எதிர்மறை அதிர்வு மன இறுக்க உணர்வு!…. சங்கர சுப்பிரமணியன்.

பிறப்பு என்றால் இறப்பு இல்லாது போகாது. ஆனால் அது ஒரு தொற்றுநோய் மூலம் வரும்போது நாம் இறந்தாலும் பரவாயில்லை அதை நம் மூலம் பலருக்கு கடத்திவிடக்கூடாது. அப்படி கடத்துவதைத் தடுக்கவே வெளியிடங்களில் நடமாடுவதை கட்டுப் படுத்ததுகிறார்கள். இதனால் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்க நேரிடுகிறது. இப்படி அடைபட்டுக் கிடப்பது கிட்டத்தட்ட சிறைத் தண்டனை போன்றது.
ஓரளவு பணவசதி உள்ளவர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லை வீட்டில் அடைபட்டுக் கிடப்பதைவிட. ஆனால் தினமும் வேலை பார்த்தால் தான் உணவு என்ற நிலையில் உள்ள வளர்ந்துவரும் நாடுகளில் உள்ளவர்கள் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு உணவுக்கு வழி கிடைத்தாலே போதும் அவர்களுக்கு வீட்டில் அடைபட்டு கிடப்பது பெரிய தண்டனைபோல் தோன்றாது.
சொல்லப்போனால் அது அவர்களுக்கு உடல்
உழைப்பில்லாமல் சிலகாலம் குடும்பத்தோடு இருக்க தற்காலிகமாக ஒரு வழி
கிடைத்ததாகவே எண்ணுவார்கள். ஏனென்றால் அவர்கள் வாழ்நாளெல்லாம் கடினமாக உழைத்து உழைத்து ஓய்வென்பதையே அறியாதவர்கள். ஆனால் இவர்களுக்கு வீட்டில் அடைந்து கிடக்கவேண்டிய நாட்களுக்கு
உணவுப் பொருளும் கைச்செலவுக்கு பணமும் அரசாங்கம் சரியாகத் தவறாமல்
கொடுத்தால் நல்லது.
இதுமாதிரி வீட்டில் ஓய்வாக இருப்பதென்பது கொஞ்சநாட்களுக்கு வேண்டுமானால் நன்றாயிருக்கலாம். ஆனால் சிலகாலத்திற்குப் பின் வெளியில் செல்லாமலும், நண்பர்கள் வீடு, உறவினர் இல்லம், வழிபடும் இடங்கள், பொதுநிகழ்ச்சி, பூங்கா, கடற்கரை என எங்கும் செல்லாமல் வீட்டினுள்ளே அடைந்நு கிடப்பது மன இறுக்கத்தை ஏற்படுத்துகிறது.
இது கரோனாவிலிருந்து தப்பி
மன உளைச்சலுக்கு ஆளாகும் அவல நிலையை ஏற்படுத்துகிறது. இந்த மன இறுக்கத்தை தளர்த்த தொலைக்காட்சி, பாட்டு கேட்பது, புத்தகம் வாசிப்பது, இணைய தளங்கள் போன்றவற்றில் கவனத்தை செலுத்தலாம். குடும்பத்தினருடன் சேர்ந்துபேசி கலகலப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
இந்த சமயத்தில்தான் நமக்கு விழிப்புணர்வு தேவை. கரோனா அச்சம் ஒருபுறமிருக்க மன இறுக்கத்தையும் சேர்த்துக் கொள்ளக்கூடாது. அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? நம் மனதை மகிழ்ச்சியோடு வைத்திருக்காவிட்டாலும் குறைந்த பட்சம் மனதை அமைதியாகவாவது வைத்திருக்க முயலவேண்டும். இனி அந்தவழிகளைப் பார்ப்போம்.
தொலைக்காட்சியில் அழுது புரண்டு கண்ணீர் சிந்தும் படங்களைப் பார்க்கக்கூடிய தருணம் இதுவல்ல. மனத்தை குதுகூலப்படுத்தக் கூடிய படங்கள்,நகைச்சுவைப்
படங்கள்,மாயா தந்திரப் படங்களைப் பார்க்கலாம். மனம் பரவசமடையக் கூடிய பாடல்களைக் கேட்கலாம். கண்டிப்பாக சோதனைமேல் சோதனை போதுமடா சாமி, உன்னைச் சொல்லி குற்றமில்லை என்னைச்சொல்லி குற்றமில்லை போன்ற பாடல்களை கேட்காதீர்கள்.
முடிந்தால் அதர்வண வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் கிருமியை ஒழிக்கும் மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே இருங்கள். ஒருவேளை வீட்டின் வாசல்வரை வந்துவிட்ட கிருமிகள்கூட அந்த மந்திர ஒலியைக் கேட்டதும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என தலைதெறிக்க ஓடிவிடும். ஊடகங்களில் பயமுறுத்தி கரோனா பற்றி ஓலமிடும் செய்திகளை கேளுங்கள் படியுங்கள் ஆனால் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து மன அமைதியை இழக்காதீர்கள். விழிப்புணர்வுடன் தனித்திருந்து தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டாலே போதுமானது. இது மாறும் என்ற நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()