இலங்கை

மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களின் மாடுகள் சுட்டுக்கொலை: அநுர அரசிடம் மக்கள் அவசர கோரிக்கை

மட்டக்களப்பு – மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் தமிழ்ப் பண்ணையாளர்களுக்குச் சொந்தமான கால்நடைகள் தொடர்ச்சியாகச் சுட்டுப் படுகொலை செய்யப்படுகின்றமை, தமிழர்களின் பொருளாதார முதுகெலும்பை முறிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வாழ்வாதார அழிப்பு என கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ச.சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்

ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுதாவது,

கால்நடைகளைப் படுகொலை செய்வதன் மூலம் தமிழ்ப் பண்ணையாளர்களின் பொருளாதார வலிமையைச் சிதைத்து, அவர்களின் பாரம்பரிய மேய்ச்சல் நில உரிமையையும் கால்நடை வளர்ப்பு வாழ்வாதாரத்தையும் அழிக்கும் நிலைமை தொடர்கின்றபோதும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்குத் தவறும் அநுர அரசாங்கம் மறுபுறம் நாட்டின் அபிவிருத்திக்காக வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகப் பெருமை பேசுகின்றது.

மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முடியாத அரசாங்கம், அவர்களின் பொருளாதார அபிவிருத்தியை எவ்வாறு உறுதிப்படுத்தப் போகின்றது என கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்ச்சியாக இடம்பெறும் கால்நடைப் படுகொலைகள்

மயிலத்தடு மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் கால்நடைகளுக்கு எதிரான வன்முறைகள் கடந்த காலங்களிலிருந்தே தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி மயிலத்தமடு மாதவனை பகுதியில் பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்பட்டதாகவும், அன்றிரவு கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் மாடுகள் சுட்டுக்கொலை: அநுர அரசிடம் மக்கள் அவசர கோரிக்கை | Cattle Shot Dead At Mayilathamadu Madhavanai

 

சண்முகம் கோவிந்தராஜன் என்பவருக்குச் சொந்தமான பசுவின் கழுத்துப் பகுதியில் நான்கு பாரிய காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி வெளியான தகவல்களின்படி, பண்ணையாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் கால்நடைகள் மீதான தாக்குதல்களும் அதிகரித்திருந்தன. ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி காலை 8 மணியளவில் மற்றுமொரு பசு கொல்லப்பட்டதுடன், மேலும் மூன்று கால்நடைகள் காணாமல் போனதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி காலை 6.30 மணியளவில் சந்திவெளியைச் சேர்ந்த வடிவேல் சோமசுந்தரம் என்பவர் தனது பட்டியில் வைத்து அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் கரடியனாறு பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது.

இச்சம்பவம் பண்ணையாளர்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை மேலும் அதிகரித்தது.

நவம்பர் மாதம் 5ஆம் திகதி மாணிக்கம் வடிவேல் என்பவருக்குச் சொந்தமான பசு துப்பாக்கியால் சுடப்பட்டு தோல் உரிக்கப்பட்ட நிலையில் மயிலத்தமடு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் மாடுகள் சுட்டுக்கொலை: அநுர அரசிடம் மக்கள் அவசர கோரிக்கை | Cattle Shot Dead At Mayilathamadu Madhavanai

 

இந்த நிலையில், நவம்பர் மாதம் 12ஆம் திகதி இரவு சந்திவெளியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான இரண்டு பசுக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளன.

சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பசுக்களின் பெறுமதி 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் அனைத்தும் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையில் தமிழ்ப் பண்ணையாளர்களின் கால்நடை வளர்ப்பு வாழ்வாதாரம் எந்தளவுக்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *