பலதும் பத்தும்

மிசிசிப்பி நதியில் சரக்குக் கப்பல் மோதி சுற்றுலாப் பயணிகள் கப்பல் கவிழ்ந்தது

அட்லாண்டிக் அஸ்பால்ட்’ (Atlantic Asphalt) எனும் சரக்குக் கப்பல் மோதியதில், அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ”அமெரிக்கன் ஹெரிடேஜ்’ (American Heritage) எனும் சுற்றுலாப் பயணிகள் கப்பல் மிசிசிப்பி நதியின் ஒருபக்கமாகச் சாய்ந்து கவிழ்ந்துள்ளது.

விபத்துக்குள்ளான சுற்றுலாப் பயணிகள் கப்பலிலிருந்த 32 பேர் ஆபத்தான நிலையற்ற காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், எவரும் காணாமல் போகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக இந்த கப்பலிலிருந்த அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டுள்ளதுடன், இதனை அதிகாரிகள் “மிசிசிப்பியில் நிகழ்ந்த ஒரு அற்புதம்” என வர்ணித்துள்ளனர்.

விபத்திற்கான சரியான காரணம் குறித்துத் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், “கப்பலின் திசைதிருப்பும் கட்டுப்பாட்டில் (Steering) ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக என அமெரிக்க கடலோரக் காவல்படைத் தலைவர் மெலனி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 அளவில் கப்பலுக்குள் நீர் புகத் தொடங்கியதும், பயணிகளை வெளியேற்றப் பலரும் முயற்சித்த வேளையில் விபத்து குறித்த அவசர அழைப்புகள் கிடைத்ததாக நியூ ஆர்லியன்ஸ் துறைமுகத் தலைவர் மெலனி மொன்ட்ரோல் தெரிவித்தார்.

விபத்து இடம்பெற்ற நேரத்தில் ‘அமெரிக்கன் ஹெரிடேஜ்’ கப்பலில் பணியாளர்களுக்கு மேலதிகமாக சுமார் 129 பயணிகள் இருந்ததாகத் துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பல் ஒருபக்கமாகச் சாய்ந்து கவிழத் தொடங்கியதும் பயணிகள் அதிலிருந்து வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

இழுவைப் படகு நடத்துநர்கள், பொலிஸார் மற்றும் மீட்புப் பணியாளர்கள் உடனடியாக விரைந்து சென்று உதவியதுடன், தேடுதல் பணிகளுக்காக மிசிசிப்பி ஆற்றுப் போக்குவரத்தும் தற்காலிகமாக மூடப்பட்டது.

லூசியானா மற்றும் மிசிசிப்பி ஆகிய பகுதிகளுக்கான எட்டு நாள் சுற்றுலாப் பயணத்தை நிறைவு செய்யும் தருவாயிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

2015ஆம் ஆண்டு கட்டப்பட்ட நான்கு தளங்களைக் கொண்ட குறித்த சுற்றுலாப் பயணிகள் கப்பல், 150 விருந்தினர்களை ஏற்றிச் செல்லக்கூடிய வசதிகளைக் கொண்டதென குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *