தமிழரைச் சமமாக ஏற்க இந்த அரசும் தயாரில்லை; தமிழ் டயஸ்போராக்களைப் பயங்கரவாதிகளாகக் கருதி அவர்கள் மீது தடைவிதிக்க தீர்மானம்

இந்த நாட்டில் தமிழ் இனத்தை சம தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள கடந்த அரசாங்கங்கள் தயாராக இருக்கவில்லை.இந்த அரசாங்கமும் தயாரில்லை. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தால் வழங்கப்பட்ட குறைந்தபட்ச அதிகாரங்களையும் சூட்சமமாக பெற்றுக்கொள்ளவே இந்த அரசாங்கமும் முயற்சிக்கிறது.தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக உழைத்த தமிழ் டயஸ்போராக்களை பயங்கரவாதிகளாகவே இந்த அரசாங்கம் கருதி அவர்கள் மீது தடைவிதிக்க தீர்மானித்துள்ளது. இந்த அரசாங்கம் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் முதுகில் குத்தியுள்ளது.ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்று நாங்கள் கருதும் போது அரசாங்கம் எம்மை புறக்கணித்துள்ளது என இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி.யான சிவஞானம் சிறீதரன் குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான 7ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய சிறீதரன் எம்.பி மேலும் பேசுகையில்,
இந்த நாட்டில் தமிழ் தேசிய இனம், சிங்கள தேசிய இனம் என்று இரண்டு பிரதான தேசிய இனங்கள் உள்ளன. தமிழ் தேசிய இனம் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை.இது மனவருத்தத்துக்குரியது.தமிழர்களுக்கு எதிரான போர், இன அழிப்பு ஆகிய கொடுமைகளினால் தான் இந்த நாடு வீழ்ச்சியடைந்தது. அந்த கர்மவினை தான் இன்றும் தொடர்கிறது.
1979 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாக கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்புச் சட்டம் விடுதலைப் புலிகளையோ, ஏனைய தமிழ் அமைப்புக்களையோ மாத்திரம் தடை செய்யவில்லை. மக்கள் விடுதலை முன்னணியையும் தடை செய்திருந்தது. பலர் கொலை செய்யப்பட்டார்கள். 1980 ஆண்டு பிரேமதாசவின் ஆட்சியின் போது 60 ஆயிரம் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.கதிர்காம அழகி மனம்பேரி இலங்கை இராணுவத்தால் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்த மக்கள் விடுதலை முன்னணியின் மீதான தடை நீக்கப்பட்டது.அக்கட்சியின் வீரர்கள் தினம் கடந்த 13ஆம் திகதி கொண்டாடப்பட்டது. ஜனாதிபதியும்,அமைச்சர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
தமிழ் இனத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயுதமேந்தி போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குவதற்கு இந்த அரசாங்கமும் தயங்குகிறது. மக்கள் விடுதலை முன்னணியும் ஆயுதமேந்தி போராடியது. அவர்கள் மீதும் தடை இருந்தது. ஜே.வி.பி உறுப்பினர்கள் ஜனநாயக முறைக்கு அமைய அரசியல் கொள்கையை மாற்றிக் கொள்ள முடியுமாயின், ஏன் புலிகள் அமைப்பின் மீதான தொடரும் தடையை நீக்க முடியாது?
பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு பதிலாக பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் தமிழ் தேசிய இனத்துக்கு எவ்வாறு பாதிப்பாக அமையும் என்பதை தீவிரமாக ஆராய வேண்டும். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் பொருட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வாபஸ் பெறுங்கள் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தியை இந்த சபையில் பகிர்ந்து கொள்கிறேன். பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர், நீதிக்கு புறம்பான தன்னிச்சையான மரண தண்டனை பற்றிய சிறப்பு அறிக்கையாளர், கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமையை மேம்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் சிறப்பு அறிக்கையாளர், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பற்றிய சிறப்பு அறிக்கையாளர், தன்னிச்சையான தடுப்புக்காவல் தொடர்பான நிபுணர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் பற்றிய பணிக்குழுவின் நிபுணர்கள்,சித்திரவதை மற்றும் பிற கொடுமைகள், சிறுமைப்படுத்தலுக்கு எதிரான சிறப்பு அறிக்கையாளர், சட்டத்தரணிகளின் சுயாதீனம் பற்றிய சிறப்பு அறிக்கையாளர் ஆகிய எட்டு சிறப்பு அறிக்கையாளர்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை மீளப்பெறுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.இருப்பினும் அரசாங்கம் அதற்கு தயாராகவில்லை.
1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீர இராணுவ புரட்சி செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு யாழ் கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.அவர் அடைக்கப்பட்ட அறையின் பக்கத்து அறையில் பொன் சிவகுமார் இருந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. சிறைச்சாலையில் ரோஹன விஜேவீர நிர்வாணமாக்கப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்யும் ஒரு உளவியல் பிரச்சினை இலங்கை இராணுவத்தினருக்கும், பொலிஸாருக்கும் உள்ளது.
இந்த நாட்டில் இறுதி யுத்தத்தின்போது போராளிகளும், சிவில் மக்களும் நிர்வாணமாக்கி கொலை செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டார்கள். ரோஹன விஜேவீர நிர்வாணமாக்கப்பட்ட போது கிளிநொச்சி முரசுமோட்டையைச் சேர்ந்த தங்கதுரை தனது இடுப்பில் இருந்த துவாயை கழற்றி அதனை ரோஹன விஜேவீரவிடம் கொடுத்துள்ளார்.ஆகவே ரோஹன விஜேவீரவுக்கு ஆடை கொடுத்து அவரது மானத்தை காப்பாற்றியது ஒரு தமிழர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.இது வரலாறு .அரசாங்கம் இந்த வரலாற்றை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகருக்கு ஆடை தந்து மானத்தை காப்பாற்றிய தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆணையை வழங்கி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.ஆனால் தமிழ் மக்களின் உரிமைகளும், அவர்களின் கோரிக்கையும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.காணிகள் விடுவிக்கப்படவில்லை. படைகளின் வசம் உள்ள மக்களின் காணிகள் இன்றும் தரிசு நிலங்களாகவே உள்ளன. தமது சொந்த நிலத்துக்காக போராடிக் கொண்டு எமது மக்கள் தெருக்களில் இன்றும் உள்ளார்கள்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழான கொடுமைகள் இன்றும் தொடர்கின்ற நிலையில் அதற்கு மாற்றீடாக பிறிதொரு கொடிய சட்டம் இயற்றப்படவுள்ளது. இவ்வாறான பின்னணியில் பயங்கரவாத போராளிகளை தடுத்தல் என்ற சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக உழைத்த தமிழ் டயஸ்போராக்களை பயங்கரவாதிகளாகவே இந்த அரசாங்கம் கருதி அவர்கள் மீது தடைவிதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது புலம்பெயர் தமிழர்களுக்கு தேவை. இந்த அரசாங்கம் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் முதுகில் குத்தியுள்ளது.
![]()