கவிதைகள்
“ஆறுதல் அளித்து அருள்புரி அப்பா” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா 


ஒருமுகமாய் வந்தவனே அறுமுகமாய் ஆனவனே
இருகரங்கள் பன்னிரண்டாய் ஆக்கியே கொண்டவனே
வேலென்னும் ஆயுதத்தைத் தாங்கியே நிற்பவனே
வினையறுத்து வெற்றிதர வந்தவனே நீயன்றோ
அழகான வாகனமாய் ஆக்கிவிட்டாய் மயிலதனை
அதிலமர்ந்து அருளீய வருகின்றாய் அவனியெலாம்
தனியாக மலைதேர்ந்து அமர்ந்தாயே தமிழ்க்குமரா
தமிழாலே உனைப்பாடித் தலைவணங்கி நிற்கின்றோம்
காக்கக் காக்க கனகவேல் காக்கும்
கருத்தில் இருத்தியே பாடுறோம் முருகா
கேட்ட உடனே வருவாய் என்று
பாடிப் பாடி பரவுறோம் முருகா 

எல்லா இடமும் இருக்கிறாய் கந்தா
என்றும் எமக்குத் துணையே நீதான்
எல்லாப் பிழையும் பொறுப்பாய் கந்தா
இறைஞ்சிக் கேட்கிறோம் காத்திடு கந்தா
ஒவ்வொரு முகமும் உன்னதம் முருகா
ஒவ்வொரு கரங்களும் உன்னதம் முருகா
ஆறு முகமாய் வந்திநீ முருகா
ஆறுதல் அளித்து அருள்புரி அப்பா !
![]()