கவிதைகள்
பண்பதனை வீசி நில்லா பக்குவமே போகி என்போம்!… கவிஞர். மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

பழையன கழிதல் வேண்டும்
புதியன புகுதல் வேண்டும்
போகியின் அர்த்தம் என்று
போதனை இருக்கு நன்றாய்
வேண்டாத பொருளை எல்லாம்
தீயிலே போட்டு விட்டு
வெற்றியாய் சிரித்து நிற்றல்
போகியின் நோக்கம் அல்ல !
வீட்டிலே உள்ள குப்பை
வெளியிலே போட்டு விட்டோம்
காட்டாத குப்பை எல்லாம்
மனக் கூட்டிலே நிறைந்திருக்கே
அகமதன் அழுக்கை போக்கல்
போகியின் அர்த்தம் என்று
அனைவரும் உணரும் வேளை
போகியே புகழ்ந்து நிற்கும் !
வெள்ளை அடித்து நிற்போம்
வீட்டைச் சுத்தம் ஆக்கிடுவோம்
உள்ளமதில் தேங்கி நிற்கும்
ஊத்தையெலாம் துடைத்து நிற்போம்
பயன்படா என நினைக்கும்
பண்டங்களை வீசி நிற்போம்
பண்பதனை வீசி நில்லா
பக்குவமே போகி என்போம் !
![]()