ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்க மறுத்த மு.க.ஸ்டாலின்!

ராகுல் காந்தியின் தொலைபேசி அழைப்பை மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றிருந்தன. தேர்தலுக்கு முன்பு இருந்தே திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு, கூட்டணியில் குழப்பம் நீடித்து வந்தது.
தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியது. பின்னர், தவெக கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் ஆட்சியில் இடம்பெற்றுள்ளது. தவெக அரசில் காங்கிரசுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா கடந்த 16 ஆம் திகதி டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்கள் என பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில், சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுக்க போன் செய்துள்ளார். ஆனால் ராகுல் காந்தியின் தொலைபேசி அழைப்பை மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளால் ராகுல் காந்தியிடம் பேச மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தியின் அலுவலகத்தில் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசிக்கு அழைப்பு சென்றுள்ளது. அதில் சோனியா காந்தியின் சுய சரிதை புத்தக வெளியீட்டு விழாவிற்கு உங்களுக்கு அழைப்பு விடுக்க ராகுல் காந்தி விரும்புவதாகவும், இது தொடர்பாக அவர் பேச விரும்புவதாகவும் மு.க.ஸ்டாலினிடம் கூறப்பட்டுள்ளது. ஆனால், வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால் ராகுல் காந்தியிடம் பேச முடியாது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், சோனியா காந்தியின் சுய சரிதை புத்தக வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதாக ராகுல் காந்தியின் அலுவலக அழைப்பிற்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தியுடன் மு.க.ஸ்டாலின் பேச மறுத்த நிகழ்வு தமிழக அரசியலில் இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி முழுவதும் முறிவுக்கு வந்துள்ளது என்பதை வெளிக்காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
![]()