இலங்கை

தாக்குதலில் மண்டை உடைந்த தேரர் உள்ளிட்டோரைக் கைது செய்யாதது ஏன்?; அநுராதபுரம் நீதிமன்றம் கேள்வி

அநுராதபுரம் ருவன்வெலிசாய தூபிக்கு அருகிலுள்ள தானசாலை பகுதியில் அமைந்திருந்த சத்தியாக்கிரகப் போராட்டத் தளத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், ராஜாங்கனே சத்தாரத்ன தேரர்( தாக்குதலில் மண்டை உடைந்தவர் )உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமை குறித்து விளக்கமளிக்குமாறு அநுராதபுரம் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் முன்னிலையாகி இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு அநுராதபுரம் பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன நேற்று (17) உத்தரவிட்டுள்ளார்.

ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரரைத் தவிர, ஏனைய நான்கு பிக்குகள், இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோரைப் பிணையில் விடுவிக்கக் கோரி சட்டத்தரணிகளான இந்திக இம்புல்பிட்டிய மற்றும் நுவன் பெல்லந்துடாவ ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த மோதல் சம்பவத்திற்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் ராஜாங்கனே சத்தாரத்ன உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டியிருந்தும், பொலிஸார் அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், மோதலைத் தடுத்து நிறுத்துவதற்குப் பொலிஸாருக்கு வாய்ப்பிருந்தும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான காணொளிக் காட்சிகளை ஆராயும்போது, மோதலை வழிநடத்தியதில் பொலிஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், சந்தேகநபர்களைப் பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை பிரதம நீதவான் நிராகரித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *