2027 வரவு செலவுத் திட்டத்தில் 1.2 சதவீத நிதியே ஒதுக்கு ; வட,கிழக்கை தொடர்ந்து புறக்கணித்து வரும் அரசு

இந்த அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை தொடர்ச்சியாக புறக்கணித்து வருகிறது. 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு 1.2 சதவீத நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய மாகாணங்களுக்கான அபிவிருத்தி திட்டத்துக்கு பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறுவதைப்போன்று அரசாங்கம் ”தங்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி” என்ற அடிப்படையில்தான் செயற்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட எம்.பி. இம்ரான் மஹ்ரூப் குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,
நிதியமைச்சரான ஜனாதிபதி 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து ஓரிரு நாட்களிலேயே லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை பெருந்தொகையால் அதிகரிக்கப்பட்டது. அரச சேவையில் பெரும்பாலான தரப்பினர் இன்று தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . தெரிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு மாத்திரமே மேலதிக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
வரவு செலவுத் திட்டம் வரி வருமானத்தை அதிகரித்துக்கொள்வதை மாத்திரமே பிரதான இலக்காகக் கொண்டுள்ளது.அத்தியாவசிய பொருட்களின் விலைகள் எதுவும் குறைக்கப்படவில்லை. நேரில் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன் தாக்கம் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் மீது செல்வாக்குச் செலுத்தும்.
மாசி, நெத்தலி மற்றும் மிளகாய் ஆகியவற்றின் மீதான வரியை குறைத்து விட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்து விட்டோம் என்று மார் தட்டிக் கொள்ள முடியாது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேரடி நிவாரணம் கிடைக்க வில்லை.நடைமுறைக்கு சாத்தியமில்லாத முன்மொழிவுகளுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மீண்டெழும் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 20 சதவீதமேனும் செலவழிக்கப்படவில்லை. அழகான வாழ்க்கை – வளமான நாடு என்ற கொள்கைத் திட்டத்தை முன்வைத்தே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆளும் தரப்பின் வாழ்க்கை அழகாக உள்ளதே தவிர மக்களின் வாழ்க்கை அழகாகவும் இல்லை, வளமாகவும் இல்லை.இது தான் உண்மை. வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு என்ன கிடைக்கும் என்று மக்கள் பல மாதகாலமாக எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஏமாற்றம் மாத்திரமே மக்களுக்கு மிகுதியானது.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் மீண்:டும் நாணய நிதியத்துக்கு செல்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. திறைசேரியை நிரப்பி வைப்பதால் மக்களுக்கு என்ன கிடைத்தது, மக்களுக்கு ஏன் நிவாரணம் வழங்க முடியாது
அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தொடர்ச்சியாக புறக்கணித்து வருகிறது. 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு 1.2 சதவீத நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய மாகாணங்களுக்கான அபிவிருத்தி திட்டத்துக்கு பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி மாகாணசபைகளுக்கான அதிகாரங்களையும் பறிக்கும் முயற்சியில் அரசு செயற்படுகின்றது என்றார்.
![]()