2026 இல் வட, கிழக்கு மீள்குடியேற்றத்துக்கு 600 கோடி ரூபா ஒதுக்கியும் எதுவுமே நடக்கவில்லை; 13,000 குடும்பங்களை உடன் மீள்குடியேற்றவும்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 13,000 குடும்பங்களை மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். , கடந்த ஆண்டில் வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக 6 பில்லியன்(600 கோடி) ரூபா ஒதுக்கப்பட்ட போதும் அவர்கள் இன்னும் மீள்குடியேற்றப்படாமல் உள்ளதாக தமிழரசுக் கட்சியின்.திருகோணமலை மாவட்ட எம் பி கதிரவேலு சண்முகம் குகதாசன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்,
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியேற்ற, கடந்த ஆண்டில் அதற்காக 6 பில்லியன்(600 கோடி) ரூபா நிதியும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதற்காக 4 பில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இன்னும் மீள்குடியேற்றப்படாமல் உள்ளனர் . எனவே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 13,000 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், ஒதுக்கப்பட்ட நிதியை உரிய நோக்கங்களுக்காக முழுமையாகச் செலவிடுவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.2025ஆம் ஆண்டில் சுகாதாரம், வலுசக்தி மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட மூலதன நிதியின் பெரும்பகுதி செலவிடப்படாமல் எஞ்சியுள்ளது.
2027ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் 6,180 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பொதுமுதலீட்டுக்கான ஒதுக்கீடும் சுமார் 2,000 பில்லியன் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், நிதி ஒதுக்கீடுகளை அதிகரிப்பது மட்டுமே அபிவிருத்திக்கு போதுமானதல்ல.
அமைச்சுகளின் மூலதனச் செலவினங்களை மாதாந்தம் வெளியிடுதல், அரச கொள்வனவு நடைமுறைகளைச் சீரமைத்தல், திட்ட முகாமைத்துவத்தை வலுப்படுத்துதல் மற்றும் நிதியை உரிய காலத்தில் பயன்படுத்தத் தவறும் அமைச்சுகளின் செயற்பாடுகளை மீளாய்வு செய்தல் வேண்டும்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க வேண்டும்.விவசாயம், சுகாதாரம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மின்சார உட்கட்டமைப்பு ஆகிய துறைகளுக்கு உரிய நிதி மற்றும் கண்காணிப்பு வழங்கப்பட வேண்டும்.
ஒதுக்கப்படும் ஒவ்வொரு ரூபாவும் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
![]()