கிக் கட்டு என்பது.கிழிந்து தைத்த உடையென்றாலும் அதனைத் தோய்த்து அழுக்கு போகச் செய்து உடு என்பதாகும்.
உடையை அழகுற உடுத்துவதில் கையாண்ட முறைகளுக்கென்று ஒரு வரலாறு உண்டு.
ஆரம்ப காலங்களில் உடைகளை தோயத்து கொடிகளில் காயவிட்டு காய்ந்ததன் பின்பு அதனை எடுத்து மடித்து வைத்து உடுக்கத் தொடங்கினார்கள்.
காலஞ் செல்லச் செல்ல மக்கள் மத்தியில் கரிபோட்டு எரித்து சூடாக்கி உடைகளின் சுருக்கங்களை இல்லாதொழித்து அயேன் பண்ணுதல் முறை வந்தது.
அயேன் பெட்டி இல்லாதவர்கள் போத்தல்களில் சுடுதண்ணீரை விட்டு அந்தச் சூட்டில் உடுப்புக்களை மினுக்கினர்.
தமிழகத்தில் செம்பில்சுடுதண்ணீரைவிட்டு உடுப்புக்களை மினுக்கும் பழக்கம் இருந்தது.
அயேன் பண்ணுதல் உடுப்பு மினுக்குதல் ஆகிய சொற்பதங்கள் பாவனையில் ஆரம்பத்திலிருந்து இன்றுவவரையும் இருக்கின்றன.
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். உடுக்கும் உடையை நேர்த்தியாக உடுத்தல் என்ற தொடர்ச்சியில் சுருக்கமில்லாது அயேன் பண்ணிப் போடுவது புழக்கத்தில் வந்தது.
முக்கியமாக உடுப்பின் கைப்பகுதிகள் மடிப்புக் கலையாது இருக்க வேண்டுமென்பதில் கவனம் செலுத்தப்பட்டது.
முதுகுப் பக்கத்தில் சுருக்கப்பட்டு தைத்த பகுதியை மேலிருந்து கீழாக மடித்து மினுக்குவது ஒரு அழகுக் கலையாக இரசிக்கப்பட்டது.
தணல்களை அயேன் பெட்டிக்குள் போட்டு சூடாக்கி தண்ணீர்த்துணியால் உடுப்பை நனைத்து துடைத்து மினுக்குவது ஒரு முறை.
நான் உடுப்பை மினுக்க தணல் அயேன்; பெட்டியையே பள்ளிக்கூட நாட்களில் பயன்படுத்தினேன்.
ஆனால் எங்களிடம் அயேன் பெட்டி இல்லை. எங்களுடைய பக்கத்து வீடான பாக்கியம்மா ரீச்சர் வீட்டிலிருந்து வாங்கியே உடுப்புக்களை மினுக்குவேன்.
சிரட்டைத் தணல் நின்றுபிடித்து சூட்டைத் தரும் கெதியில் அணைந்து சாம்பலாகாது என்பதால் சிரட்டைகளை பொறுக்கி எடுத்து சில்லம் பொல்லமாக அவற்றை உடைத்து வைத்துக் கொண்டு இரண்டு சிரட்டைகளை அயேன் பெட்டிக்குள் வைத்து கொஞ்சம் மண்ணெண்ணையை ஊற்றி கொழுத்தி அது எரிந்து முடிகிற நேரம் சில்லம்பொல்லமாக (சிறு சிறு துண்டுகளாக) உடைத்த சிரட்டைத் துண்டுகளை அதற்குள் போட அது நெருப்பாக எரியாமல் சூடேறித் தணலாகி விடும்.
சுருக்கம் எடுபடுவதற்கு கொஞ்சம் மினுக்கும் துணியில் மெல்லிய ஈரலிப்பான தன்மை வேண்டும்.தண்ணீர் தெளித்து மினுக்குவது ஒருமுறை இன்னொன்று உருட்டின சிறிதளவான துணியை தண்ணீரில் நனைத்து மெதுவாக உடுப்பைத் தடவித்தடவி மினுக்குதல்.
தோய்ச்ச உடையை மினுக்கிப் போடும் போது உடலுக்கு சுகமாக இருக்கும். அதை உணர முடியும்.
மேல் சட்டையின் தோள் மூட்டிலிருந்து மணிக்கட்டுவரையும் மடிப்பு நேர்த்தியாக இருக்க வேண்டும்.
சிவேளைகளில் சிறிய தணல்கள் அயேன் பெட்டியின் காற்றுப் போக வைத்திருக்கும் துவாரங்கள் வழியாக கொட்டி உடுப்பு எரிவதும் உண்டு.
பள்ளிக்கூட காலத்திலிருந்து நானாக உடுப்பு மினுக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை தோள் மூட்டிலிருந்து மணிக்கட்டுவரை உள்ள மடிப்பு மினுக்கலில் அதிக கவனம் செலுத்துவேன்.
இன்னுமொன்று வெள்ளை உடுப்புகளுக்கு நீலம் போடுவது ரொபின் புளு என்ற குருவிப் படம் போட்ட நீலப்பவுடர் பெட்டியை வாங்கி கொஞ்ச நீலப் பவுடரைத் துணியில் கட்டி அலம்பின வெள்ளை உடுப்பை அதற்குள் போட்டு கலந்தலம்பி காய விடுவது.
உடுப்புக்கு கஞ்சி போடுகிற முறையும் உண்டு .வெள்ளை அரிசிக் கஞ்சியும் சவ்வரிக் கஞ்சியும் போட்டுக் காயவிட்டு மினுக்கும் முறையும் உண்டு.
உடுப்பக்கென்று Starch கஞ்சிப்பசையின் பாவனை வந்தது.
சவ்வரிசிப் பசையால் நான் திண்டாடிய சம்பவம் ஒன்று உண்டு.நான் சிலாபத்திலிருந்த போது உடுப்பு மடிப்புக் கலையாமல் விறைப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் அளவுக்கதிகமாக சவ்வரிசி காய்ச்சி அதற்குள் சேர்ட்டைப் போட்டு எடுத்துக் காயவிட்டேன்.
வெயிலில் காயந்த உடுப்பு விறைப்பாக இருந்தது. நல்ல புழுகத்தில்
மினுக்கினேன்.மினுக்கிப் போட்டுப் பார்த்தால் காட்போட்மட்டை மாதிரி சிறப்பாக இருந்துது.
அதைப் போட்டுக் கொண்டுன வெளியில் ஒரு உலாத்து உலாத்திவிட்டுவர வியர்வையில் சேர்ட்டு நனைந்து உடம்பெல்லாம் ஒட்டத் தொடங்கியது .
உடம்பு நசநசவென்றாகிவிட்டது. வீட;டுக்கு வந்து உரசோ உரசென்றுஉடம்பை தேங்காய்தும்பால் உரசிக் குளிச்சது மட்டுமல்ல சேர்ட்டை திரும்பவும் தோய்ச்சன்.
அக்காவுக்கு எனது நிலையைச் சொல்ல” அக்கா சொன்னார் நீ சவ்வரிசி காய்ச்சேக்கிலையே நான் கனக்கப் போடாதையென்று சொன்னனான் சொன்னால் நீ கேட்டால்தானே என்று சிரித்தார்.
வாழ்க்கை என்பது அனுபவங்களால் சுவாரசியமாகின்றது.இனிமையான நினைவுகளையும் கொடுக்கும்
![]()