இந்தியா

இந்தியாவில் சிறுவர் விருது விழா: இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் பங்கேற்பு

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர், இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற முதலாவது சிறுவர் எர்த்ஷாட் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக மியூசியம் ஒப் சொல்யூஷன்ஸ் (MuSo) அருங்காட்சியகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

நவம்பர் 17 ஆம் திகதி நடைபெற்ற இந்த நிகழ்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறுவர்களின் புத்தாக்க முயற்சிகளையும் தலைமைத்துவத்தையும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவர்களின் சுற்றுச்சூழல் புத்தாக்கத் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் ‘I CAN Earthshot Challenge’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விருது விழா இடம்பெறுகிறது.

இந்தியாவின் 24 மாநிலங்களைச் சேர்ந்த 15,000 பாடசாலைகளில் சுமார் ஒரு மில்லியன் மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவான 15 மாணவர் குழுக்கள் மும்பைக்கு அழைக்கப்பட்டு, தமது சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்களைச் சமர்ப்பித்துள்ளன. அத்துடன், சுற்றுச்சூழல் தொடர்பான ஐந்து முக்கிய கருப்பொருள்களில் பயிற்சிப் பட்டறைகளிலும் பங்கேற்றுள்ளன.

இந்த விருது விழாவில் ஐந்து பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்.

இளவரசர் வில்லியம் 2020ஆம் ஆண்டு ஆரம்பித்த எர்த்ஷாட் விருது, உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களுக்குத் தீர்வுகளை முன்வைக்கும் புத்தாக்க முயற்சிகளை அடையாளம் கண்டு ஊக்குவித்து வருகிறது.

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாகவே அரச தம்பதியினர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

இதற்கு முன்னதாக, மும்பையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் வீதியோர கிரிக்கெட்டில் ஈடுபட்டதுடன், மும்பை மெட்ரோ ரயிலிலும் பயணித்துள்ளனர்.

மேலும், மும்பையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்று, இத்துறையில் புத்தாக்கத் தீர்வுகளை உருவாக்கும் இளைஞர்களுடனும் கலந்துரையாடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நவம்பர் 18ஆம் திகதி புதுடில்லிக்குச் செல்லவுள்ள இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *