லெனினா? ரணிலா? யார் வழியில் அரசு?

ஒரு பக்கம் லெலினின் கொள்கை மறுபக்கம் ரணிலின் கொள்கை என்ற அடிப்படையில் தான் இந்த அரசாங்கம் பொருளாதாரம் மற்றும் அரச நிர்வாகத்தை முன்னெடுக்கின்றது அரசாங்கத்தின் 159 எம்.பிக்களின் வாழ்க்கைத் தான் வளமாகவும், அழகாகவும் உள்ளது. மக்களின் வாழ்க்கை அவலத்தில் உள்ளது என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யுமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்தும் வகையில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது.வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையாளர்களில் தெரிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு மாத்திரமே மேலதிக கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச சேவையில் முக்கிய துறையாக கருதப்படும் ஆசிரிய சேவை இந்த வரவு செலவுத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர் – அதிபர் சம்பள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்ட சுபோதினி குழு அறிக்கையின் பரிந்துரைகளை உடனடியாக செயற்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தியினர் குறிப்பிட்டார்கள்.ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் சுபோதினி குழு அறிக்கை கவனத்திற் கொள்ளப்படவில்லை.
ஆசிரிய சேவையில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கும், ஓய்வூதிய பயனாளர்களுக்கும் எவ்வித நியாயமான தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை. இது முற்றிலும் தவறானது. பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தான் அரச சேவையாளர்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்தார்கள். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை.
நாட்டு மக்கள் வறுமை நிலையில் வாழ்கிறார்கள். வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளன. குடும்ப செலவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக அரச மற்றும் தனியார் துறையினர் பகுதி நேர வேலைக்கும் நெருக்கடி நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.
ஒரு பக்கம் லெலினின் கொள்கை மறுபக்கம் ரணிலின் கொள்கை என்ற அடிப்படையில் தான் இந்த அரசாங்கம் பொருளாதாரம் மற்றும் அரச நிர்வாகத்தை முன்னெடுக்கின்றது அரசாங்கத்தின் 159 எம்.பிக்களின் வாழ்க்கை தான் அழகாகவும் – வளமாகவும் மாறியுள்ளது. மக்களின் வாழ்க்கை அவலத்தில்தான் உள்ளது என்றார்.
![]()