பலதும் பத்தும்

ரொறன்ரோ பொதுப் போக்குவரத்தில் ஈ-பைக்குகள் மற்றும் ஈ-ஸ்கூட்டர்களுக்குத் தடை!

ரொறன்ரோ பொதுப் போக்குவரத்துச் சேவையான டி.டி.சி வாகனங்கள் மற்றும் நிலைய வளாகங்களுக்குள் மின்சார சைக்கிள்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்களை கொண்டு செல்வதற்கான வருடாந்த குளிர்காலத் தடை அமுலுக்கு வந்துள்ளது.

கடந்த நவம்பர் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்தத் தடையானது, எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என டி.டி.சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

குளிர்கால மாதங்களில் வெப்பநிலை மாற்றமடையும் போது, இச்சாதனங்களில் உள்ள லித்தியம்-அயன் மின்கலங்களில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடிக்கும் அபாயம் அதிகம் உள்ளது.

2023 டிசம்பரில் ரொறன்ரோ சுரங்கப்பாதை ரயில் ஒன்றில் மின்சார சைக்கிளின் மின்கலம் வெடித்து பாரிய தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, 2024 டிசம்பரில் டி.டி.சி சபையினால் இந்த குளிர்காலத் தடை அங்கீகரிக்கப்பட்டது.

இச்சாதனங்களின் அளவு காரணமாக, ரயில்கள் மற்றும் பேருந்துகளில் இருக்கைப் பகுதிகளை மறைப்பதோடு, பயணிகள் தடுக்கி விழுவதற்கான அபாயத்தையும் ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் மின்சார சக்கர நாற்காலிகள் மற்றும் மின்கலத்தால் இயங்கும் ஏனைய நடமாடும் சாதனங்களுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சாதாரண சைக்கிள்கள், மடிக்கக்கூடிய சாதாரண சைக்கிள்கள் மற்றும் மின்சாரம் அல்லாத சாதாரண ஸ்கூட்டர்களை ஏற்கனவே உள்ள டி.டி.சி விதிமுறைகளுக்கு உட்பட்டு தொடர்ந்து எடுத்துச் செல்ல முடியும்.

ஈ-பைக்குகள் மற்றும் ஈ-ஸ்கூட்டர்களைப் பயன்படுத்தும் பயணிகள், தமது சாதனங்களை சுரங்கப்பாதை நிலையங்களின் நுழைவாயில்களுக்கு அருகிலோ அல்லது ரொறன்ரோ நகரசபையின் சைக்கிள் நிறுத்துமிடங்களிலோ பாதுகாப்பாக நிறுத்தி வைக்கலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *