கட்டுரைகள்

எண்ணித் துணிக கருமம்…. சோலையூர் குருபரன்

“எண்ணித் துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்ப திழுக்கு” திருக்குறள்.

மனிதர் பிறந்தது முதல் முதியவராகி இறக்கும்வரை வாழ்க்கையில் பல கருமங்களை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர். அவற்றுள் இச்சைவழிச் செயற்பாடுகள், சிந்தனை வழிச் செயற்பாடுகள் என இரண்டும் பிரதானமாவை. இச்செயற்பாடுகளில் பல நாளாந்தம் இயல்பாகவே நடந்து கொண்டிருக்கின்றன. எச்செயலாக இருந்தாலும் அவற்றைத் திட்டமிட்டு நடத்தும்போது வாம்க்கை அர்த்தமுள்ளதாக அமைகின்றது. பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும். நாம் வாழும் வாழக்கை பெறுமதியானதாகவும், சரித்திரமானதாகவும் அமைய வேண்டும். அந்த வாழ்க்கையே நிலையான பெயரையும் புகழையும் பெற்றுத்தரும். இப்படியாக வாழுகின்ற வாழ்க்கையே அர்த்தமுள்ளதாகவும் இறந்த பின்னரும் பேசப்படும் பெருமையையும் பெற்றுத்தரும். வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் எந்தச் செயற்பாடாக இருந்தாலும் அதனைத் திட்டமிட்டுச் செயற்படுத்தப் பழகிக் கொள்வோமானால் நாம் தொட்டுத் தொடங்கிச் செயற்படுத்தும் காரியம் எதிலும் வெற்றியை நமதாககிக் கொள்ள முடியும்.

‘பதறாத காரியம் சிதறாது’ என்பார்கள். எந்தக் காரியத்தையும் நின்று, நிதானித்து, ஆத்திர அவசரமின்றிப் புத்தி சாதுரியம் விவேகத்துடன் திட்டமிட்டுச் செயற்படுத்திக் கொள்ள வேண்டும். கருமத்தைத் திட்டமிடும் போது அதனைச் செய்வதற்கு நமக்குள்ள பலம். பலவீனம், நமக்குக் கிடைக்கப்போகும் வாய்ப்புக்கள், அதனால் வரவிருக்கும் அச்சுறுத்தல்கள், சவால்கள், நெருக்கடிகள், பிற பிரச்சினைகள் ஆகியவற்றையும் முன்கூட்டியே தீர்மானித்துக் கொண்டு அதற்கேற்றவாறு திட்டத்தை வடிவமைத்துக் கொள்ள வேணடும். நம்மிடம் உள்ள வளங்களில் இருந்து உரிய இலக்கை அடையும் வகையில் வினைத்திறனுடன் உச்சப்பயன் பெறத்தக்கதாக முன்கூட்டடியே தீர்மானித்துக் கொள்ளலைத் திட்டமிடல் எனலாம். திட்டமிடும்போது நம்மிடம் இருக்கும் வளங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மனிதவளம், பௌதிகவளம், நிதி, தொழினுட்பம், காலம் ஆகிய வளங்களைக் கவனத்தில் கொண்டு திட்டமிடல் வேண்டும்.

இவ்வளங்களில் குறைந்தபட்சம் 75 வீதமாவது நம்மிடம் இருத்தல் வேண்டும். நம்மிடம் இல்லாததைக் கொண்டு திட்டமிடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எப்போதும் 80 க்கு 20 கொள்ளையைக் கடைப்பிடித்தல் வெற்றியைத் தரும். எதுவாக இருப்பினும் நாம் அடையும் உச்சம் 80 வீதமாகவும், இழப்போ நட்டமோ 20 வீதத்துக்கு மேற்படாமலும் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். இதேபோல்தான் விட்டுக் கொடுப்பதும், உதவுதலும், நம்பிக்பை வைத்தலும் இருத்தல் வேண்டும். எந்த இடத்திலும் சுயகௌரவம், சுயமதிப்பு (Self Esteem) இரண்டையும் விட்டுக் கொடுத்தலாகாது. இதனை அடிப்படையாகக் கொண்டு நம்மிடம் இருக்கும் வளத்தைக் கொண்டு உச்சப்பயன் அடைவதில் கவனம் செலுத்துதல வேண்டும். நம்மிடம் இல்லாததை வைத்துத் திட்டமிட்டுச் செயற்படுத்தினால் கருமத்தை இடையில் நிறுத்த வேணடிய சூழ்நிலையும் ஏற்படலாம். அதனால் நம்மிடம் இருக்கும் வளத்துக்கு முன்னுரிமை அளிப்பது அவசியமாகும்.

எச்செயலையும் திட்டமிடுவதற்கு முன்பாக முன்திட்டமிடுவது அவசியமாகும். திட்டமிடலில் 5W+2H (What, Why, When, Where, Whom + How, How much) என்ற நடைமுறையைப் பின்பற்றி எங்கும் எதிலும் வேகம், விவேகம், நிதானம், புத்தி சாதுரியம், தந்திரோபாயம் என்பவற்றைக் கடைப்பிடித்துப் பயிற்சி, முயற்சி, தேர்ச்சி, ஆற்றல், அனுபவம் என்பவற்றுக்கூடாகச் செயலை வழிநடத்தி, நடைமுறைப்படுத்தலின்போது எழும் பிரச்சினைகள், சவால்கள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, உரிய கண்காணிப்பு, மதிப்பீடு செய்து, அவற்றுக்குத் தீர்வு கண்டு, செயலை இலக்கு, அல்லது வெற்றியின்பால் இட்டுச் செல்லலே சாதுரியமாகும். வெற்றியைக் கண்டு வீராப்புக் கொள்வதும் தோல்வியைக் கண்டு துவண்டு வீழ்வதும் வெற்றியாளனுக்குரிய செயலாக அமையாது என்பதையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய்’ என்பார்கள். நம் கண்முன்னே பல மாயத் தோற்றங்கள் வந்து உண்மையை மறைக்கலாம். பல தகவல்கள் காதை வந்தடையலாம். அப்போதெல்லாம் நாம் உண்மையை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். தீர விசாரித்தறிய வேண்டும். உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிரச்சினைகள், சந்தேகங்கள் ஆகியவற்றைத் உடனுக்குடன் தீர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அவற்றை வளரவிட்டால் காலப் போக்கில் பெருவிருட்சமாக வளர்ந்துவிடும். சிறந்த தீர்மானங்களை எடுத்துப் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ள வேண்டும். சில விடயங்களை ஆறப் போட்டுத்தான் ஆக வேண்டும். அவை எதுவென்பதையும் நிதானமாகச் சிந்தித்துத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். எல்லாமும் எப்போதும் சரியாக அமையாது. அதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். திட்டமிடும்போது நான் தருகிறேன். அவர் தருவார், இவர் தருவார், அங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றெல்லாம் கூறுவார்கள். அவ்வேளையில் அவதானமாக இருத்தல் வேண்டும். அவ்வாறு அதனை நம்பி முயற்சியை ஆரம்பிப்தாயின் நம்மிடம் ஒரு மாற்றுத் திட்டம் இருத்தல் வேண்டும். அவர்கள் செய்வதாகக் கூறிய உதவி தடைப்பட்டால் உடனடியாக வேலையை முன்னெடுப்பதற்கு தந்திரோபாயத் திட்டமிடலை (Strategy Plan) மேற்கொள்ள வேண்டும். அவசரம் இல்லையெனில் நம்மிடம் இருக்கும் மாற்றுத் திட்டத்தைப் பயன்படுத்தி வேலையைத் தொடர வேண்டும். இதுவே சிறந்த திட்டமிடல் செயற்பாடாக அமையும்.

திட்டத்தைத் தீர்மானித்த பின் உசிதமான வேளையில் வேலையை ஆரம்பித்தல் வேண்டும். அதனை நிறைவேற்றி முடிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டுமே தவிர மீள்பரிசீலனை செய்வதிலோ திட்டத்தைப் பிற்போடுவதிலோ ஆர்வம் காட்டக் கூடாது. அவ்வாறு பின் நிற்பது திட்டத்தை ஆரம்பித்து நிறைவேற்றுவதைத் தாமதப்படுத்தலாம். திட்டத்தை ஆரப்பிக்கும் போதோ அல்லது செயற்படுத்தப்பட்டுக் கொணடிருக்கும் போதோ ‘பல கைகள் நம்மைத் தள்ளிவிட முயற்சிக்கலாம். தள்ளியும் விடலாம். வீழ்த்தியும் விடலாம். அத்தனை தடவையும் முயற்சியையும் நம்பிக்கையையும் தளரவிடாது, தாமாக எழுந்து பயணத்தைத் தொடர்ந்து இலக்கை அடைய வேண்டும்’. இதுவே வெற்றியாளனுக்குரிய இலட்சணமாகும். ‘வெற்றியோ தோல்வியோ நம்பிக்கையையும் முயற்சியையும் தளர விடாது தொடர்ந்து முயற்சி செய்து இலக்கை அடைபவனே சிறந்த சாதனையாளனாவான்’.

ஒரு சாதனையாளனுக்கு தன்னம்பிக்கையும் விடா முயற்சியும், பிரச்சினை தீர்க்கும் ஆற்றலும், தக்கவேளையில் தீர்மானமெடுக்கும் திறனும், செயற்பாட்டினைச் சீர்தூக்கிப் பார்க்கும் ஆற்றலும் மிக மிக அவசியமாகும். எப்போதும் எந்த வேளையிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நிதானமும் பொறுமையும் விடா முயற்சியும் நம்பிக்கையும் நல்ல பலனைப் பெற்றுத்தரும். எத்தகைய சந்தர்ப்பத்திலும் முயற்சியைக் கைவிடுவது பற்றியோ, பிற்போடுவது பற்றியோ சிந்திக்கக் கூடாது. அவ்வாறெனில் தற்போதைய சூழல், அதன்பாரதூரத் தன்மை, தற்போதைக்குத் தொடர்வதனால் பாரிய இழப்புக்களைச் சந்திக்க நேரலாம் என முழுதாக அறிந்த பின்னர் திட்டத்தைப் பிற்போடலாம். பிற்போட்ட பின்னர் சூழலை நன்கு அவதானித்துக் கொண்டிருத்தல் வேண்டும். இந்த நிலையில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டும். நடைமுறைப்படுத்திய திட்டம் தொடர்பாகப் பலர் எதுவும் கூறலாம். இந்த வேளையில் நமபிக்கை இழக்காது, திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதில் முழுக் கவனத்தையும் செலுத்துதல் வேண்டும்.

சாதாரணமாக வீட்டில் நடக்கும் நிகழ்வுகளிலோ வேறு எங்காவது நடக்கும் நிகழ்வுகளிலோ திட்டமிடல் அவசியமானதாகும். திட்டமில்லாத செயற்பாடுகள் ஓரிரண்டைத் தவிர மற்றவை எல்லாம் தோல்வியிலே முடியும். ‘செய்வன திருந்தச் செய்’ என்ற முது மொழியிலும் திட்டமிடல் அடங்கி இருக்கிறது. ‘எதையும் யோசித்துச் செய்’ ‘முயற்சி செய்’ ‘சிந்தித்துச் செயலாற்று’ என்பதில் எல்லாம் மறைமுகமாகத் திட்டமிடல் அடங்கி இருப்பதைக் காணலாம். நாம் பல விடயங்களில் திட்டமிடலை மறந்து செயலாற்றுவதனால் பல தோல்விகளைச் சந்தித்திருக்கிறோம். சிந்தித்துத் தீர்மானம் எடுக்காததனால் பல சந்தர்ப்பங்களில் நமக்குக் கிடைக்க வேண்டிய வெற்றி வாய்ப்புக்களை இழந்திருக்கிறோம். கற்றல் செயற்பாடுகள், பரீட்சைகள், தொழில் முயற்சிகள், பதவிகள், திருமண வாழ்க்கை, வாகனம் வாங்குதல், வீடு கட்டுதல் ஆகிய இன்னோரன்ன செயற்பாடுகள் யாவற்றிலும் பல சந்தர்ப்பங்களில் நமக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புக்களை இழந்திருக்கிறோம். முயற்சிக்காமல் நல்ல வாய்ப்புக்களைக் கைநழுவ விட்ட பின்னர் அதனை நினைத்து வருந்துவது ‘கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்தல்’ என்பது போல் ஆகிவிடும்.

நமது வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கப் போகும் வாய்ப்புக்களைத் திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாய்ப்புக்கள் நம்மை விட்டுச் சென்றால் மீண்டும் வருவதற்குக் காலமெடுக்கும். சிலவேளை கிடைக்காமலும் போகலாம். வாய்ப்புக்கள் கதவைத் தட்டும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மை விட்டுச் சென்றபின் வருந்துவதனால் எந்தப் பயனுமில்லை. வாய்ப்புக்கள் எப்போதும் நமக்கு வெளியேதான் இருக்கும். அதனை அடைவதற்கு நாம்தான் முயற்சிக்க வேண்டும். சிலரின் அதிஷ்டம் காரணமாக வாய்ப்புக்கள் இலகுவாகக் கிடைத்து விடலாம் சிலருக்குப் பல முயற்சிகளின் பின்னர் கிடைக்கலாம். இன்னும் சிலருக்குப் பல தோல்விகள், கவலை, விரக்திகளின் பின்னர் கிடைக்கலாம். சிலருக்கு ‘எட்டாக் கனியாகக்’ கிடைக்காமலும் போகலாம். நம்பிக்கையோடு முயற்சி செய்பவன் விரைவில் இலக்கை அடைவான். முயற்சி இல்லாமல் கிடைப்பது எதுவும் பெறுமதி அற்றதாகவே கொள்ளப்படும். திருடன்கூடத் திட்டமிட்டுப் பலநாள் முயற்சி செய்தே திருடும் போது, நாம் ஏன் நல்ல விடயத்துக்காக முயற்சிக்கக் கூடாது. ‘முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்’ ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்கின்ற முதுமொழிகள் யாவும் முயற்சியையே வலியுறுத்தி நிற்கின்றன.

திருமண வாழ்க்கை என்பது ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்பார்கள். பல ஆண்டுகாலம் வாழ வேண்டிய வாழ்க்கையை ஆற, அமரச் சிந்தித்து, அவசரப்படாமல் பலரிடம் ஆலோசித்துத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். திருமணத்தினைச் சரியான நேரத்தில் சரியான தீர்மானமெடுத்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யப்படாத எத்தனையோ திருமணங்கள் விவாகரத்திலும், பிரிவிலும், தினசரி சண்டை சச்சரவிலும் நின்று கொண்டிருக்கின்றன. அமைதியான சந்தோசமான வாழ்க்கை பல குழப்பங்கள் போராட்டங்களுடன் முற்றுப் பெறுகின்றன. சிலர் கிடைத்த வாழ்க்கை இதுதான் எனக் கொண்டு மற்றவை எல்லாவற்றையும் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இலங்கையின் திருமணச் சட்டத்தின்படியும் குலம், கொத்திர, சாதி, சமய சம்பிரதாயங்களின்படியும் திருமணத்தில் ஒரு தவறு நடந்துவிட்டால் அதனைத் திருத்திக் கொள்வதற்குப் பல காலம் காத்திருக்க வேண்டி வரும். சிலர் திருத்திக் கொள்ள முடியாமல் கவலையும் சோகமுமாக வாழ்ந்து மடிந்ததையும் கண்டிருக்கிறோம். திருமண பந்தம் சிலருக்கு மிகச் சிறப்பாக அமைவதுண்டு. இன்று 82 வீதமான குடும்பங்கள் பனிப்போர் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகச் சமூகவியல் ஆய்வொன்று கூறுகிறது. பட்டம், பதவி, சமூக அந்தஸ்த்து கௌரவம், சமூகப் பொறுப்பு, தான் பெற்றுள்ள மதிப்பு, மரியாதை, குடும்ப கௌரவம், பிள்ளைகளின் எதிர்காலம் ஆகியன காரணமாகப் பல குடும்பங்கள் பிரியாது போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவ்வாய்வு குறிப்பிடுகின்றது.

கோபம், பிடிவாதம், புரிந்துணர்வு விட்டுக் கொடுப்பின்மை என்பவற்றால் பல குடும்பங்களின் திருமண வாழ்க்கை சிதைந்து கொண்டிருக்கின்றன. கணவன், மனைவி இருவரும் கோபம் வந்தால் என்ன பேசுகிறோம், எவ்வாறு பேசுகிறோம் என்று நினைத்துக்கூடப் பார்க்காமல பிள்ளைகளையும் வைததக் கொண்டு கெட்ட வார்த்தைகளால் பேசிப் பிள்ளைகளையும் பழக்கி விடுகின்றனர். நாள் பார்த்து, விசாரித்து நச்சத்திரம், பொருத்தம் பார்த்து, ஆலோசித்துக் கலந்துரையாடி, திருமணம் பேசிப் போய், பெட்டி கொண்டு போய்த் திருமணன் செய்யும் வரைக்கும் பிரச்சினை இல்லாதிருக்கும். திருமணம் செய்த பின்னர் குறைகளைக் கண்டு பிடிப்பார்கள். அதற்குப் பின்னர் பிரச்சினைகள் ஆரம்பமாகும். குடும்ப கௌரவம் பார்த்தல், தனது குடும்பத்தை விட்டுக் கொடுக்காமை, வந்தான் வரத்தாள் போல் பார்த்தல், வசை, வக்கணம் கூறல், எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படல், உண்மையை விளங்கிக் கொள்ள முற்படாமை என்பவற்றால் பல குடும்பங்கள் தினமும் பிரச்சினைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இது கூடுதலாகக் கற்றோரிடம் நடந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது. அமைதியாக இருந்து சிந்தித்துத் தமது குடும்பக் கௌரவம், பிள்ளைகளின் எதிர்காலம், தமது எதிர்காலம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு செயற்பட்டிருந்தால் வாழ்க்கையைச் சீரமைத்துச் சந்தோசமாக்க வாழந்திருக்கலாம். இதை வீடுத்துக் கோபப்படுவதாலும், சந்தேகப்படுவதாலும் எதனையும் சாதிக்க முடியாது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். பிரச்சினை இல்லாமல் யாருமில்லை என்பதனால் அதனைப் பேசித் தீர்மானித்து சமாதானப்பட்டுக் கொள்வதே சிறந்ததாகும்.

முன்னைய கட்டுரையிலும் பிறந்த திகதியின் முக்கியத்துவம் பற்றிக் கூறி இருந்தேன். பிறந்த திகதியை அடிப்படையாகக் கொண்டே அவரின் வாழ்க்கை தீர்மானிக்கப்பட்டிருக்கும். அந்தத் திகதியோடு இராசி, நச்சத்திரம், கிரக நிலை அவற்றின் சஞ்சாரம் ஆகியன அடங்கி இருக்கும். அதனால் அத்திகதிக்குப் பொருத்தமான ஒருவரையே வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஓன்று முதல் ஒன்பது வரையான எண்களுக்குள் அடங்கும் ஒவ்வொரு திகதிக்கும் தனித்துவமான சக்தி உண்டு. அந்த சக்தியின் அடிப்படையிலேயே நமது வாழ்க்கையும் வடிவமைக்கப்படடிருக்கும். இதிலிருந்து யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது. அந்த சக்தி ஒவ்வொரு கணத்திலும் நமது வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டிருக்கும். அதன் அடிப்படையில் நமது திகதிக்குப் பொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்ள வேண்டும். அமைந்த வாழ்க்கைத் துணை பொருந்தாத எண்ணில் அமைந்திருந்தால் வாழ்க்கை முழுவதும் துன்பமாகவும், சண்டை, சச்சரவுகள் நிறைந்ததாகவும் அமைந்துவிடும்.

மூன்றாம் எண்ணில் (03,12,21,30ஆந் திகதிகள்) பிறந்தவர்கள் ஓரளவு அல்லது உயர் கல்வி கற்ற புத்திசாலிகளாக இருப்பார்கள். அவர்களுக்குச் சுக்கிர திசையும், குரு பகவானும் பக்க பலமாக இருந்தால் உயர் பதவியிலும் இருப்பார்கள். சூரியன், சந்திரன் ஆகியன ஆட்சி அல்லது நட்பாக இருந்தால் வெள்ளையும் கொள்ளை அழகும் கொண்டவர்களாக இருப்பார்கள். அத்தோடு பெயர் எண்ணும், கூட்டெண்ணும் சிறப்பாக அமைந்துவிட்டால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை உயர்ந்த நிலையை எட்டி இருக்கும். தமக்கென ஒரு கோட்டை கட்டி அதற்குள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். சில வேளைகளில் எதையும் மறுதலித்து, ஏடுத்தெறிந்து பேசுவார்கள். அவர்கள் ஓரளவு நீதி. நேர்மை, நியாயம் ஆகியவற்றையும் வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்கள். இத்தகையவர்களுக்குப் பொருத்தமான எண்ணில் அமைந்த வாழ்க்கைத் துணை அமையவில்லையாயின் எல்லாமே சுக்கு நூறாகிவிடும். தோல்விகளைச் சமாளித்துப் போகும் சக்தி குறைவாக இவர்களுக்கு இரப்பதனால் விரைவில் நொடிந்து விடுவார்கள். பல சாத்திரிமாரும் ஐயர்மாரும் திருமணப் பொருத்தம் பார்த்துக் கொடுக்கும் போது பிறந்த திகதிக்குரிய சக்தியைப் புரிந்து கொள்ளாமல் ஜாதகக் குறிப்பினைக் கொண்டு பொருத்தத்தினைப் பார்த்துக் கொடுத்து வடுவார்கள். இவர்களும் அவர்கள்மீது கொண்ட அதீத நம்பிக்கையில் சென்று திருமணத்தையும் நடத்தி விடுவார்கள். அதன் பின்னர்தானே பிரச்சினை ஆரம்பமாகும். முடிந்தவரை ஓரே பிறப்பெண் கொண்டவர்கள் திருமண பந்தத்தில் இணையாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இணைவதாயின் இருவருக்குமிடையில் வயது வித்தியாசம் ஐந்துக்கு மேல் இருத்தல் வேண்டும்.

திருமண பந்தத்தில் இணைந்து கொண்டால் இறக்கும்வரை இணைந்து வாழ்ந்துதான் ஆக வேண்டும். திருமணம் என்பது ஆண், பெண் இருவருக்கும் இடையிலான சட்டரீதியான ஒப்பந்தம். இது ஒருவருக்குரிய சுதந்திரம், உரிமை, தனித்துவம் என்பவற்றைப் பறித்து அடிமைப்படுத்துவதற்கான ஒப்பந்தமல்ல. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் புரிந்துணர்வுடன் ஒழிவு மறைவின்றி வாழ்வதற்கான ஒப்பந்தம். அதைவிடுத்து எங்கும், எதிலும், எப்போதும் தலையிடு செய்யலாம் என நினைத்துச் செயற்படும் போதுதான் முரண்பாடுகள் பெருகி, திருமண வாழ்க்கை தோல்வியடைகின்றது.

இயற்கை என்றும் எப்போதும் ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இயற்கையும் ஒவ்வொரு உயிரினங்களும் இவ்வாறு இயங்கும்போது ஆறறிவு கொண்ட மனிதன் மாத்திரம் பல நேரங்களில் பல செயல்களில் திட்டமின்றிச் செயற்பட்டுப் பல தோல்விகளைத் தழுவிக் கொண்டிருக்கிறான். எத்தகைய செயலிலும் ஈடுபடுமுன்னர் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் செயற்பட்டால் வாழ்க்கையில் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் சவால்களில் இருந்து விடுபட்டுச் சந்தோசமாக வாழலாம். வாழ்க்கை என்பது நம் கையில் உள்ளது. நமது வாழ்க்கையை நாம்தான் வாழ வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கே.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *