முச்சந்தி
செக் மக்கள் ஊடக சுதந்திரம் கோரி போராட்டம்… 1989 வெல்வெட் புரட்சியின் பின் பாரிய எழுச்சி!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா


செக் அரசாங்கத்தின் ஊடக நிதியிடல் மாற்றத் திட்டத்துக்கு எதிராக 3.5 இலட்சத்துக்கும் அதிகமானோர் வீதியில் திரண்டனர். அதேவேளை அரசியல் தலையீட்டுக்கு எதிராகப் பொதுமக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வீதியில் இறங்கிய செக் மக்களின் எழுச்சியை, 1989 வெல்வெட் புரட்சிக்குப் பின்னர் மிகப்பெரிய ஜனநாயகப் போராட்டமாக கருதப்படுகின்றது.
ஐரோப்பிய நாடான செக் குடியரசில் (Czech Republic), பொதுச் சேவை ஊடகங்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் அன்ட்ரேஜ் பாபிஸ் (Andrej Babiš) தலைமையிலான அரசாங்கம், பொதுத் தொலைக்காட்சி மற்றும் வானொலிக்கான நிதியிடல் முறையை மாற்றுவதற்கு முன்மொழிந்துள்ள திட்டமே இந்தப் பாரிய மக்கள் எழுச்சிக்குக் காரணமாகியுள்ளது.

2026 நவம்பர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தலைநகர் பிரேக்கில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3.5 இலட்சம் முதல் 4 இலட்சம் வரையிலான மக்கள் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இது 1989ஆம் ஆண்டு கம்யூனிச ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த வெல்வெட் புரட்சிக்குப் பின்னர் செக் குடியரசில் நடைபெற்ற மிகப்பெரிய மக்கள் ஒன்றுகூடல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஊடக நிதியிடல் சர்ச்சை
செக் குடியரசில் பொதுச் சேவை ஊடகங்களாகச் செயற்படும் செக் தொலைக்காட்சி (Česká televize), செக் வானொலி (Český rozhlas) ஆகிய இரண்டு நிறுவனங்களும் நீண்டகாலமாகத் தனித்துவமான நிதியிடல் முறையின் கீழ் இயங்கி வருகின்றன. இவற்றுக்கான நிதி பொதுமக்களிடமிருந்து மாதாந்தம் அறவிடப்படும் தொலைக்காட்சி மற்றும் வானொலிக் கட்டணங்கள் மூலம் பெறப்படுகிறது.
தற்போதைய நடைமுறையில் தொலைக்காட்சிக்காக 150 செக் கொருனாவும், வானொலிக்காக 55 செக் கொருனாவும் மாதாந்தம் அறவிடப்படுகின்றன. இவ்வாறு நேரடியாகப் பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் நிதி, அரசாங்கத்தின் அன்றாட அரசியல் தீர்மானங்களிலிருந்து ஊடக நிறுவனங்கள் ஓரளவு சுயாதீனமாகச் செயற்படுவதற்கு உதவுகிறது.
ஆனால், பிரதமர் பாபிஸ் தலைமையிலான அரசாங்கம் இந்தக் கட்டண முறையை நீக்கிவிட்டு, பொதுத் தொலைக்காட்சி மற்றும் வானொலிக்கான நிதியை நேரடியாக அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திலிருந்து வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது. அரசாங்கத்தின் பார்வையில் இது பொதுமக்களின் மாதாந்தச் செலவைக் குறைக்கும் நடவடிக்கையாகும். ஆனால், இதனை எதிர்க்கும் ஊடக அமைப்புகள், பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் குடிமக்கள் அமைப்புகள் வேறுவிதமாகப் பார்க்கின்றன.
அரசாங்கமே ஊடகங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யும் நிலை உருவானால், எதிர்காலத்தில் ஊடகங்களின் செய்தி வெளியீடுகள், அரசாங்கத்தின் மீதான விமர்சனங்கள் மற்றும் புலனாய்வுப் பத்திரிகைத்துறை ஆகியவற்றில் அரசியல் அழுத்தங்கள் ஏற்படலாம் என்பதே அவர்களின் முக்கியமான அச்சமாகும். மேலும், புதிய திட்டத்தின் கீழ் பொதுத் தொலைக்காட்சி மற்றும் வானொலிக்கான நிதி சுமார் 15 சதவீதம் குறைக்கப்படலாம் என எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் ஊடகப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதுடன், நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவும், செய்தி மற்றும் புலனாய்வுப் பணிகளின் தரம் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.
பிரதமர் பாபிஸ் அரசின் மீது குற்றச்சாட்டு:
செக் குடியரசின் பிரதமர் அன்ட்ரேஜ் பாபிஸ் ஒரு செல்வந்த வர்த்தகரும் அரசியல்வாதியுமாவார். இவரது தலைமையிலான அரசாங்கம், தீவிர வலதுசாரி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை விமர்சிக்கும் அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்ட கட்சிகளின் ஆதரவுடன் செயற்படுகிறது. குறிப்பாக, டோமியோ ஒகமுரா (Tomio Okamura) தலைமையிலான சுதந்திரம் மற்றும் நேரடி ஜனநாயகக் கட்சி (SPD), மோட்டாரிஸ்ட்ஸ் கட்சி உள்ளிட்ட அரசியல் சக்திகளின் ஆதரவு அரசாங்கத்துக்கு உள்ளது.

அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனங்களில், பொதுச் சேவை ஊடகங்கள் மட்டுமன்றி தனியார் ஊடகங்களும் அரசியல் ரீதியாகப் பக்கச்சார்புடன் செயற்படுவதாக ஆளும் தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதனால் அரசாங்கம் ஊடகங்களின் நிதியிடல் முறையை மாற்றுவதன் மூலம் அவற்றின் மீது மறைமுகமான கட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனினும், பிரதமர் பாபிஸ் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். பொதுமக்களின் நிதிச்சுமையைக் குறைப்பதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என்றும், ஊடகங்களின் ஆசிரியர் சுதந்திரத்தில் தலையிடும் எண்ணம் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
1989 வெல்வெட் புரட்சியை நினைவூட்டிய மக்கள் எழுச்சி!
1989ஆம் ஆண்டு அன்றைய செக்கோஸ்லோவாக்கியாவில் பல தசாப்தங்களாக நீடித்த கம்யூனிச ஆட்சிக்கு எதிராக மாணவர்கள், தொழிலாளர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த மக்கள் எழுச்சி வெல்வெட் புரட்சி (Velvet Revolution) என வரலாற்றில் அழைக்கப்படுகிறது.
அந்தப் புரட்சியின் விளைவாக கம்யூனிச ஆட்சி முடிவுக்கு வந்ததுடன், ஜனநாயக அரசியல் மாற்றத்துக்கும் வழி திறக்கப்பட்டது. எழுத்தாளரும் அரசியல் அதிருப்தியாளருமான வாத்லாவ் ஹாவெல் (Václav Havel) பின்னர் நாட்டின் ஜனாதிபதியானார்.
அந்த வரலாற்றுப் புரட்சியின் முக்கியமான அடையாளமாக விளங்கிய பிரேக் நகரின் லெட்னா பூங்காவிலேயே (Letná Park) தற்போதைய ஆர்ப்பாட்டத்தின் பெரும்பகுதி நடைபெற்றது.
1989ஆம் ஆண்டு ஜனநாயகத்துக்காக ஒன்றுகூடிய அதே வரலாற்று நினைவிடத்தில், 2026ஆம் ஆண்டு ஊடகச் சுதந்திரத்தையும் ஜனநாயக நிறுவனங்களின் சுயாதீனத்தையும் பாதுகாப்பதற்காக மக்கள் மீண்டும் திரண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாட்டாளர் மிகுலாஸ் மினார் (Mikuláš Minář) தலைமையிலான ‘ஜனநாயகத்திற்கான மில்லியன் தருணங்கள்’ (Million Moments for Democracy) என்ற குடிமக்கள் அமைப்பு இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
மார்ச் மாதத்தில் நடைபெற்ற அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்த நிலையில், தற்போதைய ஆர்ப்பாட்டம் அதனையும் தாண்டியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ‘ஊடகங்களைத் தொடாதீர்கள்’, ‘அரசியல்வாதிகளைப் பற்றி செய்தி வெளியிட ஊடகங்களை அனுமதியுங்கள்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
மேலும், பிரதமர் பாபிஸ், டோமியோ ஒகமுரா மற்றும் அரசாங்கத்தின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தின் மற்றொரு தனித்துவமான அம்சமாக, பலர் செய்தித்தாள்களால் செய்யப்பட்ட கூம்பு வடிவத் தொப்பிகளை அணிந்திருந்தனர்.

செக் தொலைக்காட்சியில் பல தசாப்தங்களாக ஒளிபரப்பாகிவரும் குழந்தைகளுக்கான இரவு நேரக் கதை நிகழ்ச்சியில் தோன்றும் பிரபலமான அசையும் ஓவியக் கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் வகையில் இந்தத் தொப்பிகள் அணியப்பட்டிருந்தன. இதன் மூலம் பொதுத் தொலைக்காட்சியின் கலாசாரப் பங்களிப்பையும் மக்கள் அடையாளப்படுத்தியிருந்தனர்.
ஊடகச் சுதந்திரம் என்பது அரசியல் செய்திகளுக்கு மட்டுமல்லாமல், குழந்தைகள் நிகழ்ச்சிகள், கலை, கலாசாரம், கல்வி மற்றும் சமூகப் பண்பாட்டு வெளிப்பாடுகளுக்கும் அவசியமானது என்பதை இந்த அடையாளம் வெளிப்படுத்தியது. இந்தப் போராட்டத்திற்கு மாணவர் அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், தேவாலயங்கள் மற்றும் சர்வதேச ஊடக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.
ஐரோப்பிய ஜனநாயகத்திற்கு எச்சரிக்கை
செக் குடியரசில் உருவாகியுள்ள இந்த நெருக்கடி அந்த நாட்டின் உள்நாட்டு அரசியல் பிரச்சினையாக மட்டும் பார்க்கப்பட முடியாது. ஐரோப்பாவின் சில நாடுகளில் பொதுச் சேவை ஊடகங்களின் சுயாதீனத் தன்மை அரசியல் தலையீடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக ஹங்கேரியில் விக்டர் ஓர்பான் ஆட்சிக்காலத்தில் ஊடகங்களின் மீதான அரசியல் செல்வாக்கு அதிகரித்ததாகவும், ஸ்லோவாக்கியாவில் பொதுச் சேவை ஒலிபரப்பு நிறுவனங்களின் கட்டமைப்பில் அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்ற நிலை செக் குடியரசிலும் உருவாகக்கூடும் என்பதே தற்போதைய எதிர்ப்பாளர்களின் அச்சமாகும்.
ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியம், எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு (Reporters Without Borders), ஐரோப்பிய பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் செக் குடியரசின் ஊடக நிதியிடல் மாற்றத் திட்டம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளன.

மேலும், இந்தச் சட்டமூலம் அவசரமாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாத வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அக்டோபர் மாதம் 24ஆம் திகதி அதிகாலை 4.36 மணியளவில் முதற்கட்ட வாக்கெடுப்பில் முன்னேற்றப்பட்டமை அரசியல் சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகளும் குடிமக்கள் அமைப்புகளும் சட்டமூலத்தை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

செக் குடியரசின் வீதிகளில் இன்று எழுந்திருக்கும் இந்த மக்கள் குரல், ஒரு நாட்டின் ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான குரல் மட்டுமல்ல; உலகெங்கும் ஜனநாயகத்தின் எதிர்காலம் தொடர்பில் எழுப்பப்படும் ஓர் எச்சரிக்கையும் ஆகும். அரசாங்கங்கள் மாறலாம். அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வரலாம், ஆட்சியிலிருந்து வெளியேறலாம். ஆனால், உண்மையைப் பேசும் ஊடகங்களின் சுதந்திரம் அரசியல் அதிகாரத்தின் தயவில் இருக்கக்கூடாது என்பதையே செக் குடியரசின் இந்தப் பாரிய மக்கள் எழுச்சி உலகிற்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
![]()